PUBLISHED ON : மார் 13, 2016

தமிழ் சினிமா தயாரிப்பில், பல உயரங்களைச் சந்தித்த, சாண்டோ சின்னப்பா தேவரின் நூற்றாண்டு விழா, ஜூன் 28, 2015 முதல் துவங்கியுள்ளது. அச்சாதனையாளரின் வரலாற்று தொடர் இது —
அண்ணாசாலையில் ஓடுகிற முக்கால்வாசி சினிமாக்களில், அந்த நடிகை, இரண்டாவது கதாநாயகியாகவே வந்து போனார். நிறமோ கறுப்பு; சர்ச் பார்க்கில் படித்திருந்தாலும், பேச்சில் முழுக்க முழுக்க தமிழ் நெடி. பிரபலமான நடன ஆசானின் உறவு பெண்ணான ஸ்ரீபிரியாவை தவிர, வேறு யாரையும், அலமேலுவாக தேவரால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை.
எதுகை மோனைக்காக, ஆட்டுக்கார அலமேலு என்று படத்திற்கு பெயர் சூட்டினர். ஏற்கனவே கஜானா காலி. அதனால், வழக்கமாக வாகினி ஸ்டுடியோவில் பூஜை போடுவதை தவிர்த்து, முதன் முதலாக தேவர் பிலிம்ஸ் அலுவலகத்திலேயே பூஜை போட்டனர். தன் பேத்தி சண்முக வடிவை, 'கேமரா ஸ்விட்ச் ஆன்' செய்ய வைத்தார் தேவர்.
ஆட்டுக்கார அலமேலு படத்திற்காக மேட்டுப்பாளையத்தில் முகாமிட்டார், தேவர். திரைக்கதை மற்றும் வசனத்தை தூயவன் எழுத, அதிக செலவில்லாமல், படம் எடுத்தனர். கிட்டு கவுண்டரின், 100 ஏக்கர் தோட்டத்தில், ராமுவின் தனி ஆவர்த்தனம்.
பாட்டெழுத கண்ணதாசன் அகப்படவில்லை. தேவர் யாருக்காகவும், எதற்காகவும், காத்திருந்து பழக்கப்படாதவர். மாராவை அழைத்து, 'ஏம்பா... நாலு பாட்டு தானே... நீயே எழுதிடேன்; இதுக்கு எதுக்கு கவிஞரு...' என்றார்.
வேர்க்கடலையை, உள்ளங்கையில் வைத்தபடி, ராமுவின் முன் செல்வார், பயிற்சியாளர் நசீர். ராமு, எம்.ஜி.ஆர்., கணக்காக குதிக்கும்; முட்டும்; கொம்பால் குத்தி மோதும்; எஜமானி அலமேலுவின் உயிரை காப்பாற்றும்; 'டேப் ரிகார்டரை ஆன்' செய்து, பாட்டு கேட்கும்; அதை வாயில் கவ்வியபடி, க்ளைமாக்சில் போலீசிடம் ஓடும்.
தேவரை கிண்டல் செய்து, 'என்ன அண்ணே... இந்த ஆடு, நம்பமுடியாத சாகசத்தையெல்லாம் செய்யுது, ஜனங்க ஏத்துக்குவாங்களா...' என்பார் சிவக்குமார்.
'அடப்போப்பா... விட்டலாச்சாரியா படங்கள மக்கள் எப்படி ரசிக்கிறாங்க. மாயாஜாலத்தை ஒத்துக்கிறவங்க, ஆடு பல்டி அடிக்கிறத ரசிக்க மாட்டாங்களா... தாசரி நாராயணராவ் தெலுங்குல எடுத்த, சொர்க்கம் நரகம் படம் வெள்ளிவிழா கொண்டாடிடுச்சு. அந்தப் படத்த இந்தியில, ரீ - மேக் செஞ்சு, காசு அள்றாரு நாகி ரெட்டி. நாம அந்தப் படத்த தமிழ்ல தயாரிச்சோம்; ஓடலை. தேவருக்கு எதுக்கு இந்த வேலை. 'இவர யாரு விலங்குக இல்லாம படம் எடுக்க சொன்னதுன்னு கடிதம் போடறானுங்க...' என்றார்.
