/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
நான் சுவாசிக்கும் சிவாஜி! (15) - ஒய்.ஜி. மகேந்திரன்
/
நான் சுவாசிக்கும் சிவாஜி! (15) - ஒய்.ஜி. மகேந்திரன்
நான் சுவாசிக்கும் சிவாஜி! (15) - ஒய்.ஜி. மகேந்திரன்
நான் சுவாசிக்கும் சிவாஜி! (15) - ஒய்.ஜி. மகேந்திரன்
PUBLISHED ON : ஜன 12, 2014

என் தந்தை ஒய்.ஜி.பி., மத்திய அரசின் உயர் அதிகாரி என்பதால், சில ஆண்டுகள், சாஸ்திரி பவனுக்கு பின்னால் உள்ள அரசு குவாட்டர்சில் வசித்தோம். எதிர் வீட்டில், வசித்த சந்துரு என்ற நண்பருக்கு, இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள், விஸ்வநாத், கிர்மானி, சந்திரசேகர் எல்லாம் நல்ல நண்பர்கள்.
அவர்கள் ஒரு முறை, சந்துரு வீட்டுக்கு வந்திருந்த போது, சந்துரு என்னையும் அழைத்திருந்தார்.
அன்று இரவு, நாங்கள் அனைவரும் சாந்தி தியேட்டரில் ஓடிக் கொண்டிருந்த கவுரவம் படத்திற்கு போக முடிவெடுத் தோம்.ஜி.ஆர்.விஸ்வநாத்திற்கு, கவுரவம் என்ற பெயரை கேட்டதும், கண்கள் பெரியதாக விரிந்தன. 'சிவாஜி தானே அதில் ஹீரோ, நான் சிவாஜியின் பெரிய விசிறி. அப்படத்திற்கே போகலாம்' என்று தீர்மானமாக சொல்லி விட்டார். விஸ்வநாத், கிர்மானி, சந்திரசேகர், நண்பன் சந்துரு, என் சகோதரர் ராஜேந்திரன் மற்றும் நான் என, அனைவரும் சாந்தி தியேட்டருக்கு சென்றோம்.
படம் பார்க்கும்போது, பல காட்சிகளில் சிவாஜி நடிப்பை ரசித்து, பாராட்டி, கை தட்டிய விஸ்வநாத், 'மகேந்திரா, நீ கொடுத்து வைத்தவன், சிவாஜி உன்னைத் தொட்டு நடித்திருக்கிறாரே...' என்று, குழந்தை போல பேசினார். இந்த நிகழ்ச்சியை, சிவாஜியிடம் நான் சொன்னபோது, அவரும் ஆர்வத்துடன் கேட்டு மகிழ்ந்தார்.
விஸ்வநாத்தோடு அன்று ஆரம்பித்த எங்கள் நட்பு, இன்றும் தொடர்கிறது. அதற்கு காரணம் சிவாஜி.
இயக்குனர் ஏ.பீம்சிங்கின் இயக்கத்தில், சிவாஜி நடித்த முதல்படம் ராஜா ராணி. அதில் வரும், 'சேரன் செங்குட்டுவன்' என்ற ஓரங்க நாடகத்தில், சிவாஜிக்கு, 867 அடி நீளமான ஷாட் இருந்தது. வசனம் பேசிக் கொண்டே நடிக்க வேண்டும். இப்போது இருப்பது போல, முதலில் படப்பிடிப்பு, பின், டப்பிங் பேசும் வசதி அப்போது இல்லை. படப்பிடிப்பின் போதே நடிகர், நடிகைகள் நடித்துக் கொண்டே, வசனங்களை பேச வேண்டும். ஒரே, 'டேக்'கில் நீண்ட வசனத்தை பேசி, உணர்ச்சிபூர்வமாக நடித்து முடித்தார் சிவாஜி.
