தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம் - சகுந்தலா கோபிநாத்

அன்புடன் அந்தரங்கம் - சகுந்தலா கோபிநாத்

அன்புடன் அந்தரங்கம் - சகுந்தலா கோபிநாத்


PUBLISHED ON : டிச 05, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 05, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அக்காவுக்கு —

என் தம்பிக்கு, இரண்டு வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. பெரியவர்கள் பார்த்து முடிவு செய்தது தான். மத்திய அரசு துறை ஒன்றில், என் தம்பி வேலை செய்கிறான். அவன் மனைவியும், பி.காம்., படித்திருக்கிறாள். என் தம்பி சொல்லும் எந்த வார்த்தைகளையும் அவள் கேட்பதில்லை; அவள் அம்மா என்ன சொல்கிறாரோ அதைத் தான் கேட்பாள்.

திருமணம் முடிந்த இரண்டு மாதத்தில் கர்ப்பமானாள். மருத்துவரிடம் சென்று, 'செக்-அப்' செய்து, மாத்திரைகளை வாங்கி கொடுத்தான் என் தம்பி. ஆனால், அந்த பெண்ணின் அம்மா, 'நீ மாத்திரைகளை சாப்பிடாதே...' என்று கூறிவிட்டார்.

நான்காவது மாதத்தில், அந்த குழந்தை, கருவிலேயே இறந்து விட்டது. அவள் யாரிடமும் சகஜமாக பேசுவது கிடையாது; எதையும் ஞாபகம் வைத்து கொள்வதும் இல்லை. சின்ன சிரிப்பு கூட முகத்தில் வருவதில்லை.

திருமணமாகி இரண்டு வருடம் ஆகிறது. இதுவரை பக்கத்து வீட்டுக்காரர்களிடம் கூட பேசியது இல்லை. எங்களிடமும், நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு, ஓரிரு வார்த்தைகளில் தான் பதில் அளிப்பாள்.

'ஏன் பேசவில்லை?' என்று கேட்டால், 'நான் ஏதாவது தப்பாக பேசி விடுவேனோ என்று பயமாக இருக்கிறது...' என்கிறாள். பத்து ரூபாய் கொடுத்து, நான்கு முட்டை வாங்கினால், ஒரு முட்டை எவ்வளவு என்று கூட சொல்லத் தெரியாது. இவள் எப்படி பி.காம்., படித்திருப்பாள் என்று தெரியவில்லை.

ஏதாவது தீர்வு கிடைக்கும் என்று, மனநல நிபுணரிடம் அழைத்துச் சென்று காட்டினான் என் தம்பி. அவர் நான்கு மணி நேரங்கள் செலவிட்டும், இவளிடம் எந்த தெளிவும் இல்லை. டாக்டரோ, 'எட்டு வயது குழந்தைக்கு இருக்கும் மூளை வளர்ச்சி கூட, இவளுக்கு இல்லை. இவளோடு எப்படி வாழ்க்கை நடத்துவாய்? நீ  கவலைப்படாமல், தைரியமாக மறு திருமணம் செய்து கொள்...' என்று கூறி விட்டார்.

எந்த ஒரு விஷயத்திலும் ஆர்வம் இல்லை. என் தம்பியிடமாவது அன்பும், பாசமும் வைத்து, அவனை கவனித்து கொண்டால் பரவாயில்லை; அதுவும் இல்லை. என் தம்பி மிகவும் இரக்க குணமுடைய, எந்த கெட்ட பழக்கங்களும் இல்லாதவன். 'இரண்டு வருடமாக, எந்த ஒரு சந்தோஷமும் இல்லாமல், வெறும் ஜடமாகவே வாழ்கிறான். 'நான் எப்படி மூளை வளர்ச்சி குன்றிய, உணர்ச்சியற்ற, பொது அறிவு இல்லாத, யாரிடமும் பழகாத, கவனித்து கொள்ளாத, பெண்ணுடன் வாழ்க்கை நடத்துவது...' என்று, மிகவும் கவலைப்படுகிறான். என் தம்பிக்கு ஒரு நல்ல வழியை காட்டுமாறு மிகவும் பணிவன்புடன் வேண்டுகிறேன்.

