
தமிழ் சினிமா தயாரிப்பில், பல உயரங்களைச் சந்தித்த, சாண்டோ சின்னப்பா தேவரின் நூற்றாண்டு விழா, ஜூன் 28, 2015 முதல் துவங்கியுள்ளது. அச்சாதனையாளரின் வரலாற்று தொடர் இது —
பொங்கல் பண்டிகைக்காக, ஊழியர்கள் பலர் தங்கள் சொந்த ஊருக்கு சென்றிருந்தனர். ஆரூர்தாஸ் போன்ற உள்ளூர் கதாசிரியர்கள் மட்டுமே தேவருடன் இருந்தனர்.
'ஏம்பா தாசு... வெலிங்டன் வரைக்கும் போயிட்டு வரலாமா... நாளைக்கு தாய்க்கு தலைமகன் படம் ரிலீஸ். எம்.ஜி.ஆர்., ரசிகர்கள் பேனர், கொடி, தோரணம்ன்னு ஏதாவது கட்டிக்கிட்டு இருப்பாங்க. போனா, நேர்ல பாத்துப் பேசலாம்; அவங்க எதிர்பார்ப்பு என்னன்னு தெரியும். என் முதலீடே எம்.ஜி.ஆர்., தானப்பா... அவர் படமே ஓஹோன்னு போகலன்னா கம்பெனி எப்படி நடக்கும்...' என்றார் கவலையுடன்!
தேவர் எதற்கும் அலட்டிக் கொள்கிறவர் அல்ல; வெற்றி, தோல்வியைக் காட்டிலும், ஆண்டிற்கு நாலு படமாவது தயாரித்து விட வேண்டுமென்பது தான் அவரது எண்ணம். இதனாலேயே எம்.ஜி.ஆரின் தீவிர அரசியல் ஈடுபாடு, அவருக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. எம்.ஜி.ஆர்., சினிமா நடிகராக மட்டும் இருந்தால் தேவலை என்று நினைத்தார்.
'தாசு... இந்த தேர்தல் வேற பாடாப்படுத்துதே... எம்.ஜி.ஆர்., பரங்கிமலையில மொத மொதலா நிக்கிறார். அவரை வெச்சு, கடகடன்னு,
25 படம் தயாரிக்கணும்ன்னு ஆசைப்படறேன். ஆனா, அவருக்கும் எம்.எல்.சி., - எம்.எல்.ஏ., - அமைச்சர்ன்னு அரசியல்ல ஆசைய காமிச்சுட்டாங்களே... நாளைக்கு படம் பார்க்க, ரசிகன் தியேட்டருக்கு வருவானா, அவர் பின்னாலேயே பிரசாரத்துல சுத்துவானா...' என்று அங்கலாய்த்தார்.
'அண்ணே... இந்தப் படத்தைச் சேர்த்து எம்.ஜி.ஆரோட ஒரு டஜன் படம் எடுத்துருக்கீங்க; இதுவே பெரிய சாதனை தான்...' என்றார் ஆரூர்தாஸ்.
'அட போப்பா... நீ வேற கணக்குப் போட்டுக்கிட்டு... மணி 5:30 ஆயிடுச்சு; வெலிங்டன்ல விசாரிச்சிட்டு, படம் பாத்துட்டு வரலாம்; கிளம்பு...' என்றார் தேவர்.
தேவருக்கு சினிமா எடுப்பதும், படம் பார்ப்பதும் ஒரே மாதிரியான இன்பம். அதுவும் மூன்று, நான்கு வாரங்களோடு முடிந்து விடுகிற, முத்துராமன் நடித்த தோல்வி படங்களைக் கூட விட மாட்டார். 'ஏதாவது விஷயம் இருக்கும்பா... நம்ம படத்துக்கு என்னிக்காவது உதவும்; அவன் கோட்டை விட்ட விஷயத்த நாம சரியாச் சொல்வோம். நமக்கு வசூல் ஆகிட்டுப் போகுது...' என்பார்.
இருவரும் கிளம்ப தயாரான போது, போன் அடித்தது; மறுமுனையில், எலிகன்ட் பப்ளிசிட்டிஸ் கமலநாதன்!
'அண்ணே... எம்.ஜி.ஆரைச் சுட்டுட்டாங்களாம்...' என்று அலறினார்.
