
''ஏய் கனகு... இங்க வந்து கொஞ்ச நேரம் உட்காருடி. கடவுள் உனக்கு காலைக் கொடுத்தானா இல்ல மறந்து போயி சக்கரத்தைக் கட்டி விட்டானா...'' என்ற பர்வதம்மாளின் அன்பிற்கு, அடிபணிந்தவளாய் துவைத்துக் கொண்டிருந்த துணிகளை அப்படியே வைத்து விட்டு அவள் அருகே வந்தாள் கனகு.
''ஏன் மாமி அப்படி கேக்குறீக...'' என்றாள்.
''பின்ன என்னடி... சதா எந்நேரமும் ஓடி ஓடி உழைச்சுக்கிட்டேயிருக்க. இந்தா... இந்த பால்கோவாவை கொஞ்சம் வாயில போட்டுக்க. எனக்கு பிடிக்குமேன்னு உங்க மாமா வாங்கிண்டு வந்தார்,'' என்று பால்கோவா கவரை நீட்டினாள்.
''மாமி... செய்யிற வேலைய கஷ்டம்ன்னு நினைச்சா தான் அலுப்புத் தோணும். இன்னைக்கு நாங்க வயிறார கஞ்சி குடிக்கிறோம்ன்னா அதுக்கு காரணம் நீங்க. பிளஸ் 2 முடித்த என் மகளை, 'படிக்குற புள்ளய வீட்டு வேலைக்கு கூட்டிட்டு வராத... அவ நல்லா படிக்கட்டும்'ன்னு அவளை காலேஜ்ல சேர்த்து படிக்க வைக்குற உங்கள, என் குல சாமியா நினைச்சுட்டு இருக்கேன்,'' என்று சொல்லும் போதே அவள் கண்களில், கண்ணீர் அருவி போல கொட்டியது.
''அழாதடி கனகு... நான் என்ன பெரிசா செய்துட்டேன்... மனுஷனா பிறந்தா மத்தவங்களுக்கு நல்லது செய்யணும். ஏதோ என்னால முடிஞ்சது,'' என்று கூறிக் கொண்டிருக்கையில், பத்ரகாளியாய் வந்து நின்றாள் பர்வதத்தின் மருமகள்.
''நீங்க செய்றது உங்களுக்கே நல்லாயிருக்கா... அவபாட்டுக்கு, சிவனேன்னு வேலை பாக்குறவளக் கூப்பிட்டு வச்சு, வேதாந்தம் பேசிண்டு இருக்கீங்களே...'' என்றாள் கோபத்துடன்!
''இத பாரு... அவளும், உன்னைப் போல பெண் தானே... ஏதோ குடும்ப கஷ்டம்ன்னு வர்றா. அதுக்காக குருவி தலையில பனங்காயை வைக்கிறத போல, கூடுதல் சுமைய கொடுக்காத. அளவுக்கு மீறி பாரம் ஏற்றினால், வண்டி மாடு கூட சுமை தாங்க முடியாமல் படுத்துடும்,'' என்றாள் பர்வதம்மாள்.
வேலைக்காரிக்கு மாமியார் சாதகமாக பேசியதால், கோபமடைந்தவள், ''இதென்ன கிரகமாயிருக்கு! காசுக்குத் தானே வேலைக்கு வர்றா, இவ இல்லாட்டி இன்னொருத்தி,'' என்றாள் திமிராக!
''அம்மா... மாமி மேல எந்த தப்பும் இல்ல; எனக்காக நீங்க சண்டை போட வேணாம்,'' என்று கையெடுத்து கும்பிட்டபடியே, துணிகளை துவைக்கப் போனாள் கனகு.
அடுப்பில் உலை கொதித்துக் கொண்டிருக்க, அரிசியை களைந்து கொண்டிருந்தாள் கனகு. அப்போது, வீட்டிற்குள் நுழைந்த பாரதி, காலேஜ் பேக்கை ஒரு மூலையில் தூக்கிப் போட்டாள். முகம் வாடியிருந்தது.
''என்னடா... ஏன் ஒரு மாதிரியிருக்க, உடம்புக்கு முடியலயா?'' என்று கேட்டாள் கனகு.
