PUBLISHED ON : டிச 11, 2016

'ஸ்வீட்ஸ்ல, அல்வா, கேசரி, அதிரசம்ன்னா, மாமாவுக்கு ரொம்ப பிடிக்கும்; அதையும் கொஞ்சம் செஞ்சிடணும்...'
'வெங்காய பஜ்ஜி மாமா ரொம்ப விரும்பி சாப்பிடுவார்...' என்று மூன்று மருமகள்களும் ஆளாளுக்கு, 'மாமாவுக்கு, இது பிடிக்கும், அது பிடிக்கும்'ன்னு சொல்லிக் கொண்டே போனது, எரிச்சலை ஏற்படுத்த, ''வடைக்கு, உளுந்தை கிரைண்டரில் போட்டுருக்கேன், பதம் பாத்து வழித்தெடுங்க; எனக்கு தலை வலிக்குது. மாடிக்கு போறேன்,'' என்று சொல்லி, என் அறைக்குள் நுழைந்து, கட்டிலில் விழுந்தேன்.
அப்பா இறந்து, இன்றுடன், 30 நாட்கள் ஆகிவிட்டது. 30ம் நாள் படையலுக்கு வந்திருந்த அண்ணன், தம்பிகளின் மனைவிமார்கள், தங்கள் மாமனாருக்கு பிடித்ததாக கூறி, தங்களுக்கு தெரிந்த ஸ்வீட், காரத்தை செய்வதை பற்றி பேசிக் கொண்டனர்.
அவர் உயிருடன் இருந்த போது, இதில் எதையுமே செய்து கொடுக்காதவர்கள், இப்போது, கரிசனம் காட்டிப் பேசியது, எனக்குள் எரிச்சலை ஏற்படுத்தியது. அதனால் தான், என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளட்டும்; அப்பாவின் பசித்த, ருசித்த வாய்க்கு, செய்து போடாதவர்கள், இப்போது, புகைப்படத்திற்கு, இலையை போட்டு, விதவிதமாக கடை பரப்புவதில், என்ன பிரயோஜனம் என நினைத்து, என் அறைக்கு வந்து விட்டேன்.
என் அப்பாவிற்கு நான்கு பிள்ளைகள், இரண்டு பெண்கள்; அண்ணன் அப்பாவின் பூர்வீக கிராமத்திலும், அதற்கு இளையவன் வெளிநாட்டிலும் வேலை செய்கிறான். மற்ற இருவரும் உள்ளூரில் உள்ளனர். குடும்பத்தில், மூத்த பெண் நான்; இளையவள், பக்கத்தூரில் உள்ளாள்.
தங்கையை தவிர, இரு தம்பிகளும் ஒரே, 'காம்பவுண்டு'க்குள், தனித்தனி வீடுகளில் வசித்தோம். என் வீட்டில் நான், வீடு தங்காத ஊர் சுற்றியான என் கணவர், ஒரே மகள், என் அம்மா, அப்பா, திருமணம் ஆகாத தம்பி.
ஒரு கட்டத்தில், நாங்கள் இருந்த குடியிருப்பை, காலி செய்ய வேண்டிய கட்டாயம் நேர்ந்த போது, திசைக்கு ஒருவராய் குடியேறினோம்.
வீட்டை காலி செய்த அன்று, தன், பெரிய சொத்தாக கருதிய மரக்கட்டில், மர பீரோ, இரும்பு சாமான்கள் போன்ற பொருட்களை எல்லாம் ஒரு லாரியில் ஏற்றி, நான் எவ்வளவோ தடுத்தும் கேளாமல் சொந்த ஊருக்கு, அண்ணன் வீட்டிற்கு சென்றனர், என் பெற்றோர்.
ஒரு சில மாதங்கள் கூட கடந்திருக்கவில்லை. உடல் நலம் குன்றி, மோசமான நிலையில், மகனையும், மருமகளையும் குறை கூறி, நெய்வேலிக்கே திரும்பி விட்டனர். ஆனால், அப்படி வந்தவர்களை வாரியணைத்து வரவேற்க, இங்கிருந்த எந்த பிள்ளைக்கும் மனமில்லை. இப்பவும், அவர்களை என்னுடன் தான் தங்க வைத்துக் கொண்டேன்.
வேலைக்கு சென்று வரும் நிலையில் நான், சமைக்கும் சைவ சாப்பாடு, பசிக்கு விருந்து, அவ்வளவு தான். என் தந்தை ஆசைப்படும் அசைவ உணவை சமைத்து தர முடியாமல் போனது இப்போதும் எனக்கு மனக்குறை தான்.
