
மேட்டுப்பாளையம்.
நெல்லித்துறை பவானி ஆற்றங்கரையோரம் அமைந்திருந்த, அந்தக் குடிசைப்பகுதியில், மீன் பிடிப்பது, பரிசலோட்டுவது, சற்றுத் தள்ளியிருக்கும் பத்ரகாளியம்மன் கோவிலருகில், சின்னக் சின்ன கடைகள் வைத்திருப்பது என, ஆறு மற்றும் கோவில் சார்ந்த, பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளோர் மட்டுமே, அங்கு, காலங்காலமாக வாழ்ந்து வருகின்றனர்.
கருவாடு நாற்றமும், நீர்ப்பாசனத்தின் பச்சை நெடியும், அந்த பகுதி காற்றில், நிரந்தரமாக ஒட்டியிருந்த போதும், கோவை வாழ் மக்களுக்கு, அந்த கோவிலும், ஆற்றங்கரையும்தான், கோடைக்கால விடுமுறை தலம்.
அங்கேயே பிடிக்கப்பட்டு, அந்த இடத்திலே பொரித்துத் தரப்படும், மீன் வறுவலுக்கு, தனி கிராக்கி என்றும் உண்டு.
தன் குடிசைக்கு வெளியே, குத்துக்காலிட்டவாறு அமர்ந்து, யோசனையுடன் பீடியை உறிஞ்சிக் கொண்டிருந்தான் வீரண்ணன். அவன் மூளைக்குள், சிந்தனைச் சிலந்திகள் தாறுமாறாக ஓடிக் கொண்டிருந்தன. சற்றுத் தள்ளி, அவன் மனைவி சிகப்பி, பாத்திரங்களை தேய்த்துக் கொண்டே, அவனையும் கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தாள்.
''த பாருயா... மூத்தவளுக்கு, இது ஒம்பதாம் மாசம்; எந்த நேரமும் வலி கண்டிடும். பிரசவத்துக்கு ஆசுபத்திரியில் சேர்த்தாச்சு, உடனே கிளம்பி வாங்கன்னு கோயமுத்துருல இருந்து, எப்ப வேணாலும் தகவல் வந்திரும்; நாம தயாராயிருக்கணும். அவ மாமியாகாரி என்னடான்னா தனியார் ஆசுபத்திரில தான் பாக்கோணும்ன்னு பிடிவாதமா நிக்கறாளாம்.''
''அவ, ஒரு கூறு கெட்ட குந்தாணி,'' சொல்லிக் கொண்டே, 'புளிச்' சென்று, பக்கவாட்டில், எச்சிலை துப்பினான் வீரண்ணன்.
''யோவ்... சும்மா, 'பொசுக்'குன்னு, அப்படிச் சொல்லிப்போடாதே... நியாயப்படி பாத்தா, புள்ளையோட தலைப்பிரசவத்த நாமதான், இங்க கூட்டியாந்து செய்திருக்கோணும். ஏதோ அந்த மனுசி, நம்மளோட வசதிக் குறைவப் பார்த்து, அங்கே வெச்சுப் பார்த்துக்கிறேன்னுட்டாக. அப்படியாப்பட்ட மனுசியப் போயி குந்தாணி கிந்தாணினுட்டு...''
''ஓ... பிரசவத்த, அங்க வெச்சுப் பாப்பாங்களாம். செலவு மட்டும் நம்ம தலையிலயாக்கும்?''என்று கேட்டு, 'ப்ப்ர்ர்ர்' என்று, நக்கலகச் சிரித்தான் வீரண்ணன்.
''அட... அர்த்தங்க கெட்ட மூதி! நாம தான், அதைச் செய்தாகணும், அதான் மொறை.''
சிகப்பி கடுப்பாகிச் சொன்னாள்...
''பச்... சரி, நீ இப்ப என்னதான் சொல்ல வர்றே?''
''எனக்கென்னமோ, சம்மந்தியம்மா சொல்ற மாதிரி, பிரசவத்தை தனியார் ஆசுபத்திரிலேயே, பார்த்துடறதுதான் நல்லதுன்னு தோணுது.''
