
இங்கே வேலைக்கு பஞ்சமில்லையே!
என் நண்பன் வேலை தேடி வெளிநாடு செல்ல விரும்பாமல், உள்ளூரிலேயே சம்பாதிக்க நினைத்ததோடு, தன் மற்ற வேலையில்லா நண்பர்களுக்கும் வழி செய்ய திட்டமிட்டான். எங்கள் கிராமத்தில், மொத்தம், 28 தெருக்கள் உள்ளன. தெருவுக்கு இருவராக வயது வித்தியாசமின்றி, 60 நண்பர்களை தேர்வு செய்தான். தெருவில் எந்த வீட்டில் விசேஷம் என்றாலும் தனக்கு தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டான். அதேபோன்று அந்நாளில், பந்தல் போடுவது, காகிதப் பூக்கள் அலங்காரம், பந்தல் துணி கட்டுவது, வரவேற்பு பேனர்கள் அமைப்பது, பத்திரிகை அடிப்பது, ஒளி - ஒலி அமைப்பது, வீடியோ எடுப்பது, சமையல் ஏற்பாடு மற்றும் பந்தி பரிமாறுதல் என, விழா முடியும் வரை தங்கள் நண்பர்களுடன் பொறுப்பு ஏற்று நடத்த, அனுமதி வாங்கிக் கொண்டான்.
சம்பந்தப்பட்ட வீட்டினரிடம் கலந்து ஆலோசித்து சிக்கனமாகவும், சிறப்பாகவும் செய்ய ஆரம்பித்ததால், இன்று எங்கள் ஊரில் இந்த நண்பர்களின் உதவி இல்லாமல், எந்த விழாவும் நடப்பது இல்லை.
பல சிக்கல்கள், பல தடைகளையும் கடந்து வெற்றியும் பெற்று, சங்கமும் அமைத்து, உறுப்பினர்கள் அனைவருக்கும் சீருடைகள் தைத்து, வாழ வழி வகுத்து கொடுத்து விட்டான். அந்த நண்பனைப் போல மற்றவர்களும் வயது வித்தியாசமின்றி களமிறங்கலாமே!
— டி.ஆர்.எச்.யாசீர்கான், பெங்களூரு.
தாத்தா - பாட்டியர் விரோதிகளா?
சமீபத்தில், தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்றில், என் அண்ணன் மகனை, ஒன்றாம் வகுப்பில் சேர்க்க சென்றிருந்தோம். பெற்றோரிடம், 'நீங்கள் படித்தவர்களா...' என்று கேட்டது முதல், சரமாரியாக கேள்விக்கணைகளைத் தொடுத்தனர். 'நீச்சல் மற்றும் 'டூர்' கட்டாயம்; உங்கள் மகன் படிப்பில் சுமார் ரகம் என்றால், 'ஸ்பெஷல் ட்ரெயினிங்' (ஒன்றாம் வகுப்பிற்கு!) தருவோம்...' என்று கூறியதுடன், கடைசியாக ஒன்று கூறினார்கள் பாருங்கள்.... நொந்து போனோம். அவர்கள் கூறியது இதுதான்: தாத்தா, பாட்டி இருந்தால், அதிக செல்லம் கொடுத்து பிள்ளையை கெடுத்து விடுவர்; அதனால், அவர்களிடமிருந்து பிள்ளையை கொஞ்சம் தள்ளியே வைத்திருந்து, ஜாக்கிரதையாகப் பார்த்துக்கணும், என்றனர். அப்பள்ளியில் குழந்தையை சேர்க்காமல், தற்போது, சாதாரண பள்ளியில் சேர்த்துள்ளோம்.
கல்வி வியாபாரிகளின் பணப் பிடுங்கலின் பரிமாணம், விஷ விருட்சமாக வளர்ந்து விட்டது புரிந்தது.
— எஸ்.கோவிந்தராஜன், கோவை.
தலைகவசத்திற்கு பாதுகாப்பு!
தலைகவசம் கட்டாயம் என்று ஆகிவிட்ட சூழ்நிலையில், இருசக்கர வாகன நிறுத்தத்தில், அதை பூட்டி வைக்க முடிவதில்லை. அத்துடன், பெரும்பாலான, 'பார்க்கிங்' இடங்களில், 'தலைகவசத்திற்கு நாங்கள் பொறுப்பல்ல...' என்றும் எழுதி வைத்துள்ளனர்.
இதற்கு மாறாக, பொள்ளாச்சியில் இருசக்கர வாகன நிறுத்தம் ஒன்றில், வாகனத்திற்கு பதிவுச்சீட்டு கொடுக்கும்போதே தலைகவசத்திற்கும் வண்டி எண்ணை பதிவு செய்து, தனியாக ஓரிடத்தில் வரிசைப்படுத்தி வைக்கின்றனர். பின், வண்டியை எடுக்கும் போது அந்த எண்ணிற்குரிய தலைகவசத்தை எடுத்து தருகின்றனர். இம்முறையை, மற்ற வாகன நிறுத்தங்களிலும் கடைபிடிக்கலாமே!
— பா. கோபால்சாமி, பணப்பட்டி.