sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

சாவித்திரி! (13)

/

சாவித்திரி! (13)

சாவித்திரி! (13)

சாவித்திரி! (13)


PUBLISHED ON : ஜூன் 26, 2016

Google News

PUBLISHED ON : ஜூன் 26, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒருவர் வாழ்ந்த வாழ்க்கை வரலாறாகவோ, காவியமாகவோ ஆவதில்லை. ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்ட ஆயிரத்தில் ஒருவருக்கு தான், வாழ்க்கை, வரலாறு சொல்லக்கூடிய காவியமாக இருக்கிறது. அந்த ஆயிரத்தில் ஒருவர் தான் நடிகையர் திலகம் சாவித்திரி. அவரது வாழ்க்கை வரலாற்றை இங்கு தொடராக தொகுத்து வழங்குகிறார் கட்டுரையாசிரியர்.

மாதா பிலிம்ஸ் சார்பில், மதுசூதன ராவ் தயாரித்த புதுப்படத்தில், இயக்குனராக அரிதாரம் பூசினார் சாவித்திரி. வி.சரோஜினி கதை எழுத, உதவி இயக்குனராக மோகனகுமாரியும், இசைக்கு, பி.லீலா என, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. தெலுங்கு மொழியில் சாவித்திரி இயக்க ஆரம்பித்த அந்தப் படத்தின் பெயர்; சின் மாரி பப்லு!

முதல் நாள் படப்பிடிப்பு -

சாவித்திரி பரபரப்புடன் காணப்படுவார் என எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு, ஒரே ஆச்சரியம். எந்தவிதப் பதற்றமும் இன்றி, கைதேர்ந்த படைப்பாளி போலக் காட்சியளித்தார் சாவித்திரி.

திருமணத்தில் அய்யர்கள் மந்திரம் ஓதுவது போல முதல் காட்சி எடுக்கப்பட்டது. சென்டிமென்ட் கருதி அக்காட்சியை முதலில் படமாக்கினார், சாவித்திரி.

ஒவ்வொரு பிரேமாக அவர் ரசித்து படமாக்கியது மதுசூதன ராவுக்குப் பெருமையாக இருந்தது. 'இயக்குனர் துறையில் சாவித்திரி பெரிய இடத்துக்கு வருவார்...' என, எண்ணிக் கொண்டார்.

படம், ஆக., 14, 1968ல் ஆந்திரா முழுவதும் வெளியானது.

படம் வெளியான திரையரங்கு எங்கும் வசூல் வேட்டை. சாவித்திரி இயக்கிய முதல் படம், அமர்க்களமாக வெற்றிப்பட வரிசையில் உட்கார்ந்து கொண்டது.

அந்த ஆண்டு, ஆந்திர அரசு சார்பில், திரைத்துறையினருக்காக வழங்கப்படும் வெள்ளி நந்தி விருதை, அப்படம் தட்டிச் சென்றது.

அப்படத்தில், நடித்த ஜக்கையாவுக்கும், ஜமுனாவுக்கும் பாராட்டுகள் குவிந்தன; இயக்குனராக வெற்றியடைந்தார் சாவித்திரி.

மகிழ்ச்சிகள் தலைகாட்டும் போதெல்லாம், சங்கடங்களும் கூடவே வரும் என்பது உலக நியதி.

சாவித்திரியின் வெற்றியைக் கொண்டாட நினைத்தவர்கள், பார்ட்டி என்ற போர்வையில், சாவித்திரியை மயக்கத்திற்கு அழைத்துச் சென்றனர்.

முதன் முதலாக இயக்கிய படம் தந்த வெற்றி, சாவித்திரியை தயாரிப்புத் துறைக்குள் தள்ளியது. தெலுங்கில் சில படங்களுக்கு பங்குதாரராகவும், சில படங்களை, அவரே வாங்கி வழங்குதல் வேலையையும் செய்தார்.

