sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

மரகத தீவில் ஆறு நாட்கள் (3)

/

மரகத தீவில் ஆறு நாட்கள் (3)

மரகத தீவில் ஆறு நாட்கள் (3)

மரகத தீவில் ஆறு நாட்கள் (3)


PUBLISHED ON : டிச 23, 2018

Google News

PUBLISHED ON : டிச 23, 2018


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இலங்கை, புத்த மதத்தை பின்பற்றும் நாடானதால், பார்க்கும் இடமெல்லாம் புத்தர் சிலைகளைக் காண முடிகிறது.

தமிழர் பெரும்பான்மையாக வாழும் பகுதிகள் தவிர்த்து, பிற பகுதிகளில், இந்து கோவில்களை காண முடியவில்லை. மலை பகுதி மற்றும் சாலையோரங்கள், முக்கிய சந்திப்புகளிலும் புத்தர், சிலையாக, அமைதியாக நிற்கிறார் அல்லது வீற்றிருக்கிறார். அது போலவே, மசூதிகளையும், சர்ச்களையும் அதிகம் காண முடியவில்லை.

பெரும்பாலான பெண்கள், கால் முட்டி வரைக்கும், 'ஸ்கர்ட்' அணிந்து, மேலே, டி - ஷர்ட் அல்லது ஆண்கள் அணிவது போன்ற சட்டையை அணிந்துள்ளனர். புத்தர் கோவிலுக்கு செல்லும் போது, துாய வெண்மை நிற ஆடைகளையே அணிகின்றனர்; துறவிகள், காவி நிற ஆடைகளை அணிந்துள்ளனர்.

அரசு அலுவலகங்கள், பெரும்பாலும், காலை, 8:00 மணிக்கு துவங்கி விடுகிறது. ஒவ்வொரு அலுவலகத்திலும் புத்தர் சிலை அல்லது புத்தர் படம் இருக்கிறது. காலை, 8:30 மணிக்கு, அனைவரும் எழுந்து, புத்தர் சிலை முன் நின்று, சிங்கள மொழியில் இசைக்கப்படும், தேசிய கீதத்திற்கு வணக்கம் தெரிவிக்கின்றனர்.

நீல நிற அல்லி மலர் தான், அந்நாட்டின் தேசிய மலர். ஆந்தை தான், தேசிய பறவை; தேசிய விலங்கு, சிங்கம். ஆனால், அந்நாட்டில் சிங்கமே கிடையாது; கொடி, கோபுரங்கள், கோவில்கள் போன்ற இடங்களில், சிங்க உருவ படம் மற்றும் சிலையை தாராளமாக பார்க்க முடிகிறது.

சிங்களம் என்றால், சிங்கத்தின் ரத்தம் என்று பொருள். சிங்களர் என்றால், சிங்கத்தின் மக்கள் என, அர்த்தம். அந்நாட்டின் முதல் நபரை, சிங்கம் தான் ஈன்றெடுத்ததாக நம்புகின்றனர். அந்த அளவுக்கு சிங்கம் பற்றிய தகவல்கள் அதிகம் புழங்கும் நாட்டில், சிங்கம் இல்லாதது, இயற்கை அதிசயம்.

பெரிய நகரங்கள் மட்டுமின்றி, சிறிய கிராமங்களிலும் கூட, தரமான பல தங்குமிடங்களான ஓட்டல்களை காண முடிகிறது. நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்டுள்ள அந்த நாட்டின் கடற்கரையோரங்களில், நட்சத்திர ஓட்டல்கள், சுற்றுலா பயணியர் மூலமாக பணத்தை அள்ளுகின்றன.

அந்நாட்டின் முக்கிய வருவாய் சுற்றுலா மூலமே கிடைப்பதால், 'சுனாமி' தாக்குதலால் அதிகம் பாதிக்கப்பட்ட பிறகும், மிக கஷ்டப்பட்டு மீண்டெழுந்துள்ளது. தலைநகர் கொழும்பில், நுாறு மாடிகளுடன் கூடிய, நட்சத்திர ஓட்டல்கள் உள்ளன. கடற்கரையில் அழகுற அமைக்கப்பட்டுள்ள அந்த ஓட்டல்களில் பல, சீனர்களுக்கு சொந்தமானவை!

