PUBLISHED ON : மே 30, 2021

முன்கதை சுருக்கம்: செய்தி வெளியிட்டது தொடர்பாக, பாதிக்கப்பட்டவர் தொடர்ந்த வழக்கை, 'வாபஸ்' பெற, முனிராஜ் என்ற ரவுடியை ஏற்பாடு செய்தது, ஜனாவுக்கு ஞாபகம் வந்தது. தமிழ்ச்செல்வியை ஜங்ஷனில் காரில் அழைத்து வந்து விட்ட சுகுமார், பார்க்கிங் கட்டணம் கேட்ட பணியாளிடம் சண்டை போட, அவன் விலகி சென்றான் -
கண்ணாடி முன் நின்று, 'ஷேவ்' செய்யத் துவங்கியிருந்தான், ரிஷி.
இன்று மட்டுமல்ல, சுஜித்குமார் வந்து போகும் வரை தானும் ஒரு சரியான, 'யூத்' என்பதை காட்டியே தீர வேண்டும். இதெல்லாம் ரிஷியின் தீர்மானங்கள்.
புதிதாக ஒரு முகப்பூச்சு க்ரீம் வேறு வாங்கியிருந்தான். சிங்கப்பூர் சரக்கு. ஷேவிங் முடிந்து, அதையும் பூசிக் கொண்டான். தான் ஹீரோவாக நடித்தால் கூட நன்றாக இருக்கும் என்றும் ஒரு எண்ணம் தோன்றியது. இயக்குனர்கள், நடிகர்களாவது ஒன்றும் புதிதில்லையே?
இன்றைய முதல், 'அசைன்மென்ட்' அந்த, 'லிவ்விங் டு கெதர்' தம்பதியை போய் பார்ப்பது தான். அவர்களோடு ஒரு தொடர்பை உருவாக்கி விட்ட பிறகு, இயக்குனர் கே.வி.ஏ.,வுக்கு போன் போட்டு, தான் கண்காணிக்க துவங்கியதை கூற வேண்டும்.
போன் என்ன போன்... நேரிலேயே அவர் வீட்டுக்கே போய் விட வேண்டியது தான். சேனலுக்கு சுஜித்குமார் வரும்போது, அவருடனும் ஒரு நெருக்கத்தை எப்படியாவது உருவாக்கி விடவேண்டும்.
ரிஷிக்குள் ஒரே கனவு மண்டலம்.
பளிச்சென்று உடையணிந்து, 'ஸ்பிரே' வாசம் மூக்கை துளைக்க, இரும்பு சட்டியோடு இறங்கியவனிடம், ''என்ன ரிஷி... இன்னிக்கு ஜெகஜெகன்னு ஜொலிக்கறே?'' என்றாள், மாமி.
''இது போதும் மாமி... நீங்களே நான் ஜொலிக்கிறதா சொல்லிட்டா, அப்புறம் அப்பீலே கிடையாது. போற இடத்துல எல்லாம், 'சக்சஸ்' தான்.''
''அப்படி இன்னிக்கு எங்க போகப் போறேன்னு, நான் கேட்க மாட்டேன்.
நான் கேட்கலேன்னாலும் நீ சொல்லாம இருக்கப் போறதில்லை.''
மாமி கில்லாடித்தனமாய் பேசினதை ரசித்தான், ரிஷி.
''நான் டைரக்ட் பண்ணும்போது, என் படத்துக்கு நீங்க தான் மாமி வசனம். என்ன ஒரு டைமிங்... ரைமிங்... சூப்பர் மாமி.''
''நீ விஷயத்துக்கு வா... என்ன இன்னிக்கு அந்த சுஜித் மேட்டர் ஷூட்டிங்கா?''
''அது நாளைக்கு மாமி... இருந்தாலும், அது சம்பந்தப்பட்ட வேலைகள் இன்னிக்கு நிறைய இருக்கு. கிட்டத்தட்ட, 110 கேள்விகள். அதுல, 20 கேள்விகளை பிரிச்சு எடுத்து, 'டைப்' செய்து, 'பிரின்ட்' எடுக்கணும். எல்லா கேள்வியுமே இதுவரை யாருமே கேட்காதவை சாரோட பதிலும் செமையா இருக்கும் பாருங்க.''
''என் கேள்வி இருக்குதானே?''
