PUBLISHED ON : ஜூலை 17, 2016

கடந்த, 1955ல், சவுபாக்கியவதி என்ற படத்தை கே.எம்.நாகண்ணா தயாரிக்க, நாவலாசிரியர் ஜம்பா சந்திரசேகர ராவ் இயக்கத்தில் ஜெமினியின் ஜோடியாக நடித்திருந்தார், சாவித்திரி. உரையாடல், ஏ.எல்.நாராயணன்; அவருக்கு உதவியாக ஆரூர்தாஸ் இருந்தார்.
அப்போது மிகவும் பிரபலமாகியிருந்த எழுத்தாளர் நாராயணன், சவுபாக்கியவதி படப்பிடிப்பிற்கு சரியாக வர முடியாதபடி, பல படங்களுக்கு எழுதி வந்தார். இதனால், பல காட்சிகளுக்கு, வசனம் எழுதி, படப்பிடிப்பிற்கு உதவினார், ஆரூர்தாஸ். அவர், ஜெமினி தம்பதியோடு, பணியாற்றிய முதல் படம் இது! அன்று துவங்கிய நட்பை, கடைசி வரை கடைப்பிடித்தார், ஆரூர்தாஸ்.
சாவித்திரியின் வாழ்க்கையில் நடந்த அனைத்து நிகழ்வுகளையும் நேரில் பார்த்தவர் என்ற முறையில், ஆரூர்தாஸ் எழுதியிருக்கும் நூல்களில் மட்டுமே சாவித்திரியை பற்றிய உண்மைத் தகவல்கள் சொல்லப்பட்டுள்ளன. மற்ற அனைத்து எழுத்தாளர்களும், சாவித்திரியை அனுதாபத்தோடு காட்டி, தங்கள் எழுத்தை விற்பனை செய்தனர்.
பிராப்தம் படம் தயாரிக்கப்பட்ட காலங்களில் இருந்து, அப்படம் வெளியாகும் காலம் வரை உள்ள உண்மை நிகழ்வுகளை உள்ளபடி சொல்லவில்லை எனில், சாவித்திரியின் வாழ்க்கைப் பதிவு, நிறைவு பெறாது.
தென்னிந்திய திரையுலகம் தவம் இருந்து கண்டெடுத்த கலை தேவதை, சாவித்திரி. எந்த விதமான நடிப்பையும், வெகு இலகுவாக நடித்து, அசத்திவிடும் அசாத்திய திறமைசாலி. தன்னுடன் நடிக்கும் கலைஞர்களின் இன்ப, துன்பங்களில் உரிமையோடு கலந்து கொள்ளும் வெள்ளை மனதுக்காரர்; தன் வீட்டில் வேலை செய்யும் வேலையாட்களுக்கு, அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்த முதல் நடிகை இவரே!
சாவித்திரியின் சொந்தத் தயாரிப்பான, குழந்தை உள்ளம் படத்தில் நடித்த சுருளிராஜனின் குடும்பத்தில் பிரச்னை வந்தது. அப்பிரச்னையை தடுக்க, அவருக்கு, 30 ஆயிரம் ரூபாய் தேவைப்பட்டது. திடீர் என்று அவ்வளவு பணத்தை யாரிடம் கேட்பது என்று அவருக்கு தெரியவில்லை. பலரிடம் கேட்டுப் பார்த்தும் கிடைக்கவில்லை.
குழந்தை உள்ளம் படத்தில், சுருளியுடன் நடித்த தேங்காய் சீனிவாசன், சாவித்திரியிடம் கேட்டுப் பார்க்கச் சொன்னார்.
ஒருநாள் படப்பிடிப்பு முடிந்து, சாவித்திரி தன் காரில் ஏறப் போகும்போது, அவரின் அருகில் வந்து நின்றார், சுருளிராஜன்.
