தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தங்கம்!

அன்புடன் அந்தங்கம்!

அன்புடன் அந்தங்கம்!


PUBLISHED ON : பிப் 11, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 11, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள சகோதரிக்கு —

என் வயது, 43; கணவர் வயது, 48. கணவருக்கு அப்பா இல்லை; அம்மா மட்டும் தான். மாமியார், எங்களுடன் தான் தங்கியுள்ளார். தம்பியுடன் வசிக்கின்றனர், பெற்றோர். கடந்த, 20 ஆண்டுகளாக வெளிநாட்டில் பணிபுரிந்து, தற்சமயம் ஊர் திரும்பி, சின்னதாக ஒரு நிறுவனத்தை துவங்கி, நடத்தி வருகிறார், கணவர்.

எனக்கு ஒரு மகன், வயது, 23; கல்லுாரியில், பி.இ., இறுதி ஆண்டு படிக்கிறான். ஒரு மகள், வயது, 18; பி.காம்., படிக்கிறாள்.

என் குழந்தைகளுக்கு, சிறு வயதிலேயே தந்தை பாசம் அவ்வளவாக கிடைக்கவில்லை. அதற்காக நிறைய ஏங்கியுள்ளான், என் மகன். அப்போதெல்லாம் எதையெதையோ கூறி, சமாதானப்படுத்தி உள்ளேன். அப்பா பாசம் கிடைக்காத ஏக்கம், அவன் மனதில் ஆழப் பதிந்துள்ளது; அவர் மீது வெறுப்பை வளர்த்து கொண்டுள்ளான். இப்போதும், தன் தந்தையுடன் எதுவுமே பேச மாட்டான். ஏதாவது கேட்க வேண்டுமென்றால், என் மூலமாகத் தான் சொல்வான். அவர் இருக்கும் இடத்தில் இருக்க மாட்டான்; அவர் வீட்டில் இருந்தால், வெளியில் சென்று, அவர் இல்லாத போது திரும்புவான். அவனை எப்படி சமாதானப்படுத்துவது என தெரியவில்லை.

நிலைமை இப்படி இருக்க, என் மகள், தான் காதலிப்பதாகவும், அவனை தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறுகிறாள். நல்ல படிப்பு, வேலை, நல்ல குடும்பமாக இருந்தால் திருமணம் செய்து வைக்கலாம் என்று கூறினால் மறுக்கிறார், கணவர். 'காதல் கத்தரிக்காய் எல்லாம் ஒத்து வராது...' என்கிறார். பிள்ளைகளை நான் சரியாக வளர்க்கவில்லை என்று வசைபாடுகிறார். மும்முனை தாக்குதலில் நிலைகுலைந்து குழம்பி போயுள்ளேன்.

என் பெற்றோருக்கும் இந்த சிக்கலை எப்படி தீர்ப்பது என்று புரியவில்லை. நீங்கள் தான் நல்ல தீர்வை சொல்ல வேண்டும்.

இப்படிக்கு,

உங்கள் சகோதரி.


அன்பு சகோதரிக்கு —

உங்கள் மகன் பிறந்ததிலிருந்து அவனுக்கு, 20 வயதாகும் வரை, அவனின் தந்தை வெளிநாட்டில் பணிபுரிந்திருக்கிறார். மகனை கொஞ்சவோ, உப்பு மூட்டை துாக்கவோ, கழுத்தில் இருகால் கோர்த்து உட்கார வைத்து, ஊரை வலம் வரவோ, இரு கன்னங்களில் போதும் போதும் என்கிற அளவிற்கு முத்தமிடவோ, காது குளிர பாச வார்த்தை மிழற்றவோ உடன் இல்லை. தந்தையின் கடமையை தொலைபேசி மூலம்தான் ஆற்றியிருக்கிறார். அந்த கோபத்தை தான் உங்கள் மகன், தன் தந்தை மீது காட்டுகிறான்.

இன்னொரு விஞ்ஞான ரீதியான உண்மை என்ன தெரியுமா... என்னதான் டன் கணக்கில் அன்பை கொட்டி ஒரு தந்தை, தன் மகனை வளர்த்தாலும், அம்மாவுடன் தான் நெருக்கமாக இருப்பான், மகன். தாய்மைக்கே முன்னுதாரணமாய் விளங்கும் தாயாக இருந்தாலும், தந்தையுடன் தான் நெருக்கமாக இருப்பாள், மகள். இது, ஒரு வகை எதிர் பாலின ஈர்ப்பு!