''அது இல்லாமலா... 'கடவுள் நேர்ல வந்து ஒரு வரம் தான் கேக்கலாம்னா, என்ன வரம் கேப்பீங்க'ங்கற, உங்க கேள்வி தான் முதல் கேள்வியே... அப்ப ஸ்க்ரீன்ல உங்க புரொபைல் போட்டோ தெரியும். இப்படி, 20 பேரோட, 20 கேள்விகள்.''
''நான் அப்பவே, பக்கத்து மற்றும் எதிர் அப்பார்ட்மென்ட்டுல எல்லாருக்கும் சொல்லிட்டேன். அப்புறம் என் வீட்டு ஆல் இண்டியா ரேடியோவான, வேலைக்காரி ஈஸ்வரிகிட்டயும் சொல்லிட்டேன். அவளோட, 'ஆவரேஜ் ரீச்' எவ்வளவு பேர் தெரியுமா?''
''ரீச்சா?''
''அவகிட்ட ஒரு விஷயத்த சொன்னா, அது எத்தனை பேருக்கு போய் சேரும்கறத தான், 'ரீச்'ன்னு சொன்னேன்.''
''எத்தனை பேர் மாமி?''
''கொறஞ்சது, 300 பேர்... அதுவும் ஒரு மணி நேரத்துல.''
''அய்யோடா... எங்க சேனல் விளம்பரங்கள்லாம் பிச்சை வாங்கணும் போலருக்கே?''
''அவளுக்கு கூட சுஜித்கிட்ட ஒரு கேள்வி கேட்கணும்ன்னு ஆசையாம்டா.''
''சாரி மாமி... கேள்வி எல்லாம், 'செலக்ட்' ஆகி முடிஞ்சு போச்சு.''
''டிவில வரலேன்னா போகட்டும் விடு... நீ சுஜித்கிட்ட பேசும்போது, அதுக்கான பதிலை கேட்டு அதை உன், 'மொபைலில் ரெக்கார்ட்' செய்து வந்து காட்டேன்.''
''உங்க ஈஸ்வரி விஷயம் அவ்வளவு பெருசா மாமி?''
''பத்து வருஷமா வேலை பார்க்கறாடா... கை சுத்தம். ஆனா, வாய் மட்டும் கொஞ்சம் நீளம். இப்படி அவ விருப்பத்தை பூர்த்தி பண்ணினா, ஆசையா வேலை பார்ப்பா... இல்லைன்னா பத்து பாத்திரங்களை பக்கெட் தண்ணில முக்கி எடுத்து வெச்சிட்டு, கழுவிட்டேன்னு போயிண்டே இருப்பா.''
''ஓ... இப்படி ஒரு ஆங்கிள் இருக்கா இதுல... சரி மாமி, நான் முயற்சி பண்றேன்.''
''இப்படி ஜாக்ரதையால்லாம் பதில் சொல்லாதே. பதிலோட வரேன்னு சொல்லு.''
''சரி மாமி... பதிலோட வரேன். ஆமா, கேள்வி என்ன?''
''கேட்டா கோபிக்க கூடாது?''
''நீங்க முதல்ல சொல்லுங்க.''
''டோப்பா, கூலிங்கிளாஸ், அப்பால சண்டை காட்சியெல்லாம் இல்லாம, டூயட்டும் பாடாம, ஒரு படத்துல நடிக்க, 'தில்' இருக்குதா... இத, அவ பாஷையிலயே கேட்டுட்டேன்.''
''ஐய்யோ... செம கேள்வி மாமி. இதை, வீட்டு வேலை செய்யிற வேலைக்காரி கேட்டது மாதிரி இல்ல. எவ்வளவு அறிவுப்பூர்வமான கேள்வி தெரியுமா! இதை நான், 20 கேள்விக்குள்ளேயே செருக முடியுமான்னு பார்க்கறேன். இல்லேன்னாலும், பதிலை கேட்டு சொல்றேன். ரைட் மாமி, நேரமாச்சு கிளம்பறேன்.''
''ஒரு வாய் காபி சாப்பிடறியா?''
''எப்படியும், 15 நிமிஷம் ஆயிடும். நேரமில்ல, வந்து சாப்பிடறேன்,'' என்று கிளம்பியவன், தெருவில் இறங்கி பைக்கை, 'ஸ்டார்ட்' செய்யும்போதே, எதிர் திசையிலிருந்து பார்த்தபடி இருந்தான், ஒருவன்.