எதுவும் பேசாமல், 'உர்'ரென அமர்ந்திருந்தாள் பாரதி.
''காலேஜ்ல யார் கூடயாவது சண்டை போட்டியா... ரோட்டில் எவனும் வம்பிழுத்தானா?''
''அப்படி எவனாவது என்னை கிண்டல் செய்திருந்தா, அவன் பல்லை உடைச்சு, கையில் கொடுத்துட்டு வந்திருப்பேன்.''
''அப்புறம் என்ன தான் நடந்தது...'' வேலைப் பளு உந்த கோபமாக கேட்டாள்.
''அடுத்த மாசம் காலேஜ்ல, சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப் போறோம். அதுக்கு கண்டிப்பாக எல்லாரும் பட்டுச் சேலை தான் கட்டணும்ன்னு சொல்லிட்டாங்க. அதான் மனசு சரியில்லம்மா,'' கனகுவின் மடியில் படுத்துக் கொண்டாள் பாரதி.
''அஞ்சு, பத்துனா அக்கம் பக்கத்துல கேட்கலாம். ஆயிரம், ரெண்டாயிரத்துக்கு நான் எங்க போவேன்...'' என்றாள் கவலையுடன்!
''சரி விடும்மா... கவலைப்படாதே! அன்னைக்கு காலேஜுக்கு லீவு போட்டுடறேன்,'' என்றாள். மகள் அவ்வாறு கூறியது கனகுவை வேதனைப்படுத்தியது.
''லீவு போட வேணாம்... என்னால உனக்கு புதுப்புடவை வாங்கித் தர முடியாட்டாலும், மாமிகிட்ட இரவல் புடவை வாங்கித் தர்றேன்,'' என்றாள் கனகு. அம்மாவின் பேச்சு பாரதிக்கு நிம்மதியைக் கொடுத்தது.
இருவரும் சாப்பிட்டு முடித்து, தூங்கத் தயாராகினர். அச்சமயம் கதவு தட்டபட்டும் சத்தம் கேட்டு, எழுந்து சென்று கதவைத் திறந்தாள் கனகு.
''ஏண்டி... எம்பூட்டு நேரமா கதவைத் தட்டிக்கினு இருக்கேன்; உள்ள என்னடி செய்திட்டு இருக்க...'' என்றான் கனகுவின் கணவன் வேலுச்சாமி.
''யோவ் உனக்கு கொஞ்சமாச்சும் அறிவிருக்கா... உழைச்ச காசை வீட்டுக்கு தராம, குடிச்சுட்டு வந்து, ராத்திரி நேரத்துல பேய் மாதிரி கத்திகினு இருக்கே...''
''கட்டின புருஷன பிசாசுன்னு சொல்றீயே... அறிவிருக்காடி உனக்கு...'' என்று எகிறிக் குதித்தான்.
''விடியட்டும்; குடிச்சுட்டு வந்ததுக்கு, உனக்கு, 'கட்-அவுட்' வச்சு விழா நடத்துறேன்; இப்போ படு,'' என்று திண்ணையில் அவனை படுக்கச் சொல்லி, போர்வையால் போர்த்தி விட்டாள். சில கெட்ட வார்த்தைகளை பரிசாகக் கொடுத்து விட்டு, முனங்கியபடியே கண்ணை மூடினான்.
காலையில், கனகு, வாசலில் சாணமிட வந்த பொழுது, வேலுச்சாமி அங்கில்லை.
வேலைக்கு கிளம்பிய கனகு, சாலையில் ஜவுளிக் கடைகளை வேடிக்கை பார்த்தபடியே நடந்தாள். சாதாரண சேலைகள் கூட, அவள் கண்ணுக்கு பட்டுப் புடவையாக தெரிந்தது.
பெரிய கேட்டைத் திறந்து, உள்ளே நுழைந்தவள், அடுத்தநொடி பரபரப்பாக இயங்க ஆரம்பித்தாள். இடையிடையே கண்கள் பர்வதம்மாளைத் தேடியது. ஆனால், வீடு முழுவதும் தேடியும் பர்வதம்மாளைக் காணவில்லை. அதனால், பர்வதம்மாள் மருமகளிடம், ''மாமி கோவிலுக்கு போயிருக்காங்களாம்மா?'' என்று கேட்டாள்.