ஒரு மகன், தந்தையிடம் எதனை கேட்க வேண்டும் என்றாலும் செய்தி தொடர்பாளர் தாயின் மூலம்தான் கேட்பான். என்னதான் ஒரு மகன், தந்தையிடமிருந்து விலகி விலகி போனாலும், அவனின் மனதில் வெகு ஆழத்தில் தந்தையின் மீதான அன்பும், மதிப்பும் ஒளிந்திருக்கவே செய்யும். உங்கள் மகனின் நடத்தையை கண்டு பயப்பட தேவையில்லை. அவனை யாரும் சமாதானப்படுத்த வேண்டாம். உரிய காலத்தில் தந்தையின் மீதான மரியாதையை, அன்பை ஊரறிய வெளிப்படுத்துவான்.

உங்கள் மகளின் காதல் இயற்கையானதே. நீங்கள், அவளை எந்த முறையில் வளர்த்திருந்தாலும் அவள் காதலில் ஈடுபடவே செய்வாள். ஆனால், 18 வயது காதலுக்கு பொருத்தமான வயதில்லை. பெரும்பாலும், இந்த வயதில் இன கவர்ச்சி தான் காதலாய் தோன்றும். மகள் காதலிக்கும் பையன் உடன் படிக்கும் மாணவனா அல்லது எங்காவது வேலை பார்க்கிறானா என்பதை ஆராயுங்கள். அத்துடன், என்ன நோக்கத்திற்காக உங்கள் மகளை காதலிக்கிறான் என்பதையும் அலசுங்கள். அவளின் காதல் நியாயமானது, உண்மையானது, ஆயுளுக்கும் நீடிக்கக் கூடியது எனத் தோன்றினால், இருவரையும், நான்கு ஆண்டுகள் காத்திருக்க சொல்லுங்கள். எதையும் எடுத்தேன், கவிழ்த்தேன் என செயல்படாமல், நிதானமாக, தெளிவாக செயல்பட்டால், குடும்பத்தில் அமைதி நிலவும்; குடும்ப உறவுகள் சிதறாது கட்டுண்டு நிற்கும்.

தகப்பனின் மீது அன்பு செலுத்தாதே என்று மகனுக்கும், 18 வயதிலேயே யாரையாவது காதலி என மகளுக்கும் எந்த ஒரு தாயும் சொல்லி வளர்ப்பதில்லை. பள்ளி, தெரு தோழர்கள், வீட்டு சூழல், தந்தையின் பணி, வீட்டு பொருளாதார நிலை, மரபியல் குணாதிசயங்கள், உண்ணும் உணவின் தன்மை, அகபுற சுகாதாரம், சுய சுத்தம் எல்லாமே தான் குழந்தை வளர்ப்பை தீர்மானிக்கும் காரணிகள். எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு மனிதனின் கர்மாவே மனிதனின் வாழ்க்கையை முடிவு செய்கிறது.

தாத்தா - பாட்டியை விட்டு உன் பிள்ளைகளுக்கு அறிவுரை கூறச் சொல். ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி பொறுப்பை தட்டிக்கழிக்காமல், இருவரும் தனியே அமர்ந்து, பிரச்னைகளை பேசி, தீர்வு காணுங்கள். குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலுக்கு சென்று வழிபட்டு, மனம் விட்டுப் பேசுங்கள். ஆக்கப்பூர்வமான பேச்சு, அறிவுப்பூர்வமான தீர்வுகளை பரிசளிக்கும்.

அமைதிப் படுங்கள் சகோதரி... எல்லாம் நல்லதே நடக்கும். உங்கள் மகன் படிப்பை முடித்து நல்ல வேலைக்கு போவான்; நல்ல வரன் பார்த்து முடிப்பீர்கள். உங்கள் மகள், தன் காதலை மறுபரிசீலனை செய்யவோ, சில பல ஆண்டுகள் காதலை தள்ளிப் போடவோ வாய்ப்பிருக்கிறது. தென்றல் வீசும் நந்தவனம் ஆகட்டும் உங்கள் குடும்பம்!

என்றென்றும் தாய்மையுடன்,

சகுந்தலா கோபிநாத்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us