
'சொர்ணம்' எவ்வளவு அழகான பேரு. இந்த பேர வச்ச அப்பனையும், ஆத்தாவையும் கையெடுத்துக் கும்பிடணும் போல இருக்கும் சொர்ணக்காவுக்கு. சொர்ணமுன்னா, தங்கம்ன்னு அர்த்தம் இருக்குதாமுல்லா, இப்படியெல்லாம் யோசன செய்து, இந்தக் காலத்துல யாரு பேரு வைக்காவ... ஆனா, இந்த ஊரு சனங்கதான், சின்னவங்க, பெரியவங்க எல்லாருமே, சொர்ணாங்கிற பேரை மாத்தி, சொர்ணக்கா சொர்ணக்கான்னு பாசமா கூப்பிடுவாங்க.
இது கூட நல்லாவே இருப்பதாக தோணும் சொர்ணக்காவுக்கு.
காட்டு வேலை, கழனி வேலை பாத்தாத்தான் பொழப்புன்னாலும், கன்னத்துல கைய வச்சு கவலப்படும்படியா சொர்ணக்காவுக்கு ஒண்ணுமே இல்ல. இருந்தது ஒரே ஒரு பொட்டப்புள்ள. அதையும் வெளியூர்ல கட்டிக் கொடுத்தாச்சு; அவ பொழப்பும், நல்லாவே போயிக்கிட்டு இருக்கு.
கொமரிப் புள்ளங்ககூட சேந்துக்கிட்டு கிளியந்தட்டு, பல்லாங்குழி, இப்படி எதுவாச்சும் வெளையாடிக்கிட்டே இருப்பா சொர்ணக்கா. அதனால, நாலு காசுக்கு பஞ்சம் இருந்தாலும், சிரிப்புக்கு மட்டும் பஞ்சம் கெடையாது.
சொர்ணக்கா ரொம்ப இரக்க குணம் உள்ளவ. கண்ணுக்கு தெரிஞ்சி, யாரும் பட்டினி கெடக்கறத பாக்கப் பொறுக்காது. கூழோ, கஞ்சியோ இருக்கறத போட்டுக் குடுத்துருவா. அதனால, மனுசாளுங்க எல்லாரும், 'சொர்ணக்காவ மாதிரி, பாசக்காரிய பாக்கவே முடியாது'ன்னு காதுபடவே பேசுவாங்க. 'பாசக்காரி' இந்த பேரும் நல்லா இருக்கிற மாதிரி தான் தோணும். கூட பொறந்தவங்க கூட, ஒட்டாம இருக்கிற இந்தக் காலத்துல, ஊரு சனங்க எல்லாரும், இப்படி பாசமா இருக்கிறத நெனச்சா, சந்தோஷமா இருக்கும்.
சொர்ணக்காவுக்கு, சொத்துன்னு ஒரு ஓலை குடிசையும், ரெண்டு மூணு ஆட்டுக் குட்டியும் தான். அதனால, சாயங்கால நேரத்துல, ஆட்டுக்குட்டிக்கு புல்லு அறுக்குறதுக்கு, காட்டுப் பக்கமா போயி வருவா. அந்த பச்சப் புல்ல பாத்ததும், அதுங்க, ஆச ஆசையா திங்கும். அத பார்க்கப் பார்க்க, அவ்வளவு சந்தோஷமா இருக்கும். அந்த சந்தோஷத்துக்காகவே, எவ்வளவு கஷ்டமான நேரமா இருந்தாலும், புல்லு அறுக்க போகாம, இருக்க மாட்டா.
ஒரு நாள், பச்சம்மா தோட்டத்து வேலியோரமா, வளந்து கெடக்கிற புல்ல, அறுத்து வர்றதுக்காக, அங்க போனா சொர்ணக்கா, எந்த பக்கம் பார்த்தாலும், 'பச்ச பசேர்'ன்னு அழகா இருந்தது. தென்னந்தோப்புல தென்னங்கா பறிக்க ஆளு இல்லாம, காச்சிப் போயி கெடந்தது. ஒரு பக்கம், வாழந்தோப்பு; இன்னொரு பக்கம், கத்தரிக்கா, வெண்டக்காயின்னு தோட்டம் முழுக்க, செழிப்பா தெரிஞ்சது.
