
படப்பிடிப்பு, 6:00 மணிக்கு முடிகிறது என்றால், கூடுதலாக, 10 நிமிடங்கள், காட்சி எடுத்து முடிக்க காத்திருப்பார், சிலுக்கு. அதன்பின், ஒரு நொடியும் தாமதிக்காமல், தன் நகைகளை கழட்டி வைப்பார். கவரிங் நகைகளை சினிமாவில் பயன்படுத்தியதில்லை. எல்லாமே அவரது சொந்த நகைகள் தான்.
சிலுக்கின் கவர்ச்சியை போன்றே, அவரது கோபமும் மிக பிரபலம். ஒன்றும் இல்லாத விஷயங்களுக்கெல்லாம் கோபப்படுவார்; தகராறு செய்வார்; படப்பிடிப்பு தளத்தை விட்டு வெளியேறுவார்.
சத்யராஜ், துணை வில்லனாக, 'யெஸ் பாஸ்' என்று சொல்லிக் கொண்டிருந்த காலகட்டம். ராம.நாராயணன், சட்டத்தை உடைக்கிறேன் என்ற பெயரில், ஒரு படம் எடுத்தார். சிரஞ்சீவி, ராதிகா ஜோடியாக நடித்த, அபிலாஷா என்ற தெலுங்கு படத்தின், 'ரீ-மேக்' அது. தமிழில், மோகன், நளினி ஜோடியாக நடித்தனர். அதில், சிலுக்கின் நடன காட்சிக்கான படப்பிடிப்பு நடந்தது.
அடியாளாக நடித்து வந்த, சத்யராஜுக்கு, முதன் முதலில், சிலுக்கோடு ஆட சின்ன, 'பிரமோஷன்' தந்தார், ராம.நாராயணன்.
டான்ஸ் மாஸ்டர், டி.கே.எஸ்.பாபு, 'ஒன், டூ, த்ரி, போர்' என்றதும், உற்சாகமாக ஆட ஆரம்பித்தார், சத்யராஜ்.
முதல், 'டான்ஸ்' அதுவும், சிலுக்கோடு என்கிற ஆர்வக்கோளாறில் ஆடிய, சத்யராஜின் கால், தெரியாமல், சிலுக்கின் மேல் பட்டு விட்டது. அவ்வளவு தான். ஆட்டத்தை நிறுத்தி, நாற்காலியில் அமர்ந்து விட்டார், சிலுக்கு.
டி.கே.எஸ்.பாபு, 'என்னங்கம்மா ஆச்சு... ஏன் நிறுத்திட்டீங்க...' என்றார்.
'நான், அந்த ஆளோட, 'டான்ஸ்' ஆட மாட்டேன். தடியன், என் காலை மிதிச்சுட்டான்...' என்றார், சிலுக்கு.
'அம்மா... அம்மா... தப்பா நெனச்சுக்காதீங்க... அவரு, உங்கள மாதிரி பெரிய, 'டான்சர்' இல்ல. இப்பதான், 'டான்ஸ்' கத்துக்கிறார்; கொஞ்சம் தயவு பண்ணுங்கம்மா...' என்று கெஞ்சினார்.
சமாதானம் ஆகவில்லை, சிலுக்கு. நேரம் ஓடியது.
'முதல் ஆட்டத்திலேயே, ஆடுவதற்கு முன்பே, எல்.பி.டபிள்யூவா...' என, மென்று முழுங்கிக் கொண்டிருந்தார், சத்யராஜ்.
அன்று, சத்யராஜுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருந்திருக்க வேண்டும். பொதுவாக, தகராறு என்று வந்து விட்டால், படப்பிடிப்பு தளத்தை விட்டு உடனடியாக வெளியேறி விடுவார், சிலுக்கு. பின், வீட்டுக்கு போய் சமாதானப்படுத்தி வரவழைத்தால் தான் உண்டு.
அங்கிருந்து சிலுக்கு வெளியேறாததே, நம்பிக்கை கொடுத்தது. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். எல்லாரும் மாதக் கணக்கில் படம் எடுத்தால், ராம.நாராயணன் நாள் கணக்கில் எடுத்து முடிக்கிற இயக்குனர். சிலுக்கை போலவே அவருக்கும், ஒவ்வொரு நிமிடமும் மீட்டர் ஓடிக்கொண்டே இருந்தது.
'அம்மா... நீங்க நினைக்கிறபடி தப்பா எதுவும் நடந்துடல. வேணும்னே, அவரு, உங்க காலை மிதிக்கலை... அவரு, பெரிய ஜமின்தாரு பரம்பரை... ஏதோ சினிமா ஆர்வத்துல, அடியாள் வேஷம் செய்யிறாரு...' என்ற படக்குழுவினரின் கோரிக்கையை, சற்றே செவிமடுத்தார்.
சட்டத்தை உடைக்கிறேன் படம் வெளியானது. அப்போது, மோகனுக்கு மார்க்கெட் போய் விட்டது. நளினிக்கும் கல்யாணம் ஆகிவிட்டிருந்தது. முதல் வெளியீட்டின்போது, படம் அவ்வளவாக ஓடவில்லை.