இப்படிக்கு, உங்களுடைய முடிவையும், கருத்தையும் விரைவில் எதிர்பார்க்கும், —  அன்பு சகோதரர்.

அன்புள்ள சகோதரருக்கு —

உங்களது கடிதம் கிடைத்தது. தம்பியின் சார்பாக நீங்கள் எழுதியிருக்கிறீர்கள்.

உங்கள் கடித சுருக்கத்தை பார்ப்போம். மத்திய அரசு பணியிலிருக்கும் உங்கள் தம்பிக்கு, இரண்டு வருடங்களுக்கு முன் திருமணம் செய்து வைத்திருக்கிறீர்கள். இளங்கலை வணிகவியல் படித்த அவள், மூளை வளர்ச்சி குன்றியவளாகவும், அம்மாவின் பேச்சை மட்டும் கேட்பவளாகவும் இருக்கிறாள். என்ன செய்யலாம் என கேட்டிருக்கிறீர்கள்.

கடிதத்தை, ஏறக்குறைய ஐம்பது தடவை வாசித்து, கீழ்கண்ட விஷயங்களை அவதானித்திருக்கிறேன்.

1. நீங்கள், உங்கள் தம்பியை விட பத்து வயது பெரியவர். உங்களுக்கு வயது 42; தம்பிக்கு

32. நீங்கள், உங்களது மனைவியிடம் கருத்து வேறுபாடு காரணமாக, தனித்து வாழ்கிறீர்கள் அல்லது தம்பி குடும்பத்துடன் சேர்ந்து வாழ்கிறீர்கள். தம்பியின் குடும்பத்தை, உங்களுக்கே தெரியாமல், 'டாமினேட்' செய்கிறீர்கள். எல்லாமே உங்கள் விருப்பப்படி நடக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள். தம்பிக்கு பிரச்னை என்று நீங்கள் தான் எழுதியிருக்கிறீர்கள்; தம்பி எழுதவில்லை. அடிபட்டவர்தான் வலியால் கூவ வேண்டும்; உடன் செல்பவர் அல்ல.

2. தம்பி மனைவியின் அம்மா மீது, உங்களுக்கு ஏனோ கோபம். அம்மா - மகள் உறவை தவறாக சித்தரிக்கிறீர்கள்.

3. தம்பியின் மனைவி கர்ப்பமாகிறாள். மருத்துவர் பார்த்துவிட்டு, மாத்திரை எழுதித் தருகிறார். அம்மாவின் சொல்லைக் கேட்டு, தம்பி மனைவி மாத்திரை சாப்பிடாமல் இருக்கிறாள். நான்கு மாத கரு இறந்து விடுகிறது. நீங்கள் பார்த்த டாக்டர், எம்.பி.பி.எஸ்., ஓ.ஜி., படித்தவரா? அவர் என்ன மாத்திரை எழுதிக் கொடுத்தார்? என்ன காரணத்துக்காக, அந்த மாத்திரையை மகள் சாப்பிட வேண்டாம் என அம்மாக்காரி கூறினார்? மாத்திரை சாப்பிடாததால், கர்ப்பத்தில் இருக்கும் நான்கு மாத குழந்தை இறந்தது என, எந்த டாக்டர் சான்றுரைத்தார்?

