PUBLISHED ON : ஜூன் 06, 2021

முன்கதை சுருக்கம்: மாமி கூறிய, 'அப்பார்ட்மென்ட்'டில் இருந்த பெண்ணிடம், ரிஷி, சில கேள்விகள் கேட்க, அவள் தயங்காமல் பதில் கூறினாள். அச்சமயம், சென்னை வந்துவிட்டதாக தமிழ்ச்செல்வி கூற, அவளை, 'ஹாஸ்டலில்' வந்து அழைத்த செல்வதாக கூறி, பைக்கில் புறப்பட, அவனை கறுப்பு நிற கார், பின் தொடர்ந்தது-
சென்னை நகர சாலையில், அன்று, வேகமாய் பயணிக்க முடியவில்லை, ரிஷியால். எதிரே ஒரு பிண ஊர்வலம். பிணத்துக்கு போடப்பட்ட மாலைகளை தெருவில் உதிர்த்து போட்டபடி, குடியும், கும்மாளமுமாக வந்தபடி இருந்தனர்.
சாலையில் இப்படி பூ குப்பைகளை போடவும், குடித்து விட்டு ஆடவும் யார் வழி காட்டினர் என்கிற கேள்வி, அப்போது ரிஷிக்குள் எழுந்தது.
'இப்படி பிண ஊர்வலம் நடத்துவது சரியா...' என்று கேட்டு, 'டிவி'யில் ஒரு விவாத நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று, மனதுக்குள் நினைத்துக் கொண்டான், ரிஷி.
கச்சிதமாக அவனை குறி வைத்து வந்த கறுப்பு சவேரா கார், அவனருகே வந்து உரசியபடி நின்றிருந்தது. உள்ளே மிக வித்தியாசமான தோற்றத்தில் இரண்டு பேர். ஒருவன், தலைமுடியை குடுமி போல் ரப்பர் பேண்ட் போட்டு கட்டியிருந்தான். இன்னொருவன் கையில், ஹார்லிக்ஸ் பாட்டில் மூடி சைசில் கை கடிகாரம், கழுத்தில் கன்னாபின்னாவென்று தங்கச் சங்கிலிகள்.
அவர்களை பார்த்த சில நொடி தருணத்தில், ரிஷியின் மனதில் பதிவாகி இருந்தனர். ஒருவழியாக, பிண ஊர்வலம் கடந்து செல்லவும், வேகமெடுக்கத் துவங்கினான், ரிஷி. தொடர்ந்தது அந்த கறுப்பு சவேரா!
ஊரிலிருந்து தான் கொண்டு வந்திருந்த பொருட்களை, 'ஷெல்பில்' எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள், தமிழ்ச்செல்வி. அருகில், 'பிசியோதெரபிஸ்டு'களுக்கான, 'பேக்'கில் எல்லா கருவிகளும் சரியாக உள்ளதா என்று பார்த்தபடி இருந்தாள் தோழி, ஜாக்குலின்.
தமிழ் அடிக்கடி கை கடிகாரத்தை பார்த்தபடியே இருக்க, ''என்ன தமிழ்... ரிஷி வரேன்னு சொல்லியிருக்காரா?'' என்றாள்.
''ஆமாம் ஜாக்குலின்... இன்னிக்கு மதியம் ஒரு ரிகர்சல் ஷூட்... அப்புறம், நேரடியா சுஜித் சாரோட உக்காந்துடறோம்.''
''ஆல் தி பெஸ்ட்.''
''உனக்கு தான் முதல் நன்றி சொல்லணும். உன்னால தானே சுஜித் சார் மனைவி அறிமுகம் கிடைச்சுது... அப்புறம் எல்லாம் நடந்தது.''
''இப்படித்தான் யார் மூலமா வேணும்னாலும் உதவி செய்வார், கடவுள். இதை, பெருசா நினைக்காதே.''
''இதைதான் பெருசா நினைக்கணும், ஜாக்குலின். இன்றைய நிகழ்ச்சியில, உனக்கும் நான் நன்றி சொல்லப் போறேன்.''
''அதெல்லாம் ரொம்ப அதிகம். உண்மையில அந்த, 'ஆயின்மென்ட்'டை நீ எடுத்துக்கிட்டு வந்து தந்ததுதான் பெரிய உதவி.''
இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது, தமிழின் கைபேசி, ஒலி எழுப்பியது.
''ரிஷி வந்துட்டான்... நான் புறப்படறேன்,'' என்றாள், தமிழ்ச்செல்வி.
அறைக்கு வெளியே வரவும், ஒரு கெட்ட வாடை. பொதுவாக உள்ள பாத்ரூம் டாய்லெட்டிலிருந்து தான் வந்தது. அதை, ஹாஸ்டல் வார்டன் சரியாக பராமரிப்பதில்லை என்கிற புகார் நெடுநாட்களாகவே உள்ளது.
எதிரில் வந்தாள், வார்டன் வள்ளியம்மை. பூசின உடம்பு, கறுப்பு நிறம். எம கிங்கர வேடம் போட்டால் கச்சிதமாக பொருந்தும். ஹாஸ்டல் மக்கள், செல்லமாய், 'எருமை' என்று தான் தங்களுக்குள் குறிப்பிடுவர்.
''மேம்... பாத்ரூம் டாய்லெட்டெல்லாம் ரொம்பவே வாடை அடிக்குது... கொஞ்சம் என்னன்னு பாருங்களேன்,'' என்றாள், தமிழ்ச்செல்வி.
''நீங்க தான் சுத்தமா வெச்சுக்கணும். விட்டா என்னைப் போய் கழுவச் சொல்வே போலிருக்கே?'' என்றாள், வள்ளியம்மை.
எதையும் தப்பாகவே புரிந்து, எதிர்வினை ஆற்றுவது தான், அவள் இயல்பு. இது, தமிழ்ச்செல்விக்கும் தெரிந்திருந்ததால், பதிலுக்கு ஒரு சின்ன முறைப்போடு கடந்தாள்.
ஹாஸ்டலுக்கு நேர் எதிரில், சாலை ஓரமாக ஹெல்மெட்டை கழற்றி, பில்லியன் மேல் வைத்து காத்திருந்தான், ரிஷி. தமிழ் வரவும், உற்சாகமானான்.
ரிஷியின் பைக் பின்னே, தமிழ் ஏறுவதை தற்செயலாக கவனித்தாள், வார்டன் வள்ளியம்மை. அவள் முகம் ஒரு மாதிரி மாறிப் போனது. மனதும், அவர்களை ஊர் சுற்றிகளாய் எண்ணிக் கொண்டது.
''கிராமத்துல அடைஞ்சு கிடந்துட்டு, இங்க வந்து நல்லாவே சுத்த ஆரம்பிச்சுடறாங்க. அதுக்கு தோதா ஒரு பையன். அவன்கிட்ட ஒரு பைக். நான் மட்டும் இந்திய பிரதமரா வந்தா, இந்த பைக் உற்பத்தியை தான் முதல்ல தடுத்து நிறுத்துவேன்,'' என்று, அருகில் இருப்போர் காதுகளில் விழுவது போல் முணுமுணுத்தாள்.
அவர்கள் யாரும், அவள் பேச்சை லட்சியமே செய்யவில்லை.
வெளியே பைக் சீறத் துவங்கியிருந்தது; கறுப்பு சவேராவும் பின் தொடர்ந்தது.
உள்ளிருந்த குடுமிக்கார மனிதன், யாருக்கோ போன் செய்தான்.
''பாஸ்... அவன் கூட இப்ப ஒரு பொண்ணும் சேர்ந்துட்டா.''
''அதனால என்ன... ரெண்டு பேரையும் துாக்கிடு... உயிருக்கு ஆபத்து வராதபடி, காயம்பட வெச்சா போதும்... இன்னிக்கு நிகழ்ச்சிக்கு, இரண்டு பேரும் வரக்கூடாது. அதான் இப்ப முக்கியம்.''
''அப்படியெல்லாம் கணக்கா, 'ஹிட்' பண்ண முடியாது, பாஸ். டிராபிக்கும் அதிகமா இருக்குது. வாட்டமா அவன் வண்டி மாட்டுறதுல தான் எல்லாம் இருக்கு.''
''பேசினது போதும், அடிச்சுத் துாக்கற வழியைப் பார். அவன் சேனல் ஆபீசுக்கு வந்துட்டா, அப்புறம் அவ்வளவு தான். இந்த, 'ஹிட்டு'க்கு வாங்குன, 50 ஆயிரம் கோவிந்தா தான். அதோட வேற பார்ட்டிகிட்ட போயிட்டா, நம்ப பொழப்பும் போயிடும்.''
