PUBLISHED ON : மார் 27, 2016

தமிழ் சினிமா தயாரிப்பில், பல உயரங்களைச் சந்தித்த, சாண்டோ சின்னப்பா தேவரின் நூற்றாண்டு விழா, ஜூன் 28, 2015 முதல் துவங்கியுள்ளது. அச்சாதனையாளரின் வரலாற்று தொடர் இது —
தமிழில், தாய் மீது சத்தியம், தெலுங்கில், கொண்ட ராமுடு, இந்தியில், தோ அவுர் தோ பான்ச் என மூன்று பட வேலைகளிலும், மும்முரமாக இருந்தார் தேவர்.
'ஏம்பா கதாநாயகிகளுக்கெல்லாம் ரவிக்கை தைச்சாச்சா, ரஜினிக்கு தொப்பி, ஷூ, விக் எல்லாம் தயாரா... பார்த்து, 'பேக்' பண்ணுங்க. கதாநாயகர்களோட காஸ்ட்யூம் மாறிடப் போகுது. எம்.ஜி.ஆர்., நடிச்ச பேனர்ங்கிற மரியாதையக் காப்பாத்துங்க...' என்றார் தேவர்.
ஒருவழியாக, செப்., 7, 1978ல், ஊட்டிக்குக் கிளம்பினார் தேவர். அவர் சென்ற நேரம் அங்கு பலத்த மழை.
உட்லண்ட்ஸ் ஓட்டலில், கதாசிரியர்கள் மாராவும், தூயவனும் தேவருக்காக காத்திருந்தனர். அவர்களது பக்கத்து அறை தேவருக்கு!
'என்னப்பா மாரா... ஷூட்டிங் நடக்குதா... மாப்ளகிட்டயிருந்து ஏதாவது தகவல் வந்ததா?' என்று கேட்டார் தேவர்.
'அண்ணே... சென்னையிலிருந்து இன்னும் குதிரைங்க வந்து சேரல....' என்று ஒருவர் சொன்னதும், காச் மூச்சென்று கத்தி, மதிய உணவை ஒதுக்கி வைத்து, ரயில்வே ஸ்டேஷனுக்குப் புறப்பட்டார் தேவர்.
'அண்ணே... ரயில் எதனால லேட்டுன்னு நாங்க போய் விசாரிச்சுட்டு வர்றோம்; மழை வேற விடாமப் பெய்யுது; இன்னிக்கு ஷூட்டிங் நடக்காது போல...' என்றார் மாரா.
'நீங்க யாரும் குதிரையைத் தேடிப் போக வேணாம்; சீனை மாத்துங்க. இதே மாதிரி, குதிரையை காணாம தேடி அலையறான் கதாநாயகன். காணாமப் போன குதிரை, கதாநாயகி குளிக்குற ஆத்துக்கு பக்கத்துல நிக்குது. அங்க ஏதாவது சுவாரஸ்யமா கதை செய்ய முடியுமான்னு, ஏதாவது காட்சி யோசிச்சு வையுங்க...' என்றார் தேவர்.
அரைநாளில் யூனிட்டோடு, திரும்பி விட்டார் இயக்குனர். இனி, நாளை சூரியன் உதித்தால் மட்டுமே படப்பிடிப்பு.
யூனிட் ஆட்கள் சிலர், சீட்டுக்கட்டைப் பிரித்தனர்; பலர் உணவு அருந்தச் சென்றனர். தேவர், உட்லண்ட்சுக்கு திரும்பிய போது, மணி, 1:30.
'மாரா, தூயவன் ரெண்டு பேரும் என்ன சாப்புடுறீங்க?' என்று கேட்டவர், அவர்கள் விரும்பிய உணவு வகைகளை, 'ஆர்டர்' செய்தார்.
குதிரைகள் ரயிலில் வரும் செய்தி, தேவரைக் களிப்பூட்டி இருக்க வேண்டும். சாப்பிட்டு முடித்து, கொஞ்சம் போல் உறங்கினர். வெளியே, மழை கொட்டியது.
சிறிது நேரத்தில், சிட் அவுட்டில் படுத்திருந்த தேவரின் உதவியாளர், அந்தச் செய்தியைக் கூறியதும், மாராவும், தூயவனும் பரபரப்பாக தேவரின் அறைக்கு ஓடினர். தேவரை சுற்றி, ஓட்டல் மானேஜர், இரண்டு டாக்டர்கள், மாப்பிள்ளை தியாகராஜன் நின்றிருந்தனர்.
'என்ன ஆச்சு அண்ணனுக்கு?'