அந்த ஊர்லயே, பச்சம்மாவுக்குத் தான் தோட்டம், தொரைன்னு அதிகமா இருந்தது. அதனால, பணமும், பகட்டும் அவ மொகத்துல மட்டுமில்ல, அவ பேச்சுலயும் தெரியும்.
மனுசங்களா பொறந்த எல்லாரும், பச்சம்மாவாத்தான் பொறக்கணும். பெறவு என்ன... ஊர்ச் சனங்க எல்லாரும், பச்சமாக்கிட்ட பதுங்கி பதுங்கித் தான் பேசுவாங்க. இதுக்கெல்லாம் காரணம், அவகிட்ட இருக்கிற சொத்து மட்டுமில்ல; அரசியல் செல்வாக்கும், அமோகமா இருந்தது. அமைச்சரோ அல்லது எம்.எல்.ஏ.,வோ, யாரு ஊருக்கு வந்தாலும், அன்னைய செலவு முழுக்க, பச்சம்மா பாத்துக்குவா. பின்ன, செல்வாக்குக்கு கேக்கவா வேணும். இப்படி, என்னவெல்லாமோ நெனச்சிக்கிக்கிட்டு, புல்ல அறுத்துக்கிட்டே இருந்தா. குனிஞ்சி ரொம்ப நேரமா, புல்லு அறுத்ததுனால இடுப்பு வலிச்சி, நிமிந்து நின்னா சொர்ணக்கா. அங்க, பம்பு செட்டு பக்கமா இருந்த பந்தல்ல, பொடலங்கா காச்சி, 'பள பள'ன்னு தொங்கி கெடந்துச்சி. கவனம் புல்லு பொறுக்கிறதுல இருந்தாலும், கண்ணு என்னமோ, பொடலங்கா பக்கமே போயிக்கிட்டு இருந்திச்சி. 'ஒரு பொடலங்காய முழுசா வாங்கி, 'தள தள'ன்னு கூட்ட வச்சி தின்னு, எம்புட்டு நாளாச்சி...' என்று நெனைச்ச சொர்ணக்கா, என்ன நெனைச்சாளோ, ஒரே தாவா தாவி, ஒரு பொடலங்காயப் பிடுங்கி, நாலா ஒடிச்சி மடியில கட்டிக்கிட்டா. அதுக்குப்புறம் என்னமோ புல்லு அறுக்க புத்தி ஓடல. 'இருக்கிறது போதும்'ன்னு நெனைச்சு, எல்லாத்தையும் ஒரே கட்டா கட்டி, தலையில தூக்கி வச்சிக்கிட்டு, 'விசுக்கு விசுக்கு'ன்னு நடக்க ஆரம்பிச்சிட்டா. 'வீட்டுக்கு போன ஒடன, பச்ச மொளகாய அரிஞ்சி போட்டு, கொழ்பு வச்சி, பச்ச நெல்லு சோத்தோட கொழப்பி கொழப்பி திங்கணும்'ன்னு நெனச்சிக்கிட்டெ வேக வேகமா நடந்துகிட்டு இருந்தா.
இம்புட்டையும், எங்கயிருந்து பாத்துக்கிட்டு இருந்தாளோ பச்சமக்கா, ஓடி வந்து, சொர்ணக்கா கைய இழுத்து, மடியில இருக்கிற பொடலங்காய புடிங்கிட்டா. அத்தோடு விட்டாளா... கையோட இழுத்துக்கிட்டுப் போயி, ஊரு பஞ்சாயத்துல கொண்டு போயி உட்டுட்டா. பெரிய இடத்து சமாச்சாரங்கிறதுனால, பஞ்சாயத்துக்காரங்களும் அவசர அவசரமா கூடி பேசி, ஒரு முடிவுக்கு வந்தாங்க. பச்சம்மா தோட்டத்தில, பொடலங்கா களவாண்டதுக்காக, சொர்ணக்காவுக்கு நூத்தியொரு ரூவா அபதாரமா போட்டாங்க.
