தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/சாண்டோ சின்னப்பா தேவர்! (24)

சாண்டோ சின்னப்பா தேவர்! (24)

சாண்டோ சின்னப்பா தேவர்! (24)


PUBLISHED ON : ஜன 17, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 17, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழ் சினிமா தயாரிப்பில், பல உயரங்களைச் சந்தித்த, சாண்டோ சின்னப்பா தேவரின் நூற்றாண்டு விழா, ஜூன் 28, 2015 முதல் துவங்கியுள்ளது. அச்சாதனையாளரின் வரலாற்று தொடர் இது —

'படப்பிடிப்புக்கு தாமதமாக வந்தால், ஒப்புக் கொண்டுள்ள நாட்களுக்குள் படத்தை முடிக்க முடியாது...' என்று ராஜேஷ் கன்னாவை கண்டித்தார் தேவர். ஆனாலும், வழக்கம் போல், மதிய உணவு நேரத்தில் வந்தார் ராஜேஷ் கன்னா. இதனால் கடுப்பான தேவர், ராஜேஷ் கன்னாவை தரக்குறைவாக திட்டினார். அந்த இடமே ரணகளமாகி விடும் சூழல். இதனால், பயந்து, 'மேக் - அப்' அறைக்குள் ஒளிந்து கொண்டார் ராஜேஷ் கன்னா.

ஆனாலும் விடாமல், அறையின் கதவை தள்ளி, உள்ளே போனார் தேவர். தன் காலில் அணிந்திருந்த, ஷூக்களைக் கழற்றி தேவரிடம் கொடுத்தவர், அவர் கால்களில் விழுந்து, 'நான் என்ன தப்பு செஞ்சிருந்தாலும், என்னை இதால அடியுங்க; நாலு பேர் முன்னால அசிங்கமா திட்டாதீங்க. வடமாநிலங்களிலும் ஏன் தென் மாநிலங்களில் கூட, நான் நடித்த, ஆராதனா படம் ரொம்ப நல்லா ஓடுது. எனக்குன்னு, ஒரு, 'டிகினிடி' இருக்கு. ப்ளீஸ்... இனிமே தாமதமா வரல...' என்றார்.

மனம் இளகிய தேவர், 'மன்னிச்சுக்க முருகா... இனிமே நான் திட்ட மாட்டேன். டேய்... யார்ரா அங்க... ஹீரோவுக்கு ஆப்பிள் ஜீஸ் கொண்டு வா...' என்றார்.

வாஹினி ஸ்டுடியோவில், நல்ல நேரம் படப்பிடிப்பு. பம்பரமாக சுழன்றபடி இருந்தார் தேவர். ரிக் ஷாக்காரனின் வெற்றி, தமிழ் சினிமாவுக்கு புத்துணர்வை ஏற்படுத்தியிருந்தது. எங்கும் தி.மு.க., - வி.ஜ.பி.,க்களின் நடமாட்டம். அறுதிப் பெரும்பான்மை பெற்ற தி.மு.க., கருணாநிதி தலைமையில், மீண்டும் ஆட்சி பொறுப்பில் உட்கார்ந்தது.

ஸ்டுடியோவின், ஒன்பதாவது தளத்தில், எம்.ஜி.ஆரோடு உட்கார்ந்து, கூழையும், கீரையையும் சாப்பிட்டபடி, 'முருகா... நம்ம படத்துக்கு, நல்ல நேரம்ன்னு தலைப்பு வெச்சாலும் வெச்சோம்; எல்லாமே நல்லபடியா நடக்குது. மறுபடியும், எம்.எல்.ஏ., ஆயிட்டிங்க. ரிக் ஷாக்காரன் படமே உங்களுக்கு, ஆறு மாசம் ஓடும் போல... ஞாபகம் வெச்சுக்குங்க. நல்ல நேரம், மார்ச், 10, 1972 வெளியீடு...' என்றார் தேவர்.

