PUBLISHED ON : மே 29, 2022

இயற்பெயர், சுப்பிரமணியன். ஆனால், சங்கரிபுத்திரன் என்றால் தான் பலருக்கும் தெரியும். காரணம், இந்தப் பெயரில் தான் கடந்த, 50 ஆண்டுகளுக்கும் மேலாக கலை, இலக்கியம், ஆன்மிகம் தொடர்பாக பல பத்திரிகைகளில் துணுக்குகளை எழுதி வருகிறார். இவரது அம்மா பெயர் சங்கரி. அவர் மீதான அபிமானம் காரணமாக, சங்கரிபுத்திரனாகி விட்டார்.
வயது: 90. இவரது வீட்டில் உட்காருவதற்கும், துாங்குவதற்கும் தவிர, மற்ற இடங்களில் புத்தகங்களே நிறைந்துள்ளன. ஓய்வுபெற்ற மின் வாரிய ஊழியரான இவர், பென்ஷன் பணத்தின் பெரும்பகுதியை புத்தகம் மற்றும் நாளிதழ் வாங்கவே செலவு செய்கிறார்.
கதை, கட்டுரைகள் மற்றும் ஆன்மிகம் தொடர்பான தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியான பல புத்தகங்களை வாங்கி வைத்துள்ளார். இவரிடம் உள்ள சில புத்தகங்கள், நுாறு வயதைக் கடந்த அபூர்வமானவை.
நாளிதழ் மற்றும் பருவ இதழ்களில் வந்த செய்திகளை கிழித்து சேகரித்து வைத்துள்ளார். ஒரு விஷயத்தை கேட்டால், அது தொடர்பான புத்தகத்தையோ, நாளிதழில் வந்த குறிப்பையோ எடுத்து தருகிறார்.
புதுக்கோட்டை அருகில் உள்ள ஆற்றங்குடியை சேர்ந்தவர். 10 வயதாக இருக்கும்போது, அங்கு வந்த காஞ்சி மகா பெரியவர், துறு துறுவென இருந்த இவரை அருகில் அழைத்து, 'இதை சத்தம் போட்டு படி...' என்று பத்திரிகையில் வந்த ஆன்மிக கட்டுரை ஒன்றைக் கொடுத்துள்ளார்.
அவரும் சத்தமாக படிக்க, 'அருமை...' என்று பாராட்டிய பெரியவர், 'உனக்கு, மடத்திலிருந்து மாதா மாதம் ஒரு புத்தகம் வரும். அதை இதேபோல சத்தம் போட்டு, இந்த கிராமத்தில் உள்ள படிக்கத் தெரியாதவர்களின் வீடுகளுக்கு போய் படித்துக் காட்ட வேண்டும்...' என்று கேட்டுக் கொண்டாராம்.
கிராமத்தில் இருந்தவரை, பெரியவர் கட்டளையை நிறைவேற்றினார். அப்போது ஏற்பட்ட இந்த பழக்கம் தான், இப்போது வரை தொடர்கிறது. சென்னை வந்தபின், மின் வாரியத்தில் வேலை செய்யும்போது, சர்குலேஷன் லைப்ரரி நடத்தி, பலருக்கும் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.
அலுவலக வேலை முடிந்ததும், சமய சொற்பொழிவு நடக்கும் இடத்திற்கு சென்று விடுவார். ஒருமுறை நண்பர் சீனிவாசனின் துாண்டுதலில், தான் கேட்டு ரசித்த சொற்பொழிவின் ஒரு பகுதியை, பத்திரிகைக்கு துணுக்காக எழுதி அனுப்பினார். அது வெளியாகவே, அது முதல் துணுக்கு எழுத்தாளரானார்.
பல பத்திரிகைகளில் இவரது துணுக்குகள் வெளியாகியுள்ளன.
90 சமயச் சொற்பொழிவாளர் மற்றும் 40 இசைக் கலைஞர்களை இவர் பேட்டி எடுத்து எழுதிய தொடர், மிகவும் வரவேற்பை பெற்றது; பின்னாளில் இது புத்தகமாகவும் வந்தது. 'இலக்கிய தேனீ, துணுக்கு சக்கரவர்த்தி' என்ற பட்டங்களை பெற்றுள்ளார்.
வயது முதிர்வு காரணமாக, கால், காது மற்றும் கண்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
கண் டாக்டரை பார்த்தபோது, 'சிறு அறுவை சிகிச்சை செய்து கொண்டால் போதும் சிரமமின்றி படிக்கலாம்...' என்று கூறியுள்ளார்.
'வாழும் வரை வாசிக்க வேண்டும். அந்துமணியின், பார்த்தது, கேட்டது, படித்தது, 10 தொகுதிகளையும் படிக்க வேண்டும். இதைத் தவிர வேறு ஆசை எதுவும் இல்லை...' என்று சொல்லி முடித்தார், சங்கரிபுத்திரன்.
எல். முருகராஜ்