பேச்சு கட்டானது. குரூரத்துக்கு மாறத் துவங்கியது, கார். அதன், 'ரிஜிஸ்டர் நம்பர்' எல்லாமே போலி... சி.சி.டி.வி., கேமராக்களில் இந்த ஆக்சிடென்ட் பதிவானாலும், கண்டுபிடிக்க முடியாது.
விபத்து செய்த அரை மணி நேரத்தில், அதன் கலரும், நம்பரும் மாற்றப்பட்டு விடும். அந்த கறுப்பு சவேரா, இந்த மாதத்தில் மட்டும் மூன்று முறை, தன் வண்ணத்தை மாற்றிக் கொண்டுள்ளது.
காரை ஓட்டும் அந்த சங்கிலிக்காரன், எமனுக்கு உற்ற நண்பன்... ஆக்சிலேட்டரை அழுந்த மிதித்தவன், ஒரு இடத்தில், ரிஷியை காட்டுத்தனமாய் கடந்ததோடு, அப்படியே பக்கவாட்டில் வளைக்கவும், ரிஷியும் வளைந்து கொடுத்து பைக்கை ஒடித்தான்.
பக்கவாட்டு நடைமேடை மேல் பைக் ஏறி, அப்படியே சிறிது துாரம் ஓடி, அருகில் இருந்த சாக்கடை கால்வாய்க்குள் போய் விழுந்தது.
கறுப்பு சவேராவும் நின்று, உள்ளிருந்து திரும்பிப் பார்த்தனர். கால்வாய்க்குள் இருந்து இருவரும் கறுப்பு நிறத்தில் எழுந்தபடி இருந்தனர். பெரிதாக காயம் பட்டது போல் தெரியவில்லை. அவர்களுக்கு சற்று ஏமாற்றமாகத்தான் இருந்தது.
அதற்குள் கூட்டம் கூடிவிட்டது. சிலர், உதவி செய்யத் துவங்கினர். ரிஷிக்கு மட்டும் காலில் காயம், கறுப்பு சகதிக்கு நடுவே இடது காலில் ரத்தம் சொத சொதவென்று கண்ணில் பட்டது. அப்படியே நிமிர்ந்து, அந்த காரை, ரிஷி பார்க்கவும், கார், வேகமாய் புறப்பட்டு விட்டது.
அதிர்வில் இருந்தாள், தமிழ்ச்செல்வி. அருகில் உள்ள டீக்கடைகாரர், இருவரையும் ஒன்றாக நிற்க வைத்து, தன் தேவைக்கு வைத்திருந்த தண்ணீரை எடுத்து வந்து கொட்டி, உடையின் சகதியை ஓரளவு நீக்கினார்.
''தமிழ், உனக்கு காயம் எதுவும் படலைதானே?'' என்ற கேள்வியை தான் முதலில் கேட்டான், ரிஷி.
அதற்குள் சிலர், பைக்கை இழுத்து, தள்ளிக்கொண்டு வந்து, அவர்கள் முன் நிறுத்தினர். டீக்கடைக்காரரிடம் மட்டும் ஒரு படபடப்பு.
''தம்பி... நான் பார்த்துகிட்டே தான் இருந்தேன். அந்த கார்காரன் மேலதான் தப்பு... தேவையே இல்லாம வலப்பக்கமா ஒடிச்சு உங்கள உரசப் பார்த்தான். நீங்க, நடைமேடையில ஏறி, தப்பிச்சுட்டீங்க. யாரோ உங்க எதிரிங்க போலதான் தெரியுது... பார்த்து தம்பி,'' என்றார்.
அர்த்தத்தோடு தமிழ்ச்செல்வியை பார்த்தவன், தொடர்ந்து நிற்க முடியாமல் அருகில் உள்ள மர பெஞ்சில் அமர்ந்தான்.
'டிவி' சேனல் அலுவலகம் -
ஜனாவின் கேபின். ஒலி எழுப்பிய கைபேசியை காதில் கொடுத்தவர் முகத்தில், ஒருவித மந்தகாச புன்னகை.