'வள்ளி பிலிம்சின், சங்கே முழுங்கு; கனகசபை செட்டியாரோட தயாரிப்பில், ராமன் தேடிய சீதை, ஜெமினி பிலிம்சின், நீரும் நெருப்பும் இதோட, ஒரு தாய் மக்கள் படம் ஏழெட்டு ஆண்டுகளாக வெளியாக காத்திருக்கு; இத்தனை யானைகளையும் கட்டி, தீனி போடுற அளவுக்கு நீங்க பெரிய தயாரிப்பாளர்; இந்தி படம்லாம் எடுக்குறீங்க. உங்க சொல்ல தட்ட முடியுமா...' என்று கேலியாக கூறினார் எம்.ஜி.ஆர்.,

ஹாத்தி மேரா சாத்தி, படம் பெரிய அளவில் வெற்றி பெறும் என்று கணித்தே, நல்ல நேரம் படத்துக்கு உடனே, கால்ஷீட் தந்தார் எம்.ஜி.ஆர்.,

இவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் தேவருக்கு, ராஜேஷ் கன்னாவிடம் இருந்து, தந்தி வர, தந்தியின் வாசகங்கள், கந்தர் சஷ்டி கவசம் போல், வாசிக்க வாசிக்க இனித்தது.

முருகன், தேவரை ஒருபோதும் ஏமாற்ற மாட்டான்; மும்பையில் வெளியான, ஹாத்தி மேரா சாத்தி படம், முதல் வார வசூல் மட்டும், ஏழு லட்ச ரூபாய்! இந்தியாவில் எந்த படத்துக்கும், இப்படி வசூல் ஆனதில்லை. வாசனுக்கு, சந்திரலேகா எப்படியோ, அப்படி தேவருக்கு, ஹாத்தி மேரா சாத்தி!

தேவரது கறுப்பு நிற செவர்லட் கார் அடுத்து நின்ற இடம் வடபழனி முருகன் கோவில். 'எல்லாம் உன்னால... உன் கருணையாலே நடந்தது முருகா... உன் கோவிலுக்கு மண்டபம் ஒண்ணு கட்டித் தரேன்...' என்று மனம் உருகினார்.

இரண்டு நாட்களில் வாகினி ஸ்டுடியோவிற்கு வந்தார் ராஜேஷ் கன்னா. அப்போது, அங்கு எம்.ஜி.ஆர்., நடித்த நம்நாடு படம், இந்தியில் தயாராகிக் கொண்டிருந்தது. வீனஸ் பிக்சர்ஸ் அதை, அப்னா தேஷ் என்ற பெயரில் படமாக்கியது. கதாநாயகன், ராஜேஷ் கன்னா!

நல்ல நேரம் செட்டில் இருந்த எம்.ஜி.ஆர்., ராஜேஷ் கன்னாவை தேடிச் சென்று பாராட்டினார். நெகிழ்ந்து விட்டார் ராஜேஷ் கன்னா. தன் பங்குக்கு, மிகப்பெரிய மாலையை ராஜேஷ் கன்னாவின் கழுத்தில் சூட்டி, அழகு பார்த்தார் தேவர்.

கோல்கட்டாவில், ஹாத்தி மேரா சாத்தி படத்துக்கு கிடைத்த வரவேற்பு, யாரும் கனவிலும் நினைக்காதது. அங்கு, 80 லட்சம் ரூபாய்க்கு மேல் வசூல் குவிந்தது. ஆச்சரியம் அடைந்த ஏவி.எம்., காண்பவர்களிடத்திலெல்லாம், தேவர் பெருமை பேசினார்.

மே, 14, 1971ல் மும்பையில் வெளியான, ஹாத்தி மேரா சாத்தி படம், இந்தியா முழுவதும் ஆண்டுக்கணக்கில் ஓடியது. தேசிய கீதத்துக்கு அடுத்தப்படியாக, இந்திய சிறுவர்கள், 'சல் சல் சல் மேரே ஹாத்தி...' என்ற பாடலை பாடி மகிழ்ந்தனர்.

ஹாத்தி மேரா சாத்தியின் பிரமாண்ட வெற்றியின் திருப்பம், காளை மாட்டுடன் காணப்பட்ட தேவர் பிலிம்ஸ் சின்னம், யானைக்கு மாறியது. புதிய சின்னத்தோடு, வெளியான, நல்ல நேரம் படம், தமிழில் சக்கைப் போடு போட்டது.

ஜன., 5, 1973ல் பினாங்கில், ராயல் தியேட்டரில், ஹாத்தி மேரா சாத்தி வெளியானது. கீழ்த்திசை நாடுகளில், வெள்ளிவிழா கொண்டாடிய முதல் இந்தியப் படம் என்ற பெருமையை இப்படம் பெற்றது.

