தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/சாவித்திரி (17)

சாவித்திரி (17)

சாவித்திரி (17)


PUBLISHED ON : ஜூலை 24, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 24, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒருவர் வாழ்ந்த வாழ்க்கை வரலாறாகவோ, காவியமாகவோ ஆவதில்லை. ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்ட ஆயிரத்தில் ஒருவருக்கு தான், வாழ்க்கை, வரலாறு சொல்லக்கூடிய காவியமாக இருக்கிறது. அந்த ஆயிரத்தில் ஒருவர் தான் நடிகையர் திலகம் சாவித்திரி. அவரது வாழ்க்கை வரலாற்றை இங்கு தொடராக தொகுத்து வழங்குகிறார் கட்டுரையாசிரியர்.

முகமனசுலு படத்தின் வெற்றியைக் கண்ட சாவித்திரி, அதை தமிழில் தயாரிக்க விரும்பி, பாபு மூவீஸ் சுந்தரத்திடம், அதற்கான உரிமத்தைப் பெற்றார்.

குழந்தை உள்ளம் திரைப்படம் தயாரிப்பில் இருக்கும்போதே, ஜெமினியை வைத்து, முகமனசுலு படத்தை, தமிழில் தயாரிக்க விரும்பிய சாவித்திரி, அப்படத்தை ஜெமினிக்கு திரையிட்டுக் காட்டினார்.

ஜெமினிக்கும் படத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. ஆனால், சாவித்திரி தன்னுடன் நடித்தால் சிக்கல் ஆகிவிடும் என அவருக்குத் தோன்றியது. காரணம், கதைப்படி, கதாநாயகனை, 'வாடா, போடா...' என்று அழைப்பார், கதாநாயகி.

சாவித்திரி தன்னை, 'வாடா போடா' என்று அழைத்தால், தமிழக மக்கள் அதை ஏற்க மாட்டார்கள், படம் தோல்வியடையும் எனக் கணித்தார், ஜெமினி.

'கதாநாயகி தேர்வைப் பற்றி பிறகு யோசிக்கலாம்; இயக்குனரை முடிவு செய்து, படத்திற்கான பூர்வாங்க வேலைகளை ஆரம்பிப்போம். கண்டிப்பாக, இப்படம் சாவித்திரி புரொடக் ஷன்சுக்கு திருப்பு முனையாக அமையும்...' என, ஜெமினியிடம் கூறினார் சாவித்திரி.

அதேநேரம், வசன கர்த்தா ஆரூர்தாஸ், சிவாஜிக்காக ஒரு கதையை எழுதி, அதை சிவாஜியிடம் கூறிய போது, அக்கதை அவருக்கு மிகவும் பிடித்து விட, 'ஆரூரான்... இக்கதையை நாம் பண்றோம்; யார் கிட்டேயும் சொல்லாதே...' என்றார். ஆனால், நாட்கள் தான் ஓடியதே தவிர, படத்திற்கான எந்த வேலையும் துவங்கப்படவில்லை.

இச்சூழலில், எம்.ஜி.ஆர்., அக்கதையைக் கேட்டு வாங்கி, நடிக்க ஆரம்பித்தார். படத்தின் பெயர், பெற்றால் தான் பிள்ளையா.

எம்.ஜிஆர்., படத்திற்கு, ஆரூர்தாஸ் வசனம் எழுதிய, கடைசி படம் இது!

இப்படத்தின் வேலைகளில், ஆரூர்தாஸ் ஈடுபட்டிருந்த போது, முகமனசுலு படத்தின் உரிமையை வாங்கியிருந்தார் சாவித்திரி.

ஒருநாள், ஜெமினி, முகமனசுலு தமிழ் படத்தின் தயாரிப்பு வேலைகள் குறித்து, சாவித்திரியிடம் விவாதித்த போது, 'ஆரூர்தாசை வசனம் மட்டும் எழுதச் சொல்லாமல், இயக்கத்தையும் சேர்த்து செய்யச் சொல்லலாம் என யோசிக்கிறேன்...' என்று கூறினார் சாவித்திரி.

