/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
உலகம் அமைதி பூங்காவாக மாற வேண்டுமா?
/
உலகம் அமைதி பூங்காவாக மாற வேண்டுமா?
PUBLISHED ON : டிச 04, 2022

ஐக்கிய நாடுகளின் சுற்றுச் சூழல் செயல்பாட்டு இயக்கம், (யு.என்.இ.எப்., - யுனைடெட் நேஷன்ஸ் என்வையர்மென்ட் புரோகிராம்) ஆண்டுதோறும், நவ., 6ம் தேதியை, சர்வதேச போர் மற்றும் ஆயுத மோதல்களின் சுற்றுச்சூழல் சுரண்டலை தடுக்கும் தினமாக கொண்டாடி வருகிறது.
காலம் காலமாக மனிதனுக்கு நிலம், இயற்கையின் மீது உள்ள ஆதிக்கமும், மதம் மற்றும் அரசியல் சார்ந்த காழ்ப்புணர்ச்சியுமே, போருக்கு வழிவகுக்கின்றன.
கடந்த, 60 ஆண்டுகளாக, 40 சதவீத போர்கள் இயற்கை வளங்களை சுரண்டவும், நீர், தங்கம், வைரம் மற்றும் எண்ணெய் வளங்களை தன்வசமாக்கவுமே நடைபெறுவதாக, புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
கடந்த, 1945ல் நடந்த, இரண்டாம் உலகப்போரின் போது, ஜப்பான் நாடு, மிகப்பெரிய அழிவை சந்தித்தது. அணு குண்டுகள் வீசப்பட்ட நான்கு மாதங்களுக்குள் ஹிரோஷிமாவில், 1.70 லட்சம் மக்களும், நாகசாகியில், 80 ஆயிரம் மக்களும் உயிரிழந்தனர். 20 சதவீதம் பேர் கதிர்வீச்சாலும், 30 சதவீதம் பேர் தீக்காயங்களாலும் இறந்தனர்.
தற்போது நடந்து கொண்டிருக்கும் உக்ரைன் -- ரஷ்ய போரின் ஆரம்பத்தில், நிறைய கட்டடங்கள் அழிக்கப்பட்டன. அதன்பின், ராணுவ தளவாடங்கள் காட்டுப் பகுதிக்கு மாறியதும், மண் வளம் மற்றும் பயிர் உற்பத்தி அழிக்கப்பட்டன.
ரஷ்ய படைகள், தங்கள் தளவாடங்களை அமைக்கவும், சமைக்கவும், எரிக்கவும் அதிகப்படியான காட்டு மரங்களை அழித்து விட்டன.
போரால் ஏற்பட்ட தீ மற்றும் வெப்பத்தால், உக்ரைன் நாட்டு காடுகள் தீப்பற்றி எரிகின்றன. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கார்பன் - டை - ஆக்ஸைடு அதிக அளவில் காற்றை மாசடைய செய்துள்ளது.
ரசாயன குண்டு வீச்சால் காற்று மாசு, நீர்நிலைகள் மாசு மிகவும் அபாய கட்டத்தை எட்டியுள்ளது. 92.4 சதவீதம், இயற்கை விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, செயற்கைக்கோள் புகைப்படங்கள் காட்டுகின்றன.
இப்போது உக்ரைனில், 80 சதவீத மக்கள், மின்சாரம் மற்றும் நீர் பற்றாக்குறையால் அவதிப்பட்டு வருகின்றனர். வெடிமருந்தில் உள்ள ரசாயன பொருட்கள், இன்னும் வெடிக்காத வெடிகுண்டுகள் மற்றும் போரின் போது விழுந்த ஏவுகணைகள், மரம், புல், நீர்நிலைகள் மற்றும் பாலங்களில் அமைந்த இரும்பு கட்டுமானத்தின் அமிலத்தன்மையை மாற்றியுள்ளது.
உக்ரைன் கடற்பரப்பிலும் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி, எண்ணெய் சேகரிப்பு நிலையங்கள் தகர்க்கப்பட்டதால், கடல்வாழ் உயிரினங்கள், கடல்வாழ் தாவரங்கள் மிகவும் அழிவுக்கு உள்ளாகி இருக்கின்றன.
புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ஆயுதங்களில் இருந்து, ஜின்க், நிக்கல், பேரியம், மாங்கனீசு, காப்பர், ஆண்டிமணி மற்றும் யுரேனியம் கதிர்வீச்சுகள் வெளியாகின்றன. இவை, மனிதனுக்கு சுவாச கோளாறுகள், நரம்பு மண்டல கோளாறுகள் ஏற்பட்டு புற்றுநோய் மற்றும் சிறுநீரக கோளாறுகளையும் ஏற்படுத்துகின்றன.
'போர் முடிந்தாலும், உக்ரைனின் பழைய இயற்கை சூழலை மீட்டெடுப்பது மிகவும் சவாலாக இருக்கும்...' என்று கூறுகின்றனர், இயற்கை ஆர்வலர்கள்.
எரிபொருள், அணுமின், நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், கடந்த ஏப்ரல் முதல், ஜூன் வரை, மிகவும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. அதிகப்படியான தொழிற்சாலைகள் நாசமாக்கப்பட்டு விட்டன.
உடைந்த சாக்கடை குழாய்கள், எண்ணெய் குழாய்கள் கசிந்து, நிலங்களிலும், நீர்நிலைகளிலும் கலந்து கொண்டிருப்பதால், மண் விஷத்தன்மையை அடைந்து விட்டது.
போரின் போது ஏற்பட்ட கடல் மாசால் உக்ரைன், துருக்கி, ருமேனியா மற்றும் பல்கேரியா கடல் பகுதிகளில், டால்பின் மீன் இனம் ஆயிரக்கணக்கில் செத்து மடிந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வுலகமும், இயற்கை வளங்களும், அனைவருக்கும் சொந்தமானது. அதை பேணிக்காப்பது ஒவ்வொரு மனிதனின் தலையாய கடமை.
உலகம் அமைதிப் பூங்காவாக மாற, போரால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி அடுத்த தலைமுறைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இல்லையெனில், இவ்வுலகம் இன்னும் பல அழிவுகளை சந்திக்க நேரிடும்.
பா. கவுசல்யா