சாவித்திரிக்கு ஜோடியாக நாகேசுவரராவ் நடித்த தெலுங்கு படம், சிவராக்கு மிகிலடி. இப்படம் தயாரிப்பில் இருக்கும்போது, படத்தின் கதை, சாவித்திரிக்கு மிகவும் பிடித்துப் போனது. தெலுங்கில் படம் வெளிவருவதற்கு முன்பே, தமிழில் தயாரிக்கும் உரிமத்தைப் பெற்றார்.

தெலுங்கில் படம் வெளியாகி, படு தோல்வியைச் சந்தித்தது. சாவித்திரிக்கு படத்தின் தோல்வியை இலகுவாக ஏற்க முடியவில்லை. தமிழில் தயாரிக்கும் உரிமத்தை தான் வாங்கியிருந்ததால், படத்தின் தோல்வியை மனதில் கொண்டு, தயாரிக்கும் எண்ணத்தை தள்ளி வைத்தார்.

ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில், சிவாஜி நடித்த படம், நவராத்திரி; சிவாஜியின் நூறாவது படம் என்ற முத்திரையோடு வந்தது. நவராத்திரி படம் வசூலில் சாதனை புரிய, சிவாஜியின் நடிப்பு, வெகு சிறப்பாகப் பேசப்பட்டது. நடிகனுக்கும், நடிப்புக்கும் போட்டி என சிவாஜி பெருமைப்பட்ட இப்படத்தை, தெலுங்கில் தயாரிக்க விரும்பினார் சாவித்திரி.

தெலுங்கு உரிமையை வாங்கி, தன் சொந்தத் தயாரிப்பில் நாகேசுவரராவ், ஜமுனா, சூரியகாந்தம், சாயாதேவி, ஜெயலலிதா மற்றும் கீதாஞ்சலியை வைத்து தயாரித்தார். நவராத்திரி படம், தெலுங்கிலும் மாபெரும் வெற்றிப் படமாக வசூலை வாரிக் குவித்தது. தொடர்ந்து, தெலுங்கில் தான் இயக்கிய, சின்மாரி பப்லு படத்தை, தமிழில் தயாரிக்க நினைத்தார், சாவித்திரி; ஜெமினியும் அதை மனப்பூர்வமாக வரவேற்றார்.

தன் பெயரில் படத் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தார் சாவித்திரி.

'ஸ்ரீசாவித்திரி புரொடக் ஷன்ஸ்' என்ற பெயரில், துவங்கப்பட்ட அந்நிறுவனத்தின் முத்திரையாக, எஸ்.பி., என்ற ஆங்கில எழுத்தின் மீது, கலைமகள் சாவித்திரி மாடர்னாக வீணையோடு இருப்பது போல முத்திரை அமைக்கப்பட்டிருந்தது.

தெலுங்கில், சாவித்திரி இயக்கிய படம் தமிழில், குழந்தை உள்ளம் என்ற பெயரில் தயாரானது. ஜெமினி, வாணிஸ்ரீ, சாந்தகுமாரி, எஸ்.வி.ரங்காராவ், தேங்காய் சீனிவாசன், ஆர்.எஸ்.மனோகர் மற்றும் சுருளிராஜன் நடித்திருந்தனர். தமிழில் தன் இரண்டாவது பாடலை இப்படத்தில் ஜெமினிக்காகப் பாடியிருந்தார், எஸ்.பி.பால சுப்ரமணியம்.

கடந்த, 1969ல் தமிழர் திருநாளான பொங்கல் அன்று, குழந்தை உள்ளம் படம் திரைக்கு வந்தது. தெலுங்கில் கிடைத்த வெற்றி, தமிழில் கிடைக்கவில்லை; படம் சுமாராகத் தான் ஓடியது. சாவித்திரியின் இயக்கம் மட்டுமே சிறப்பாகப் பேசப்பட்டது.

இயக்குனர் பணியின் நெளிவு, சுளிவுகளைத் தெரிந்து கொண்ட சாவித்திரி, அடுத்தடுத்த படங்களை இயக்க ஆரம்பித்தார். தெலுங்கில் உருவான இப்படத்தில், என்.டி.ராமாராவ், சாவித்திரி ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்தி மொழியில் அசோக்குமாரும், நந்தாவும் இணைந்து நடித்த, அஞ்சால் படத்தின் கதை உரிமத்தை வாங்கி, தெலுங்கில் இயக்கினார் சாவித்திரி. மாத்ரதேவா என்ற இப்படம், நவ., 17, 1969ல் வெளியாகி, மாபெரும் வெற்றி பெற்றது.

