
அலுவலகத்திலிருந்து வீட்டிற்குள் நுழைந்ததும், மனைவி புவனாவிடம், ''தீபக் எங்கே?'' என்று கேட்டான் சங்கர்.
''உள்ளதாங்க இருக்கான்.''
''சாப்பிட்டானா?''
உதட்டைப் பிதுக்கி, ''காலையில காபி சாப்பிட்டதோடு சரி.''
இதைக் கேட்டதும், கவலையோடு சோபாவில் அமர்ந்த சங்கர், ''ஒரே பையன்னு செல்லம் கொடுத்து வளர்த்தது, தப்பா போச்சு. கோபப்பட்டா இன்னும் பிடிவாதம் ஏறி, எதிர்மறையா போய்டுமோன்னு பயமாவும் இருக்கு; எவ்வளவோ பொறுமையா எடுத்துச் சொல்லிப் பாத்தாச்சு... புரிஞ்சுக்க மாட்டேங்கிறானே...'' என்றான் ஆதங்கத்துடன்!
''எல்லாம் சகவாச தோஷம்; பிரெண்ட்சுகள பாத்து இவனும் ஆசைப்படறான்,'' என்று கூறி கவலைப்பட்டாள், புவனா.
எழுந்து, தீபக்கின் அறைக்குள் சென்றான் சங்கர்.
தூங்குவது போல், கட்டிலில் சாய்ந்து படுத்திருந்தான் தீபக். மகனின் தலையை மென்மையாக வருடி, தோளை மெதுவாக உலுக்கி, ''தீபக்... ஏம்ப்பா சாப்பிடல...'' என்று கேட்டான் சங்கர்.
கண் திறந்த தீபக், அப்பாவை நேராக பார்க்காமல், ''பசிக்கல,'' என்றான்.
''நீ கேட்டபடி வண்டி வாங்கி தந்தா பசிக்குமோ...'' என்றான் சங்கர். மவுனமாக இருந்தான் தீபக்.
அறையை விட்டு வெளியே வந்து, ''வேற வழியில்ல புவனா... கடனோட கடனா வண்டி வாங்கிட வேண்டியது தான்,'' என்றான் சுரத்தில்லாமல்!
''தவணை முறையிலா...''
''வேற வழி... அவன் கேக்கற வண்டி, 80 ஆயிரம் ரூபாய் கிட்ட வருது... நம்மகிட்ட ஏது அவ்வளவு பணம்... தவணை முறையில தான் வாங்கணும்,'' என்றான்.
''அப்ப வீட்டு செலவு கையைக் கடிக்குமே...''
''எதையாவது குறைக்க முடியுமான்னு பாரு,'' என்றான் சங்கர்.
அதற்கு மேல் அவர்கள் பேசிக் கொள்ளவில்லை.
மறுநாள் காலை, தன் அண்ணன் பாஸ்கருக்கு போன் போட்டு, ''கொஞ்சம் வீடு வரைக்கும் வந்துட்டு போண்ணே,'' என்றாள் புவனா.
பாஸ்கர் வீட்டிற்கு வந்த போது, தீபக் வீட்டில் இல்லை. தன் மகன் பற்றிய கவலைகளை பகிர்ந்து கொண்ட புவனா, ''அண்ணே... தீபக் நல்லாத்தான் இருந்தான். ஓரளவு படிக்கவும் செய்தான். பிளஸ் 1 சேர்ந்ததிலேர்ந்து ரொம்ப மாறிட்டான். அவன் கூட இருக்கற பிரெண்ட்சுக எல்லாம் டூ வீலர் வச்சுருக்காங்கன்னு இவனும் கேட்டு அடம்பிடிக்கறான். அதுவும் அவன் கேக்கற வண்டி, லட்ச ரூபாகிட்ட வரும்போல இருக்கு. பாவம் அவரு... பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தறாரு. திடீர்ன்னு அவ்வளவு பணத்துக்கு எங்க போவாரு... அதுவும் இந்த வயசுல இவனுக்கு வண்டி தேவையா.. எங்கயாவது போய் விழுந்து வெச்சான்னா... அத நெனச்சா பயமா இருக்கு.
''ரெண்டு, மூணு மாசமா அரிச்சுகிட்டிருந்தவன், இப்ப ஒரு வாரமா சரியா சாப்பிட மாட்டேங்கறான். சின்னப் புள்ளயிலிருந்து அன்பா வளத்துட்டு, இப்ப அடிக்கவும் முடியல. நீ கொஞ்சம் புத்தி சொல்லிப்பாருண்ணே,'' என்றாள்.