''அதா... அது, அவங்க மக வீட்டுக்குப் போயிருக்கு; இரண்டு மாசம் கழிச்சு தான் வரும். ஏன் அது இல்லாம வேலை பாக்க மாட்டீகளோ...'' என்றவள், 'வேலைக்காரிய தலையில தூக்கி வச்சு பேசினால் சும்மா விடுவேனா...' என்று முணுமுணுத்தாள்.
'இவளிடம் பட்டுச் சேலைக் கேட்டால், 'ஓசி வாங்கி பட்டுப்புடவ கட்டலன்னு யார் அழுதா...' என்று மனம் புண்படும்படி பேசி விடுவாள். எதற்கு இந்த வீண் முயற்சி...' என்று நினைத்தாலும், பட்டுச் சேலை நினைப்பு, கனகுவை பாடாய்ப்படுத்தியது.
மாலை, வீட்டிற்குச் செல்லாமல், குடிப்பதற்கு முன், அந்த வாரச் சம்பளத்தை வாங்கி விட வேண்டும் என நினைத்து, கணவன் வேலை பார்க்கும் மில்லுக்கு சென்றாள் கனகு. ஆனால், அவன் சம்பளப் பணத்துடன் சென்று விட்டதையும், அத்துடன், அவனுக்கு புதிதாக பெண் சிநேகிதம் இருப்பதையும், வேலுச்சாமியின் நண்பன் கூற, சேலை வாங்க காசு கேட்க வந்தவளுக்கு, ஆத்திரமும், அதிர்ச்சியும் தான் கிடைத்தது.
வீட்டிற்கு வந்தவள், சாமி படத்திற்கு முன் இருந்த மண் உண்டியலை தரையில் போட்டு, இரண்டாக உடைத்தாள். மூன்று ஆண்டுகள் சேமிப்பு, 2,000 ரூபாய் இருந்தது. மகள் சந்தோஷத்திற்கு முன், சாமி குத்தம் பெரிதாகப்படவில்லை.
நகரின் பெரிய கடை ஒன்றில், சிகப்பு கலர் பார்டர் வைத்த மஞ்சள் நிறப் பட்டுப் புடவையை வாங்கினாள். பட்டுச் சேலை கிடைத்ததும், இறக்கை இல்லாமல் பறந்தாள் பாரதி. அந்தத் தெருவில் இருக்கும் அனைத்துப் பெண்களிடமும் காட்டி மகிழ்ந்தாள். அம்மாவின் கன்னங்களை முத்தமிட்டாள்.
அன்றிரவு வேலுச்சாமி வரவில்லை. நாட்கள் உருண்டோடியது. தாமதமாக வரும் அமாவாசை நிலவு போல, வேலுச்சாமியும் மனம் திருந்தி வந்து விடுவான் என்ற நம்பிக்கை பொய்த்துப் போனது.
அன்று வெள்ளிக்கிழமை; சுட்டெரிக்கும் சூரியன் சாதுவாக விடிந்தது.
''ஏ புள்ள கனகு... நைட்டு உன் புருஷன் வீட்டுக்கு வந்தானா?'' என்று கேட்டாள் எதிர் வீட்டுப் பெண்.
உதடுகளைப் பிதுக்கி,''அந்த ஆளு வீட்டுக்கு வந்து ரொம்ப நாளாச்சு,'' என்றாள் கனகு.
''அந்தக் கொடுமைய என் வாயால எப்படி சொல்வேன்; என்னைக்கும் இல்லாத திருநாளா, நேத்து என் புருஷன் சினிமாவுக்கு கூட்டிட்டுப் போனான். அங்க உன் புருஷன் வேலுச்சாமி இன்னொருத்தி கூட கூத்தடிச்சத என் கண்ணால பாத்தேன். சினிமாக் கொட்டகையில படத்தை யாரு பாத்தா. உன் புருஷனைத் தான் எல்லாரும் பார்த்தாங்க. இப்படியே நீ கண்டுக்காம விட்டீனா, நாளைக்கு உன் மகளுக்கு சபையில நிற்கக்கூட வர மாட்டான். ஏதோ எனக்குத் தெரிஞ்சத சொல்லிட்டேன்,'' என்றாள்.
