sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

சாரதா!

/

சாரதா!

சாரதா!

சாரதா!


PUBLISHED ON : செப் 25, 2022

Google News

PUBLISHED ON : செப் 25, 2022


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புரண்டுப் படுத்த போது, பக்கத்தில் கணவர் இல்லாத உணர்வு உந்த, மெல்ல கண்களைத் திறந்தாள், சாரதா.

அவளுடைய உணர்வுகள் உணர்த்தியது உண்மை தான். ராஜராஜன் படுக்கையில் இல்லை. பாத்ரூம் போயிருப்பார் என்று, அவளால் மறுபடி கண்களை மூடி உறங்க முடியவில்லை.

காரணம், குளியலைறையுடன் சேர்த்து கட்டப்பட்ட அந்த படுக்கையறையில், குளியலறையிலிருந்து தண்ணீர் சத்தமும் வரவில்லை; விளக்கும் எரியவில்லை.எழுந்து உட்கார்ந்தாள். அவிழ்ந்து தோளில் புரண்ட கூந்தலை, கொண்டையாக கட்டி, கட்டிலை விட்டு இறங்கி, வெளியே வந்தாள். கூடத்தில், விளக்கு எரிந்தது.

இப்போதெல்லாம் இப்படித்தான். நடு இரவில் உறங்காமல் உட்கார்ந்து, விட்டத்தை பார்த்துக் கொண்டிருப்பார்; இல்லையெனில், தலையை தொங்கப் போட்டு, தரையை வெறித்திருப்பார்.

இரவில் அவர் உறங்குவதில்லை என்று சொன்னால், யாரும் நம்ப மாட்டார்கள். ஏன், அவளால் கூட முதலில் நம்ப முடியவில்லை. துாக்கத்தில் கும்பகர்ணன் என, பட்டம் பெற்றவர்.

அவளுக்கே ஆச்சரியமாக இருக்கும், 'என்ன மனிதர் இவர், எவ்வளவு பெரிய பிரச்னையாக இருந்தாலும் அதன் பாதிப்பு கொஞ்சம் கூட இல்லாமல் துாங்குகிறாரே...' என்று நினைத்துக் கொள்வாள்.

அவள், பிரசவ வலியில் துடிக்க, உறவினர்கள் சூழ்ந்து தவித்தபோது, இரவு, 11:00 மணி. இவர் மட்டும் மருத்துவமனை பெஞ்சில் உட்கார்ந்தபடியே உறங்கி விட்டார். லேபர் வார்டிற்கு அழைத்து செல்லப்பட்டதோ, 'டெலிவரி' ஆனதோ கூட அவருக்குத் தெரியாது.

அவர் அம்மா இறந்தபோதும், இதேதான். உடலை இடுகாட்டிற்கு எடுத்துப் போய் அடக்கம் செய்து வந்த பின், மூலைக்கு மூலை அனைவரும் உட்கார்ந்து அழுது, உறங்காமல் அம்மாவின் பெருமைகளை பேசிக் கொண்டிருக்க, அவர் மட்டும் அடித்துப் போட்டதைப் போல் உறங்கினார். இப்படி எத்தனையோ சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆனால், அவர் வாழ்க்கையில் உறங்கும் ஒரு நிமிடத்தைக் கூட யாருக்காகவும், தியாகம் செய்ய மாட்டார். அதனால், நல்ல ஆரோக்கியமும், மன அமைதியும் அவரிடம் இருந்தது.ஒரு மாதமாக தான், மாறிப் போனார்.

அவரருகே வந்து, ஆறுதலாக கையைத் தொட்டு, ''என்னங்க... வந்து படுங்க,'' என்றாள்.

''துாக்கம் வரலை,'' என்றார்.இப்போதெல்லாம் அவள் முகத்தை மட்டுமல்ல, யாருடைய முகத்தை பார்ப்பதையும் தவிர்க்கிறார். ''துாங்காமலேயே இருந்தா, உடம்பு கெட்டுப் போயிடும்.''

''உண்மை தான்.''