''உன் கவலை புரியுது புவனா... இத ஜாக்கிரதயா, 'டீல்' செய்யணும். ஒத்தப் பிள்ளைய பெத்து, கஷ்டங்கள கண்ணுல காட்டாம வளக்கறதோட பாதிப்புகள்ல இதுவும் ஒண்ணு! குடும்ப வருமானம், செலவு என்ன... இப்ப இந்த பொருள் ரொம்ப தேவையான்னு பிள்ளைகள யோசிக்க விடாம வளர்த்திட்டு, திடீர்ன்னு வீட்டுக் கஷ்டத்த சொன்னா, அதுங்க மண்டையில ஏறாது. தன்னோட நண்பர்களைப் போல வண்டி வாங்கி, ஸ்டைலா போகணும்; தங்களோட ஸ்டேட்டஸ் மத்தவங்களுக்கு புரியணும்ன்னு ஒரு வழிப்பாதையா தான் அவங்க யோசனை இருக்கும். சரி... அவன்கிட்ட பேசிப் பாக்கறேன். எப்ப வருவான்?'' என்று கேட்டான் பாஸ்கர்.
''இன்னும் கொஞ்ச நேரத்தில வந்துருவான்,'' என்றாள் புவனா.
வெளியிலிருந்து வந்த தீபக், பாஸ்கரை பார்த்ததும் சம்பிரதாயமாக, ''வாங்க மாமா...'' என்று கூறி, தன் அறைக்குள் சென்று விட்டான்.
'இப்போ அவன் புத்தியில வண்டி விஷயம் மட்டும் தான் இருக்கு; மற்ற எதுவும், யாரும் அவனுக்கு முக்கியமல்ல...' என்பது பாஸ்கருக்கு புரிந்தது.
தீபக்கை அழைத்த பாஸ்கர், ''ஒரு சின்ன உதவி... கொஞ்சம் என்கூட வா; திரும்ப கொண்டு வந்து விட்டுடறேன்,'' என்றான்.
மாமாவின் வேண்டுகோளை தட்ட முடியாமல், ''சரி...'' என்று அரை மனதுடன் கிளம்பினான் தீபக். புவனாவிடம் விடைபெற்று, தன் ஸ்கூட்டரில் மருமகனுடன் புறப்பட்டான் பாஸ்கர். 20 நிமிடங்களில் ஒரு பங்களா முன், இறங்கி, உள்ளே சென்றான்.
''ஹலோ... வாங்க பாஸ்கர்,'' என்று வரவேற்ற நடுத்தர வயது நபர், தீபக்கை பார்த்து, ''யார் இந்த பையன்?'' என்று கேட்டார்.
''என் தங்கச்சி பையன்,'' என்று கூறி, ''உங்க பையன் இப்ப எப்படி இருக்கான்?'' என விசாரித்தான் பாஸ்கர்.
''இப்ப கொஞ்சம் பரவாயில்ல...'' என்றவர், தன் மகனின் அறைக்கு அவர்களை அழைத்து சென்றார். அறையில், தீபக் வயதை ஒத்த ஒரு இளைஞன் படுத்திருந்தான். தலையிலும், காலிலும் பெரிய கட்டுகள் போடப் பட்டிருந்தது. தலைமாட்டில் கவலையே உருவமாக உட்கார்ந்திருந்தாள் அவனின் அம்மா.
''டாக்டர் என்ன சொன்னாரு?'' என்று கேட்டான் பாஸ்கர்.
''இன்னும் ரெண்டு மாசத்துல சரியாகிடும்ன்னு சொல்றாரு,'' என்றார்.
அங்கே சிறிது நேரம் இருந்து, பின், நண்பரிடம் விடைபெற்று புறப்பட்டான் பாஸ்கர்.
அடுத்து அவர்கள் சென்ற இடம், மகாத்மா மனநலம் குன்றிய மற்றும் கைவிடப்பட்டோருக்கான இல்லம்.
அவர்களை வரவேற்ற பொறுப்பாளரிடம், ''இது எங்க ஆபீஸ்ல கலெக்ட் செய்தது சார்,'' என்று ஒரு கவரை கொடுத்த பாஸ்கர், தீபக்குடன், அங்கிருக்கும் சிறுவர்களை பார்க்க கிளம்பினான்.
பெற்றோரை இழந்த மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகள், இங்கு வந்த விவரம் புரியாமலேயே, தங்களுக்குள் பேசியும், சிரித்தபடியும் காணப்பட்டனர். ஒரு சில மனநலம் பாதித்த சிறுவர்கள், ஜன்னலோரமாக எதையோ தேடியும், சுவரில் கிறுக்கிக் கொண்டும் இருந்தனர். கல் மனம் கொண்டோரையும் கலங்க வைக்கும் அக்குழந்தைகளை பார்த்து, மனம் வேதனைப்பட்டான் தீபக்.