நம் நாட்டில், கடலில் இருந்து, 500 மீட்டர் துார நிலப்பகுதிகளில் கட்டடங்கள் எழுப்ப, தடை உள்ளது. ஆனால், அங்கு, கடல் அலைகள் தொடும் துாரத்தில் கூட, ஓட்டல்கள் இயங்குகின்றன. திரிகோணமலையில் நான் தங்கியிருந்த ஓட்டல் அறையில் படுத்தவாறு, ஒரு பக்க கண்ணாடி கதவை திறந்தேன்... கடலில் இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது.

கொழும்பு நகருக்கு வெகு அருகில் உள்ள, தம்புல்லா என்ற இடத்தில், நம் நாட்டின் மஹாராஷ்டிரா மாநிலத்தின், அஜந்தா குகைக் கோவிலை நினைவுபடுத்தும் வகையில், மலையை குடைந்து குகைக்கோவில் அமைத்துள்ளனர். அதில், புத்தரின், 54 உருவ சிலைகள் பாதுகாக்கப்படுகின்றன. சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையவை என, கூறப்படும் அவ்விடத்தில், அமைதியும், சாந்தமும் குடியேறியுள்ளதை காண முடிகிறது.

புத்த மதம் செழிப்பாக உள்ள, நேபாளம், பூடான், தாய்லாந்து, கம்போடியா மற்றும் ஜப்பான் போன்ற, 14 நாடுகளைச் சேர்ந்தவர்கள், இந்த இடங்களை புண்ணிய பூமியாக கருதி, இறை உணர்வுடன், அதிக எண்ணிக்கையில் வலம் வருவதை காண முடிகிறது.

மினரியா என்ற இடத்தில், யானைகள் சபாரிக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். 'த்ரில்லிங்கை' விரும்பும் வெளிநாட்டு பயணியர், ஏராளமானோர், யானைகளை வெகு அருகாமையில் பார்ப்பதற்காக வருகின்றனர்.

திறந்த ஜீப்பில், அடர்ந்த வனப்பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். சாலையிலிருந்து, 4 அல்லது 5 கி.மீ., உட்புறமாக சென்றால், துாரத்தில் கூட்டம், கூட்டமாக யானைகள் மேய்ந்து கொண்டிருப்பதைப் பார்க்கலாம். ஆப்ரிக்கா அல்லது இந்திய யானைகள் போல, பிரமாண்ட உருவமாக இல்லாமல், சற்று எடை மற்றும் உயரம் குறைவாகத் தான் உள்ளன.

அது போலவே, இங்குள்ள யானைகள், அனேகமாக, கொஞ்சம் சாது தான். தினமும் ஏராளமான சுற்றுலா பயணியரை வெகு அருகாமையில் பார்ப்பதாலோ என்னவோ, புற்களையும், மரக்கிளைகளையும் பறித்து தின்பதிலேயே கவனமாக இருக்கின்றன. அருகில் சென்று பார்க்கும் என்னை போன்றோரை, அவை, ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

ஒவ்வொரு யானை கூட்டத்திலும், 10 - 12 யானைகளை, சிறியதும், பெரியதுமாக பார்க்க முடிகிறது. யானைகள் மேய்ந்து கொண்டிருக்கும் இடத்திற்கு, 8 - 10 அடி துாரத்தில் வாகனத்தை நிறுத்தி விடுகின்றனர். பெரும்பாலும் அந்த யானைகள், அருகில் நிற்கும் வாகனங்களைப் பார்ப்பதில்லை. ஆனால், பிறந்து சில மாதங்களே ஆன குட்டிகளுடன் வலம் வரும் யானைகள், வாகனங்களைப் பார்த்து, கோபம் அடைகின்றன.

அதுவும், சில அடி முன்னே வந்து, குரல் கொடுக்கிறது. அதை புரிந்து, வழிகாட்டிகளும் வாகனங்களுடன் நகர்ந்து விடுகின்றனர். எங்கள் வாகனத்தையும், தாய் யானை ஒன்று, சில அடி துாரம் விரட்டியது. ஜீப்பை வேகமாக செலுத்தி, யானையிடம் இருந்து தப்பினோம்.