அந்த அப்பார்ட்மென்டுக்குள் நுழைந்த ரிஷி, படிகள் வழியாக மூச்சிறைக்க மேலேறி, அவர்களின், 'ப்ளாட்' அழைப்பு மணியை அழுத்தி, காத்திருக்கவும், கதவை திறந்து, எட்டிப் பார்த்தாள், ஒரு பெண்.
முகம் முழுக்க, 'பேஷியல் க்ரீம்' பூசியதில், அது காய்ந்து கொண்டிருக்க, தலைமுடியை, 'பவுண்டைன்' போல் உயர்த்திக் கட்டியிருந்தாள்.
திறந்த வேகத்தில், ''ஸ்விக்கியா?''
என்று தான் கேட்டாள். 'ஆர்டர்' கொடுத்திருக்க வேண்டும்.
''நோ... நோ... ஐ ஆம் ரிஷி, ப்ரம் ஜி சேனல்.''
அவன் சேனலை முன்னிறுத்தி அறிமுகம் செய்து கொள்ளவும், அவள், ஏற இறங்க பார்த்ததில், கழுத்தில் தொங்கிய, 'சேனல் ஐடென்டி கார்டு' அவனை நம்பிக்கையோடு உள்ளே அழைக்க வைத்தது.
''ப்ளீஸ் கம் இன்.''
உள்ளே நுழைந்தான். சுமாரான வரவேற்பறை. மோடா மேல் விரிந்த நிலையில் லேப்டாப். நேர் மேலே மந்தமான சூழற்சியில் மின் விசிறி. சோபா மேல் சாய்ந்த நிலையில் ஈர டவல்.
ரிஷி ஒரு பார்வை பார்த்தபடியே, ''நான் ஒரு, 'இன்டர்வியூ'வுக்காக உங்கள பார்க்க வந்துருக்கேன். அது சம்பந்தமா பேசலாமா?'' என்று கேட்டபடியே சோபாவில் அமர்ந்தான்.
''என்ன இன்டர்வியூ?''
''நீங்க, எங்க சேனலை பார்க்கறதுண்டா?''
''அப்பப்ப.''
''எந்த நிகழ்ச்சி உங்களுக்கு பிடிச்சிருக்கு?''
''இது சர்வே... இன்டர்வியூ இல்ல,'' என, அவள், அவனை வேகமாய் திருத்தினாள்.
''அப்படிதான் இருக்கட்டுமே... எது உங்களுக்கு பிடிக்கும்?''
''சட்டுன்னு சொல்ல முடியல... சொல்லப்போனா, 'டிவி'யே ரொம்ப பார்க்கறதில்ல. எல்லாமே என் வரையில லேப்டாப் தான்.''
''டேப்ல கூட எங்க சேனலை பார்க்க முடியுமே?''
''என் வரையில தமிழ் சேனல் எல்லாமே பயங்கர போர். அதுலயும் மெகா தொடர்கள், 'ஹாரிபுள்!' அதனால, நான் பார்க்கறது, 'வெப் சீரிஸ்' தான். அதுலயும் லோக்கல்லாம் டப்பா. கொரியன்ஸ், அப்புறம் ஹாலிவுட் தான் சூப்பர்.''
அவள் போட்டுத் தாக்கினாள். அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
உண்மையில் இப்படி கேள்விகள் கேட்பது எல்லாம், ஒரு பாவ்லா. அடிப்படை நோக்கம், இப்படி கேட்டு ஒரு பழக்கத்தை உருவாக்கிக் கொள்வது தான்.
''கொஞ்சம் கூட கருணையே இல்லாம இப்படி போட்டுத் தாக்கறீங்களே... பை த பை வாட் எபவுட் யுவர் ஹஸ்பண்ட்?''
''ஹஸ்பண்டா... நோ நோ... எனக்கு இன்னும் கல்யாணமே ஆகல.''
''ஆனா, இங்க ஒரு தம்பதி இருக்கறதால்ல சொன்னாங்க,'' மெல்ல போட்டு வாங்கினான், ரிஷி.
''அப்படி எல்லாரும் நினைச்சுகிட்டிருக்காங்க. ஆணும் பெண்ணும் ஒரே வீட்ல குடியிருந்தா தம்பதியாக தான் இருக்க முடியும்கற மாயைக்கு சென்னையும் விதிவிலக்கில்ல. சொல்லப்போனா, மும்பைல, டில்லில எல்லாம் இப்படி இல்லை.''
''அப்ப உங்க கூட இருக்கறது?''