'இம்புட்டு பணத்த என்னால கட்ட முடியாது. கொஞ்சம் கொறைச்சி சொல்லுங்க'ன்னு, கெஞ்சிக் கூத்தாடிப் பாத்தா. பச்சம்மா விஷயமாச்சே, பஞ்சாயத்துக்காரங்க மவுனமாவே இருந்தாங்க. 'சடக்கு'ன்னு, முந்தியில முடிஞ்சி வச்சிருந்த பணத்தை, அவுத்துக் கொடுத்திட்டு, வீட்டுக்கு போயிட்டா சொர்ணக்கா.
வீட்டுக்குப் போனவொடன, பாய விரிச்சி போட்டு, 'பொத்து'ன்னு விழுந்து, படுத்துகிட்டு, குமுறி குமுறி அழுதா.
இப்படி ஒரு களவாணிப் புத்தியும், நம்ம கூடவே இருந்திருக்கேன்னு தலையில அடிச்சி அழுதா.
படுத்த பாய சுருட்டாம, மூனு நாளா படுத்தே கெடந்தா என்ன செய்றது... வயித்துப்பாட பாக்கணுமே! அஞ்சி வெளிய வந்தா. சனங்க மொகத்தப் பாக்றதுக்கே வெக்கமா இருந்தது. சனங்க சும்மா விடுங்களா... சும்மா வாயிக்கு வந்ததெல்லாம் பேசினாங்க.
அடுத்த வீட்டுக் கோழிய அடிச்சித் தின்னவ கூட, சொர்ணக்காவ எளக்காரமா பாத்தா. ரெண்டு கல்யாணம் செய்திட்டு, மூணாவதா ஒருத்தங்கூட ஓடிப் போயிட்டு வந்தவ கூட, சொர்ணக்காவ பாத்து மூஞ்சிய திருப்பிட்டு போனா. கூட்டமா வந்த கொமரிகள்ல ஒருத்தி, சொர்ணக்காவ பாத்து, 'என்ன பொடலங்கா... என்ன ரெண்டு மூணு நாளா ஆளையே காணும்'ன்னு கேட்டுக்கிட்டே நடந்து போனா. கிட்டதட்ட ஊரு சனங்க எல்லாருமே, சொர்ணக்காவ, 'பொடலங்கா'ன்னு கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க. சொர்ணக்காவுக்கு தூக்குல தொங்கணும் போல இருந்திச்சி.
ஒரு நாள் எங்கயோ போயிட்டு, பள்ளிக் கூடத்துப் பக்கமா வந்துக்கிட்டு இருந்தா. அங்க சின்னப் புள்ளைங்க, பாட்டுப் பாடி, வெளையாடிக்கிட்டு இருந்ததுங்க. அதுங்கள பாத்துக்கிட்டே, 'இப்படி சின்னப் புள்ளயா இருக்கும் போது, எவ்வளவு சந்தோசமா இருந்திச்சி. குளிப்பாட்டி, தல சீவி விட ஆத்தா இருந்தா; கேட்டத வாங்கிக் கொடுக்க, அப்பன் இருந்தான். இப்போ, நமக்கின்னு யாரு இருக்காங்க...' நெனைக்கும் போதே, சொர்ணக்காவுக்கு,'குபுக்கு'ன்னு கண்ணீர் வந்திடுச்சி.
ஓடி, ஆடி, பாட்டுப் பாடுற புள்ளைங்க, சொர்ணக்காவ பாத்ததும்,
'பந்தலிலே பொடலங்கா,
தொங்குதடி டோலாக்கு...'
என்று பாட ஆரம்பிச்சிட்டுதுங்க. அந்த எடத்த விட்டு, தூசியா ஓடி போனா சொர்ணக்கா.
வீட்டுக்குப் போனவொடன, 'நான் என்னத்த செய்வேன்... நான் ஒருத்தருக்கும், ஒரு கெடுதலும் செய்யலையே... எனக்கு ஏன், இந்த நெலம'ன்னு பொலம்பி, ஒரு மூச்சு மறுபடியும் அழுதா.
