/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
கணேஷ் - லட்சுமி - சித்ரகுப்தனுக்கு சிறப்பு பூஜை!
/
கணேஷ் - லட்சுமி - சித்ரகுப்தனுக்கு சிறப்பு பூஜை!
PUBLISHED ON : அக் 27, 2019

வட மாநிலங்களில், தீபாவளியன்று, லட்சுமி பூஜை நடப்பது, நமக்கு தெரியும். உ.பி., மாநிலம், காசி, அலகாபாத் மற்றும் கோரக்பூர் போன்ற நகரங்களில், லட்சுமியுடன், கணபதியையும் வைத்து, மாலை வேளையில் பூஜை செய்கின்றனர்.
செல்வத்தை தருபவள், லட்சுமி. புத்திசாலித்தனத்தை வழங்குபவர், கணேசர். செல்வம் வந்தால் போதாது; அதை புத்திசாலித்தனமாக கையாளத் தெரிவதும் அவசியம். ஆக, புத்திசாலித்தனத்துடன் கூடிய செல்வமே எங்களை வந்தடையட்டும் என, இருவரையும் வைத்து, பூஜை செய்கின்றனர்.
நம்மூரில், படிகட்டுகளில் கொலு பொம்மைகளை வைப்பது போல், காசி, கடை வீதிகளில், படிகட்டுகளில், களிமண், வெண்கலம் என, பலவகையான, கணேஷ் - லட்சுமி பொம்மைகளை, விற்பனைக்கு வைத்துள்ளனர். நகை கடைகளில், வெள்ளி, தங்கத்தில், கணேஷ் - லட்சுமி உருவங்கள் கிடைக்கின்றன. அத்துடன், கணேஷ் - லட்சுமி, வெள்ளி காசுகளும் விற்பனைக்கு வைத்துள்ளனர். கடைசி நாளன்று, சித்ரகுப்தனுக்கு விழா எடுக்கின்றனர்.
செல்வமும், புத்திசாலித்தனம் மட்டும் இருந்தால் போதாது. அவற்றை அனுபவிக்க ஆயுளும் வேண்டுமல்லவா... அதை, சித்ரகுப்தன் வழங்க வேண்டும் என்பதற்காகத் தான்.