இதைக் கேட்டதும், தேவருக்கு சர்வமும் ஒடுங்கி விட்டது. அதிர்ச்சி, ஆவேசம், ஆற்றாமை, பரிதவிப்பு, பயம், படபடப்புடன் ரத்தக் கொதிப்பும் கூடியது.
இருள் கவிழ்ந்து கிடந்தது கடற்கரை. விடிவதற்கு இன்னும் நேரம் இருந்தது. அலைகளின் ஓரம் நடந்து கொண்டிருந்தார் தேவர். ஈரக் காற்று, காதுகளில் பலமாக அறைந்தது. 'இதுவே இந்த வலி வலிக்கிறதே... துப்பாக்கி தோட்டா, அவரைத் துடிதுடிக்க வைத்திருக்குமே... எப்படித் தான் தாங்கினாரோ...' என்று எண்ணியவருக்கு கண்ணீர் முட்டியது. மணலைத் திரட்டி ஓர் ஓரமாக உட்கார்ந்தார்.
'எம்.ஜி.ஆரால் இனி சினிமாவில் நடிக்க முடியாது; ஏன் வாயைத் திறந்து பேசக் கூட இயலாது....' என்ற வதந்திகளால், தமிழக மக்கள் மட்டுமல்ல, தேவரும் தவித்துப் போயிருந்தார்.
தர்மம் தலைகாக்கும் படத்தின் கதாநாயகனை, அவரது வள்ளல் தன்மை தான் காப்பாற்றியது.
'இன்னும் கொஞ்சம் வேகமாகக் குண்டு பாய்ந்திருந்தால், முதுகுத் தண்டுவடத்தில் பட்டிருக்கும். எம்.ஜி.ஆர்., அமரராகி இருப்பார்...' என்றது டாக்டர்களின் அறிக்கை. தேவரால் அதை, காது கொடுத்துக் கேட்க முடியவில்லை.
எம்.ஜி.ஆர்., இல்லாத சினிமாவை யோசிக்கவோ, கற்பனை செய்யவோ அவரால் முடியவில்லை.
அவரை அடையாளம் தெரிந்து கொண்ட சில மீனவர்கள், 'அய்யா... நீங்க சினிமா படம் எடுக்கிற தேவர் தானே...' என்றனர்.
திரைக்குப் பின்னால் நடக்கும் வன்முறை, அடிதடி, அருவருப்பான ஆபாச ரணகளம் பற்றி தெரியாத அவர்கள், 'ஐயா... நீங்க பெரிய மனுஷங்க... எங்க வாத்தியாரை, எம்.ஆர்.ராதா சுடற வரைக்கும் பார்த்துக்குன்னு சும்மாவா, இருந்தீங்க...' என்று குமுறினர்.
அத்துடன், தேவரின் கைகளை பிடித்து, 'அய்யா... நீங்க அவரை ஆசுபத்திரில போய் பாத்திருப்பீங்களே... சொல்லுங்கய்யா, அவரு உசுரு பொழச்சு வந்து, முன்ன மாதிரி நடிப்பாரா?
'கரை மேல் பிறக்க வைத்தான்'னு எங்க கஷ்டங்களை எல்லாம் பாட்டாப் பாட எம்.ஜி.ஆரை விட்டா ஆளு இல்ல. அவரைக் காப்பாத்துங்க சாமி. உங்களுக்குக் கோடி புண்ணியம்...' என்று கூறி, கதறி அழுதனர்.
விடிந்ததும், தி.நகர் அகத்தியர் கோவிலுக்குச் சென்று அர்ச்சனை செய்த தேவர், வீட்டிற்கு வந்து மடியில், 1,000 ரூபாய் நோட்டுகளை அள்ளி நிரப்பிக் கொண்டார். நேரே அரசு பொது மருத்துவமனைக்குள் நுழைந்தார்.
எம்.ஜி.ஆரின் நெற்றியில் திருநீறு பூசினார். விபூதிப் பொட்டலத்தை அவர் தலையணையின் கீழே வைத்தார். தன் வேட்டி மடிப்பிலிருந்து பணத்தை எடுத்து, தன் உயிர் நண்பரிடம் நீட்டினார்.
