PUBLISHED ON : பிப் 20, 2011

பிப்.21- எறிபக்தர் குருபூஜை
ஆட்சியா... நீதியா என்றால், அக்கால மன்னர்களில் பலர், நீதிக்கே முதலிடம் அளித்தனர். ஒரு கன்றைக் கொன்ற பாவத்திற்காக, தன் மகனையே தேர்க்காலில் இட்டுக் கொன்றது, கோவலனைக் கொன்றதற்காக, தன் உயிரையே மாய்த்துக் கொண்டது ஆகிய தியாகங்களைச் செய்த மனசாட்சியுள்ள மன்னர்கள் இருந்த நாடு இது. அவ்வகையில், மன்னன் ஒருவன், பக்தர் ஒருவரை தண்டிக்க இருந்த குற்றத்துக்காக, தன் உயிரையே மாய்க்க தயாரானான். அந்த பக்தரின் பெயர் எறிபத்தர்.
கரூர் நகரில் அவதரித்த இவர், தீவிர சிவ பக்தராகத் திகழ்ந்தார். இங்குள்ள சிவாலயத்துக்கு வரும் சிவனடியார்களுக்கு யாராவது துன்பம் செய்தால், கடுமையாக கோபம் வந்து விடும். தன் கையிலுள்ள மழு எனும் ஆயுதத்தை எறிந்து, அவர்களைத் தட்டிக் கேட்பார்.
அந்தக் கோவிலில், புரட்டாசி அஷ்டமி விழா சிறப்பாக நடக்கும். ஒருமுறை, விழாவுக்கு பக்தர்கள் ஏராளமாக வந்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார் எறிபத்தர். அப்போது, சிவகாமியாண்டார் என்ற சிவபக்தர் அங்கு வந்தார். அவர், சுவாமிக்கு பூக்கள் கொண்டு வருபவர். அந்தக் காலத்தில், சுவாமிக்கு சுத்தமான பூக்களை மட்டுமே மாலை கட்டி அணிவிப்பர்.
புரட்டாசி அஷ்டமி விழாவுக்கு, மிக மிக சிறப்பாக மாலை கட்டி, கூடையின் மீது துணியால் மூடி, தூசு படாமல் பக்குவமாக கொண்டு வந்தார். தெருவில் அவர் வரும் போது, அரண்மனை பட்டத்து யானை, திடீரென மதம் பிடித்து, ஓடத் துவங்கியது. கூட்டத்தினர் கலைந்து ஓடினர்; சிவகாமியாண்டாரும் ஓடினார்.
ஆனால், யானை அவரை நெருங்கி, கையில் இருந்த பூக்கூடையைப் பறித்து, காலில் போட்டு மிதித்தது. அவரைக் கீழே தள்ளி, அவரையும் மிதிக்க இருந்த வேளையில், எறிபத்தர் கவனித்து விட்டார். யானையை அடக்குவதற்காக தன் கையில் இருந்த அரிவாளைக் கொண்டு மிரட்டினார். அது, கோபத்துடன் எறிபத்தரை தூக்கி வீச முயன்றது. எறிபத்தர் தன்னைக் காத்துக் கொள்ள, யானையின் தும்பிக்கையை வெட்டினார். யானையை சரிவர பராமரிக்காத பாகன்களையும் வெட்டி கொன்றார்.
விஷயம் அரண்மனைக்குப் போனது. மன்னன் புகழ்ச்சோழன் நேரில் வந்தான். யானையையும், பாகனையும் வெட்டியது ஒரு சிவனடியார் என்பதை அறிந்து, அவரிடம் என்ன ஏதென்று விசாரித்தான்.
'அரசே... யானையை மதம் பிடிக்கும் அளவுக்கு கொண்டு சென்றது பாகன்களின் கவனக் குறைவு. எனவே, அவர்களை வெட்டினேன். யானையிடம் இருந்து தற்காத்துக் கொள்ள, அதன் தும்பிக்கையை வெட்ட வேண்டியதாயிற்று...' என்றார்.
உடனே அரசன், 'இறைவனுக்குரிய மலரை தட்டி விட்ட யானையையும், அதை சரிவர பராமரிக்காத பாகன்களையும் வெட்டியது நியாயமே. ஆட்சியில் தலைமைப் பொறுப்பில் இருப்பவனே இதற்கெல்லாம் பொறுப்பு. பாகன்கள் ஒழுங்காக செயல்படுகின்றனரா, விழாவுக்குச் செல்லும் யானை நல்ல நிலையில் இருக்கிறதா என்பதையெல்லாம் நான் கண்டுகொள்ளவில்லை. இந்த ஆட்சிக்கு ஏதோ கேடு காலம். அதனால் தான் சிவ அபசாரம் நடந்திருக்கிறது. இப்படிப்பட்ட பூமியில் நான் வாழ மாட்டேன்...' என்றவன், வாளை எடுத்து எறிபத்தரிடம் கொடுத்து, 'அடியவரே... என்னையும் வெட்டி வீழ்த்துங்கள்...' என்று, தலை குனிந்து நின்றான்.
தன்னையும் விட, சிவபக்தியில் உயர்ந்த மன்னனைக் கண்டு எறிபத்தர் வெட்கப்பட்டார். யானையையும், பாகன்களையும் வெட்டியதற்காக வருத்தம் தெரிவித்தார். நெறி தவறாத அவனது நிலையைக் கண்டு, மனம் பதைத்த அவர், மன்னன் கொடுத்த வாளைக் கொண்டு, தன்னையே வெட்டிக் கொள்ள முயன்றார். மன்னன் அதைத் தடுத்து, அவரது காலில் விழுந்தான்.
அப்போது, சிவபெருமான் பார்வதிதேவியுடன் அவர்கள் முன் தோன்றி, அவர்களது பக்தியைப் பாராட்டினார். வெட்டுப்பட்டவர்களை குணமாக்கினார். யானையும் எழுந்து நின்றது. தனக்கு மலர் சேவை செய்த சிவகாமியாண்டாரை வாழ்த்தினார்.
தங்கள் நாட்டில் நடந்த சிறு தவறுக்குக் கூட பொறுப்பேற்று, உயிரையே கொடுக்கத் துணிந்த மன்னர்கள் வாழ்ந்த நாட்டில் பிறந்த நாம் பேறு பெற்றவர்கள். எறிபத்தரின் குருபூஜை நன்னாளான மாசி அஸ்தம் நட்சத்திரத்தில் இந்த நிலை மீண்டும் மலர, அந்த சிவ பெருமானை வேண்டுவோம்.
படம்: எம்.ஹரிஹர செல்வன்.***