பதினாறு திரையரங்குகளில் நூறு நாட்களையும் தாண்டி ஓடிய இப்படம் ஈட்டிய வெற்றி, சாவித்திரியை திறமையான திரைப்பட இயக்குனராகப் பறை சாற்றியது.

'இப்படத்தின் வெற்றிக்கு, சாவித்திரியின் திறமையான இயக்கம் தான் காரணம்...' என, தெலுங்குப் பத்திரிகைகள் கருத்து தெரிவித்தன.

என்.டி.ராமாராவின் வெற்றிப் பட வரிசையில், மாத்ரதேவா படம், அசைக்க முடியாத இடத்தைப் பெற்றது.

சாவித்திரியின் புகழ் மேலோங்க ஆரம்பித்த வேளையில், ஒரு சிலர் ஜெமினியிடம் தவறான தகவலைச் சொல்ல ஆரம்பித்திருந்தனர்.

'சாவித்திரி எல்லா துறைகளிலும் முன்னேறிப் போய்க் கொண்டிருந்ததால், உங்களை மதிக்க மாட்டார். எந்த மாடாக இருந்தாலும் மூக்கணாங்கயிறு தேவை. எந்தப் பெண்ணாக இருந்தாலும், அவளை, ஆணை விட அதிகம் வளர விடக் கூடாது. அது பின்னாளில் ஆபத்தில் முடியும்...' என்று தூபம் போட்டனர்.

ஜெமினி முற்போக்கு சிந்தனைவாதியாக இருந்த காரணத்தால், இதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.

இச்சூழலில், சாவித்திரியைச் சுற்றி நின்ற மகளிர் அமைப்பினர், சாவித்திரியைச் சுற்றி, ஒரு வளையம் அமைக்க ஆரம்பித்தனர். சாவித்திரியின் தூரத்து உறவினர்கள் சிலரும், இதற்கு உடந்தையாக இருந்தனர்.

ஒருவர் புகழில் ஏற ஆரம்பித்து விட்டாலே, அவரை புகழ்ந்தே அழிக்கும் கூட்டமும், அவரோடு உருவாகிவிடும். சாவித்திரியைச் சுற்றியும் அப்படி ஒரு கூட்டம் உருவானது. கண்ணா என்ற பெயரே கேட்டாலே துடிக்கும் சாவித்திரியின் உணர்வுகள், திட்டமிட்டு ஜெமினிக்குத் தெரியாமல் மறைக்கப்பட்டது.

பார்ட்டிகளில் சாவித்திரியை சபை நாகரிகத்துக்காக மது மயக்கத்துக்கு அறிமுகப்படுத்திய ஜெமினி, இன்று அதை நினைத்து வருந்தினார். ஆனால், நட்பு என்ற பெயரில் சாவித்திரியிடம் வந்தவர்கள், அவரை வீழ்த்துவதற்கு கையில் எடுத்த ஆயுதம், மது!

சாவித்திரியின் மடியில் துயில் கொண்ட குழந்தையைக் கூட அவரை விட்டு பிரித்து வைக்க வழியுண்டா என சிலர் முயற்சித்தது, சாவித்திரியின் நல விரும்பிகளுக்கு வேதனையைத் தந்தது. அப்படி வேதனைப்பட்டவர்களில் வசனகர்த்தா ஆரூர்தாசும் ஒருவர்!

சாவித்திரி என்ற மகத்தான பக்கத்தை, கறுப்பு மையிட்டு மூடிவிட முயன்றவர்கள், அன்று தோல்வி கண்டு இருந்தால், இன்று வாழ்க்கையில் வெற்றி வாகை சூடியிருப்பார், சாவித்திரி.

ஆனால்...

தொடரும்

ஞா.செ. இன்பா






      Dinamalar
      Follow us