'நல்ல யோசனை... ஏன் காலம் கடத்தணும்; இன்றே தாசை கூப்பிட்டு, முன்பணம் கொடுத்து விடலாம்...' என்றார் ஜெமினி.

ஆரூர்தாசுக்கு அழைப்பு போனது; சாவித்திரி வீட்டிற்கு வந்த ஆரூர்தாசை, பூஜையறைக்குள் அழைத்துச் சென்று, வெள்ளித் தட்டில் பழங்களுடன் பணம் வைத்து கொடுத்த சாவித்திரி, தான் தயாரிக்கும் படத்திற்கு, வசனம் எழுதி, இயக்கத்தையும் அவரே கவனிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

சாவித்திரி, தன் படத்தை இயக்க, ஆரூர்தாசை ஒப்பந்தம் செய்த போது, பெண் என்றால் பெண் என்ற படத்தை, இயக்கிக் கொண்டிருந்தார், ஆரூர்தாஸ்.

திறமையான பல இயக்குனர்களை அறிமுகப்படுத்திய ஏ.எல்.எஸ்., நிறுவனம், எழுத்தாளராக அடையாளம் காட்டிய, கே.எஸ்.கோபால கிருஷ்ணனுக்கு, சாரதா படத்தின் மூலம், இயக்குனர் என்ற பதவியைக் கொடுத்தது.

அவ்வரிசையில், இயக்குனராக ஆரூர்தாசையும் அறிமுகப்படுத்தியது, ஏ.எல்.எஸ்., நிறுவனம். 1967ல் ஜெமினி மற்றும் விஜயகுமாரி நடிக்க, பெண் என்றால் பெண் என்ற படத்தை ஏ.எல்.எஸ்., நிறுவனம் தயாரித்தது. கதை, வசனம் மற்றும் இயக்கத்தை ஆரூர்தாஸ் கவனித்தார். ஆரூர்தாஸ் இயக்கிய முதலும், கடைசி படமும் இதுதான்!

இயக்கத்தில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் போல வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையில், ஆரூர்தாசை, தான் தயாரிக்கும் படத்திற்கு ஒப்பந்தம் செய்தார் சாவித்திரி; ஆனால், அவர் இயக்கி, டிச.,17, 1967ல் வெளியான, பெண் என்றால் பெண் திரைப்படம் எதிர்பாராத விதமாக, தோல்வியைத் தழுவியது.

இது, ஆரூர்தாசை கலங்க வைத்து விட்டது. அதனால், சாவித்திரியின், ஊமை உள்ளங்கள் படத்தை இயக்க, அவர் மனம் ஒப்புக் கொள்ளவில்லை. மனசாட்சியோடு இயக்கத்தில் இருந்து விலகிய ஆரூர்தாஸ், வசனத்தை மட்டும் எழுதுவதாக ஒப்புக் கொண்டார்.

முதலில் ஏற்பட்ட தடங்கல், சாவித்திரியை உணர்ச்சிவசப்பட வைக்க, இனி, படத்தை தானே இயக்குவது என்று முடிவு செய்தார்; இதில், ஜெமினிக்கு உடன்பாடு இல்லை.

ஊமை உள்ளங்கள் என்ற பெயரில், இப்படத்தை ஆரூர்தாஸ் இயக்குவதென முடிவு எடுத்த போது ஏற்றுக் கொண்ட ஜெமினி, சாவித்திரியின் இயக்கத்தில் நடிக்க யோசித்தார். காரணம், இயக்கத்தோடு, கதாநாயகியாக நடிக்க, சாவித்திரி எடுத்த முடிவு தான்!

