PUBLISHED ON : செப் 13, 2020

சிவன் கோவில்கள், கிழக்கு நோக்கி இருப்பது மரபு. மேற்கு நோக்கியும் சில கோவில்கள் உள்ளன. ஆனால், வடக்கு நோக்கிய நிலையில், கரூர் மாவட்டம், குளித்தலை கடம்பவனநாதர் கோவில் மட்டுமே இருப்பது விசேஷம்.
துாம்ரலோசனன் என்ற அசுரன், தங்களை துன்புறுத்துவதாக, அம்பிகையிடம் புகார் கூறினர், தேவர்கள்.
துர்க்கை வடிவம் எடுத்து, அசுரனை அழிக்கச் சென்றாள், அம்பிகை.
அசுரன், தான் பெற்ற வரத்தால், துர்க்கையுடன் சம பலமுடன் மோதவே, சப்த கன்னியராக உருவெடுத்து, அசுரனுடன் போர் புரிந்தாள். அவர்களை எதிர்க்க முடியாத, அசுரன், வனத்திற்குள் ஓடி, காத்தியாயன மகரிஷியின் ஆஸ்ரமத்திற்குள் ஒளிந்தான்.
சப்த கன்னியரும் ஆஸ்ரமத்திற்குள் சென்றனர். அங்கு முனிவர் இருந்தார். துாம்ரலோசனனே, முனிவர் வடிவில் உருமாறி அமர்ந்திருப்பதாக கருதிய சப்த கன்னியர், அவரை அழித்து விட்டனர். இதனால், அவர்களுக்கு, பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது.
அறியாமல் செய்த இப்பாவம் தீர, சிவனை வேண்டி தவமிருந்தனர். அவர்களுக்கு, சாப விமோசனம் அளித்தார், சிவன்.
சிவன் கோவில்களில், சப்த கன்னியர், தனி சன்னிதியில் இருப்பர். ஆனால், இங்கு, கருவறையில் லிங்கத்திற்கு பின்புறம் வீற்றிருப்பது மிக விசேஷம்.
முற்றிலா முலையம்மை அம்பாள், கிழக்கு நோக்கி இருக்கிறாள். கோவிலுக்கு எதிரே, காவிரி ஓடுகிறது.
குபேர திசையான வடக்கு நோக்கி உள்ளார், சிவன். பக்தர்கள், தெற்கு நோக்கி நின்று, அவரை வழிபடுவர். எனவே, வடக்குக்குரிய செல்வச் செழிப்பையும், தெற்கிற்குரிய முன்னோர் ஆசியையும் ஒருசேர இத்தலத்தில் பெறலாம்.
மகாளய அமாவாசை போன்ற நாட்களில், காவிரியில், எள் துாவி வழிபட்டால், பலன் இரட்டிப்பாக இருக்கும்.
காலையில், குளித்தலை கடம்பர்; மதியம், 12:00 மணிக்குள், அருகிலுள்ள ரத்தினகிரி சொக்கர் கோவில், - 8 கி.மீ., மாலையில், ஈங்கோய்மலை மரகதநாதர் கோவில் - 5 கி.மீ., என்ற வரிசையில் வழிபட்டால், குறைவில்லாத பலன் கிடைக்கும்.
பரமநாதர் என்ற காவல் தெய்வம், வலது கையை நெற்றி மேல் வைத்து, இங்கு வரும் பக்தர்களுக்கு, 'சல்யூட்' அடிக்கும்
விதத்தில் வித்தியாசமான கோலத்தில் இருக்கிறார்.
இவருக்கு, தேன் அபிஷேகம் செய்தால், குடும்பத்திற்கு பாதுகாப்பாக இருப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.
சிவாலயங்களில், தெற்கு நோக்கி இருக்கும் சண்டிகேஸ்வரர், மேற்காகவும், வடக்கு பார்த்திருக்கும் பிரம்மா, கிழக்காகவும் உள்ளனர்.
கரூரில் இருந்து, 35 கி.மீ., துாரத்தில் குளித்தலை உள்ளது.
தி. செல்லப்பா

