நான் சுவாசிக்கும் சிவாஜி (20) - ஒய்.ஜி. மகேந்திரன்
நான் சுவாசிக்கும் சிவாஜி (20) - ஒய்.ஜி. மகேந்திரன்
PUBLISHED ON : பிப் 16, 2014

நடிகர் மற்றும் தயாரிப்பாளரான கே.பாலாஜி, தமிழ்த் திரை உலகில், தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர். சிவாஜியின் நெருங்கிய நண்பர். அவரை வைத்து, 18 படங்கள் தயாரித்தவர்; அதில், பல வெற்றிப் படங்கள். இந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கு என்று, பிற மொழியில் வெளியான வெற்றிப் படங்களை, தமிழில், ரீ-மேக் செய்து, வெற்றி கண்டவர்.
இவர், திவான் பகதூர் ரங்காச்சாரியின் நேரடி பேரன். திவான் பகதூர் என் அம்மாவின் தாத்தா என்பதால்,பாலாஜி எனக்கு மாமா.
பாலாஜி தயாரிப்பில் சிவாஜி நடித்த படம், நீதி. இப்படத்தின் படப்பிடிப்பு மைசூரில் இருந்து 30 கி.மீ., தொலைவில், நடந்து கொண்டிருந்தது. படப்பிடிப்பு முடிந்து, காரில் சிவாஜியும், பாலாஜியும் மைசூருக்கு திரும்பிக் கொண்டிருக்கையில், பாதி வழியில், காரின் ஒரு டயர், பங்க்சராகி விட்டது. 'திவான் பகதூர், இப்ப என்ன செய்யப் போற...' என்று கேட்டார் சிவாஜி. 'நம்ம யூனிட்டை சேர்ந்த, அடுத்த கார் வரும் வரை, இங்கே தான் காத்திருக்க வேண்டும்...' என்றார் பாலாஜி.
உடனே, தன் சட்டையை அவிழ்த்து, வேஷ்டி, பனியனுடன் தலை யில் முண்டாசு கட்டி, காரை விட்டு இறங்கினார் சிவாஜி. ஜாக்கி எடுத்து வைத்து, பங்க்சரான டயரை கழற்றி, ஸ்பேராக இருந்த மற்றொரு டயரை மாற்றினார். 'இதெல்லாம் தெரிஞ்சு வச்சுக் கணும் முதலாளி...' என்று, பாலாஜியை கலாய்த்து விட்டு, 'வா போகலாம்...' என்றார். நெடுஞ்சாலையில், அடுத்த வண்டி, எப்போது வரும் என்று, தெரியாத நிலையில், சிவாஜியே, டயரை மீண்டும் பயணிக்க வழி செய்ததைத் கண்டு, பாலாஜிக்கு ஆச்சரியம்.
பாலாஜியின் மற்றொரு படம், சட்டம். கமல் ஹீரோவாக நடித்த இப்படத்தில், எனக்கும் ஒரு முக்கியமான பாத்திரம். படத்தை இயக்கியவர் கே.விஜயன். மகாபலிபுரம் அருகே, காலை 7:00 மணிக்கு ஆரம்பித்த படப்பிடிப்பில், வில்லன் என்னை சுட்டுக் கொல்லுகிற காட்சி. 'இரண்டு மணி நேரம் போதும்; நீ, 9:00 மணிக்கெல்லாம் கிளம்பி விடலாம். உன்னை கரெக்டாக அனுப்பி வைக்கிறேன்...' என்று, பாலாஜி உறுதி அளித்தார். பல்லாவரம் அருகே டி.யோகானந்த் இயக்கத்தில், சுமங்கலி படத்தின் படப்பிடிப்பு. சிவாஜி லாரி டிரைவராகவும், க்ளீனராக நானும் நடித்தேன். பாலாஜி படப்பிடிப்பை முடித்து விட்டு, உடனே பல்லாவரத்திற்கு சென்று, சிவாஜியுடன் சேர்ந்து கொள்ள வேண்டும். அன்று சட்டம் படப்பிடிப்பில், சற்று தாமதமாகி விட்டது. சிவாஜி எனக்காக காத்துக் கொண்டிருப்பாரே என்று, எனக்கு ஒரே டென்ஷன். மொபைல் போன் வசதி இல்லாத காலம் என்பதால், தாமதத்தை அவருக்கு தெரிவிக்கவும் இயலவில்லை.
என் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டதும், பல்லாவரத்தில், படப் பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு, காரில் படு வேகமாக வந்து சேர்ந்தேன். சிவாஜி கோபித்து கொள்வாரே என்ற பயம்; அவரை காக்க வைத்து விட் டோமே என்ற குற்ற உணர்ச்சி. தயங்கி தயங்கி அவரிடம் சென்றேன். அவர் என்னைப் பார்த்ததும், எழுந்து, இரு கை கூப்பி, 'என் பெயர் சிவாஜி கணேசன்; 1952லிருந்து நடித்துக் கொண்டிருக்கிறேன்; என்னால் யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லாத வரை, முடிந்த வரைக்கும் படப்பிடிப்பிற்கு சரியான நேரத்திற்கு, வருவேன். நீங்கள் எல்லாம் ரொம்ப பிசி நடிகர். சொன்ன நேரத்திற்கு, இரண்டு மணி நேரம் தாமதமாகத் தான் வருவீங்க...' என்றார்.
அவரை மேலே பேச விடாமல், 'என்னை மன்னிக்கணும்; பாலாஜி சார் படம். மகாபலிபுரம்கிட்டே ஷூட்டிங்; 9:00 மணிக்கு என்னை அனுப்பி விடுவதாகவும், 'சிவாஜி சார் கிட்டே நான் சொல்லிக்கிறேன்...' என்று பாலாஜி சொன்னதலும் தான்...' என்று தயங்கியபடியே கூறினேன்.
'பாலாஜி படமா... அவன் அப்படித்தான். சரி சரி... நீ போய், மேக்-அப் போட்டுட்டு சீக்கிரம் வா...' என்றார். பாலாஜிக்கும், அவருக்கும் இடையே இருந்த அன்பின் காரணமாக, சிவாஜி உடனே சாந்தமாகி விட்டார். அதனால், அன்று நான் தப்பித்தேன்.
அண்ணாவின் ஆசை என்ற படத்தின் மூலமாக, பாலாஜியை திரைப்பட தயாரிப்பாளராக ஆக்கியது ஜெமினி கணேசன் - சாவித்திரி தான் என்றாலும், அவரை திரைப்படத் துறையில் தயாரிப்பாளராக நிலைத்து நிற்க வைத்தது சிவாஜி கணேசன் தான். கடைசி வரைக்கும், அந்த நன்றி மறக்காதவராக, இருந்தார் பாலாஜி.
சிவாஜி மறைவின் போது, பாலாஜி உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அப்போது தான், மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டு, மருத்துவரின் தீவிர கண்காணிப்பில் இருந்தார். பெசன்ட் நகர் மயானத்தில், சிவாஜிக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டன. தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி, சிவாஜிக்கு, 21 முறை பீரங்கி முழங்கி, இறுதி அஞ்சலி செய்யப்பட்டது. தன் உடல்நிலையை பொருட்படுத்தாமல், அங்கு வந்து, ராணுவ வீரர் போல் அட்டென்ஷனில் விறைப்பாக நின்று, சல்யூட் அடித்து, தன் இறுதி மரியாதையை செலுத்தினார் பாலாஜி. சிவாஜியின் உடலுக்கு, அவர், இறுதி அஞ்சலி செய்த அந்த காட்சி, இன்றும், என் கண் முன் நிற்கிறது.
சென்னை தூர்தர்ஷன் நிலையத்தில், துணை இயக்குனராக பதவி வகித்த, டி.எஸ். நாராயணசுவாமி, சிவாஜியின் நெருங்கிய நண்பர். சிவாஜியின் வாழ்க்கை சரித்திரத்தை, அவர் எழுதினார். அதில், சிவாஜி தனக்குப் பிடித்த நடிகர்களின் பட்டியலில், என் பெயரை பிரத்யேகமாக குறிப்பிட்டது பெருமைக்குரிய விஷயம்.