சிறிது நேரத்தில், இல்லத்தில் இருந்து விடைபெற்று, வெளியில் உள்ள மரத்தடியில் பாஸ்கரும், தீபக்கும் உட்கார்ந்தனர். ஆதரவற்றோர் இல்லச் சிறுவர்களை நினைத்து, யோசனையுடன் அமர்ந்த தீபக்கை நோக்கி, ''என்ன தீபக்... என்ன யோசனை?'' என்று கேட்டான் பாஸ்கர்.
''ஒண்ணுமில்ல மாமா... இவங்கள பாத்தா பாவமா இருக்கு,'' என்றான்.
வெற்று சிரிப்பை உதிர்த்து, ''அவங்க பாவம் தான்... அவங்களுக்கு அன்பு காட்ட பெற்றோர் இல்ல; ஆனா, அப்படிப்பட்ட பெற்றோர் இருந்தும், அதை உணராத நீதான், அவங்கள விட பாவம்...'' என்றான் பாஸ்கர்.
சட்டென்று நிமிர்ந்து, கேள்விக்குறியோடு, ''நானா...'' என்றான் தீபக்.
''ஆமாம்; கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, என் நண்பர் வீட்டுக்கு போனோமே... அவங்க ரொம்ப வசதியானவங்க. ஏகப்பட்ட சொத்து. இருந்தும், ஒத்த மகன கண்காணிக்க கூட நேரம் இல்லாம, மேலும் மேலும் சொத்து சேர்க்க ஓடிகிட்டே இருந்தாங்க. அவங்களப் பொறுத்தவரை மகன் கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்தா போதும்ன்னு நினைச்சாங்க..
''இப்ப என்னாச்சு... பையன் பைக்குல வேகமா போயி, லாரி மேல மோதி, நாலு மாசமா பெட்ல இருக்கான். நார்மலுக்கு வர, எல்லா கடவுளையும் வேண்டிக்கிட்டுருக்காங்க. பையன் மேல பாசம் இருந்தும், நேரம் ஒதுக்கி வளக்காமல் போனதோட விளைவு இது!
''இப்ப ஆதரவற்ற குழந்தைகளை பாத்தியே... இவங்களுக்கு ஒரு மனிதனோட குறைந்தபட்ச தேவையான சாப்பாடு, உடை, இருக்க இடம் கூட, யாரோ சம்பந்தமில்லாதவங்களோட கருணையால கிடைக்குது. வளர்ந்த பின்பும், இவங்களே கஷ்டப்பட்டு, அவங்க தேவையை பூர்த்தி செஞ்சுக்கணும். ஆனா, நீ... மிடில்கிளாஸ்ல வாழ்ந்தாலும், அருமையான அப்பா, அம்மா, நல்ல சாப்பாடு, படிப்பு, நல்ல உறவு கிடைச்சும், அதோட அருமை தெரியாம, மத்தவங்கள பாத்து, வண்டி வேணும்ன்னு பிரச்னை செய்றே... வெறும் உப்பு சப்பில்லாத காரணத்துக்காக, நீ உண்ணாவிரதம் இருந்து, உன்னை பெத்தவங்க மனச புண்படுத்தற,'' என்றான் பாஸ்கர்.
சிறிது நேரம் ஏதும் பேசாமல் இருந்த தீபக், பின், மெதுவாக, ''நான் வண்டியே கேக்ககூடாதா மாமா... அது ரொம்ப தப்பா?''
''தப்புன்னு யார் சொன்னா... இப்ப உனக்கு அது அவசியமா, உங்க வீட்டு சூழ்நிலையில, உங்கப்பாவால, ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து உடனே வண்டி வாங்கி தர முடியுமா, உனக்காக யார்கிட்டயோ போய், உங்கப்பா கடன் கேக்குற சூழ்நிலை தேவையான்னு யோசி... நல்லா படி; பிளஸ் டூ வுல நல்ல மார்க் எடுத்து, உங்கப்பா டொனேஷன் கொடுக்கற மாதிரி நிலைமைய உண்டாக்காம கவர்மென்ட் கோட்டாவுல நல்ல காலேஜ்ல சேர்ந்து, அப்புறமா உன் தேவையை கேளு. அவங்கள யோசிக்க விடு; வற்புறுத்தாத... கண்டிப்பா வாங்கி தருவாங்க.
''அம்மாகிட்ட ஜாக்கிரதையா வண்டில போவேன்னு சொல்லி, பணிந்து கேளு. உன் மேல நம்பிக்கை வர்ற மாதிரி நட, 'ப்ளாக் மெய்ல்' செய்யாத... அவங்க எதிர்பார்ப்பே நீதான்; புரிஞ்சி நட,'' என்று கூறி எழுந்த போது, திருந்திய மனதுடன் தன் மாமாவுடன் வீட்டிற்கு புறப்பட்டான் தீபக்.
கீதா சீனிவாசன்