படத்தின், 'ரஷ்' மற்றும் 'ரப் பிரின்ட்' பார்க்கும் போது தான், சவுண்ட் சரியாக பதிவு ஆகவில்லை என்று, தெரிய வந்தது. எப்படி இதை சிவாஜியிடம் சொல்வது என்று, சவுண்ட் இன்ஜினியரும், மற்றவர்களும் தயங்கினர். தகவல் அறிந்த சிவாஜி, இயக்குனர் பீம்சிங்கிடம், 'நான் வசனத்தை மைக்கிலே பேசிடறேன், வசனமும், படக்காட்சியும் ஒன்றாக ஒத்துப்போகிறதா பாருங்கள்...' என்றார். 867 அடி நீளமான ஷாட்டுக்குரிய வசனத்தை, மனப்பாடமாக, ஏற்ற, இறக்கத்துடன், ஒரே, 'டேக்'கில் பேசி முடித்தார். இது சிவாஜியின் அபார ஞாபக சக்திக்கு ஒரு எடுத்துக்காட்டு.
எடிட்டிங்கின் போது, இயக்குனர் பீம்சிங் இந்த காட்சியைப் பார்த்தார். படமும், வசனமும் சரியாக ஒத்துப்போனது. ஆனந்தப் பெருக்கோடு சிவாஜியை கட்டிக் கொண்டார் .
ஆண்டுதோறும் நான் நடத்தும் சிவாஜியின் நினைவு தின விழாவில், இதைக் குறிப்பிட்டு, பீம்சிங்கின் மகனும், சிறந்த எடிட்டரும், தேசிய விருது பெற்ற கலைஞருமான பி.லெனின், 'டப்பிங் பேசுவோரில் பலர், பிரமாதமாக பேசுகின்றனர்; ஆனால், படத்தைப் பார்க்காமல், டப்பிங் பேசியவர் சிவாஜி தான்...' என்று, பாராட்டி பேசினார்.
சிவாஜியும், ஏ.பீம்சிங்கும் இணைந்து, ராஜா ராணி முதல், பாவ மன்னிப்பு, பார்த்தாலே பசி தீரும், பாலும் பழமும், மற்றும் படிக்காத மேதை என்று, 'பா' என்ற எழுத்தில் ஆரம்பிக்கும், பத்து படங்கள் செய்திருக்கின்றனர். இந்த பத்துமே பெரிய, 'ஹிட்!' வேறு எந்த நடிகரும், இயக்குனரும், தொடர்ந்து இவ்வளவு சூப்பர், டூப்பர் ஹிட் படங்கள் கொடுத்திருப்பரா என்பது சந்தேகம் தான்.
பாலும் பழமும் படம் ரிலீசான அன்று, இயக்குனர் பீம்சிங், சாந்தி தியேட்டரில், ரசிகர்களோடு அமர்ந்து, படம் பார்த்துக் கொண்டிருந் தார். ஒரு ரசிகர், 'சுவிட்சர் லாந்திலிருந்து ஒரு பார்சல் வருவதாக காட்டுகின்றனர். ஆனால், குளோஸ் அப் ஷாட்லே பார்த்தால், அதில், இந்திய தபால் தலை ஒட்டப்பட்டிருக்கிறதே...' என்று, கமென்ட் அடித்தார். அதைக் கேட்டவுடன், தான் செய்த தவறை உணர்ந்த பீம்சிங், அடுத்த நிமிடமே, தியேட்டரின் புரொஜக்டர் அறைக்குச் சென்று, அந்த, 'ஷாட்'டை வெட்டி, நீக்கியதுடன். மற்ற பிரின்ட்களிலும், நீக்கி விட்டார்.
அந்த அளவுக்கு தொழில் பக்தி நிறைந்தவர் பீம்சிங். இவர்கள் இருவரும் இணைந்து பல வெற்றி படங்களை கொடுத்திருக்கின்றனர்.
சிவாஜி நடித்த மலையாளப் படம், யாத்ரா மொழி. தமிழ் ஆளாக, தமிழ் பேசி, படம் முழுவதும் நடித்திருந்தார். அவரது மகனாக நடிகர் மோகன் லால் நடித்திருப்பார். படத்தை இயக்கியவர் பிரதாப் போத்தன். அந்தமான் காதலி படம் போன்று, யாத்ரா மொழி படத்தின் கதையும் இருக்கும். அதில், சிவாஜி ரொம்ப யதார்த்தமாக நடித்திருப்பார். ஒரு முறை மோகன் லாலிடம் பேசிக் கொண்டிருந்த போது, சிவாஜியைப் பற்றி ரொம்ப உயர்வாக பேசினார்.