''நீங்க சொன்ன மாதிரியே அவங்க பைக்கை சைடுல ஒதுக்கி, கால்வாய்ல போய் விழுகிற மாதிரி பண்ணிட்டேன். நிச்சயம் காயம் பலமா இருக்கும். அவங்க இன்னிக்கு சேனல் ஆபீசுக்கு வந்து வேலையெல்லாம் பார்க்க முடியாது. மிச்சத்த நீங்க பார்த்துக்குங்க,'' என்று சுருக்கமாய் பேசி முடித்துக் கொள்ளவும், ஜனாவிடம் ஒரே சந்தோஷம்.
அடுத்த நொடியே தன், 'ஜால்ராக்'களை, 'இன்டர்காமில்' கூப்பிட்டார். 'திபுதிபு'வென்று வந்து நின்றனர்.
''ஒரு வருத்தமாக செய்தி... ரிஷியும், தமிழ்ச்செல்வியும், நம் ஆபீசுக்கு வந்துகிட்டிருக்கும்போது, விபத்து
ஏற்பட்டு, பலத்த காயமாம். இன்னிக்கு அவங்களால நிச்சயமா சுஜித் நிகழ்ச்சியை, 'ஹேண்டில்' பண்ண முடியாது. நானே, 'ஹேண்டில்' பண்றது தான் இப்ப இருக்குற ஒரே வழி.
''சுஜித்குமார் சாருக்கு இப்ப எதையும் சொல்ல வேண்டாம். அவர், சேனலுக்கு வந்ததுக்கு பிறகு சொல்லிக்கலாம். நீங்க போய், 'செட் ஒர்க்'ல இருந்து எல்லாத்தையும் பாருங்க. அந்த கேள்விகள் உள்ள பைலை இப்பவே என் டேபிளுக்கு எடுத்துட்டு வந்துடுங்க.
''உங்க நண்பர்கள், உறவினர்கள் யாராவது சுஜித்தை கேள்வி கேட்கிறதுன்னா கேட்கலாம். ரிஷியோட லிஸ்ட்ல உள்ளவங்களை துாக்கிட்டு, அதை, 'இன்செர்ட்' பண்ணிடலாம். கமான் க்விக்.''
ஒரே துள்ளல்.
ஜனாவின் இந்த உற்சாகம், பத்மஜாவிற்கு தெரிய வரவும், அதிர்ந்தாள். உடனே, தமிழ்ச்செல்விக்கு போன் செய்தாள். 'நாட் ரீச்சபிள்' என்று வந்தது. அடுத்து, ரிஷிக்கு போன் செய்தாள்.
நல்லவேளை அது வேலை செய்தது. ஆனால், தமிழ் பேசினாள்.
''தமிழ் நீயா... உன் போன் என்னாச்சு... ஆமாம், உங்களுக்கு ஆக்சிடென்டாமே?''
''ஆமாம் பத்மஜா... அது சரி, அது எப்படி உனக்கு தெரியும்?''
''ஜனா சார் தான் சொன்னார். சுஜித் சார் நிகழ்வை, அவர் தான், 'ஹேண்டில்' பண்ணப் போறாராம்... ஆமாம், உங்களுக்கு என்ன ஆச்சு... நீ இப்ப எங்க இருக்கே?''
''கோட்டூர்புரம்கிட்ட ஹாஸ்பிடல்ல இருக்கோம். ரிஷிக்கு தான் இடது கால்ல சதை பிஞ்சு போய் காயம். எனக்கு, எந்த காயமும் இல்லை. நாங்க, ஆக்சிடென்ட் மேட்டரை யாருக்கும் சொல்லவும் இல்லை. என் மொபைலுக்குள்ள சாக்கடை தண்ணி புகுந்து, அது கெட்டுப் போச்சு... ரிஷியோடது மட்டும் எப்படியோ தப்பிச்சு வேலை செய்துகிட்டிருக்கு.''
''ஓ.கே., டேக் கேர்... நீ சொல்றது வியப்பா இருக்கு. ஜனா சார் முகத்துல ஒரே சந்தோஷம். நீ சொல்றதையும், அவர் வேகத்தையும் பார்த்தா, அவர் தான் ஏதோ தில்லுமுல்லு பண்ணியிருக்கிற மாதிரி தெரியுது. இப்ப நீ என்ன பண்ணப் போறே?'' என்று கேட்டாள், பத்மஜா.
— தொடரும்
இந்திரா சவுந்தர்ராஜன்