தேவரை தவிர, ஒருவருக்கும் நம்பிக்கை ஏற்படவில்லை. வழக்கமாக அவரிடம் படம் வாங்கும் வினியோகஸ்தர்கள், 'ஒரு வாரம் தாங்காது அண்ணே...' என்று, முகத்தை தொங்கப் போட்டபடியே, படப்பெட்டியை எடுத்தனர். ஒரு சிலர் மிக புத்திசாலித்தனமாக வந்த விலைக்கு, வாங்கிய படத்தை விற்று விட்டனர்.
கோமாதா என் குலமாதா தேவருக்கு வெற்றிப்படம். ஆட்டுக்கார அலமேலு அந்த அளவு ஓடினாலும் போதும் என்று நினைத்தார் தேவர். 1977ல் தீபாவளி அன்று, வெலிங்டன், பரங்கிமலை ஜோதி, அபிராமி என்று, தியேட்டர்களுக்கு படை எடுத்தனர் மாரா மற்றும் தியாகராஜன்.
வழக்கமாக தீபாவளி ரேசில் பங்கு கொள்ளும் சிவாஜி, ஜெய்சங்கர் படங்களுடன் சிவகுமாரின் மூன்று படங்கள் வெளியாகி இருந்தன.
முதன் முதலாக பெரிய கம்பெனியில், தன் நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் விதமான கதாநாயகி வேடம் என்பதால், படம் வெற்றியடைய வேண்டுமே என்று, தேவருக்கு மேல் முருகனை கும்பிட்டார் ஸ்ரீபிரியா.
தேவர் பிலிம்சிலிருந்து காலையிலேயே அவர் வீட்டுக்கு ஊழியர்கள் சென்று விட்டனர். ஸ்ரீபிரியாவிடம் பழநி பஞ்சாமிர்தம், விபூதி, சந்தன பிரசாதங்களை கொடுத்தனர். ஒவ்வொரு பட வெளியீட்டின் போதும், தங்களுடன் பணியாற்றிய கதாநாயகன், கதாநாயகிகள், டெக்னீஷியன்கள், கதை, வசனகர்த்தா அனைவருக்கும் பழநி பஞ்சாமிர்தமும், விபூதியும் வழங்குவது தேவர் பிலிம்ஸ் வழக்கம் என்று, அவருக்கு விளக்கினர்.
ஸ்ரீபிரியா கண்களில் ஒற்றி, 'முருகா நீ தமிழ்க் கடவுள்... நான் என்ன முயற்சி செஞ்சாலும், இங்கே தெலுங்கு, மலையாள கதாநாயகிகளுக்கு கிடைக்குற, வாய்ப்பு எனக்கு வரமாட்டேங்குது. அந்த நிலைமை மாறணும். நானும் முன்னணி கதாநாயகி ஆகணும்...' என, வேண்டிக் கொண்டார்.
அவர் வேண்டுதல் அப்படியே பலித்தது. 1977ம் ஆண்டு, ஆடு ஜெயித்த தீபாவளியாகி விட்டது. கதாநாயகன் சிவகுமார் முதல், 'ஜாக்பாட்டை' கோட்டை விட்ட வினியோகஸ்தர்கள் வரை, தேவரின் கணிப்பை மெச்சினர்.
தேவர் பிலிம்சில் அதுவரை எந்த விலங்குக்கும் கிடைக்காத பேரும் புகழும், ராமுவுக்கு கிடைத்தது.
ஆடு தோன்றிய ஒவ்வொரு காட்சியும், தியேட்டர்களில் ஆரவாரம். தேவர் பிலிம்சில் எம்.ஜி.ஆர்., நடித்த, 16 படங்களையும் கடந்து, ஆட்டுக்கார அலமேலு வெள்ளி விழா கொண்டாடியது. தெலுங்கிலும் இப்படத்தை, புட்டேலு பொன்னம்மா என்ற பெயரில் தயாரித்தது, தேவர் பிலிம்ஸ். தமிழை விடவும் அங்கு வசூலும், வரவேற்பும் அதிகம்.