இனிமேல், படம் எடுக்கும் திட்டத்தைக் கைவிடுவது தான் சரியான முடிவாக இருக்குமென ஜெமினி மனதுக்குப்பட்டது; அதை சாவித்திரியிடம் தெரிவித்தார்.

'பூர்வ ஜென்மக் கதைகள், இப்போது அவ்வளவாக வெற்றி பெறுவதில்லை. ஒருவேளை, வெற்றி பெறும் என்று வைத்துக் கொண்டாலும், நீ, படத்தில் என்னை சின்ன பையன் போல, 'வாடா, போடா' என்றால், யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நீ கதாநாயகியாக நடிக்காமல், முகமனசுலு படத்தில் நடித்த ஜமுனா நடித்தால் சிறப்பாக இருக்கும்; எந்த பிரச்னையும் வராது...' என்றார் ஜெமினி.

ஏற்கனவே, சில மாதங்களாகவே சாவித்திரி மனதில் புகைச்சல். 'ஒரு நடிகையோடு, ஜெமினி நெருக்கமாக பழகுகிறார்...' என்ற செய்தி, அடிக்கடி வந்து, அவர் நிம்மதியைக் கெடுத்தது.

இப்போது, படத்தையும் கைவிடு என்று, அவர் எதிர்மறையாகச் சொல்ல, சாவித்திரிக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

'கண்ணா...' என்று, எந்த ஜெமினியை, ஆசை ஆசையாய் கொஞ்சிக் கொண்டிருந்தாரோ அவருக்கு எதிராக, பத்ரகாளியாக மாறிவிட்டார் சாவித்திரி.

ஜெமினி - சாவித்திரி தம்பதி, கீரியும், பாம்புமாய் சீறிக் கொள்ள துவங்கினர் என்றால், உரிமையில் அல்ல; உறவு பிரிந்திடுமோ என்ற நிலையில்!

குழந்தைகள் சாமுண்டீஸ்வரியும், சதீஷும் அம்மாவையும், அப்பாவையும் இப்படிப் பார்ப்பது, இதுவே முதல் முறை! கேலியும், கிண்டலுமாய், 'கலகல'வென, எப்போதும் பேசும் அவர்களை, இப்படிப் பார்ப்பது குழந்தைகளுக்கு பயமாக இருந்தது.

இதை எதிர்பார்த்து காத்திருந்த சிலர், தீ மூட்டி, புகை போடும் வேலையை, கையில் எடுத்தனர்.

முடிவு எடுக்கும் உரிமையை பிறருக்குக் கொடுத்தால், முடிவுகள், குழப்பங்களாகவே இருக்கும். சாவித்திரி விஷயத்தில் நடந்தது அது தான்!

கர்ணனை, சூழல்கள் சுற்றி நின்று வீழ்த்திய கதையைப் போல, சாவித்திரியை, அவரது உறவுகளும், தோழியரும் மற்றும் உதவியாளரும் தங்கள் கைக்குள் கொண்டு வர, சினிமாவில் வில்லன்கள் போடும் திட்டத்தை விட, அதிக திட்டங்களை தயார் செய்தனர்.

சாவித்திரி, எப்போதும் மதுவில் மயங்கிக் கிடந்ததால், இதுவெல்லாம் எளிதாக நடந்தது.

'சாவித்திரி ஏதோ ஒரு அவசரத்தில் கோபப்பட்டு விட்டார்; நாளை கண்டிப்பாக அமைதியாகி விடுவார்...' என நினைத்து, வீட்டை விட்டு வெளியேறினார், ஜெமினி.

ஜெமினி வெளியேறவும், தன் அறைக்குள் சென்று, வாய் விட்டு அழுதார் சாவித்திரி. 'அவசரப்பட்டு விட்டோமோ... கண்ணன் ரொம்ப வேதனைப்பட்டு இருப்பாரோ...' என, அவர் மனது துடித்தது.

தொடரும்.

- ஞா. செ. இன்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us