''ஓய்வுப்பெற்ற எல்லாரும் உங்களை மாதிரியா இருக்காங்க... அந்தோணி சாரைப் பாருங்க, சர்ச், கிளப், நண்பர்கள், வீடுன்னு, ஜாலியா பொழுதைக் கழிக்கிறார். கணேசன் ஓய்வுப்பெற்றதும், வயலின் வகுப்பில் சேர்ந்து, இன்னைக்கு கச்சேரிக்கெல்லாம் போறார். ''சிரில் சார், பசங்களுக்கு, 'டியூஷன்' எடுக்கிறார். நீங்களும், இதே போல் எதையாவது செய்து, மனசை திருப்பினா, நல்லா துாக்கம் வரும். அதைவிட்டுட்டு, துாங்காம மனசைப் போட்டு குழப்பிக்கிட்டிருந்தா, என்ன பண்றது?'' என்றாள், சாரதா.

''இப்படி சொல்ல உனக்கு வெட்கமாயில்ல... அந்தோணி, கணேசன், சிரில் இவங்களும், நானும் ஒண்ணா? மூவரும் என் கூட வேலைப் பார்த்தவங்கதான். ஆனா, என் கிரேடும், அவங்க கிரேடும் ஒண்ணு இல்லை.

''நான், கம்பெனியில மேனேஜராய் இருந்தப்ப, அவங்களெல்லாம் சாதாரண கிரேடுல இருந்தாங்க. அதனால, அவங்க கச்சேரியும் பண்ணுவாங்க; டியூஷனும் எடுப்பாங்க; ஏன், 'பீச்'ல பஜ்ஜி, சுண்டல் கூட விப்பாங்க. என் கவுரவத்தை விட்டுட்டு, அவங்களை மாதிரி இருக்கச் சொல்றியா?'' பளாரென அறைந்தது, அவரின் பதில். அவருடைய பிரச்னை இதுதான். கவுரவம், மதிப்பு, மரியாதை. இதையெல்லாம் விட்டுட்டு, கீழிறங்கிப் போய் சம்பாதித்து வா என, அவள் சொல்லவில்லை. ஓய்விற்குப் பின் வரவேண்டிய பணமெல்லாம் வந்து சேமிப்பு, வீடு, வாசல் என, வசதியாகத்தான் இருக்கிறது.

ஆனால், அவருக்குள், தன்னை சுற்றி உள்ள மனிதர்கள், முன்பு கொடுத்த மரியாதையை இப்போது கொடுக்கவில்லை என, நினைத்துக் கொண்டார். தன் மேசையில் கையெழுத்திற்காக காத்திருக்கும் கோப்புகள், இப்போது வேறொருவரின் கையெழுத்திற்காக காத்திருப்பதை ஏற்க முடியவில்லை. தன்னிடம் அனுமதி கேட்டும், விடுமுறை கேட்டும் கெஞ்சிய ஊழியர்கள், வங்கி வாசலிலோ, வெளியிடங்களிலோ சந்திக்கும் போது, நெஞ்சை நிமிர்த்தி, 'ஹாய் சார்...' என, கை நீட்டுவது, சரிசமமாக தோளில் கை போடுவது, விட்டால், சிகரெட் கூட, 'ஸ்டைல்' ஆகப் புகைப்பான்கள் போல. அலுவலகத்திற்குள் அவர் நுழைந்தாலே, எழுந்து மரியாதையுடன் வணக்கம் சொல்வர், ஊழியர்கள். அன்றைக்கு, பழைய கணக்கு வழக்குப் பற்றி அலுவலகத்தில் கேட்க, நிறுவனத்திற்கு அவர் சென்றபோது, ஒரு பயல் கூட எழுந்து மரியாதை தரவில்லை. ஏன் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.

பார்த்த ஒருவனும், மெல்லிய சிரிப்பொன்றை சிந்தி, கையை உயர்த்தி, கம்யூட்டரில் குனிந்துக் கொண்டான்.இதெல்லாம் அவருக்குள், பெரும் தாழ்வு மனப்பான்மை மற்றும் மரியாதையும் போய் விட்டது போன்றதொரு உணர்வை ஏற்படுத்தியதில், கூனிக்குறுகிப் போனார்.