மே 4, 1978ல் அபிராமி தியேட்டரில் ஆட்டுக்கார அலமேலு படத்தின் வெள்ளி விழா. அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக, ராமு என்ற ஆடும் கலந்து கொண்டு, எம்.ஜி.ஆரிடம் கேடயம் பரிசு பெற்றது.
நீலமலைத் திருடன் மற்றும் நேர்வழி படங்களைத் தொடர்ந்து ரஜினியை குதிரை மீது ஏற்றி, தாய் மீது சத்தியம் படத்தை தயாரித்தார் தேவர்.
ரஜினிக்காக, 'புறப்படடா தம்பி, புறப்படடா! தர்மம் பூமியில் நின்று நிலையாய் வாழ புறப்படடா...' என எழுதினார் மருதகாசி.
மூன்று பாடல்களையுமே டி.எம்.சவுந்தரராஜன் பாடினார். காட்சியை படமாக்கலாம் என்றால், படப்பிடிப்பில் ரஜினி ஒத்துழைக்கவில்லை என்றனர்.
ரஜினிக்கு பைத்தியம் என்று, திரை உலகமும், பத்திரிகைகளும் சேர்ந்து முரசு கொட்டின. தேவருக்கும் அது புது அனுபவம். நம்பவும் முடியவில்லை; நம்பாமல் இருக்கவும் வழி இல்லை. அதிக வேலை பளு மற்றும் போதை பழக்கத்தால் ஏற்பட்ட நரம்பு தளர்ச்சி என்று மருத்துவர்கள் காரணம் கூறினர்.
கடந்த 1978ல் தமிழ் சினிமா, ரஜினிக்கு மாறியிருந்தது. சிவாஜி கணேசன் படத்திலும், சிறப்புத் தோற்றத்தில் ரஜினி வந்தார். படப் பிடிப்புக்கு ரஜினியைத் தேடி சென்று தனியே கூப்பிட்டு பேசினார் தேவர்; தன் முடிவைக் கூறினார் ரஜினி.
'முடியல அண்ணே... எல்லாம் போதும்ன்னு இருக்கு. நான் எச்சித்துப்பினாக் கூட, 'நியூஸ்' வருது. சுதந்தரமா வாழ முடியல. பொறுமைய ரொம்பவே சோதிக்கறாங்க. தூங்கி நாலு நாளாச்சு. மூணு, ஷிப்டும், 'டைட் கால்ஷீட். 'ஷாட் ரெடி' மட்டும் தான் காதுல கேக்குது. எந்தப் புகழைத் தேடி சென்னை வந்தேனோ, அதுவே இப்ப என்னை ஓட ஓட விரட்டுது. தற்கொலை பண்ணிக்கலாம்ன்னு தோணுது...' என்றார் ரஜினி.
அதிர்ந்த தேவர், 'முருகா... என்ன வார்த்தை சொல்ற... உங்கிட்ட திறமையும், உழைப்பும் இல்லேன்னா இந்த வெற்றி வந்துருக்குமா... நீ பழசை மறக்கற ஆளு இல்ல; பெங்களூர்ல கண்டக்டரா வேல செஞ்சது முதல், எல்லாத்தையும் குமுதம் புத்தகத்துல படிச்சேன். கடவுள் பக்தியும் இருக்கு. அப்புறம் ஏன் ஒடிஞ்சு போறே? இத்தனைக் கெடுபிடியிலும் உடம்பு சுகமில்லன்னாலும், ஷூட்டிங்குக்கு சரியா வந்துட்ட. தொடர்ந்து நடி. எம்.ஜி.ஆருக்கு அப்புறம் வயசுப் பசங்க உங்கிட்ட தான் மயங்கிக் கிடக்கிறாங்க. போ தம்பி... மருதகாசி பாட்டைப் படிச்சப் பார்த்தியா, உனக்காகவே எழுதின மாதிரி இருக்கு...' என்று ஆறுதல் கூறினார் தேவர்.
குதிரையில் ஏறினார் ரஜினி.
— தொடரும்.
நன்றி: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்,
சென்னை.
பா. தீனதயாளன்