''சரி... பார்த்துட்டுப் போ,'' விட்டேத்தியாச் சொல்லி, மறுபக்கம் திரும்பி அமர்ந்து, பீடியை ஆழ உறிஞ்சினான்.
''அது செரி... சும்மா வாயில சொல்லிட்டா போதுமா? அதுக்கெல்லாம் காசு, பணம் எக்கச்சக்கமா ஆவும். அதனால, இப்படி உட்கார்ந்து, பீடி வலிச்சுது போதும். எந்திரிச்சுப் போ... போயி, பணங்காசுக்கு ஏதாவது ஏற்பாடு செய்.''
மீண்டும், பாத்திரங்களோடு சண்டை போட ஆரம்பித்தாள் சிகப்பி.
''அட... ஏண்டி சும்மா புரியாமக் கத்தறே... நானென்ன வேணுமின்னா, இப்படி உட்கார்ந்திட்டிருக்கேன்? வேலை வெட்டி ஒண்ணும் சரியா கெடைக்க மாட்டேங்குது. மழைக் காலமா போனதினால, டூர் வர்ற ஜனங்க எண்ணிக்கையும் கொறைஞ்சிடுச்சு. இந்தச் சமயத்துல வந்து, பணங்காசு ஏற்பாடு செய்யு, பாடை ஏற்பாடு செய்ன்னுட்டு... ச்சை... எங்கடி போவேன் காசுக்கு நான்?'' வீரண்ணன், தன் இயலாமையின் வெளிப்பாடாகக் கத்தினான்.
சிறிது நேரம் இருவரும், 'காச் மூச்' சென்று கத்தி ஓய்ந்ததும், நிதானமாக எழுந்து, வீரண்ணனின் அருகில் வந்த சிகப்பி, சுற்றும் முற்றும் பார்த்து, குனிந்து அவன் காதோராமா சென்று, ''த பாருயா... இப்ப நமக்குத் தேவை பெரிய தொகை. அதனால, பாவ புண்ணியமெல்லாம் பாத்தா ஆகாது. பேசாம ஆளிழுக்கற வேலையை செய்திடு அவ்வளவுதான்,'' என்றாள் கிசுகிசுக்குரலில்.
'ஆளிழுத்தல்' என்பது, ஆற்றில் குளித்துக் கொண்டிருப்போரில், யாரையாவது ஒருத்தரை, நீரினடியில் சென்று, காலை பிடித்து உள்ளே இழுத்து, ஆழம் வரை கொண்டு சென்று, அடியிலுள்ள ஏதாவதொரு பாறையிடுக்கில், வெளியே வராதபடி செருகி வைத்து, பின், அதே ஆள் பிணமான பின், 'இவ்வளவு கொடுத்தாத்தான், உள்ளே மூழ்கி, பிணத்தை எடுக்க முடியும்' என்று, கறாராகப் பேரம் பேசி, பெரிய தொகையை வாங்கிக் கொண்டு, தாம் செருகி வைத்த இடத்திற்கு சென்று, பிணத்தை மேலே கொண்டு வந்து தருவது தான் ஆளிழுத்தல். இந்த கொடுமை, பல ஆண்டுகளாக நடந்து வருவது அனைவருக்குமே தெரியும். ஆனாலும், தொடர்ந்து நடந்து கொண்டே தானிருக்கிறது.
தலையை வேகமாக இடமும், வலமும் ஆட்டிய வீரண்ணன், “பாவம்டி... அந்த மாதிரி, பாவ காரியத்தையெல்லாம், நான் செய்ய மாட்டேன்டி,'' ஆணித்தரமாக சொன்னான்.
''யோவ்... இப்பவாச்சும் நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுய்யா. காலேஜ் பசங்க, ஆத்துக்கு குளிக்க வர்றாங்கல்ல... அதுல எவனாச்சும் ஒருத்தன் நீச்சல் தெரியாதவனா இருப்பான். அவன உள்ளார கொண்டு போய் சொருகிடு. யோசிக்காதய்யா. இதத் தவிர, இப்ப வேற வழியே இல்லை.''