இருக்கிற குடிச வீட்டையும், ஆட்டுக்குட்டிகளையும் வித்துக் தொலைச்சிட்டு, வேற ஊரப் பாத்து போயிற வேண்டியதுதான்னு, மூட்டயக் கட்டிக்கிட்டே, யோசன செய்துகிட்டு இருந்தா. கையும், காலும் தெடமா இருக்கும் போது, எந்த ஊரா இருந்தா என்ன, பொழைக்கவா முடியாது!
அந்த நேரம் பாத்து, வேற ஊருக்கு பொழைக்கப் போன, பொன்னுதாயி வந்து உக்காந்தா. 'என்ன சொர்ணக்கா... எப்படி இருக்கிற'ன்னு ஆரம்பிச்சி, பொழைக்கப் போன ஊரப் பத்தி, 'அப்படியாக்கும் இப்படியாக்கும்'ன்னு அளந்துகிட்டு இருந்தா. அவ சொன்னது, உண்மை மாதிரி, அவ மொகத்திலயும் ஒரு மினுமினுப்பு தெரிஞ்சிச்சி. 'சரி, வந்தவளுக்கு ஒரு காப்பி தண்ணி போட்டுக் கொடுக்கலாம்'ன்னு முட்டப் பிடிச்சி, எந்திரிச்சிக்கிட்டே, 'பொன்னுத்தாயி... ஒம் மவன் எப்படி இருக்கிறான்'னு கேட்டு வச்சா சொர்ணக்கா.
'அவனுக்கென்ன, ஒடம்புல சத்துதான் பிடிக்கலையே தவிர, சும்மா, 'நெடு நெடு'ன்னு பொடலங்கா மாதிரி வளந்து நிக்கிறான்'ன்னு சந்தோஷமா சொன்னா.
இவ, தெரிஞ்சி பேசுதாளா, இல்ல, தெரியாம பேசுதாளான்னு, கொஞ்சம் கொழப்பமா இருந்திச்சி. 'எப்படி இருந்தாலும் சரி, இவளுக்கு காப்பி தண்ணி போட்டுக் கொடுக்கக் கூடாது'ன்னு மறுபடியும் உக்காந்துட்டா.
பொதுவா, காட்டுல களையெடுக்கும் போது, ஒருத்தி, முன் பாட்டு பாடுவா. எல்லாரும், பின் பாட்டுப் பாடுவாங்க. இல்லாட்டா, ஒருத்தி விடுகத போடுவா, எல்லாருமா சேந்து வெட சொல்லுவாங்க. இப்படி, சிரிப்பும், கும்மாளமுமா, எல்லாரும் மத்தியான சாப்பாட்டுக்காக, ஒரு கருவ மரத்தடியில உக்காந்தாங்க. தூக்குப் போனிய தொறந்து, எல்லாரும் சாப்பிட ஆரம்பிக்கும் போது, ஒருத்தி, 'அய்யோ நான் தொட்டுக்க ஒண்ணும் கொண்டு வரலையே'ன்னு சொன்னா. ஒடனே, சொர்ணக்கா, தான் கொண்டு வந்திருந்த கத்தரிக்கா கூட்ட தோண்டி வச்சா. அவளும், 'நல்லாயிருக்கு, நல்லாயிருக்கு'ன்னு நக்கி நக்கி தின்னுட்டு, கடைசியா, 'என்ன... கத்தரிக்கா கடையில வாங்குனதா, இல்ல. யாரு தோட்டத்துலயும் பறிச்சிட்டு வந்ததா'ன்னு, சொன்னா.
அடுத்தவங்க மனச காயப்படுத்துற உரிமைய, இதுங்களுக்கு யாரு கொடுத்தது... முந்திய எடுத்து, வாய மூடிக்கிட்டே, எச்சிய முழுங்கினதோட, அவமானத்தையும் சேத்து, முழுங்கிகிட்டா.
சொர்ணக்கா ஒரு முடிவுக்கு வந்துட்டா. நாளைக்கு காலையிலேயே, இந்த ஊரவுட்டு போயிர வேண்டியதுதான்.