பக்கத்து வீட்டில் இருக்கும் மூத்த தம்பியின் மனைவி, எப்போதாவது, தன் பிள்ளைகள் மூலமாக, காக்காவிற்கு வைப்பது போல், சமைத்ததை கொடுப்பதாக காட்டி கொண்டாளே தவிர, ஒரு விசேஷ நாட்களில் கூட, வீட்டிற்கு கூப்பிட்டு, இலை போட்டு, சாப்பாடு பரிமாறியது கிடையாது.
இன்னொருவன், நெய்வேலி, 'டவுன் ஷிப்'பில் குடித்தனம். ஒருநாள் கூட, அப்பாவை வீட்டிற்கு அழைத்து போய் சாப்பாடு போட்டது இல்லை. அப்பா, உடல் நலமில்லாமல், ஜி.எச்.,ல், 'அட்மிட்' ஆன போது கூட, ஆஸ்பத்திரியிலிருந்து கூப்பிடும் தூரத்தில் வீடு இருந்த போதும், மனைவியை சமைக்க சொல்ல பயந்து, ஓட்டலில், டிபன் வாங்கி தரும் அளவிற்கு, பாசமானவன்.
கடைசி தம்பி திருமணமாகாதவன்; அப்பாவிற்கு பயந்து, கடைசி வரை, அவரின் முகம் பார்த்து பேசாமலேயே இருந்து, அவர் இறந்ததும், தன் தவறுகளுக்கு இப்போது மறுகுகிறான்.
சில சமயம், அப்பா தனக்கு பிடித்ததை தானே, 'ஸ்டவ்'வில் சமைத்து சாப்பிட்டு, என்னையும் சாப்பிடச் சொல்லி நச்சரிப்பார். நான் மறுத்தால் முகம் சுருங்கி, விரும்பி சாப்பிட்ட நேரங்களில் மகிழ்வார்.
இவ்வளவு நடந்தும், ஒரு பிள்ளை கூட, தங்கள் வீட்டிற்கு கூட்டிக் கொண்டு போகாததும், இவரும், ஒரு மாறுதலுக்காக போகாமலிருந்ததன் காரணம் புரியவில்லை.
இந்நிலையில், திடீரென்று நெஞ்சு வலியில், யாருக்கும் தொந்தரவு தராமல் சட்டென்று இறந்து போனார்.
இறக்கும் போது கூட, தன் இறுதி செலவுக்கு, யாரும் சிரமப்படக் கூடாது என்று, தன், உள்ளாடையில், 5,000 ரூபாய் வைத்திருந்தார், அந்த தன்மான சிங்கம்.
'டொக்... டொக்...' அறையின் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, எழுந்து போய் திறந்தேன்.
''எல்லாம் தயாராயிடுச்சு... படையல் போட்டுட்டு இருக்காங்க; இறங்கி வாங்க,'' என்றாள், மூத்த தம்பி மனைவி.
மனசுக்குள், நான் ஒரு வேலையும் செய்யவில்லை என்ற கடுப்பும், என் வீட்டில், அவர் இறந்த காரணத்தால் அனைத்தும், இங்கேயே நடைபெற வேண்டியிருந்ததால் ஏற்பட எரிச்சலையும் காட்டிக் கொள்ளாமல், என்னை அழைத்தாள்.
மவுனமாக மாடியில் இருந்து இறங்கி, படையல் போட்டிருந்த இடத்திற்கு சென்று, ஓரமாக நின்றேன். இலை கொள்ளாத அளவுக்கு வகை வகையான உணவு; செய்ய முடியாதவற்றை கிலோ கணக்கில் கடையில் வாங்கி வைத்திருந்தனர். சூடம் ஏற்றி, படையல் முடிந்ததும், 'சீக்கிரம்... சீக்கிரம்... காலையிலிருந்து விரதமிருந்ததில் பசி; இலைய போடுங்க...' என்று ஆளாளுக்கு பறந்தனர்.
வரிசையாக இலையை போட்டு உட்கார்ந்தவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது.
