PUBLISHED ON : மார் 06, 2022

திறந்திருந்த கதவருகே நின்று, ''அம்மா உள்ள வரலாமா...'' கேட்டாள், சிவகாமி.
மதிய சமையலுக்கு கீரையை ஆய்ந்து கொண்டிருந்த பத்மாவதி அம்மாள், தலைநிமிர்ந்து, ''அட, சிவகாமியா... நல்லா இருக்கியா? உள்ள வா, சொந்த வீட்டுக்குப் போயிட்டா வேற ஆள் மாதிரி வெளியில் நின்னுக்கிட்டு அனுமதி கேட்பியா?'' என்றாள்.
உள்ளே வந்த சிவகாமிக்கு, 40 வயதிற்குள் இருக்கும். பத்மாவதிக்கு, வயது: 60. பத்மாவதி வீட்டில், 25 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டு வேலை செய்தவள், சிவகாமி.
சிவகாமியின் மகன் படித்து வேலைக்குப் போய், வேளச்சேரியில் வீடு வாங்கி சென்று விட்டாள். வேளச்சேரியில் இருந்து திருவல்லிக்கேணிக்கு தினமும் வந்து போக முடியாததால், வேலையை விட்டு நின்று விட்டாள்.
திறந்திருந்த கதவை சாத்தி, ''வா, இப்படி உட்கார். சொந்த வீடெல்லாம் பிடிச்சிருக்கா... மகனுக்கு கல்யாணம் பண்ணலியா?'' அடுக்கடுக்காய் கேள்வி கேட்டாள், பத்மாவதி.
''உங்க புண்ணியத்தில் நானும், புள்ளையும் நல்லா இருக்கோம்மா. நீங்களும், ஐயாவும், எனக்கு தங்க இடம் கொடுத்து, பையனை படிக்க வச்சிருக்காட்டி, நாங்க இந்த நிலைமைக்கு வந்திருக்க மாட்டோம்,'' அவள் பேச்சில் நன்றி நிறைந்திருந்தது.
''நாங்க ஒண்ணும் உனக்கு சும்மா செய்யலியே, பதிலுக்கு நீ எங்களைப் பார்த்துக்கிட்டே... நான் பிரசவம் ஆகி கைக் குழந்தையோடு கஷ்டப்பட்டபோது, நீதானே பார்த்தே, துணி துவைச்சுக் கொடுத்தே.''
பிரசவம் குழந்தை என்ற பேச்சு வந்ததும், ஏனோ மயான அமைதி நிலவியது. அடுத்து என்ன பேசுவது என்ற தடுமாற்றம் இருவர் முகங்களிலும்.
உள் அறை வரை பார்வையை ஓட்டி மெதுவாய், ''ஐயா இல்லீங்களாம்மா?'' கேட்டாள், சிவகாமி.
''வங்கி வரைக்கும் போயிருக்கார்... நீ சொல்லு, முக்கியமான விஷயம் இல்லாட்டி இவ்ளோ துாரம் வரமாட்டியே... என்ன விஷயம்?'' என்றாள், பத்மாவதி.
''நம்ப ஐஸ்வர்யாவை பார்த்தேம்மா,'' என்றாள், சிவகாமி.
''என்ன... ஐஸ்வர்யாவை பார்த்தியா... எங்க... எப்ப பார்த்தே?'' குரலில் அதிர்ச்சியும், ஆர்வமும் தெறித்தன.
''காய்கறி மார்க்கெட்டுக்குப் போகும்போது, வேளச்சேரியில தான் பார்த்தேன்.''
''எப்படி இருக்கா, நல்லா இருக்காளா... எங்களை கேட்டாளா?'' சொல்லும்போதே அவளுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. கண்களின் ஓரம் கண்ணீர் ததும்பி நின்றது.
ஒற்றைப் பிள்ளையை பெற்று, அது ஓடிப்போனால், எந்த தாய்க்குத்தான் அழுகை வராது.