என்னவென்று விழி உயர்த்திக் கேட்டார், சாவித்திரி. தயங்கியபடி நின்றார், சுருளிராஜன். 'என்ன பணம் எதுவும் வேண்டுமா?' என்று கேட்டார் சாவித்திரி. தயக்கத்தோடு தலையை ஆட்டி, விவரத்தை சொன்னார், சுருளிராஜன். கிடைக்கும் என்ற நம்பிக்கை அவருக்கு இல்லை!
'நாளை பார்க்கலாம்...' என்று சொல்லி, காரில் ஏறிப் போய் விட்டார் சாவித்திரி.
மறுநாள், படப்பிடிப்பு வேலைகளில் மும்முரமாக இருந்தார், சாவித்திரி. அவரின் உதவியாளர் சரசுவதம்மா, சுருளியிடம் சென்று, 'அம்மா இந்த கவரை உங்களிடம் கொடுக்கச் சொன்னார்...' என்று கூறி, ஒரு உறையைக் கொடுத்தார்.
சுருளி அவ்வுறையை பிரித்துப் பார்த்ததில், அதில், 30 ஆயிரம் ரூபாய் இருந்தது. சுருளிராஜன் அந்தப் பணத்தை திருப்பிக் கொடுத்தாரா என்பதற்கு, ஆதாரம் இல்லை. ஆனால், சாவித்திரி கடைசி வரை அவரிடம் அதைத் திருப்பிக் கேட்கவில்லை. ஒருமுறை சரசுவதம்மா அதை சாவித்திரிக்கு நினைவுபடுத்தியபோது, 'நெருக்கடி நேரத்தில் செய்யும் உதவியை நினைவில் வைத்துக் கொள்ளக் கூடாது...' எனச் சொல்லி விட்டார்.
ஜெமினி ஸ்டுடியோவில், உடையலங்கார உதவியாளராக ஜெமினி கணேசன் வேலை செய்த போது, ஜெமினியின் அறைக்குள் வந்து நின்ற ஒரு இளைஞன், 'குட்மார்னிங்... உள்ளே வரலாமா...' என்றார்.
'அது தான் வந்துட்டீங்களே... அப்புறம் என்ன உள்ளே வரலாமா என்ற கேள்வி...' எனக் கடுகடுத்தார், ஜெமினி.
'மை நேம் இஸ் சந்திரபாபு... மை பாதர் நேம் இஸ் மிஸ்டர் ரோட்ரிக்ஸ். நம்ம ஊர் ஆக்டிங் எனக்கு கொஞ்சமும் பிடிக்காது. எனக்குப் பிடிச்சவங்க பால்முனி, சார்லஸ், இலாடன், சார்லி சாப்ளின், சார்லஸ் போயர்...' என, அடுக்கிக் கொண்டே போனார்.
'உள்ளூர் நடிகர் எல்லாம் துரைக்குப் பிடிக்காதோ...' என ஜெமினி கேட்க, 'நோ... அயம் சாரி, அவர்களைப் போல இங்கு நடிக்க யாரும் இல்லை...' என்றார், சந்திரபாபு.
'இவர் வித்தியாசமானவராக இருக்கிறாரே...' என, அவருடன் நட்பு பாராட்டினார் ஜெமினி. அதன்பின், தினமும் மாலை, 5:00 மணிக்கு, ஜெமினியைச் சந்திக்க, அவர் அலுவலகத்துக்கு வந்துவிடுவார், சந்திரபாபு.
இருவரும் கடற்கரைக்குச் சென்று பல மணி நேரம் பேசுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். காலப் போக்கில், இருவரும் மிகவும் நெருங்கிய நண்பர்களாக மாறிப் போயினர்.
கடந்த, 1960ல் படத்தயாரிப்புச் செலவிற்காக வீட்டை அடமானம் வைத்து வாங்கியிருந்த கடனுக்கு, வட்டி கட்ட முடியாததால், சந்திரபாபுவின் வீட்டை, நீதிமன்றம் பறிமுதல் செய்யும் நிலை ஏற்பட்டது. கொஞ்சம் பணம் கொடுத்து உதவினார், எம்.ஜி.ஆர்., ஜெமினியின் நண்பர் என்ற ஒற்றைக் காரணத்திற்காக, சாவித்திரியும் பணம் கொடுத்து உதவினார். சந்திரபாபு வீடு, பறிமுதல் ஆவதில் இருந்து தப்பியது.