ஒரு பழைய சேலைய, ரெண்டா கிழிச்சி, விரிச்சிப் போட்டு, இருக்கிற துணி, மணி எல்லாத்தையும் அதுல அள்ளிப் போட்டு, பொட்டணமா கட்டி வச்சா. சட்டி, பானைங்க எல்லாத்தையும், ஒரு சாக்குல போட்டு கட்டி வச்சிட்டா. மறுநாள் காலையில, கௌம்பலாம்ன்னு இருக்கும் போது, பச்சம்மா, வீடு வீடா வந்து, 'இன்னைக்கு நம்ம ஊருக்கு, மந்திரி வந்து, எல்லாருக்கும் இலவச, 'டிவி' கொடுக்கப் போறாரு. அதனால, ஒருத்தரும், வேலைக்கு, எங்கயும் போகக் கூடாது'ன்னு கொஞ்சம் காட்டமாவே சொல்லிட்டுப் போனா.
பச்சம்மா சொன்னபடி, மந்திரியும் வந்தாரு. பச்சம்மா, மேடையில கம்பீரமா நின்னு, ஒருத்த ஒருத்த பேரையும் சத்தம் போட்டு வாசிச்சிக் கிட்டு இருந்தா. மந்திரியும், 'டிவி'யை தூக்கி தூக்கி, கொடுத்துக்கிட்டு இருந்தாரு. எல்லாரும், மேடைக்குப் போயி, பல்லு முழுக்க காட்டி, சிரிச்சிக்கிட்டே, 'டிவி'யை வாங்கிக்கிட்டு, சந்தோசமா போனாங்க.
சொர்ணக்கா பேரு வந்திச்சி. எத்தனையோ தடவ, சத்தம் போட்டு சொல்லியும், சொர்ணக்கா, உக்காந்த எடத்த விட்டு, எழுந்திருக்கவே இல்லை.
பச்சம்மா கோபத்துடன், 'ஏய் சொர்ணக்கா... ஒன்னைய நல்ல மாதிரியா கூப்பிட்டா வர மாட்டியா... பொடலங்கான்னு கூப்பிட்டாத்தான் வருவியா'ன்னு அதட்டி கேட்டா.
மெதுவா, பயந்துக் கிட்டே, மேடைக்கு வந்து, பச்சம்மாவ பாத்தும், மந்திரியப் பாத்தும், ஊருச் சனங்க எல்லாத்தையும் பாத்தும், கும்பிட்டுக் கிட்டே, 'எல்லாரும் என்னைய மன்னிச்சிருங்க. எனக்கு, 'டிவி' வேண்டாம்'ன்னு சொன்னா.
'அதுதான் ஏன்னு கேக்கிறோம்மில்ல சொல்லு'ன்னா பச்சம்மா.
'பொடலங்கா களவாண்டு, அவதாரம் கட்டுன நாள்ல இருந்து, யாரோட, பொருளுக்கும் ஆசப்படக் கூடாது, ஒரு வாய் சோறா இருந்தாலும், ஒழைச்சித்தான் திங்கணும், இலவசமா யாரு என்ன கொடுத்தாலும் வாங்க கூடாதுன்னு தருமமா எனக்கு நானே விதிச்சிக்கிட்டு, வாழ்ந்துக்கிட்டு இருக்கேன். இலவசமா எதையாவது கொடுத்து, என் தர்மத்த, ஒடச்சிராதிங்க'ன்னு கும்பிட்ட கைய எடுக்காமலே, சொல்லி முடிச்சா.
அன்னயிலிருந்து, ஊரு சனங்க எல்லாரும், சொர்ணக்காவ, 'தர்மக்கா, தர்மக்கா'ன்னு கூப்பிட ஆரம்பிச்சாங்க.
இந்த பேரு கூட, நல்லா இருக்கிற மாதிரி தெரிஞ்சிச்சி, சொர்ணக்காவுக்கு.
அ.பன்னீர் செல்வம்
தென்னக ரயில்வே தலைமை அலுவலகத்தில் பணிபுரிகிறார். இதுவரை, இரண்டு கவிதைச் தொகுப்பு நூல்களை வெளியிட்டுள்ளார்.