ஐஸ்வர்யா பிறந்த பிறகு, ஏனோ பத்மாவதிக்கு வேறு குழந்தை தங்கவில்லை. தன் ஒட்டு மொத்த அன்பையும் ஐஸ்வர்யாவிடமே கொட்டினாள். சின்னதாய் காய்ச்சல் என்றாலும் தனக்கு காய்ச்சல் வந்தது போல் துடித்தாள்.
பள்ளிக்கு போய் வரும் நேரம் தவிர, ஒரு நொடியும் அவளைப் பிரிந்து இருந்ததில்லை. கல்லுாரியிலிருந்து கொஞ்சம் தாமதமானாலும் வாசற்படியிலேயே நிற்பாள்.
'ஏம்மா இப்படி இருக்கே... நான் என்ன சின்ன பாப்பாவா... எங்க போயிடப் போறேன், காலேஜ் பஸ்ல தானே வர்றேன்...'
நண்பர்களுடன் சினிமாவுக்கு செல்ல கேட்டால், வேணாம்; ஹோட்டலுக்கு போக கேட்டால், நோய் வந்துடும்;
'பீச், பார்க்'குன்னு கேட்டால், நாங்களும் கூட வர்றோம்; வண்டி வாங்கி தரும்படி கேட்டால், ஐயோ ரோடுன்னு பயப்படுவாள்.
'என்னை எங்கியாச்சும் ஒரு நிமிஷம் தனியா விட்டுருக்கீங்களா... அவ்வளவு ஏன், மண்ணுல ஒரு நாளாவது என்னை விளையாட விட்டுருக்கீங்களா? எதுக்கெடுத்தாலும் ஐஸ்வர்யா, ஐஸ்வர்யான்னு பதறிட்டு வந்து என் முன்னாடியே நிப்பீங்க...' என்பாள்.
அவளின் கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாமல் கலங்குவாள், பத்மாவதி.
'தன் குழந்தைக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்று, பொத்திப் பொத்தி வளர்ப்பது ஒரு குற்றமா... அதை ஏன் அன்புன்னு எடுத்துக்க மாட்டேங்கிறே?' அப்பாவின் குரலை அவள் காதில் வாங்கவே இல்லை.
'தயவுசெய்து, என்னை தனியா விடுங்கள்...' என்று கதவை சாத்திக் கொள்வாள்.
'இவள் ஏன் இப்படி இருக்கிறாள்... அவளுக்கு நன்மை என்று செய்ததை எல்லாமே கெடுதலாக நினைக்கிறாள்?' என, பத்மாவதியும், அவள் கணவனும் மனம் வருந்தியது உண்டு.
ஒருவேளை, ஒற்றைப் பிள்ளையாய் செல்லமாய் வளர்ந்ததால், இப்படி அடம்பிடிக்கும் குணம் வந்ததாக நினைத்ததுண்டு. கல்யாணம் காட்சி என்றால் தானாக மாறி விடுவாள் என்று தான் அவர்கள் நினைத்திருந்தனர். அவர்கள் நினைப்பில் நெருப்பள்ளி கொட்டுவது போல், அந்த நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி படிப்பு முடிந்து, ஒரு மாதம் வேலைக்குப் போனாள், ஐஸ்வர்யா.
'ஏங்க நம்ப பொண்ணுக்கு வீட்டோட இருக்கிற மாதிரி மாப்பிள்ளை பாருங்க...' கணவனிடம் சொன்னாள், பத்மாவதி.
'அப்படி யாரு பத்மா இந்தக் காலத்தில் கிடைப்பாங்க?'
'தேடினால் எல்லாம் கிடைப்பாங்க...'
அம்மா, அப்பாவின் உரையாடலுக்கு துணுக்குற்றாள், ஐஸ்வர்யா. எதுவும் பேசாமல் மவுனமாய் அலுவலகம் சென்றாள்.
அன்று மாலை தன் பெற்றோருக்கு, 'வாட்ஸ் ஆப்'பில் ஒரு குறுந்தகவலை அனுப்பி இருந்தாள்...
'தயவுசெய்து என்னை புரிஞ்சுக்கோங்க. உங்களின் அதிகப்படியான அன்பு எனக்குத் திகட்டுகிறது. மூச்சு கூட விட முடியாமல் திணறுகிறேன். கொஞ்சம் காலத்துக்கு என் விருப்பம் போல் வாழ விரும்புகிறேன்.