மனதில் ஏற்பட்ட பிரச்னை, உடலையும் தாக்கத் துவங்கியது. ஒருநாள் நள்ளிரவில், நெஞ்சுவலி என, எழுந்து உட்கார்ந்தார்.

பயந்து போன சாரதா, உடனே, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, ஈ.ஸி.ஜி., எக்கோ என, எல்லாமும் எடுத்துப் பார்த்தும், 'நார்மல்' என, கூறி விட்டார், டாக்டர்.'இதப்பாருங்க, உங்களுக்கு மனசுல தான் பிரச்னை. நல்ல, 'சைக்காட்ரிஸ்ட்'டா பார்த்தா, மாத்திரை, மருந்து எழுதிக் கொடுப்பார். சாப்பிட்டு, நல்லா துாங்கி எழுந்தா, எல்லாம் சரியாயிடும்...' என்றாள், சாரதா.

'என்னை என்ன பைத்தியம்ன்னு சொல்றியா?' என, சீறினார்.'மனநல மருத்துவர்கிட்ட போறவங்களெல்லாம் பைத்தியம் கிடையாது. எல்லாருக்கும் ஓய்வுப்பெற்ற பிறகு வர்ற மன அழுத்தம் தான், இது. சிலர், இதை கையாளற வழி தெரிஞ்சு வச்சிருப்பாங்க. தெரியாதவங்க, இப்படித்தான் ஆவாங்க. மனநல மருத்துவரைப் பார்த்தா, அதுக்கான வழியை சொல்வார்...' கடைசியில், மனைவிக்கு தெரியாமல், குடும்ப நண்பரான, மனநல மருத்துவர் தேனப்பனைத் தேடி வந்தார். அவருடைய பிரச்னையைக் கேட்டு சிரித்தார், தேனப்பன்.

''உனக்கு தேவை, மருந்து மாத்திரையோ, 'கவுன்சிலிங்'கோ இல்லை. இதிலேர்ந்து நீ வெளி வரணும்ன்னா, அந்தோணி மாதிரி சர்ச், கிளப் போக வேண்டாம். கணேசனைப் போல, வயலின் கத்துக்கிட்டு, கச்சேரிக்கு போக வேண்டாம்.

''சிரிலை மாதிரி, 'டியூஷன்' எடுக்க வேண்டாம். உன் கவுரவம் பாதிக்கப்படும்ன்னு நீ நினைக்கிற எந்த வேலையையும் கீழிறங்கி செய்ய வேண்டாம். ஒண்ணு மட்டும் செய், உன் மனைவி சாரதாவைப் பத்தி நினைச்சுப் பார்,'' என்றார்.

இதைக் கேட்டதும் திடுக்கிட்டார், ராஜராஜன்.

''நான், உன் குடும்ப டாக்டர்ங்கறதால, உன் குடும்பத்தைப் பத்தி நல்லாத் தெரியும். நீ கல்யாணத்துக்கு பொண்ணு தேடும்போதே, வேலைப் பார்க்கற பொண்ணா வேணும். ரெண்டு பேர் சம்பாதிச்சாத்தான் வசதியா வாழமுடியும்ன்னு நினைச்சு தேடுனே.

''சாரதா, அரசாங்க பள்ளியில டீச்சராய் இருந்ததால, அவளை கல்யாணம் பண்ணிக்கிட்ட. திடீர்னு உனக்கு, மும்பையில பெரிய கம்பெனியில நல்ல சம்பளத்துல வேலை கிடைச்சதும், சாரதாவோட சம்பளம், உனக்கு ஒரு பொருட்டா தெரியலை. அவளை வேலையை விட்டுட்டு உன் கூட மும்பைக்கு வரச்சொன்னே.

