தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ஓய்வுக்காலம்!

ஓய்வுக்காலம்!

ஓய்வுக்காலம்!


PUBLISHED ON : அக் 08, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 08, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துளசிச்செடியை சுற்றிக் கொண்டிருந்த முள் கிளைகளை அப்புறப்படுத்தினாள், சுதா. அவளின் உள்ளங்கையில் முட்கள் குத்தி, முணுக்கென்று ரத்தத்துளிகள் எட்டிப்பார்த்தன.

''ஏம்மா, உனக்கு இந்த வேலை?'' என்றவாறு, அங்கே வந்த மகன் பாபு கடிந்து கொண்டான்.

''இல்லப்பா... முள்ளு செடி அடர்த்தியா வளர்ந்து...'' என்று, சுதா சொல்லும்போதே, ராகினி வந்து விட்டாள்.

''ஏன் அத்தை இப்படி தெனம் ஏதோ ஒரு வகையில் அடிபட்டுக்கறீங்க? ரெண்டு நாட்களுக்கு முன், பால் பாத்திரத்தை வெறும் கையில் தொட்டு புண்ணாக்கி, அவஸ்தைப்பட்டீங்க.

''போன வாரம், 'அயர்ன்' பண்றேன்னு சொல்லி, உங்க மைசூர் சில்க் புடவையை ஓட்டை போட்டீங்க. இன்னும் ரெண்டு மாசத்தில், 'ரிடயர்ட்' ஆகப் போறீங்க, ஓய்வு எடுக்கறது எப்படின்னு யோசிங்க,'' என்று பொரிந்து தள்ளினாள்.

''ஆமாம்மா... இது எல்லாருக்கும் நடக்கறது தான். வயது ஏற ஏற, உடம்போட சக்தி குறையும். பழைய மாதிரியே நினைச்சுக்கக் கூடாது. அமைதியா உட்கார, ஓய்வெடுக்க, பொறுமையா இருக்க கத்துக்கணும். இன்னும் ரெண்டு மாசம் இருக்கு. பழகிக்கோ. நானும், ராகினியும், வேலம்மாவும் எல்லாம் பாத்துக்கறோம்,'' என்ற பாபு, தள்ளாத குறையாக சுதாவை வீட்டினுள் அனுப்பினான்.

மூச்சு முட்டுவது போலிருந்தது சுதாவுக்கு. அவர்கள் சொல்வதெல்லாம் உண்மையாகக் கூட இருக்கலாம். மூப்பு என்பதை யாரும் விலக்கி விட முடியாது. ஆனால், அதற்காக முடங்கி உட்கார முடியுமா?

இவ்வளவு ஆண்டுகள் வீட்டை, அலுவலகத்தை, பிள்ளை வளர்ப்பை ஓடி ஓடி செய்துட்டு, இப்போது சடாரென, 'நீ ஓய்வு பெற்று விட்டாய், மூலையில் உட்கார்...' என்று சொல்கின்றனரே... நியாயமா இது?

புதரில் கொம்புகள் சிக்கிக் கொண்ட மான் போல ஆனாள். இன்னும் இரண்டு மாதங்களுக்குப் பின், வீட்டுச் சிறைக்குள் சிக்கப் போகிறேனா? ஓய்வு பெற்று விட்டதாக, மனது குத்திக் காட்டி, என்னை முடக்கப் போகிறதா?

திடீரென யாமினியின் நினைவு வந்தது. சுதாவின் சிறு வயதுத் தோழி. யாமினியும், சுதாவும் சென்னை, பல்லாவரத்தில் பிறந்து, வளர்ந்தனர். ஒரே பள்ளிக்கூடம், ஒரே கல்லுாரி என்று சீரான நட்பும், கல்வியும், வேலைவாய்ப்பும் பெற்று திருமணமாகி, இல்லறத்தில் புகுந்தனர்.

விட்டுப் போன நட்பு, 10 ஆண்டுகளுக்குப் பின் புதுப்பிக்கப்பட்டது. துாரத்து உறவினர் வீட்டு திருமணத்தில் சந்தித்தனர். அவளும் சுதாவை போல, அரசு ஊழியராக இருந்தாள். மகன், மருமகள், பேரன், பேத்தி என்று பொதுவான நிறைய விஷயங்கள் அவர்களுக்குள் இருந்தன.

அவ்வப்போது பேசுவர் என்றாலும், அவ்வளவாக நேரில் சந்திக்க முடியவில்லை. அவளிடம் பேசி மனதை ஆற்றுப்படுத்திக் கொள்ள தோன்றவே, போனில் அழைத்தாள், சுதா.

''சுதா... உனக்கு தெரியுமா, நேத்து ராத்திரி, நீ, என் கனவில் வந்தாய். நாம் இருவரும் ஜமீன் பல்லாவரம், குமரன் குன்று மேல் நடக்கிறோம். பழைய காட்சி அப்படியே கண்ணில் வந்தது. மந்திரக்கோல் சுழன்ற மாதிரி, நீயே அழைக்கிறாய். வா வா,'' என்று அன்பைக் கொட்டினாள், யாமினி.