குழந்தை மனம் கொண்ட சாவித்திரி, யார் வந்து கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் உதவும் குணம் கொண்டவர். அவருடைய இந்த உயர்ந்த குணங்களைச் சொல்லாத பத்திரிகைகள், நோயுற்று அவர் வீழ்ந்த போது, அதை, ஏதோ வரலாற்றுப் பிழையாகக் காட்டி மகிழ்ந்தன. பிராப்தம் படத்தின் செயல்பாட்டிலும், இதே வழிமுறையைத் தான் இவர்கள் கையாண்டனர். எவரோ ஒருவர் கொளுத்திப் போட்டு, நமத்துப் போன ஒரு நெருப்புக் குச்சியை வைத்து, விதவிதமாகக் கதைகளைத் திரித்துக் கொண்டனர்.
சாவித்திரி என்ற பொன் முட்டையிடும் வாத்தை, சிலர் தங்கள் தன்னலத்துக்கு பயன்படுத்திக் கொள்ள செய்த சதித் திட்டம் தான், சாவித்திரியின் கடைசிக் காலப் பயணம்.
'அம்மா...' என்று ஆறுதல் தேடக் கூட மடி இல்லாமல், நொந்த அந்தக் கலை தேவதையின் கணங்கள் ஒவ்வொன்றும், ரணங்கள் தான்!
சாவித்திரியை வைத்து, அதிக படங்களை இயக்கியவர், ஆதுர்த்தி சுப்பராவ். தெலுங்கு படவுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர். தமிழில், தூய உள்ளம், எல்லாம் உனக்காக மற்றும் குமுதம் போன்ற படங்களை இயக்கியவர்.
கடந்த, 1961ம் ஆண்டு இறுதியில், பாபு மூவீஸ் சி.சுந்தரத்திடம், பூர்வ ஜென்மக் கதையை கூறினார், ஆச்சார்யா ஆத்ராயா. கதையின் கரு, சுந்தரத்திற்கு பிடித்துப் போக, இயக்குனர் ஆதுர்த்தி சுப்பராவிடம் கதையை விவாதித்தார். அக்காலகட்டத்தில், தெலுங்கில், பூர்வ ஜென்ம கதைகளை அடிப்படையாக கொண்ட சில படங்கள் வந்தன. ஆனால், அப்படங்களில் சொல்லப்படாத ஒரு வித்தியாசம், ஆச்சார்யா கூறிய கதையில் இருந்ததால், அதை படமாக தயாரிக்க முடிவு எடுத்தனர்.
பாபு மூவீஸ் சார்பில், ஆதுர்த்தி சுப்பராவ் இயக்கத்தில், நாகேஸ்வர ராவ் மற்றும் ஜமுனா நடிக்க, முகமனசுலு என்ற பெயரில், அக்கதை படமானது. இன்னொரு கதாநாயகியாக நடித்திருந்தார், சாவித்திரி. தன் கணவர் ஜெமினியுடன் முதல் வெளிநாட்டுப் பயணத்தை முடித்து வந்த சாவித்திரி நடித்த முதல் படம் இது!
படத்தின் கதைக்களம், ஆற்றங்கரையோரம் நடைபெறுவதாக அமைந்ததால், கோதாவரி ஆற்றங்கரையோரம் படப்பிடிப்பை நடத்தினர். இசை, கே.வி.மகாதேவன்; சுப்பராவின் இயக்கத்தில், 4,512 மீட்டர் நீளம் கொண்ட இப்படம், 2:45 நிமிடம், 59 நொடிகள் ஓடியது. 1962ல் ஆந்திரா எங்கும் வெளியாகி, இப்படம் சக்கை போடு போட்டது. அந்த ஆண்டு வெளியான படங்களில், அதிக வருவாயை அள்ளியது, முகமனசுலு தான்!
— தொடரும்.
ஞா. செ. இன்பா
