sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

சாவித்திரி (9)

/

சாவித்திரி (9)

சாவித்திரி (9)

சாவித்திரி (9)


PUBLISHED ON : மே 29, 2016

Google News

PUBLISHED ON : மே 29, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒருவர் வாழ்ந்த வாழ்க்கை வரலாறாகவோ, காவியமாகவோ ஆவதில்லை. ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்ட ஆயிரத்தில் ஒருவருக்கு தான், வாழ்க்கை, வரலாறு சொல்லக்கூடிய காவியமாக இருக்கிறது. அந்த ஆயிரத்தில் ஒருவர் தான் நடிகையர் திலகம் சாவித்திரி. அவரது வாழ்க்கை வரலாற்றை இங்கு தொடராக தொகுத்து வழங்குகிறார் கட்டுரையாசிரியர்.

தெலுங்கை தாய் மொழியாகக் கொண்டவர் சாவித்திரி; ஆனால், தமிழ் படங்களில் அவர் சொந்தக் குரலில் தான் பேசி நடித்திருப்பார். தமிழ் நடிகைகளுக்கே இல்லாத தமிழ் மொழி உச்சரிப்பு, சாவித்திரியிடம் இருந்தது.

எட்டையபுரத்தில், 1961ல் ஜெமினி, சாவித்திரி தம்பதியின் சொந்த செலவில் பாரதியார் விழா நடத்தப்பட்டது. சென்னையில் இருந்து சிவாஜி மற்றும் ஏ.எல்.சீனிவாசன் தலைமையில், பெரிய நடிகர் பட்டாளமே, எட்டையபுரம் பாரதியார் விழாவுக்கு சென்றிருந்தனர்.

அவ்விழாவில் பேசிய சாவித்திரி, பாரதியாரின் சில கவிதைகளை மேற்கோள் காட்டி பேசிய போது தான் தெரிந்தது, அவருக்குள் இருந்த தமிழ் மொழியின் ஆளுமை.

பாசமலர் படத்துக்குப் பின், சாவித்திரியின் மார்க்கெட் உச்சத்திற்குச் சென்றது. ஜெமினி, காங்கிரஸ் கட்சித் தலைவர்களோடு நெருக்கமான உறவு கொண்டிருந்ததால், சாவித்திரிக்கும், காங்கிரஸ் கட்சி மீது, ஒரு அபிமானம் ஏற்பட்டது.

நேரு, லால்பகதூர் சாஸ்திரி, காமராஜர் மற்றும் இந்திரா காந்தி ஆகியோருடன் நெருக்கமான தொடர்பு வைத்துக் கொள்ளும் அளவிற்கு அது மாறியது. இதனால், தமிழகத்தில், தேர்தல் காலக்கட்டங்களில், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக, பரப்புரையில், தன் கணவரோடு சேர்ந்து சாவித்திரியும் ஈடுபட்டார்.

பாசமலர் திரைப்படம், தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் ஓடி, வரலாறு காணாத வெற்றியைப் பெற்று, சாதனை புரிந்தது. சென்னை, திருச்சி மற்றும் மதுரையில், 150 நாட்களைத் தாண்டி ஓடியது. குறிப்பாக, சென்னை சித்ரா திரையரங்கில், வெள்ளி விழா கண்டது.

கடந்த, ஆக., 1961ல் இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில், சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது.

இவ்விழாவில் திரையிடுவதற்காக, தேர்வு குழுவின் சார்பில், மூன்று தமிழ் திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டன. அவை, சிவாஜி நடித்த, பாவமன்னிப்பு, படிக்காத மேதை மற்றும் ஜெமினி, சாவித்திரி நடித்த, மிஸ்ஸியம்மா.

இவ்விழாவில் கலந்து கொள்ள, தமிழகத்திலிருந்து ஜெமினி, சாவித்திரி மற்றும் ஏ.எல்.எஸ்., புரொடக் ஷன்ஸ் சீனிவாசன் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.

சாவித்திரி, தன் கணவருடன் செல்லும் முதல் வெளிநாட்டுப் பயணம் இது.

ஜெமினி, சாவித்திரி, பிரபல இந்தி நடிகை நந்தா மற்றும் ஏ.எல்.எஸ்., புரொடக் ஷன்ஸ் சீனிவாசன் ஆகியோர் சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, சிங்கப்பூர் போய், அங்கிருந்து ஜகார்த்தாவுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தனர்.

சென்னை விமான நிலையம், தமிழ் திரை நட்சத்திரங்களால் நிரம்பி வழிந்தது. வெளிநாடு செல்லும் நட்சத்திரங்களுக்கு, சிவாஜி தலைமையில் வழியனுப்பு விழா நடந்தது.

சாவித்திரி மனதில் எல்லையில்லா ஆனந்தம்.

விமான நிலையத்தில் எம்.என்.நம்பியார், பீம்சிங், சந்திரபாபு, முத்துராமன், வி.கே.ராமசாமி, மேஜர் சுந்தரராஜன், சந்தியா ஜெயராமன், தேவிகா, சாவித்திரியின் தாயார் சுபத்திரம்மா; விஜய சாமுண்டீசுவரி மற்றும் ஜெமினியின் குடும்பத்தினர் என, விமான நிலையம் எங்கும் நடிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

திரை நட்சத்திரங்களுக்கு மாலை அணிவித்து வழியனுப்பி வைத்தனர். ஜெமினியைக் கட்டிப் பிடித்து, வழியனுப்பினார் சிவாஜி.