கிளம்பி விட்டாள், சுதா.

வாசலில் நின்று வரவேற்றாள், யாமினி.

திகைத்துப் போனாள், சுதா.

என்னை விட ஐந்து மாதங்கள் மூத்தவள். ஆனால், என்னை விட ஐந்து ஆண்டுகள் இளையவள் போல இருந்தாள். அடர்ந்த கூந்தலை சுருட்டி கொண்டை போட்டிருந்தாள். முகம் துடைத்து விட்டது போல அவ்வளவு பொலிவு.

''வா, சுதா... இளைத்து விட்டாய். வயிறு பெருக்காமல், தோள் குறுகாமல் சரியான தோற்றத்தில் இருக்கிறாய்,'' என்று சொல்லி சிரித்தாள்.

காபி, முறுக்கு என்று கொறித்து விட்டு பேச உட்கார்ந்தோம்.

''ரொம்ப சோர்ந்து போயிருக்கிறேன், யாமினி. சக்கரத்தைக் கட்டிக் கொண்டு பறந்த காலம் முடியப் போகிறது; சிறகுகள் வெட்டப்பட உள்ளன; இன்னும் ரெண்டு மாதத்தில் ஓய்வு பெற போகிறேன். இதுதான் இயல்பு. 'உழைத்தது போதும், மூலையில் உட்கார்...' என்று, மகனும், மருமகளும், சொல்லாமல் சொல்கின்றனர்.''

''ம்!''

''அவர்களை விடு, நல்ல குழந்தைகள் தான். எனக்கு, என்னை கண்டு தான் பயமாக இருக்கு, யாமினி. மிச்ச நாட்களை எப்படி கழிக்கப் போகிறேன். பேரன், பேத்திகள் கதை கேட்கும் வயதைத் தாண்டி விட்டனர்.

''மகனும், மருமகளும், கல்லுாரி புரபசர்கள். நாலு சுவர்களைப் பார்த்துக் கொண்டு எப்படி இருக்கப் போகிறேன்? நீதான் வழி சொல்லணும், யாமினி. எப்படி சமாளிக்கிறாய்?

''ஓடி ஓடி சுழன்ற கால்களை, பரபரவென ஆயிரம் வேலைகள் செய்த கைகளை, அடுத்தது அடுத்தது என்று சுறுசுறுப்பு காட்டிய மனதை எப்படி மாற்றினாய், யாமினி?'' என்றாள், சுதா.

''சொல்றேன் சுதா... உனக்கு நினைவிருக்கா, நம் பிசிக்ஸ் மேம் ரத்னாவதி, வேளச்சேரில இருந்து வருவாங்களே.''

''ஆமாம், நாம கல்லுாரியில் முதல் வருஷம் படிக்கும்போது, 'ரிடையர்ட்' ஆனாங்க.''

''அவங்களே தான். அவங்க ஓய்வு பெற்றுப் போன ஆறு மாசத்துக்கு காலேஜ் முழுக்க அவங்களைப் பத்தி தான் பேச்சு. மனச்சிதைவு நோய்க்கு ஆளானது, முழுநேரம் வீட்டுல இருந்து, ஓய்வை எதிர்கொள்ள முடியாமல், மனோதத்துவ மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக்கறதுன்னு, அவங்களைப் பத்தி தான் பேச்சு.''

''ஆமாம் யாமினி, நினைவிருக்கு.''

''அப்பவே என் மனசுல ஒரு எண்ணம் விழுந்தது, சுதா. ஓய்வு என்பது எந்த வேலையும் செய்யாத ஓய்வு இல்லை, ஒரு வேலையில் இருந்து, இன்னொரு வேலையைச் செய்வது தான் ஓய்வு.''

''என்ன?''

''ஆமாம் சுதா. நம் வீட்டு பெண்களை நினைத்துப் பார். நம் அம்மாக்கள், பாட்டிகள். யாரும் வேலைக்குப் போகலை. ஆனால், 70 - 80, ஏன், 90 வயது வரைக்கும் கூட நல்லபடியா வாழ்ந்திருக்காங்க.

'' பூண்டு, மாங்காய், நாரத்தை, கோவக்காய், காரட் மற்றும் சுரைக்காய்ன்னு எதைப் பாத்தாலும் ஊறுகாய் விதவிதமா போடுவாள், என் பாட்டி. ஊர் முழுக்க அப்படி ஒரு ரசிகர் கூட்டம், அந்த ஊறுகாய்க்கு. அவ்வளவு ஆர்வமாய் செய்வாள், பாட்டி. என் அம்மா, தையலில் கில்லாடி.