''அரசு வேலையை விட்டுட்டு வரமாட்டேன்னு அவள் சொன்னப்ப, வேலையை விட்டே ஆகணும்ன்னு சண்டை போட்ட. கடைசியில, குடும்பத்துல பிரச்னை வரக் கூடாதுங்கிறதுக்காகவும், குழந்தைங்க அப்பாவைப் பிரிஞ்சு இருக்க வேண்டாம்கறதுக்காகவும், வேலையை விட்டுட்டு, உன் கூட வந்தா.

''அப்ப அவள் மனசு என்ன வேதனைப்பட்டிருக்கும்ன்னு யோசிச்சுப் பாரு. தெரியாத ஊர்ல, புரியாத மொழி பேசறவங்களோட, அவ வாழ பழகிக்கிட்டா. சொந்தம், பந்தம் எல்லாரும், ஊர்ல கல்யாணம் காட்சின்னு சந்தோஷமாய் இருந்தாங்க...

''அப்போதும், எதுக்கும் வர முடியாமல், உன் அந்தஸ்த்தான வேலை, குழந்தைகளோட படிப்புக்கு தொந்தரவு வந்துடக் கூடாதுன்னு, தன் ஆசாபாசங்களை எல்லாம் அடக்கிக்கிட்டு உன் கூட இருந்தா. ''ஒரு கட்டத்துல, உனக்கு வயசான போது, மும்பையில இருக்க வேண்டாம்ன்னு, வேலையை சென்னைக்கு மாத்திக்கிட்டு வந்தே. அப்ப, அவளோட நிலையை நினைச்சுப் பார்த்தியா?

''அவ கூட படிச்சவளுங்களெல்லாம் இங்க கெத்தா வேலைக்குப் போய் கை நிறைய சம்பாதிச்சுக்கிட்டிருக்காங்க. அவங்களை பொது இடங்கள்ல சந்திக்கும்போது, எப்படி கூனிக்குறுகிப் போயிருப்பா.

''நீ ஊரை விட்டு போகணும்ன்னு சொன்னப்ப, உன் கூட வந்தா. மும்பையை விட்டு வரணும்ன்னு சொன்னப்ப, வந்தா. உனக்காகவே தன் சுக, துக்கங்களை இழந்தவ. நிறைவா வேலை செய்து, கை நிறைய காசு, பணம், சேமிப்புன்னு, மதிப்பும், மரியாதையோடும் ஓய்வு பெற்ற உனக்கே, 'ரிடையர்மென்ட் டென்ஷன்'னா... ''ஓய்வு பெறாமலே, வேலையை விட்டுட்டு வந்தவளுக்கு, எவ்வளவு, 'டென்ஷன்' இருக்கும்ன்னு நினைச்சுப் பாரு. கவுரவம், தன்மானம், தாழ்வுணர்ச்சி இதெல்லாம் ஆணுக்கு மட்டும் தான் இருக்கும்ன்னு நினைக்கக் கூடாது.

''நமக்காவே எல்லாத்தையும் தியாகம் செய்து, கூடவே பயணிக்கிற மனைவிக்கு கூட, தான் மனநல மருத்துவர்கிட்ட வந்தது தெரியக் கூடாதுன்னு, கவுரவம் பார்க்கற, உன்னை மாதிரியான மனிதர்களை என்ன பண்றது?'' மருத்துவர் தேனப்பன் சொல்லச் சொல்ல, மனதில் அறைபட்டவராய் எழுந்தார், ராஜராஜன்.

''உட்காரு, துாக்கத்துக்கு மாத்திரை எழுதித் தர்றேன்,'' என்றார்.

''எனக்கு, துாக்க மாத்திரை வேண்டாம். சாரதாவோட மனநிலையை ஒருநாள் கூட நான் நினைச்சுப் பார்த்ததில்லை. எனக்காவே தன்னை குறுக்கிக்கிட்ட அவளை... இனி, அவகிட்ட இருக்கிற திறமைகளை வெளி உலகுக்கு காட்டப் போறேன். அவளோட முன்னேற்றத்துக்கு, ஏணிப் படியாய் இருக்கப் போறேன்,'' என, கண்கலங்கினார், ராஜராஜன்.

ஆர். சுமதி






      Dinamalar
      Follow us