எம்.ஜி.ஆர்., வாயிலிருந்து, 'ணே... ணே...' மட்டும் தான் ஒலித்தது. 'இதெல்லாம் எதுக்கு இப்ப... வேணாமே...' என்று கண்களாலேயே பேசினார் எம்.ஜி.ஆர்., தேவரின் விழிகளிலிருந்து கண்ணீர் மழை!
'முருகா... நீங்க பழையபடி தேவர் பிலிம்ஸ்ல நடிக்கறீங்க; முன்ன மாதிரியே வருஷத்துக்கு மூணு படம். இது அட்வான்ஸ் மட்டும் தான்; எலக் ஷென் செலவு இருக்கில்ல... நாளைக்கு மறுபடியும் கொண்டாரேன். நம்ம படத்துக்கு டைட்டில் கூட ரெடி... மறுபிறவி அடுத்து விவசாயி...' என்றார்.
இரு கரம் கூப்பினார் எம்.ஜி.ஆர்., அவரின் கரங்களை அழுத்தமாக பற்றிக் கொண்டார் தேவர்.
எம்.ஜி.ஆரின் எதிரிலேயே, 'சின்ன வாத்தியார்' என்று புகழகப் பெற்றவர்கள் இருவர். ஒருவர், ரவிச்சந்திரன்; வெள்ளிவிழா நாயகனான இவருக்கு ரசிகைகள் அதிகம். மற்றொருவர், 'தென்னக ஜேம்ஸ்பாண்ட்' என்று தனித்துவம் பெற்றிருந்த ஜெய்சங்கர்!
ரவிச்சந்திரனை வைத்து படமெடுக்க விரும்பினார் தேவர். அப்போது, அவருக்கு வினியோகஸ்தர்களிடையே அதிக வரவேற்பு இருந்தது. அதிலும், 'ரவிக்கு ஜோடியாக ஜெயலலிதா நடித்தால், படம் நிச்சயம் சூப்பர் ஹிட்...' என்று பேசப்பட்டது.
பந்துலு படத்தில் சண்டைக் காட்சியில் நடித்து போது, கால் ஒடிந்து, வீட்டில், ஓய்வில் இருந்தார் ரவிச்சந்திரன்.
இந்நிலையில், அவருக்கு போன் செய்து, 'நீ என் படத்துல நடிக்கிற...' என்றார் தேவர். பதில் சொல்லத் தயங்கினார் ரவிச்சந்திரன்.
ஆனால், தேவரோ, 'வர்ற அமாவாசையில் வாகினியில பூஜை; மருதமலை முருகன் இருக்கான்; பட பூஜைக்குள்ள உன் கால் சரியாகிடும். மறக்காம வந்துடு தம்பி...' என்றார்.ரவிச்சந்திரனால் தட்ட முடியவில்லை.
மகராசி ஆரம்ப விழா அன்று, 'தம்பி... நீ பெரிய கதாநாயகன் ஆகிட்ட. இனியும் வாடகை வீட்டுல குடியிருக்காம, சொந்த வீடு வாங்கு. அதுக்கு எவ்வளவு பணம் வேணுமோ நான் தரேன்...' என்று கூறி தேவர் வழங்கிய தொகையில், சென்னை, தி.நகர் போக் சாலையில், வீடு வாங்கினார் ரவிச்சந்திரன்.
வழக்கமான தேவர் பட வசனமான, 'வெற்றி... வெற்றி...' எனக் கூறி, ரவிச்சந்திரன் நடிக்க, மகராசி படம் ஆரம்பமானது.
படப் பூஜையுடன், ஜெயலலிதா - ரவிச்சந்திரன் டூயட் பாடல் காட்சியையும் படமாக்கினார் இயக்குனர் திருமுகம். ஆனால், படம் பாதியில் நின்று விட்டது. காரணம், ரவிச்சந்திரனுக்கு அம்மை நோய் பாதித்தது.
வேப்பிலைப் படுக்கையில் இருந்தவரை தினமும் சந்தித்து, 'தம்பி... மூணாவது தண்ணி ஊத்துனவுடனே, முதல்ல எம் படத்துல நடிக்க வந்துடு; ஏப்ரல், 11ன்னு ரிலீஸ் தேதி குறிச்சு, போஸ்டரும் தயாராகிடுச்சு...' என்றார் தேவர்.
— தொடரும்.
நன்றி: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்,
சென்னை.
பா. தீனதயாளன்