''அந்தக் கால பெண்களுக்கு, தையலும், சமையலும் தானே எல்லாம்... ஓய்வுன்னு ஒரு, 'பீரியட்' வரப் போவதும் இல்லை. அம்மா அவ்வளவு அழகா கை எம்பிராய்டரி, உல்லன் ஜாக்கெட், லினன் ரவிக்கைன்னு விதவிதமாக தைக்கக் கற்றுக் கொண்டாள்.

''என் சித்தி, பிடிவாதமாக வாய்ப்பாட்டு கற்றுக் கொண்டாள். இதோ இந்த, 70 வயதிலும் பாட்டு வகுப்பு எடுக்கிறாள். பாட்டியின் தங்கை, அந்தக் காலத்திலேயே கதை, கவிதைன்னு எழுதுவாள்; இன்னிக்கும் அதை விடாமல் செய்கிறாள். நான் என்ன செய்கிறேன்னு கேட்கிறாயா? வா,'' என, கைப்பிடித்து அழைத்து, பின்பக்கம் போனாள்.

கொல்லைப்பக்கம் அரை கிரவுண்ட் நிலம் இருந்தது. முழுக்க முழுக்க சின்னஞ்சிறு செடிகள், நாற்றுகள், பூக்கன்றுகள் என, நுாற்றுக்கணக்கில் வரவேற்றன. பார்க்கும் எவரையும் முதல் காட்சியிலேயே கவரும் அழகுடன் பசுமை.

''உனக்கு, நினைவிருக்கா, சுதா... எங்க அம்மா வீட்டில் தோட்டம் இருக்கும். என்னைத்தான் பராமரிக்க சொல்வாள், அம்மா. மெல்ல மெல்ல எனக்கும் அதில் ஆர்வம் வந்து விட்டது.

''எனக்கென்று வாழ்க்கை, எனக்கென்று குடித்தனம் என்று வந்த பிறகு, இந்த சின்னஞ்சிறு தோட்டத்தை அமைத்தேன். ஆபிசில் முதுகு ஒடிய வேலை பார்த்து விட்டு வந்தாலும், இங்கே தோட்டத்தில் அரைமணி நேரமாவது செலவழித்தால் தான், மனதுக்கு அமைதியாக இருக்கும்.''

திகைப்புடன் பார்த்தாள், சுதா.

''பூச்செடிகள், ஓமவல்லி, கீழாநெல்லி, வெற்றிலை மற்றும் துாதுவளைன்னு நிறைய குட்டிச் செடிகள் விற்பனை பண்றேன்; எல்லாம் குறைந்த விலைக்கு. தவிர, கொத்தமல்லி, வெந்தயக்கீரை, புதினா இதையெல்லாம் நாற்றுகளா வளர்த்து சின்ன அளவு, தொட்டிகள்ல வெச்சு கொடுக்கிறேன். ஆர்வமாக வாங்கறாங்க.

''எனக்கு தான் அந்த அளவுக்கு வினியோகம் பண்ண முடியல. எல்லாம் குழந்தைகள் மாதிரி சுதா எனக்கு, தினம் இவங்க முகத்தில் தான் விழிப்பேன். நீர் பாய்ச்சுவது, உரம் போடுவது, களை எடுப்பது, புது நாற்றுகள் போடுவது, விற்பனையை கவனிப்பது.

''என் ஓய்வு காலம் மிக அழகாக மாறி விட்டது. வாழ்வின் அடுத்த அத்தியாயம் எழுதும் காலம் ஆரம்பமானது. என்றுமே, 'ரிடயர்ட்மென்ட்' என்று ஒரு தேதி இல்லாத காலம். வீடு, குழந்தை வளர்ப்பு என்று பொருளாதாரத் தேவைகளுக்காக ஓடிய உடம்பு, இப்போது மன நிறைவுக்காக நிதானமாக உழைக்கிறது, சுதா.

''எனக்கில்லை, உனக்கில்லை, நம் எல்லாருக்குமே இப்படி ஒரு வாய்க்கால் வேண்டும், மனதை இதப்படுத்த. பொழுதுபோக்குன்னு சொல்லலாம்; ஆசை, கனவுன்னு சொல்லலாம். ஆனால், பொருளாதாரம் சாராத ஒரு வேலை எல்லாருக்கும் வேண்டும்.

''யோசி, உன் ஆழ் மன விருப்பம் என்ன... எதை நினைத்து ஏங்குகிறது மனது... எதில் ஈடுபட எப்போதும் ஆசைப்பட்டிருக்கிறது? யோசி, விடை கிடைக்கும்.''

யாமினி தோளில் சாய்ந்து கொண்டாள், சுதா.

நமக்கு நாமே உருவாக்கிக் கொண்ட கூண்டின் சாவி, நம்மிடமே இருக்கிறதோ என்று, முதன் முறையாக யோசிக்க துவங்கினாள், சுதா.

வி. உஷா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us