அதே போல மலேசியாவில், ஒரு பிரபல, 'டிவி'க்கு சிவாஜி பேட்டி அளித்த போது, 'இன்றைக்கு நம்பர் ஒன் காமெடியன் ஒய். ஜி. மகேந்திரன் தான்! அவனுடைய, டைமிங் சென்ஸ் சரியாக இருக்கும்...' என்று, குறிப்பிட்டிருந்தார். இவை இரண்டையுமே, எனக்கு கிடைத்த ஆஸ்கர் விருதுகளாக கருதுகிறேன்.
சென்னை எழும் பூரில், சிவாஜிக்கு நடந்த பாராட்டு விழாவில் பேசும் போது, மற்ற நடிகர்களுடன் ஒப்பிட்டு பேசினேன்.
இதைக்கேட்டு, கை தட்டி ரசித்தனர் சிவாஜி ரசிகர்கள். ஆனால், மேடையில் அமர்ந்திருந்த சிவாஜி, இதை அவ்வளவாக ரசிக்கவில்லை என்பதை, அவர் முகம் காட்டியது.
விழா முடிந்ததும், என்னை கூப்பிட்டவர், 'புத்திசாலித்தனமாக பேசியதாக நினைப்பா? கைதட்டல் வாங்கணும்கிறதுக்காக, எதை வேண்டுமானாலும் பேசாதே. என்னை மேடையிலே வைத்துக் கொண்டு, மத்தவங்களை விமர்சனம் செய்றேயே, நான்தான் சொல்லிக் கொடுத்து, உன்னை பேச சொன்னேன்னு தானே மத்தவங்க நினைப்பாங்க. இதனால் எனக்கு கெட்ட பெயர் தான் வாங்கிக் கொடுக்கிறே...' என்றார். அவர் சொன்னதில் இருந்த நியாயம் எனக்கு புரிந்தது; அவரிடம் மன்னிப்பு கேட்டேன்.
இன்றும் அவர் கொடுத்த அறிவுரையை, நான் பின்பற்றுகிறேன்.
பாலு மகேந்திராவின் ஊமைக்குயில் படத்திற்காக, பெங்களூரில் ஒரு ஸ்டுடியோவில், நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது, பக்கத்து செட்டில் பிரபல இந்தி நடிகர் திலீப்குமார் இருப்பதாக சொன்னார்கள். விசாரித்ததில், அவர் செட்டில் இல்லை; ஸ்டுடியோவை சுற்றி ஓடிக் கொண்டிருக்கிறார் என்றனர். எடுக்க வேண்டிய காட்சியில், அவர் ரொம்ப களைப்பு அடைந்தவராக இருக்க வேண்டும் என்பதற்காக, தன்னை வருத்திக் கொண்டு, ஓடுகிறார் என்று தெரிந்தது.
இது பற்றி, சிவாஜியிடம் நான் ஒரு முறை பேசிய போது, 'யுசுப்பாய் பெரிய நடிகர். அவர் செய்தது அவருக்கு பொருந்தும். என்னைக் கேட்டால், டயர்டாக காட்சியில் இருக்க வேண்டும் என்றால், டயர்டாக நடிக்க வேண்டும். கொலைகாரனாக வரும் போது, இரண்டு கொலை செய்துட்டா, செட்டுக்கு வர முடியும்...' என்றார்.
அமெரிக்க அரசின் அழைப்பை ஏற்று, விசேஷ விருந்தினராக, 1962ல், அமெரிக்கா சென்றிருந்தார் சிவாஜி. அங்கிருந்து திரும்பி வரும் போது ரோம் நகருக்கு சென்றார், அங்கு ஒரு ஒட்டலில் சாப்பிட்டார். சிவாஜியின் சாதனைகளைப் பற்றி கேள்விப்பட்ட அந்த ஓட்டல் முதலாளி, சிவாஜி சாப்பிடுவதை புகைப்படம் எடுத்து தங்கத்தால், பிரேம் செய்து, தன் ரெஸ்டாரென்டில் மாட்டியிருக்கிறார்.
— தொடரும்.
எஸ்.ரஜத்