சில மாதங்களுக்கு முன், தென் ஆப்ரிக்கா சுற்றுப்பயணம் சென்றிருந்த போது, சிங்கங்களை அருகில் காணும், 'லயன் சபாரி'க்கு சென்று, இரவு நேரத்தில் திரும்பிக் கொண்டிருந்த போது, யானைக் கூட்டத்தில் சிக்கி, ஒரு மணி நேரம் தவித்த அனுபவம் எனக்கு இருந்ததால், இலங்கை யானைகளை பார்க்கும் போது, அச்சமாக இருந்தது.

ஆனால், அசட்டுத் துணிச்சலில், அதன் அருகே செல்ல வேண்டும்; 'செல்பி' எடுக்க வேண்டும் என, சுற்றுலா பயணியர் விரும்புகின்றனர். அது ஆபத்து என்பதை சுட்டிக்காட்டியதும், என்னுடன் வந்தவர்கள், நகர்ந்து விட்டனர். ஆனால் பலர், யானை அருகே சென்று, வீரத்தை காட்டினர். அது தவறு என்பதை, வழிகாட்டிகளும் சுட்டிக் காட்டுவதில்லை.

வாகனங்களை, யானைக்கு மிக அருகில் ஓட்டிச் சென்றால், கூடுதலாக, 'டிப்ஸ்' கிடைக்கும் என்ற நப்பாசையில், சுற்றுலா பயணியரை, வழிகாட்டிகள், தவறாக வழி நடத்துகின்றனர். விலங்குகளுக்கு, கோபம் எதற்காக, எப்போது வரும் என்பதை யாரும் அறிய முடியாது என்பதை மறந்து விடுகின்றனர்.

எனவே, மினரியா போன்ற இடங்களில் நடத்தப்படும் யானை சபாரியில், யானையை அணுகும் குறைந்தபட்ச துாரத்தை, இலங்கை சுற்றுலா துறை நிர்ணயிக்க வேண்டும். 'அதிகபட்சம், 50 மீட்டர் துாரத்திற்கு அப்பால் நின்று தான் யானைகளை பார்க்க வேண்டும்...' என, கண்டிப்பான உத்தரவு பிறப்பித்தால், சுற்றுலா பயணியருக்கு நலம்!

நிறுத்து... வண்டியை நிறுத்து!

தம்புல்லா சென்று புத்தர் சிலைகளை பார்த்த பின், மினரியா யானை சபாரிக்கு செல்ல பயணத் திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. தம்புல்லாவிலேயே நேரம் ஆகி விட்டதால், மினரியா செல்ல, டிரைவர், 'டயோட்டா' வேனை, சற்று வேகமாக ஓட்டினார். சாலைகள், வழுக்கும் விதத்தில் அழகுற இருந்ததால், வேகம் போவது தெரியவில்லை.

ஒரு வளைவில், வேகத்தை குறைக்காமல், நடு கோட்டை தாண்டி எங்கள் வாகனம் வேகமாக வருவதை பார்த்த, போக்குவரத்து காவலர்கள், கை காட்டி நிறுத்தி விட்டனர். அதிக வேகம், எச்சரிக்கை கோட்டை தாண்டியது, போன்ற குற்றங்களுக்காக, லஞ்சமாக குறிப்பிட்ட தொகையை தர வேண்டும் என, டிரைவரிடம் கேட்டனர்.

'மினரியாவுக்கு அவசரமாக செல்கிறோம்... வண்டியில், இந்திய பத்திரிகையாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு இது தெரிந்தால், அசிங்கமாக போய் விடும்...' என, டிரைவர் கூறியதும், 'சரி... போய்க்கோ...' என, அனுப்பி வைத்து, வேறு பக்கம் திரும்பிக் கொண்டனர், போக்குவரத்து போலீசார்.

தொடரும்.

ஏ.மீனாட்சிசுந்தரம்







      Dinamalar
      Follow us