'அதற்காக, நான் விரும்பிய துணையை தேர்ந்தெடுத்து, திருமணமும் செய்து கொண்டேன். அந்தத் துணை நிச்சயம் என்னை இடையில் கை விடாது என்றே நம்புகிறேன். உங்கள் ஆசிர்வாதத்துடன் நான் இதை செய்திருக்கலாம் தான்.
'ஆனால், அப்போதும் வந்து நீங்கள், 'அதை செய்யாதே, இதை செய்யாதே'ன்னு நொடிக்கு நுாறு, 'அட்வைஸ்' தருவீர்கள். அதை நான் விரும்பவில்லை. நான் என் இயல்பில் வாழ விரும்புகிறேன்.
'இப்படி ஒரு முடிவு எடுக்க காரணம், நிச்சயம் நீங்கள் தான். என் முடிவு உங்களுக்கு வருத்தத்தைக் கொடுக்கவே செய்யும். ஆனால், வேறு வழி தெரியவில்லை. கொஞ்ச நாட்களுக்கு முடிவெடுக்கும் நிலையில் இருந்து நான் இயங்க ஆசைப்படுகிறேன்...'
ஒரு ஆண்டுக்கு முன் போனவள். அதன் பிறகு என்ன ஆனாள் என்று பத்மாவதியும், அவள் கணவனும் வருந்தாத நாளில்லை. இதோ இப்போது தன் மகள் பத்திரமாக இருக்கிறாள் என்று அறிந்தபோது எரிந்து கொண்டிருந்த அடி வயிறு சில்லென்று தணிந்திருந்ததை உணர்ந்தாள்.
சிவகாமியை ஆவலுடன் ஏறிட்டு, ''மாப்பிள்ளை யாரு, எப்படி இருக்கான்?'' என்றாள், பத்மாவதி.
''நல்லா சூப்பரா இருக்கார். நாமா தேடி வச்சிருந்தா கூட, அப்படி ஒரு மாப்பிள்ளை கிடைச்சிருக்க மாட்டார். பொண்ணை கண்ணுக்குள்ள வச்சு தாங்கு தாங்குன்னு தாங்கறார்... பொண்ணு, மாப்பிள்ளைக்கு விதவிதமாய் சமைச்சு போடறதை என் கண்ணால பார்த்தேன்; நானும் சாப்பிட்டேன்.''
''என்ன சொல்ற நீ... நம்ப பொண்ணுக்குத்தான் சுடு தண்ணி கூட வைக்கத் தெரியாதே.''
''நீங்க வேற, அவளை இன்னும் குழந்தையாவே நினைச்சிட்டு இருக்கீங்க. அவ இப்ப பொறுப்பா கடகடவென்று சமைச்சு கணவனுக்கு, 'பேக்' பண்ணி கொடுத்துட்டு, அவளும் பின்னாடியே வண்டி எடுத்துட்டுப் போறதை என் கண்ணால பார்த்தேன்.''
''என்னது, வண்டி ஓட்டறாளா?''
கேட்கும்போதே சந்தோஷமாக இருந்தது, பத்மாவதிக்கு. இங்கே இருக்கும்போது அவள் வண்டி ஓட்ட அனுமதி கேட்டபோது, அவளை தடுத்தது ஞாபகத்துக்கு வந்தது.
கொஞ்சம் சுதந்திரம் கொடுத்திருந்தால், கூடவே இருந்திருப்பாளோ... எல்லாம் கை மீறிப் போன பிறகு ஞானோதயம் வருகிறது.
அழுகை வந்தது பத்மாவதிக்கு.
''ஏம்மா அழறே, அதுதான் நம்ப பொண்ணு இருக்கிற இடம் தெரிஞ்சு போச்சே, அப்புறம் எதுக்கு அழறீங்க... இனிமேல் நாம்ப அங்க போகலாம், வரலாம் பார்த்துக்கலாமில்ல,'' ஆறுதல் கூறினாள், சிவகாமி.