எல்லா பெரிய மனிதர்களுக்கும் ஏற்படுவது போல், 'சுயசரிதை' எழுதும் ஆசை, தேவருக்கும் உண்டு. 'ஏம்பா... கதை இலாகாவுல இத்தனை பேர் இருக்கீங்க... என் வாழ்க்கை வரலாற்றை எழுதி தரக்கூடாதா... ஏ அய்யா பிள்ள... நீ எங்காலத்து ஆளு; என் கூடவே இருந்து, நான் பட்ட கஷ்ட, நஷ்டங்கள பாத்தவன், நீ கூட எழுத மாட்டேங்கிறீயே...' என்பார்.

கதை இலாகவினருக்கு, சினிமாக் கதைகளை எழுதவே, நேரம் இருக்காது. இதில், இவரின் சுய புராணத்தை எழுத எங்க நேரம் இருக்கும். ஆனாலும், தேவர் இதை அடிக்கடி குறிப்பிடவும், கதை இலாகாவினர் தங்களுக்குள் விவாதித்து, ஒரு முடிவுக்கு வந்தனர்.

'அண்ணே... உங்க கதைய புஸ்தகமா எழுதுறதுக்கு நிறைய காலம் ஆவும். பேசாம, உங்க வாழ்க்கைய, படமாகவே எடுத்திடலாமே... மூணு மாசத்துல, நாலு கோடி பேர் பார்த்து ரசிப்பாங்களே...' என்றனர்.

உச்சி குளிர்ந்து போனது தேவருக்கு!

'என் கதைன்றது என்ன... முருகனுடைய திருவிளையாடல் தான். அந்த மருதமலையான், என்னை எப்படி காப்பாத்தி, கரை சேர்த்தான்னு உங்க எல்லாருக்கும் நல்லா தெரியுமே... அதுல, சினிமாவுக்கு எதெல்லாம் தோதுபடும்ன்னு பாருங்க...' என்றார் தேவர்.

தேவரது வாழ்வில் நடந்த சம்பவங்கள், ஆறு கதைகளாக, தனித்தனியாக சினிமாவிற்கு ஏற்றவாறு உருவாகி, மருதமலை, சுவாமி மலை, பழனி, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர் மற்றும் திருத்தணி கோவில்களில் நடைபெற்றது போல மெருகூட்டப்பட்டது. முருகன் கோவில்களில் நடைபெற்ற திருவிழாக்கள், தேவர் பிலிம்சாரால் தொடர்ந்து, மூன்று ஆண்டுகளாக படம் பிடிக்கப்பட்டது. படத்தில் வாரியார் தோன்றி, சொற்பொழிவு செய்வதாக கதை நகர்ந்தது.

எட்டுமணி நேரம் ஓடக் கூடிய இந்த 'டாகுமென்டரி' படத்துக்கு, தெய்வம் என்று பெயரிட்டனர். தேவர் பிலிம்சில் தொடர்ந்து நடித்தவர்களுக்கே, முன்னுரிமை வழங்கப்பட்டது.

கடந்த 1970களில், கோலிவுட்டில், எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவன், வி.குமாருக்கு அடுத்து, குன்னக்குடி வைத்தியநாதன் பிசியாக இருந்த நேரம். அதனால், அவரை ஒப்பந்தம் செய்தார் தேவர். வழக்கம் போல், பாடல்கள் கண்ணதாசன்.

பாடலுக்கான சிச்சுவேஷனைக் கேட்டார் கண்ணதாசன். ஆனால், படத்தில் சிச்சுவேஷனே இல்லை.

'என்னய்யா... விளையாடறீங்களா... தேவர் அண்ணன் கதையில, பாட்டெழுத சந்தர்ப்பமே இல்லயா...' என்றார். படத்தில் பாடல் சிச்சுவேஷன் இல்லை என்றதும், தேவருக்கு கடும் கோபம்.

கடைசியில் கதை இலாகாவினர், 'அண்ணே... நீங்களும், கவிஞர் அய்யாவும், கோவில் உற்சவங்களை போட்டு பாருங்க... முருகனுக்கு, ஆறு பாட்டாவது கிடைக்காமலா போயிரும்...' என்றனர்.

தினமும் ஒரு, 'எபிசோட்' என்று, எட்டு நாட்கள், திருவிழா காட்சிகளை, மிக பொறுமையாக பார்த்தனர் கண்ணதாசனும், தேவரும்!

வேலனின் ஒவ்வொரு விசேஷமும், பாடலாக ஆனது. உணர்ச்சி வசப்பட்டு எழுதினார் கண்ணதாசன்; பாடல்களை கேட்ட தேவரின் முகத்தில் திருப்தி!

— தொடரும்.

நன்றி: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்,

சென்னை.

பா. தீனதயாளன்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us