சத்யராஜ், சிலுக்கு பேனர்களுடன், படத்துக்கு மீண்டும் விளம்பரம் செய்யப்பட்டது. அப்போது, சட்டத்தை உடைக்கிறேன் என்ற தலைப்பை, 'சென்சார் போர்டு' மாற்றச் சொன்னது. அதன்படி, சட்டத்தை திருத்துங்கள் என்ற பெயரில், இரண்டாவது முறை வெளியாகி, வசூலை அள்ளியது.
பட்டணத்து ராஜாக்கள் படத்தில், விஜயகாந்துக்கு ஜோடியாக, சிலுக்கை நடிக்க வைத்தார், எஸ்.ஏ.சந்திரசேகர். கதாநாயகி வாய்ப்பு கொடுத்ததால், சிலுக்குக்கு, அவர் மீது எப்போதுமே தனி மரியாதை உண்டு.
வீட்டுக்கு ஒரு கண்ணகி என்று, சொந்த படம் எடுத்தார், சந்திரசேகர். விஜயகாந்த், நளினி, ஜெய்சங்கர், சுஜாதா ஆகியோரோடு, ரவீந்தருக்கும் முக்கிய வேடம்.
அப்போது, ஏகப்பட்ட படங்களில் வில்லனாக நடித்துக் கொண்டிருந்தார், ரவீந்தர். வீட்டுக்கு ஒரு கண்ணகி படத்தின் அழைப்பிதழில், சிலுக்கு மற்றும் ஜெயமாலினியின் புகைப்படங்கள் இடம்பெற்றன. சிலுக்கு நடிக்கிற படம், வணிக ரீதியில் நல்ல விற்பனையை காணும் என்று எண்ணினார், சந்திரசேகர்.
ஆனால், நடிக்க மறுத்தார், சிலுக்கு. பேசியதை விடவும் கூடுதலாக பணம் தருவதாக சொன்னார், சந்திரசேகர். தன் முதல் தயாரிப்பு, தப்பு பண்ணக்கூடாது என்கிற வணிக ஆர்வம். ஆனால், ரவீந்தர் நடிக்கிற படத்தில், தான் நடிக்க கூடாது என்கிற வைராக்கியத்தை, வாழ்க்கை படம் ஏற்படுத்தியிருந்தது, சிலுக்குக்கு.
காரணம், அந்த படத்தில், ரவீந்தருக்கும், சிலுக்குக்கும், மோதல் ஏற்பட்டதாக, சினிமா பத்திரிகைகள் கிசுகிசுத்தன. அந்த காரணத்தாலோ, என்னவோ, ரவீந்தர் நடிக்கும் படத்தில், தான் நடிக்க கூடாது என்று, உறுதியான முடிவை எடுத்திருந்தார், சிலுக்கு.
ஆனால், வீட்டுக்கு ஒரு கண்ணகி படத்துக்காக, ரவீந்தரை வைத்து, ஏற்கனவே முக்கிய காட்சிகளை எடுத்து முடித்திருந்தார், சந்திரசேகர். அவரை, படத்திலிருந்து இனி நீக்க முடியாத நிலை. சிலுக்கின் பிடிவாதம், சந்திரசேகருக்கு வருத்தத்தை அளித்தது.
சிலுக்கின் வேடத்தில் நடிக்க, அரை மனதோடு, அனுராதாவை அழைத்தார், சந்திரசேகர். முழு மனதோடு, சம்மதம் சொல்லி, பாதி சம்பளம் பெற்று ஆடினார், அனுராதா.
சிலுக்கின் பிடிவாதத்தை, முழுதாக புரிந்து கொண்டது, கோடம்பாக்கம்.
காரணம், சினிமா உலகுக்குள் நுழைந்த ஆரம்ப நாட்களில் பட்ட அவமானங்கள், அவரது மனதில் வடுக்களாக இருந்தன. அதனால், நட்சத்திரமாகி, பேரும் புகழும் வந்தவுடன், தன்னை சுற்றிலும் ஒரு நெருப்பு வளையத்தை அவரே உண்டாக்கிக் கொண்டார்.
தான் விரும்பாதவர்களிடம் பேச மாட்டார். தன் உதவியாளர்கள் மூலம், அவர்களை, கிட்டத்தில் வராமல் அனுப்பி வைக்க உத்தரவிடுவார்.
சிலுக்கிடம், 'கால்ஷீட்' வாங்கி விட்டால் போதும், தங்கள் ஜென்மம் சாபல்யம் அடைந்து விடும் என்று எண்ணிய தயாரிப்பாளர்கள் தான் அதிகம். அதனால், அவர்கள், சிலுக்கின் முன் கைகட்டி, வாய் பொத்தி நின்று, 'கால்ஷீட்' வாங்க கூட தயங்கவில்லை.
எந்த தயாரிப்பாளருக்கும், துரோகம் செய்யாமல், கவர்ச்சி காட்டி நடித்தார், சிலுக்கு. இதனால், பல தயாரிப்பாளர்கள், கடனிலிருந்து மீண்டனர்.
- தொடரும்.
பா. தீனதயாளன்