சிவாஜி, என்னிடம், 'என்னமா நடிக்கிறான்டா இந்த மோகன் லால்...' என்று, பெருமையாக பல முறை சொல்லியிருக்கிறார். சிவாஜியின் நெருங்கிய நண்பர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் கே. பாலாஜியின் மாப்பிள்ளை என்பது, மோகன் லாலுக்கு கூடுதல் பிளஸ்.
அந்தமான் காதலி படத்துக்கு, சிவாஜி உட்பட கலைஞர்கள், டெக்னீஷியன்கள் எல்லாரும், ஒரே கப்பலில், இரண்டு நாள் பயணம் செய்து, அந்தமானுக்கு சென்றோம். சிவாஜிக்கு பிரத்யேகமாக ஸ்பெஷல் கேபின் இருந்தாலும், அதிக நேரம், எங்களோடு தான் இருந்தார். பதினைந்து நாட்கள் மட்டும்தான் படபிடிப்பு. நான், ஏ.எஸ்.பிரகாசம், நடிகர் செந்தாமரை, மூவரும் அந்தமானில் பல இடங்களுக்கு சென் றோம். சிவாஜிக்கு மட்டும், 15 நாட்களும் படப்பிடிப்பு இருந்தது. 'இவங்க எல்லாம் ஊரை சுத்தறாங்களே... எனக்கு மட்டும் தினமும் ஷூட்டிங்...' என்று, குழந்தை மாதிரி ஆதங்கப்பட்டார்.
'உங்களை வைச்சுத் தானே, நான் படம் எடுக்கிறேன்...' என்று தயாரிப்பாளர் முத்தா சீனிவாசன் கூறுவார். அங்குள்ள தமிழ் மன்றம் சார்பில், எங்களுக்கு வரவேற்பு அளித்த போது. எல்லாரையும் பேச கூறினர். கடைசியாக சிவாஜி பேசிய போது, தேசியம் பற்றியும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பற்றியும், நிறைய பேசினார். அந்தமான் தீவுகளில் படப்பிடிப்பு நடந்த, முதல் தமிழ்ப்படம், அந்தமான் காதலி.
ஜாதி, மத, பேதம் இல்லாத உண்மையான இந்தியாவை, அந்த மானில் தான் பார்க்க முடியும். எல்லா ஜாதியினரும் எந்த பேதமின்றி, ஒன்றாக வாழ்கின்றனர், நன்றாக பழகுகின்றனர்;
அகில இந்திய வானொலி, அந்தமான் கிளைக்கு ஹகீம் என்பவர் இயக்குனராக அப்போது இருந்தார். அவரிடம், சிவாஜி சிபாரிசு செய்ததால், நடிகர் செந்தாமரையும், என்னையும் அழைத்து, வானொலி நாடகத்தில், நடிக்க வைத்தார் அவர். நாடகத்தில் நடித்தற்காக, எங்களுக்கு அரசிடமிருந்து சன்மானமும் கிடைக்கச் செய்தார்.
பராசக்தி படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது, பக்கத்து செட்டில், வேறு படத்திற்காக அஞ்சலி தேவி நடித்துக் கொண்டிருந்தார். சிவாஜி வசனம் பேசுகிற உச்சரிப்பு மற்றும் ஸ்டைலை பார்த்து, தன் படத்திற்கு அவரை, 'புக்' செய்தார். அஞ்சலி தேவி. அவரை 'முதலாளி அம்மா' என்று தான் சிவாஜி கூப்பிடுவார். அஞ்சலி தேவியும், சிவாஜியும் நடித்த படம், நான் சொல்லும் ரகசியம். அதில் இடம் பெற்ற, 'கண்டேன் உன்னை கண்ணாலே...' என்ற ஹிட் பாட்டை, சிவாஜிக்காக பாடியிருந்தார் பி.பி.ஸ்ரீநிவாஸ்.
— தொடரும்.
தொகுப்பு: எஸ்.ரஜத்