அதுவரை பொறுமையாக இருந்த நான், ''காக்காய்க்கு சோறு வைக்கலயே...'' என்றேன். அப்போது தான், ஞாபகம் வந்தவர்களாய், ''யாரும் சாப்பிடாதீங்க... காக்காய்க்கு சாப்பாடு வைச்சுட்டு வர்றேன்; அப்புறமா சாப்பிடுங்க,'' என்றபடி, அவசரமாக துண்டு வாழை இலையை எடுத்து, படையலில் இருந்தவற்றை வகைக்கு ஒன்றாய் சேகரித்து, 'கா...கா...கா...' என்று அழைத்தபடி, வீட்டிற்கு பின்புறம் விரைந்தாள், நடுதம்பியின் மனைவி.
நான், வாசலுக்கு வந்து, காக்கா வருகிறதா என்று, எட்டிப் பார்த்தேன்.
நான் வெளியில் நிற்பதை பார்த்த இரண்டாவது தம்பி, ''வந்து நீயும் உட்காறேன்,'' என்றான்.
''நீங்க சாப்பிடுங்க... நான், அப்புறமா சாப்பிட்டுக்கிறேன்,'' என்றபடி, மனசுக்குள், 'காக்கா வந்து எடுத்த பின் தான் சாப்பிட வேண்டும்...' என்ற முடிவில் இருந்தேன். மற்ற தினங்களில், கூட்டம் கூட்டமாக பறக்கும் காகங்கள் இன்று, ஒன்று கூட கண்ணில் படவில்லை.
காக்காவை கூப்பிட்டு, அலுத்துப் போன தம்பி மனைவி, அங்கே புல் மேய்ந்த பசு மாட்டின் முன் வைத்தாள். பசு சாப்பிட்டதும், ''மாமாவுக்கு பசு மாடுன்னா ரொம்ப பிடிக்கும்ல... அதான், மாடு சாப்பிட வந்திருக்கு; எல்லாரும், இப்ப சாப்பிடுங்க,'' என்றாள்.
எல்லாரும் சாப்பிட்டனர். நான் சாப்பிடாமல், வேறொரு இலையில், வெறும் சாம்பார் சாதத்தை எடுத்து தோட்டத்தில், சிறிது உயரமான மரக்கிளையில் வைத்தேன். எங்கிருந்தோ பறந்து வந்த காகம் ஒன்று, 'லபக்' என்று, ஒரு வாய் கவ்வி, பறந்தது.
என் கண்ணில் நீர் பொங்கியது; அமைதியாய் உள்ளே சென்று, இலையை போட்டு, சாப்பிட்டு எழுந்தேன்.
சாப்பாடு முடிந்ததும், எல்லாரும் ஒன்றாய் அமர்ந்தனர். பின், அப்பாவின் படத்திற்கு முன் வைக்கப்பட்டிருந்த, அவரால் பயன்படுத்தப்பட்ட, 'கோல்டு' வாட்ச், கண்ணாடி, மொபைல்போன் மற்றும் டிரான்ஸ்சிஸ்டர் போன்ற பொருட்களை யார் யார் எதை எடுத்துக் கொள்வது என்பது குறித்து, பேச ஆரம்பித்தனர்.
''மொபைல்போனை நான் எடுத்துக்கிறேன்,'' என்று அண்ணன் கூறியதும், உடனே, நடுவில் உள்ளவன்,
''நீ தான் மொபைல்போன் வச்சிருக்கியே... நான் எடுத்துக்கிறேன். என்னோடத, பெரியவ காலேஜுக்கு போறதாலே எடுத்துக்கிட்டா,'' என்றான்.
இரண்டாது தம்பி மனைவி குறுக்கிட்டு, ''என்னோட மொபைல்போன் தொலைஞ்சிடுச்சு... மாமா ஞாபகமா எங்கிட்டே எதுவுமில்ல; அதனால நான் எடுத்துக்கிறேன்,'' என்றாள்.
'அடிப்போடி... உன் புருஷனே, அவரது ஞாபகார்த்த அடையாளந்தானே... அவனை, அப்பப்ப வெளிநாட்டிற்கு துரத்தி சம்பாதிக்க வைக்காம, உள்ளூரிலேயே வேலை பாக்க விடு; அது போதும்...' என்று, மனசுக்குள் சொல்லிக் கொண்டேன்.
அடுத்து, 'கோல்டு' பிரேம் போட்ட கண்ணாடி; சைக்கிள், ஈசிசேர் என, அப்பா அனுபவித்த பொருட்களை, பங்கு போட்டுக் கொள்வதில், வார்த்தைகள் உஷ்ணமாகியும், உரிமையை விட்டுக் கொடுக்காமலும், அவருக்காக, தாங்களே மற்றவர்களை விட அதிகமாக உழைத்து சிரமப்பட்டதாகவும், ஒருவர் மாற்றி ஒருவர் குரலுயர்த்தி, அடித்துக் கொள்ளாத குறையாய், பங்கு போட்டுக் கொண்டனர். நான் வாயைத் திறக்கவில்லை.