''அவன் பேர், ரமேஷ்... நாங்க ரெண்டு பேரும் ஒரே, 'செக் ஷன்'ல ஒண்ணாதான் வேலை பண்றோம். தனியா எதுக்கு இரண்டு வாடகை தரணும்ன்னு, ஒண்ணா இருக்கோம். அவ்வளவு தான்.''
''உங்க பேர்?''
''மைத்ரேயி... நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் டில்லி. அப்பாவுக்கு பூர்வீகம், சென்னை. அவருக்காகவே சென்னையில வேலை கிடைக்கவும், ஓ.கே., சொன்னேன். அம்மா, அப்பாகிட்ட விவாகரத்து வாங்கிட்டு, யு.எஸ்., போயிட்டா.
''எதிர்பாராதவிதமா, அப்பா இங்க வந்து சில மாசங்கள்லயே இறந்துட்டாரு. திரும்பி டில்லி போயிடலாம்ன்னு தான்
நினைச்சேன். ரமேஷ் தான், 'நான் இருக்கேன், என் கூட இருந்து பாரேன்'னான். சரின்னுட்டேன்.''
''அப்படியா, இப்ப மிஸ்டர் ரமேஷ் எங்க இருக்காரு?''
''அவன், 'ஆன் ட்யூட்டி'யா, அகமதாபாத் போயிருக்கான். ஆமா, நீங்க சேனலுக்காக வந்தீங்களா, இல்லை எங்க வரலாறு தெரிஞ்சுக்கவா?''
அவள் மளுக்கென்று அப்படி ஒரு கேள்வி கேட்பாள் என்று, அவன் எதிர்பார்க்கவில்லை.
''நோ நோ... நானும், இங்க பக்கத்துல தான் குடியிருக்கேன். நீங்க வெளிப்படையா பேசவும், பேசினேன். எனக்கு உங்களோட தெளிவு, ரொம்ப பிடிச்சிருக்கு. எந்த கேள்விக்கும் நீங்க திக்கல திணறல... அருவி மாதிரி கொட்டிட்டிங்க.''
''தேங்க்யூ... பை த பை, வெளிய போய், நாங்க தம்பதி இல்ல, நண்பர்கள்ன்னு யார்கிட்டயும் சொல்லிடாதீங்க. 'ப்ளாட்'டை காலி பண்ணச் சொன்னா ரொம்ப கஷ்டம். எனக்கு இங்க எல்லாமே அஞ்சு நிமிஷத்துல கிடைச்சிடுது.''
''கவலைப்படாதீங்க... மிஸ்டர் ரமேஷ் வந்த பிறகு அவர்கிட்டயும் பேசணும். பேசலாம் இல்லையா?''
''ஒய் நாட்... அது, அவன் பாடு - உங்க பாடு... நான் யார் இதுல குறுக்கிட?''
''அப்ப ரெண்டு பேரும் பட்டும் படாமதான் இருக்கீங்களா?''
''பட்டும் படாமன்னா... வாட் டு யூ மீன்?''
அவள் மிக கூர்மையாக கேட்டாள்.
அப்போது, அவன் போனில் தமிழ்ச்செல்வியிடமிருந்து அழைப்பு.
''ரிஷி... நான் சென்னை வந்துட்டேன். 'ஹாஸ்டல்'ல இருந்து தான் பேசறேன். 'பிக் - அப்' பண்ண வர்றியா. உன் கூட நிறைய பேசணும்.''
''உன் போனுக்காக தான் தமிழ் காத்திருக்கேன். தயாரா இரு, அதிகபட்சம் அரை மணி நேரத்துல, 'ஹாஸ்டல்' வாசல்ல இருப்பேன். வந்து, 'ரிங்' கொடுக்கறேன். நீ வந்துடு,'' என்றான்.
மைத்ரேயியை பார்த்து புன்னகைத்தபடியே, ''அடுத்த சந்திப்புல, உங்க அழகு முகத்தை எந்த பூச்சும் இல்லாம பார்க்கணும் மைத்ரேயி... பை...'' என்றபடியே, அந்த, 'ப்ளாட்'டிலிருந்து இறங்கி வெளியில் வந்து பைக்கில் ஏறினான்.
பைக் புறப்படவுமே, ஒரு கறுப்பு நிற காரும் அவனை பின் தொடர்ந்தது.
— தொடரும்
இந்திரா சவுந்தர்ராஜன்