4. தம்பி மனைவி, யாரிடமும் சகஜமாக பேசுவது கிடையாது; எதையும் ஞாபகம் வைத்துக் கொள்வதில்லை; ஜோக்குக்கு சிரிப்பதில்லை. பக்கத்து வீட்டுக்காரர்களுடன் பேசுவது இல்லை. வீண் வெட்டி அரட்டை அடிக்க, தம்பி மனைவி விரும்பமில்லை. குற்றம், குறை கண்டுபிடித்து, நீங்களோ, மாப்பிள்ளை குடும்பத்தாரோ கூறியதால், தம்பியின் மனைவி அதிகம் பேச பயப்படுகிறார். நாலு முட்டை பத்து ரூபாய் என்றால், ஒரு முட்டை 2.50 ரூபாய் என்று,  பி.காம்., படித்த உங்கள் தம்பி மனைவிக்கு தெரியும். மக்கு மாதிரி நடிக்கிறார் அல்லது அவர் நடத்தையை மிகைப்படுத்தி கூறுகிறீர்கள்.

5. மனநல நிபுணரிடம் தம்பி மனைவியை அழைத்துச் சென்றது, நான்கு மணிநேரம் தொடர்ந்து தம்பி மனைவி ஒத்துழைக்க மறுத்தது, மருத்துவர், தம்பி மனைவிக்கு எட்டு வயது மூளை வளர்ச்சி தான் இருக்கிறது என்றது, மருத்துவரே, ஒரு கல்யாணமாலை தரகர் போல மறுமணம் செய்து கொள்ள கூறியது அனைத்துமே, நீங்கள் இட்டுக்கட்டிய கட்டுக்கதை.

6. உங்களது கடிதத்தில், முழுமையான விவரங்கள் இல்லை. உங்களைப் பற்றி, உங்களது குடும்பம் பற்றி, உங்கள் பெற்றோர் பற்றி, தம்பி மாமனார் பற்றி தகவல்கள் இல்லை. கடிதத்தின் முழுநோக்கமும், தம்பியின் மனைவியை குணக்கொலை பண்ணுவதே.

7. தம்பி சொல்வதாக கூறும் எந்த ஸ்டேட்மென்ட்டுகளும், தம்பி சொன்னதில்லை. தம்பி நினைப்பதாக நீங்கள்

யூகிக்கிறீர்கள் அல்லது தம்பி சொன்னதாக நீங்கள் இட்டுக்கட்டி சொல்கிறீர்கள். தம்பியின் இதயத்தைத் தொட்டு பார்த்தால், மனைவியின் மீது அவனுக்கு இருக்கும் காதல் அப்பட்டமாக தெரியும்.

இனி தீர்வை யோசிப்போம்.

தம்பியின் வாழ்க்கையை அண்ணனாக நீங்களும், மகளின் வாழ்க்கையை, தம்பி மனைவியின் அம்மாவும் கெடுக்கிறீர்கள் என நினைக்கிறேன். 32 வயது ஆணுக்கு, தன் வாழ்க்கையை சுயமாய் சிந்தித்து முடிவெடுக்க தெரியும். அவருக்கு பதில், நீங்கள் கடிதம் எழுதியிருக்கிறீர்களே... உங்கள் தம்பி மூளை வளர்ச்சி இல்லாதவரா? நோயாளி தான் மாத்திரை உட்கொள்ள வேண்டும்.

உங்களது கடிதத்துடன், உங்கள் தம்பி மனைவிக்கு, என்ன மாத்திரையை, மருத்துவர் பரிந்துரைத்தார். மனநல நிபுணர் தன் கவனிப்பில் என்ன எழுதி கொடுத்தார் என்பதற்கான மருத்துவ ஆதாரங்கள் இணைக்கப்படவில்லை. முழுமையான தகவல்கள் இல்லாத உங்களின் கடிதத்தை நம்பி, உங்கள் தம்பி மனைவியை, மூளை வளர்ச்சி குன்றியவள் எனக் கூறி விட மாட்டேன். நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையாய் இருந்தால், அடுத்த இரு ஆண்டுகளுக்கு, தம்பி குடும்பத்தை விட்டு விலகி நில்லுங்கள்... மனைவி வேண்டுமா, வேண்டாமா என தம்பி முடிவெடுக்கட்டும். தம்பியின் திருமண வாழ்வு சீராக, இறைவனை பிரார்த்திக்கிறேன். — என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us