இதைக் கேட்டதும், கனகுவின் உடம்பு நெருப்பில்லாமல் எரியத் துவங்கியது. சேலையைத் தூக்கி சொருகினாள். விறுவிறுவென நடந்து சென்று, நான்கு தெரு தள்ளியிருந்த வேலுச்சாமி தங்கியிருந்த வீட்டின் கதவை உடைத்தாள். போதையில் பாதியும், உறக்கத்தில் மீதியுமாக படுத்திருந்த கணவனின் பிடரி மயிரைப் பற்றி வெளியே இழுத்து வந்தாள். கனகு முறைத்துப் பார்த்ததில், அவன் உடன் இருந்த பெண் ஓடி விட்டாள்.
''குடிகாரனா இருந்தாலும் ஒழுக்கமாக வாழ்றீயேன்னு சந்தோஷப்பட்டேன். உன்னை மாதிரி நானும், இன்னொரு ஆம்பிளைய தேடிக்கிட்டா நீ சும்மாயிருப்பியா... உனக்கு ஒரு சட்டம், எனக்கொரு சட்டமா...'' என்று கொந்தளித்தாள்.
''ஆமாம்... எப்பவும் அழுக்குச் சேலையோட, வியர்வை வாடையோட இருந்தா, உன் கூட எப்படி குடும்பம் நடத்துறது... ஆம்பளைகளுக்கு, உடம்புல தெம்பிருக்கும் வரை ஆசை இருக்கும்,'' என்றான்.
''சரிய்யா... நீ சொல்ற மாதிரி சீவி, சிங்காரிச்சிருக்கேன். இருட்டறதுக்குள்ள வீட்டுக்கு வந்துடு; இல்லனா, உசிரோட உன்ன கொளுத்திடுவேன். நம் பிள்ளைக்காகத் தான், உங்க ரெண்டு பேரையும் சும்மா விட்டுட்டுப் போறேன்; ஜாக்கிரதை,'' என்று எச்சரித்து விட்டு, பர்வதம்மாள் வீட்டிற்கு சென்றாள்.
வெள்ளிக்கிழமை என்பதால் வீடு வாசல் துடைத்து, துணிமணிகளை அலசி காய வைத்து, மடித்து வைத்தாள். ஒயாது உழைக்கும் தேனீக்கு வருத்தப்பட நேரமிருக்காது என்பதைப் போல, கனகுவும், வேலைகளில் மூழ்கியதில், காலையில் நடந்த சண்டையை மறந்து போனாள்.
மாலை, 6:00 மணி -—
வேலை முடிந்து வீட்டிற்கு கிளம்பியவளிடம், ''கனகு... சொல்ல மறந்துட்டேன்... இன்னைக்கு வரலட்சுமி பூஜை; உறவுக்காரப் பெண்களை வரச் சொல்லியிருக்கேன். நான் மட்டும் தனியா சமாளிக்க முடியாது. நீ கூட இருந்தால் ஒத்தாசையா இருக்கும். பூஜை முடிஞ்சதும் கிளம்பிடு,'' என்றாள் பர்வதம்மாளின் மருமகள்.
''அம்மா... என் மக கிட்ட சொல்லாம வந்துட்டேன்; அவ பசி பொறுக்க மாட்டா. வீடு வரைக்கும் போயி அவளையும் கூட்டிட்டு வரட்டுமா?''என்று கேட்டாள்.
''இன்னைக்கு ஒரு நாளைக்குத் தானே... போகும்போது ஒரு கேரியரில் சாதம் எடுத்துட்டுப் போ. சுமங்கலி பூஜை செய்தா, தாலி பாக்கியம் நிலைக்கும்,'' என்று ஆசை வார்த்தைகளைக் கூறினாள்.
