
பரமபத சோபபான கட்டத்தில், ஒரு நீளமான பாம்பு படம் போட்டிருக்கும். அதன் தலை, மேல் கட்டத்தின் கடைசியிலும், வால், கீழேயுள்ள முதல் கட்டத்திலும் இருக்கும். இந்தப் பாம்பின் பெயர் நகுஷன். இவன் ஒரு ரிஷி. ஆயிரம் அசுவமேத யாகங்கள் செய்து, இந்திரலோக பதவியைப் பெற்றவன். இவனுக்கு, இந்திரனின் மனைவி இந்திராணியை அடைய வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அதனால், இந்திரலோக பதவியை பெறப்போகிறோம் என்று ஆனதுமே தன் வருகையை, இந்திராணிக்குச் ெசால்லியனுப்பினான். அவள் மனம் கலங்கி, அகஸ்தியரிடம் ஆலோசனை கேட்டாள்.
அவரும், 'கவலைப்படாதே... நான் பார்த்துக் கொள்கிறேன்...' என்றார். இந்திராணி இருக்குமிடத்துக்குப் போக ஆயத்தமான நகுஷன், தான் ஒரு பல்லக்கில் அமர்ந்து கொள்ள, அந்தப் பல்லக்கை ஆயிரம் ரிஷிகள் சுமக்க வேண்டும் என்று, உத்தரவு போட்டான்.
அதன்படி, பல்லக்கில் ஏறி உட்கார்ந்தான் நகுஷன். முன்னால், மேள தாளங்கள் முழங்க, ரிஷிகள், பல்லக்கைச் சுமந்து சென்றனர். அவர்களில், அகஸ்தியரும் ஒருவர். பல்லக்கு மெதுவாக சென்று கொண்டிருந்தது.
நகுஷனுக்கு, உடனே இந்திராணியை அடைய வேண்டும் என்ற ஆவல். அதனால், பல்லக்கு மெதுவாகப் போகிறதே என்று நினைத்து, கையிலிருந்த பிரம்பால், அகஸ்தியரை, 'சர்ப்ப சர்ப்ப' என்று சொல்லியபடியே, அடித்து விட்டான். 'சர்ப்ப' என்றால், சீக்கிரம் என்றும், 'சர்ப்பம்' - பாம்பு என்றும், இரு வேறு அர்த்தம் வரும். நகுஷன் அடித்ததும் அகஸ்தியருக்கு, கோபம் வந்து விட்டது...
'அட துஷ்டா... இந்திர பதவி கிடைக்கப் போகிறது என்ற அகம்பாவத்தில், பதவி கிடைப்பதற்கு முன்பே, ரிஷிகளை பல்லக்கு தூக்க வைத்ததோடு மட்டுமல்லாமல், 'சர்ப்ப சர்ப்ப' என்று சொல்லி அடிக்கவா செய்கிறாய்... இக்கணம் முதல், நீ, பூலோகத்தில் ஒரு மலைப் பாம்பாக விழுந்து கிடப்பாயாக...' என்று, சபித்து விட்டார்.
அகஸ்தியரின் சாபத்தால், நடுநடுங்கிய நகுஷன், மன்னிப்புக் கேட்டு, விமோசனமும் வேண்டினான். அகஸ்தியரும் மனமிரங்கி, 'நீ பூலோகத்தில் மலைப் பாம்பாக கிடக்கும் போது, யுதிஷ்டிரரால், சாப விமோசனம் பெறுவாய்...' என்று, அருள் செய்தார்.
ஒருவனுக்கு பதவி, பணம், அதிகாரம் வந்து விட்டால், அகம்பாவமும், அலட்சிய புத்தியும் வந்து விடுகிறது; இது கூடாது. அவைகளே அவனுக்குக் கெடுதலாக முடியும் என்பதை, இதன் மூலம் அறியலாம்.
கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம்!
செஞ்சோற்றுக் கடன் தீர்க்க, சேராத இடம் சேர்ந்தான் கர்ணன்; அப்படியானால், விபீஷணனுக்கு செஞ்சோற்றுக் கடனில்லையா?
இல்லை. அவன் உண்ட சோற்றில், அவனுக்குப் பங்குண்டு. அவன், ராவணனின் சொத்தை அனுபவிக்கவில்லை. தன் தகப்பன் வைத்து விட்டுப் போன பூர்வீகச் சொத்தில், தன் பகுதியை அனுபவித்தான். அவன், தகப்பனுக்கு வேண்டுமானால் கடன் பட்டிருக்கலாமே தவிர, ராவணனுக்கு கடன்பட நியாய மில்லை.
வைரம் ராஜகோபால்

