
கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமமான, கும்மத்புரா, சமீபகாலமாக, பரபரப்பாக பேசப்படுகிறது.
இந்த கிராமத்தில், நீண்ட காலமாகவே, தீபாவளி முடிந்ததும், 'சாணம் எறி திருவிழா' என்ற பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இதற்காக, அந்த கிராமத்தில் பசு மாடுகளை வைத்திருப்போரிடமிருந்து, சாணம் சேகரிக்கப்பட்டு, ஊரின் மையப் பகுதியில் உள்ள மைதானத்தில் குவித்து வைக்கப்படுகிறது.
பண்டிகை துவங்கியதும், சிறியவர்கள் முதல், பெரியவர்கள் வரை, ஊர் மக்கள் அனைவரும் ஒன்றாக திரண்டு, ஒருவர் மீது ஒருவர், சாணத்தை வீசி எறிகின்றனர்.
'பசு சாணத்தில் பல மருத்துவ குணங்கள் உள்ளதாக, நீண்ட காலமாகவே கூறப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக இந்த பண்டிகையை கொண்டாடி வருகிறோம். இந்த பண்டிகையில் பங்கேற்று முடிந்ததும், எங்களுக்கு புத்துணர்வு ஏற்படும்...' என்கின்றனர், அந்த கிராம மக்கள்.
— ஜோல்னாபையன்