'நீ என்ன எடுத்துக்கப் போறே...' என்று, ஒருவர் கூட என்னைக் கேட்கவில்லை.
பங்கு போடுதல், ஒரளவிற்கு முடிந்த நிலையில், அவரவர் வீட்டிற்கும், ஊருக்கும் புறப்பட தயாராயினர்.
என் அண்ணன், திடீரென, கூரையை அண்ணாந்து பார்த்து, ''டேய் பசங்களா... அப்பாவோட, 'சீலிங்' பேனை யாரும் எடுத்துக்கலயா... நான் கழட்டி எடுத்துக் கட்டுமா...'' என்றதும், ''நல்லாயிருக்கே... பழைய, 'பேன்' ரிப்பேர்ன்னு அப்பா எங்கிட்டே சொன்னப்ப, நான் தான் இதை புதுசா வாங்கி கொடுத்தேன். நியாயப்படி, இத நான் தான் எடுத்துக்கணும். அடுத்த முறை வரும் போது, கழட்டிட்டுப் போறேன்; இப்ப அதுக்கு நேரமில்ல,'' என்றான் நடுத்தம்பி.
அனைவரும் புறப்பட தயாரானதும், ''எல்லாரும் மறக்காம அப்பாவோட ஞாபகார்த்தமா ஆளாளுக்கு ஒரு பொருளை எடுத்துக்கிட்டீங்களே... முக்கியமான ஒண்ண மட்டும் பங்கு போட்டு எடுத்துக்க தோணலயா...'' என்றேன்.
நான் எதையோ, மிக முக்கியமான பொருளை சுட்டிக் காட்டப் போகிறேன் என்று நினைத்து, அனைவரும் என்னை ஏறிட்டுப் பார்த்தனர்.
பிள்ளைகளையும், மருமகள்களையும், பேரன், பேத்திகளையும், ஒரு சேர பார்த்து, இப்போது பிரிந்து போகப் போகின்றனரே... மறுபடியும் இவர்களை எப்ப பார்ப்பது என்ற பாசத்தினால் ஏற்பட்ட கவலை, முகத்தில் படிந்திருக்க, வழியனுப்ப, வாசல் வராண்டாவில் நின்றிருந்த அம்மாவை சுட்டிக் காட்டி, ''அப்பா, 45 ஆண்டு காலமாக அனுபவித்த, ஞாபகார்த்த பொருள், உங்க அம்மா தான்.
''ஜடப் பொருட்களை பங்கு போட தோன்றிய உங்களுக்கு, உயிருள்ள அம்மாவ, கூட்டிட்டு போக ஏன் தோணல... 'அப்பாவை தான், கடைசி வரைக்கும் வச்சு பராமரிக்கல; அம்மாவையாவது, கூட்டிட்டுப் போய், அவங்க மனசு நிறைவா சமைச்சுப் போட்டு, சேவை செஞ்சு கவனிச்சுக்கணும்'ன்னு, ஒரு பிள்ளைக்கு கூட தோணவேயில்லயா...
''பரவாயில்ல; எத்தனை பிள்ளைகள் இருந்தாலென்ன, நானே, அவங்கள கடைசி வரைக்கும் என்னோட வச்சு காப்பாத்திக்கிறேன்; உங்களுக்கு அந்த சிரமம் வேணாம்,''என்றேன்.
என் வார்த்தைகளில் இருந்த உண்மை, அவர்கள் மனதை தைக்க, மவுனமாக தலை குனிந்தனர்!
சாய் சரோஜா
சொந்த ஊர்: நெய்வேலி,
வயது: 63,
படிப்பு: பி.எஸ்சி., - எம்.ஏ., விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகத்தில், சில ஆண்டுகளும், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கில், பல ஆண்டுகளும் பணிபுரிந்து, ஓய்வு பெற்றவர். சிறு வயது முதலே, இவர் எழுதிய கவிதை, கட்டுரை, சிறுகதைகள், பிரபல வார பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. டி.வி.ஆர்., நினைவு சிறுகதை போட்டியில் கலந்து கொண்டு, ஆறுதல் பரிசு பெற்றது, இதுவே முதல் முறை என்றும், தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறுகிறார்.
