PUBLISHED ON : அக் 02, 2022

அக்.,04 - சரஸ்வதி பூஜை
எங்கெல்லாம் புலமையில் சிறந்த பக்தர்கள் இருக்கின்றனரோ, அங்கெல்லாம் சரஸ்வதி கோவில் கொள்வாள்.
தமிழகத்தில் திருவாரூர் மாவட்டம், பூந்தோட்டம் கிராமத்திற்கு, ஒட்டக்கூத்தர் என்ற புலவர் வந்தார். ஊரின் பெயரே அவருக்குப் பிடித்துப் போனது.இரண்டாம் ராஜராஜ சோழன், இந்த ஊரை அவருக்கு பரிசாக வழங்கினார். இவ்வூரில், சரஸ்வதிக்கு கோவில் எழுப்பினார், ஒட்டக்கூத்தர். அதன்பின் அவரது பெயரால், கோவில் அமைந்த பகுதிக்கு, கூத்தனுார் என்று பெயர் ஏற்பட்டது.
இதே போல், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பஸாரா கிராமத்தில், மகாபாரத ஆசிரியர் வியாசர் தங்கினார். மகாபாரதத்தை வழங்கிய அவர் தங்கிய இடத்தில், சரஸ்வதி குடிக்கொள்ள ஆசைப்பட்டாள்.
இவ்வூர் ஒரு காலத்தில் விஸாரா எனப்பட்டது. இதற்கு, புறப்பட மனமில்லாத இடம் என, பொருள். சில ஊர்களுக்கு பயணம் சென்றால், 'இங்கிருந்து கிளம்பவே மனமில்லை, அவ்வளவு ரம்மியமாக இருக்கிறது...' என்போம்.அதுபோல், வியாசருக்கும் இவ்விடத்தை விட்டு கிளம்ப மனமில்லை. நீண்ட நாட்கள் இங்கே தங்கி தவமிருந்தார். அதனால், 'விஸாரா' எனப்பட்டது. காலப்போக்கில், பஸாரா என மாறி விட்டது. பேச்சு வழக்கில், பஸார் எனப்படுகிறது.
கோதாவரி மற்றும் மஞ்சிரா ஆறு கலக்குமிடத்தில் இவ்வூர் அமைந்ததாலும், வேதக்கடலான வியாசர் தங்கிய இடம் என்பதாலும், இது, சரஸ்வதிக்கு பிடித்தமான ஊராக இருக்குமென நினைத்தார், பிஜியாலுடு என்ற மன்னர். 6ம் நுாற்றாண்டில், இங்கு சரஸ்வதிக்கு கோவில் கட்டினார். ஞான சரஸ்வதி என பெயரிடப்பட்டது.
இந்தக் கோவில், அந்நியப் படைகளால் அழிக்கப்பட்டது. 17ம் நுாற்றாண்டில், நந்தகிரி என்ற பகுதியின் தலைவர், கோவிலை மீண்டும் கட்டினார்.அட்சராப்பியாசம் எனும், பாடம் துவக்கும் பிரார்த்தனை தான், இங்கே விசேஷம். பெற்றோர், தங்கள் குழந்தைகளுடன் இங்கு வந்து எழுத கற்றுத் தருகின்றனர். இதன் மூலம் தங்கள் குழந்தைகளின் படிப்பு, சிறப்பாக அமையும் என, நம்புகின்றனர்.
புத்தகங்கள், பேனா, பென்சில் ஆகியவற்றை, சரஸ்வதிக்கு காணிக்கையாக அளிக்கின்றனர்.இங்கே மற்றொரு விசேஷம், கருவறையில் சரஸ்வதியுடன், லட்சுமியும் சேர்ந்திருப்பது தான். மேலும், அருகிலுள்ள கோவிலில் வீரத்தின் சின்னமான காளி இருக்கிறாள். கல்வியும், செல்வமும், தைரியமும் ஒரு சேர கிடைப்பது அரிது. அதனால், இங்கு ஏராளமான பக்தர்கள், குவிகின்றனர்.
இந்தக் கோவில், காலை, 4:00 மணி முதல் 12:00 மணி, மதியம், 2:00 மணி முதல் இரவு, 8:30 மணி வரை திறந்திருக்கும். ஹைதராபாத்திலிருந்து, 135 கி.மீ., துாரத்தில் நிர்மல் என்ற ஊர் உள்ளது. இது, மாவட்ட தலைநகர். இங்கிருந்து, 70 கி.மீ., சென்றால், பஸாராவை அடையலாம்.சென்னை சென்ட்ரலில் இருந்து பஸாருக்கு ஞாயிறு அன்று நேரடி ரயில் உள்ளது.
தி. செல்லப்பா