சென்னையிலிருந்து கிளம்பிய கலைக் குழுவினர், சிங்கப்பூர் சென்றடைந்தனர். அங்கு இயங்கிய தமிழ் மகளிர் அமைப்பினர், சாவித்திரிக்கும், இந்தி நடிகை நந்தாவுக்கும் பிரமாண்ட வரவேற்பைக் கொடுத்தனர். வெளிநாடுகளில் இவ்வளவு ரசிகர்கள் இருக்கின்றனர் என்பதே, அப்போது தான் சாவித்திரிக்கு தெரிந்தது.

ஆக.,5, 1961ல் பட விழா கோலாகலமாகத் துவங்கியது. தமிழ் மொழியில் முதல் திரைப் படமாக பாவ மன்னிப்பு திரையிடப்பட்டது. பார்த்த அனைவரும் நம் நடிகர்களின் நடிப்பில் மெய்மறந்து போயினர். அதுவும், எம்.ஆர்.ராதா, சிவாஜி முகத்தில் ஆசிட் வீசிய போது, சிவாஜி துடிப்பாரே... அப்போது, ஆடிட்டோரியமே எழுந்து நின்று கை தட்டி, ஆர்ப்பரித்தது.

இரண்டாவதாகத் திரையிட்ட தமிழ்ப் படம், மிஸ்ஸியம்மா. ஒரு மெல்லிய காதல் கதையை, நகைச்சுவையோடு பதிவு செய்திருந்தார்,

எல்.வி.பிரசாத். 'வாராயோ வெண்ணிலாவே...' பாடல், 'ஒன்ஸ்மோர்' கேட்கப்பட்டது. படம் முடிந்ததும், அரங்கமே எழுந்து நின்று கரவொலி செய்து, சாவித்திரியின் நடிப்பைப் பாராட்டியது.

'தமிழ் மொழியின் கடைசி படமாக, படிக்காத மேதை திரையிடப்பட்ட போது, அரங்கம் மொத்தமும் சிவாஜியின் நடிப்பில் மெய் மறந்து போனது...' என்று, பேட்டி ஒன்றில் பதிவு செய்திருந்தார், ஜெமினி.

இந்தோனேஷியாவின் அதிபர் சுகார்த்தோ, இந்திய நாட்டுக் கலைஞர்களுக்கு, தன் இல்லத்தில் விருந்து அளிக்க ஏற்பாடு செய்திருந்தார்.

விருந்துக்குப் போவதற்கு முன், சாவித்திரியின், மிஸ்ஸியம்மா படத்தைப் பார்த்த பெண் ரசிகர்கள், அவருக்கு பாராட்டுக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். அதில் கலந்து கொண்ட சாவித்திரிக்கும், இந்தி நடிகை நந்தாவுக்கும் கேடயம் வழங்கினர். அதன் பின், அதிபர் வீட்டு விருந்துக்கு ஜெமினியுடன் போனார் சாவித்திரி.

ஆங்கிலப் பண்பாட்டை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது அந்த விருந்து. சாவித்திரிக்கு அது புதுமையான ஒன்றாக தெரிந்தது.

காரணம், எல்லார் கையிலும் மதுக்கிண்ணம்; மதுவை அருந்தியபடி, மெல்லிய அசைவுடன் நடனமாடிய கூட்டத்தில் இருந்து, விலகி நிற்க ஆசைப்பட்டார் சாவித்திரி.

விதி, தன் விளையாட்டுத்தனத்துடன் வாசலில் அமர்ந்திருந்ததை அப்போது அவர் அறியவில்லை. தன் மனைவி ஒதுங்கி நிற்பதைக் கண்ட ஜெமினி, 'எல்லாருடனும் நீயும் கலந்து கொள்...' என அழைத்தார்; மறுத்து விட்டார், சாவித்திரி.

'சபை நாகரிகத்திற்காக கொஞ்சம் மது அருந்துவது ஒன்றும் தப்பு இல்லை...' என்றார் ஜெமினி.

சாவித்திரியின் முகம் சற்று கடுமையாகி, 'விருப்பம் இல்லை என்றால் விட்டு விடுங்கள் கண்ணா...' என்றார்.

'எனக்கு கம்பெனியாவது கொடு...' என, ஜெமினி மீண்டும் கெஞ்ச, வேண்டா வெறுப்புடன், மது அருந்தத் துவங்கினார், சாவித்திரி.

அப்போது, ஜெமினிக்கு தெரியவில்லை, சாத்தானைப் பிடித்து கையில் கொடுக்கிறோம் என்று! சாவித்திரி தன் வாழ்க்கையில் முதன் முதலாக மது அருந்தியது இங்கே தான்!

ஜெமினி காட்டிய சின்ன ஆசை, ஆக்டோபஸ் போல கரம் விரித்து, சாவித்திரியைப் பின்னாளில் பற்றிக் கொண்டது.

விஜய சாமுண்டீசுவரி பிறந்து இரண்டு ஆண்டுகளுக்கு பின், அடுத்த குழந்தைக்குத் தாயாக விரும்பினார் சாவித்திரி. ஆனால், ஏனோ, இரண்டாவதாகத் தாய்மை அடையும் பேறு அவருக்கு தள்ளிக் கொண்டே போனது.

சாவித்திரியின் மனநிலை ஜெமினிக்கு அத்துப்படி. அதனால், குழந்தைக்காக சாவித்திரி படும் ஏக்கம், ஜெமினியைக் கவலை கொள்ளச் செய்தது.

குழந்தை வரம் வேண்டி, இருவரும் கோவில்களைத் தேடி பயணிக்க ஆரம்பித்தனர். குழந்தைக்காக தன் மேனி வருத்தி, அத்தனை நோன்புகளையும் கடைப்பிடித்தார், சாவித்திரி.

யார் எந்த கோவிலுக்குப் போகச் சொன்னாலும், மறுநாளே அந்த கோவிலுக்கு சென்று விடுவார்.

தொடரும்.

ஞா. செ. இன்பா






      Dinamalar
      Follow us