புடவை முந்தானையால் முகத்தை துடைத்துக் கொண்டாள், பத்மாவதி.
''இல்ல சிவகாமி, நாங்க அவளை பார்க்க வர மாட்டோம். தனிமைதான் வேணும்... தன்னோட சுதந்திரம் தான் முக்கியம்ன்னு போனா இல்ல... அவள் அப்படியே இருக்கட்டும். அதை நாங்க கெடுக்க விரும்பலை. 'பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்'லுன்னு அவள் ஓடிப் போயிட்டாள். எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும்.''
''சே சே... பாப்பாவுக்கும் உங்க மேல பாசம் இல்லாமல் இல்லை.''
''இருந்திருந்தால், இத்தனை நாளில் அவள் ஏன் வராமல் போனாள். நாங்க செத்துப் போயிட்டோமா, இருக்கிறோமான்னு கூட வந்து பார்க்கலியே?'' என, மூக்கை சிந்தினாள்.
''எல்லாமே புரியுதும்மா... அவதான் சின்னப் பொண்ணு... நாம் துாக்கி வளர்த்தப் பொண்ணு. ஏதோ தெரியாமல் தப்பு செய்துட்டாள். அதுக்காக நாம் அப்படியே வைராக்கியம் பிடிச்சு இருந்திட முடியுமா... அதனால நாம் என்னத்த வாரிக்கப் போறோம்... அப்புறம் நமக்கும் அவளுக்கும் என்ன வித்தியாசம்?''
வாழ்க்கைக் கொடுத்த அனுபவத்தில், சிவகாமி எத்தனை தெளிவாகப் பேசுகிறாள் என்பது புரிந்தது, பத்மாவதிக்கு.
அந்த நேரத்தில் வெளியில் யாரோ அழைப்பு மணி அழுத்த, ''உங்க ஐயா தான் வந்துட்டார் போல,'' என்றாள், சிவகாமி.
கதவைத் திறக்க எழுந்தாள், பத்மாவதி.
''இரும்மா, நான் போய் திறக்கிறேன்,'' முந்திக் கொண்டாள், சிவகாமி.
கதவைத் திறந்ததும், ஐஸ்வர்யா நின்றிருந்தாள். அவளுக்குப் பின்புறம் மாப்பிள்ளை.
''என்னை மன்னிச்சிடும்மா,'' ஓடி வந்து அம்மாவை கட்டிப் பிடித்து அழுதாள், ஐஸ்வர்யா.
பத்மாவதியுடன், சிவகாமியும் சேர்ந்து அழுதாள். உணர்வு கலவைகளுடன் அவர்களை பார்த்தபடி நின்றிருந்தான், மாப்பிள்ளை.
''நான் அப்படி ஒரு முடிவு எடுத்துட்டேனே ஒழிய, உங்க ஞாபகம் வராத நாள் இல்லை. உங்களை விட்டுப் போனப் பிறகு தான் உங்க அருமை, என்னை கண்ணுக்குள் வச்சு பார்த்துக்கிட்டது எல்லாம் புரிஞ்சது... 'எனக்கு தான் அப்பா - அம்மா இல்லை, அநாதையாய் வளர்ந்தேன். நீ இப்படி சட்டுன்னு கிளம்பி வந்துட்டியே'ன்னு, இவர் கூட திட்டிட்டே இருந்தார்.''
''வர வேண்டியதுதானே... எங்களை அவ்வளவு பாவின்னு நினைச்சுட்டியா?''
''இல்லம்மா... இவள் உங்க அருமையை உணரட்டும்ன்னு தான் இத்தனை நாளும் கூட்டிட்டு வராமல், ஏதாவது காரணம் சொல்லி தடுத்துட்டு இருந்தேன். இனிமேல் உங்களை அவள் ஒரு போதும் தவறாக நினைக்க மாட்டாள்.
''இந்த ஒரு வருஷத்தில் பெற்றவர்கள் எவ்வளவு முக்கியம்ன்னு அவள் உணர்ந்துட்டாள்,'' என்ற மருமகனை பெருமை பொங்கப் பார்த்தாள், பத்மாவதி.
இ. எஸ். லலிதாமதி
