PUBLISHED ON : மார் 26, 2017

விதவிதமான இனிப்பு வகைகள், சாக்லேட்டுகள் என, நவீன குழந்தைகள், கார்ப்பரேட் இனிப்புகளுக்கு மாறிவரும் வேளையில், ஆறுதல் தருகிறது, நம் பாரம்பரிய இனிப்பான, கருப்பட்டி மற்றும் வெல்லத்தில் தயாரிக்கப்படும், சீரணி மிட்டாய்!
விருதுநகர், மதுரை, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட, தென் மாவட்டங்களில் இது பிரபலமானது என்பதால், 'தெக்கத்தி சீரணி மிட்டாய்' என இதைச் சொல்வதுண்டு. அத்துடன், ஏணி மிட்டாய், சீனி மிட்டாய் மற்றும் ரயில் மிட்டாய் என, ஊருக்கு ஒரு பெயர் உண்டு.
தோற்றத்தில், ஜிலேபிக்கு பெரிய அண்ணன் இது. சங்கிலி போல, சுருள் சுருளாக இருக்கும் இந்த மிட்டாயை, வட்டமாக, மூன்று அடி உயரத்திற்கு, அடுக்கி வைத்திருப்பர்.
மிட்டாய் மீது வடியும் வெல்லப் பாகு, சாப்பிடும் ஆவலைத் தூண்டுகிறது. கருப்பட்டி, வெல்லம் மற்றும் சீனி என, மூன்று விதமான மிட்டாய்கள் விற்கப்படுகின்றன.
லேசான மொறுமொறுப்புடன், நாவில் கரையும் போது தித்திக்கும், இந்த மிட்டாய்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி, பாலவநத்தம், அருப்புக்கோட்டை, பந்தல்குடி, தூக்குத்துடி கீழஈரால் மற்றும் கோவில்பட்டி உள்ளிட்ட ஊர்களில் பெயர் பெற்றது, சீரணி மிட்டாய்!