சிறிது நேரத்தில், புற்றீசல் போல பெண்கள் கூட்டம் வர துவங்கியது. வந்த பெண்கள் கழுத்தில் தொங்கிய தங்க நகைகளைப் பார்த்த கனகிற்கு, கழுத்து வலி வந்துவிடும் போலிருந்தது. தன் மகளைப் படிக்க வைத்து, ஆபீசர் வேலைக்கு அனுப்ப வேண்டும் என்ற குறிக்கோளில் இருப்பதால், கனகிற்கு, தங்கத்தின் மேல் ஈடுபாடு இல்லாமல் போனது.
ஒரு வழியாக பூஜை மற்றும் விருந்து முடிந்தவுடன், பெரிய டிபன் கேரியரில் நாலு வகை கூட்டு, பொரியலுடன், அப்பளம், பாயசம் எல்லாம் எடுத்துக் கொண்டு வீட்டிற்கு பறந்தாள். இரவு, 9:00 மணிக்கே அடங்கியிருந்த தெரு, பயத்தைக் கொடுத்தது.
குடிசைக் கதவைத் திறந்து உள்ளே சென்றவள், தலைவிரி கோலமாக பாரதி ஒரு மூலையில் அமர்ந்திருக்க, ரத்த வெள்ளத்தில் வேலுச்சாமி மயங்கிக் கிடப்பதை பார்த்ததும், அப்படியே விக்கித்து நின்றாள் கனகு. சிறிது நேரம் கழித்து மெல்ல, ''பாரதி...'' என்றாள்.
அம்மாவின் குரல் கேட்டு நிமிர்ந்த பாரதியின் முகம் சிவந்து இருந்தது. பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக, தன்னை ஆளவந்தவனிடம் வீரத்தைக் காட்டியிருக்கிறாள்.
''அம்மா... குடிச்சுட்டா கட்டின பொண்டாட்டிக்கும், பெத்த பிள்ளைக்கும் வித்தியாசமில்லாம போயிடுமா... குடிபோதையில் இருக்கும் போது, சோற்றுக்கு பதில் தட்டில் வேற எதையாவது வைச்சா சாப்பிடுவாங்களா... சாப்பிடும் போது இருக்குற நிதானம், பெண்களைப் பார்க்கும் போது மட்டும் இந்த குடிகார பயலுகளுக்கு எங்கே போகுது? இதுமாதிரி ஏதோ ஒரு அப்பங்காரன் குடிபோதையில செய்யிற தவறுதான், எல்லா அப்பாக்களுக்கும் களங்கத்த ஏற்படுத்துது. எந்த பட்டுச் சேலை, என் அப்பனை தவறான எண்ணத்திற்கு தூண்டியதோ, அந்த சேலை எனக்கு தேவையில்லம்மா,'' என்று ஆவேசமாக கூறி, சேலையைக் கழற்றி, தூக்கிப் போட்டாள்.
''பாரதி... நீ படிச்சவன்னு நிரூபிச்சுட்ட. நீ வெட்டி போட்டிருப்பது சமுதாயத்திற்கு தேவை இல்லாத களைச் செடி தான்,'' என்று கூறி மகளை ஆறுதலாக அணைத்துக் கொண்டவள், ''இங்கே நடந்தது யாருக்கும் தெரிய வேணாம். இதனால, உன் வாழ்க்கை பாழாயிடும். அதனால, நீ அமைதியா இரு,'' என்று சொல்லி அவளை அமைதிப்படுத்தினாள்.
பின், குடிசைக்கு வெளியே ஓடி வந்து, ''ஐயய்யோ... எல்லாரும் ஓடி வாங்களேன்... குடி போதையில என் புருஷன் கழுத்தறுத்து சாகக் கிடக்கானே... என் புருஷனைக் காப்பாத்துங்களேன்,'' என்று கூச்சலிட, கூட்டம் கூடியது.
கும்பலில் ஒருவன், ''குடி, குடியைக் கெடுக்கும்ங்கிறது உண்மையாயிருச்சே,'' என்றான்.
''இவனைப் பாத்தாவது மத்தவன் திருந்தட்டும்,'' என்றான் மற்றொருவன்.
உண்மை செத்து, பொய் பிழைத்ததைப் போல, வேலுச்சாமியும் பிழைத்து விடுவான் என்ற நம்பிக்கையில், அவனை அள்ளிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினர் தெருவாசிகள்.
சுகன்யா நடராஜன்