'மார்பு வலிக்குதுன்னார்; அதுதான் பாத்துக்கிட்டு இருக்காங்க...' என்றார் தியாகராஜன்.
'சுகர், பி.பி.,இருக்கா... இதுக்கு முன்னால இப்படி ஆகியிருக்கா... மெடிக்கல் ரிபோர்ட் ஏதாவது கையில வெச்சுருக்கிங்களா?' மரபு வழி வினாக்களைத் தொடுத்தனர் மருத்துவர்கள்.
'காம்போஸ் இன்ஜெக் ஷன் போடறேன். கொஞ்ச நேரத்துல வலி குறைஞ்சிடும்...' டாக்டர் சிரிஞ்சில் மருந்தை ஏற்றினார். அதைப் பார்த்ததும், குழந்தையைப் போல் அலறி, 'வேணாம்ன்னு சொல்லுங்க மாப்புளே... கண்ணதாசன் கெட்டதே இந்த ஊசியால தான். போதையில் தள்ளிடும்; எனக்கு வேலை முக்கியம். காலையில ஸ்ரீதேவி வந்திடும்...' என்றார் தேவர்.
ஊட்டியிலிருந்து, கோயம்புத்தூருக்கு தேவரை கொண்டு செல்லுமாறு ஆலோசனை கூறினர் மருத்துவர்கள்; அதைப் பொருட்படுத்தவில்லை தேவர்.
'எனக்கு ஒண்ணுமில்லப்பா. சும்மா பயம் காட்றாங்க. வேர்வை கூட வரல பாரு... மார்கூட வலிக்கல. கொஞ்சம் தள்ளி, விலாவுல தான் விண்ணு விண்ணுங்குது...' என சொல்லும் போதே, ஊசி வேலை செய்ய, அப்படியே முணங்கியபடி தூங்கிப் போனார் தேவர்.
மறுநாள் மாலை, 4:00 மணி; எல்லாரும் வற்புறுத்தி அவரை அங்கிருந்து புறப்பட வைத்தனர்.
'இன்னிக்கும் ஷூட்டிங் நடக்கல. ஏம்பா ஊட்டியில மழை பெய்யுதுன்னு அமிதாப்புக்கு சொல்லிட்டீங்களா... அவரு பாட்டுக்கு பொறப்பட்டு வந்துடப் போறாரு...' உதவியாளர்கள் தன் மூட்டை முடிச்சுகளை எடுத்துக் கொடுப்பதை பார்த்தபடியே பேசினார் தேவர்.
கோவை, பீளமேடு, குப்புசாமி நாயுடு மருத்துவமனை; அங்கு உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார் தேவர். அங்கிருந்து, மாராவை தொலைபேசியில் அழைத்து, 'ஏம்பா... சுத்தமா மழை விட்டுடுச்சு. நாளைக்கு காலையில, ஒழுங்கா ஷூட்டிங் போற வேலயப் பாருங்க. நீயும், தூயவனும், ஸ்கிரிப்ட் டயலாக் நல்லா, 'செக்' பண்ணி எடுத்துக்குங்க. தெலுங்கு, அசிஸ்டென்ட் இயக்குனர் அனுமந்தராவை கூட வெச்சுக்குங்க...' என்றார் தேவர்.
தேவரிடமிருந்து, அடுத்த தொலைபேசி, செப்., 8ம் தேதி காலை, 7:30 மணிக்கு வந்தது. 'என்னப்பா மாரா... ஷூட்டிங் ஸ்பாட் போயாச்சா... குதிரைங்க சீனை முதல்ல எடுத்துருங்க; முரளி மோகன் புதுசு. ஜாக்கிரதையா அவரை குதிரை ஓட்ட வையுங்கோ. இன்னிக்கு ஆவணி மாத சஷ்டி. விசாக நட்சத்திரம் வேறே... மருதமலை அடிவாரத்துல கொண்டாந்து, முருகன் என்னை படுக்க வெச்சுட்டான். இந்த டாக்டருங்க ரொம்பவே அலட்டிக்கிறாங்க. கொஞ்ச நாழி என்னை விட்டா, மருதமலை முருகனைக் கும்பிட்டுத் திரும்பிடுவேன்...' என்று புலம்பினார் தேவர்.
அதற்குபின், தேவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வரவில்லை. 8:30 மணியளவில், 'கடுமையான மாரடைப்பால் தேவர் காலமானார்...' என்று அறிவிப்பு வெளியானது!
- முற்றும்
நன்றி: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை.
பா. தீனதயாளன்