''ஏ பாவப் பணத்துல, உம்பொண்ணுக்கு பிரசவம் ஆகணுமாடி?”
''ஹூம்... இப்படி, 'பாவப்பணம் பாவப்பணம்'ன்னு பார்த்திட்டே இருக்கற தினாலதான், நீ இப்படியே அஞ்சுக்கும், பத்துக்கும் அல்லாடிட்டிருக்கே. இதே, அந்த ரங்கனை பாரு. எப்படியும் மாசம் ரெண்டு ஆளை இழுத்துடறான். பெரிய தொகை பார்த்திடறான்,'' என்று, விடாமல் நச்சரித்தாள் சிகப்பி.
கிட்டத்தட்ட பதினைந்து நிமிடம், அவனை மூளைச்சலவை செய்தவள், மறுபடியும், பாத்திரக் குவியலின் நடுவே சென்று அமர்ந்தாள். மழை ஓய்ந்தும், துாறல் விடாதிருப்பது போல், அவள் வாய், தொடர்ந்து, முணுமுணுத்துக் கொண்டேயிருந்தது.
கையை சுட்ட பீடியை வீசியெறிந்து விட்டு, அடுத்த பீடியை பற்ற வைத்தான் வீரண்ணன்.'இந்த நெலமையில, இவ சொல்றதும் சரிதான். அங்க மூத்த மக பிரசவத்துக்குக் தயாராயிருக்கா. சம்மந்தியம்மா தனியார் ஆஸ்பத்திரிதான் வேணுமின்னு, பிடிவாதம் பிடிக்கறா... இவதான் என்ன செய்வா...'
பலவாறாக யோசித்து, மிகுந்த மனப்போராட்டத்திற்கு பின், எழுந்து, ஆற்றங்கரையை நோக்கி நடந்தான், ஒரு வித மன உறுத்தலோடு.
ஆற்றங்கரையில், கூட்டம் அவ்வளவாக இல்லை. ஆங்காங்கே, வாலிபப் பசங்க கூட்டம் மட்டும், 'காச்... மூச்' சென்று கத்திக் கொண்டு, தண்ணீரில் குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்தது.
சற்றுத் தள்ளி கூட்டம் குறைவான பகுதியில், ஐந்தாறு இளைஞர்கள், நீரில் விளையாடிக் கொண்டிருக்க, அவர்களை குறி வைத்தான் வீரண்ணன்.
நீருக்குள் இறங்கி மூச்சடக்கி, ஆழ்பகுதிக்குச் சென்று, அந்த இளைஞர்கள் இருக்கும் பகுதியை அடைந்தான். மெல்ல மேல் நோக்கி வந்து, கையில் சிக்கிய, ஒரு காலை இழுத்து, மறுபடியும் ஆழத்திற்குச் சென்றான். பாறைகள் நிறைந்த பகுதி வரை இழுத்துச் சென்றவன், பாறை இடுக்கில், அந்தக் காலைச் செருகி விட்டு, நீருக்கடியிலேயே நகர்ந்து, நீண்ட துாரம் சென்ற பின், மேலெழும்பி வந்தான். எதுவுமே நடக்காதது போல், நீரிலிருந்து வெளியேறி, கரையில் நடந்து சென்ற வீரண்ணனை, யாருமே கண்டு கொள்ளவில்லை.
அங்கிருந்து புறப்பட்டு, அரைக் கிலோ மீட்டர் தள்ளியிருக்கும், ஒரு டீக்கடையில் வந்தமர்ந்து, அழைப்புக்காகக் காத்திருந்தான்.
ஒரு டீ, ஒரு பீடி, ஒரு டீ, ஒரு பீடி என, மாறி மாறி உறிஞ்சிக் கொண்டிருந்தவனை நோக்கி, ஒரு கூட்டம் கத்திக் கொண்டே ஓடி வர, எதுவும் தெரியாதவன் போல் விசாரித்தான். ''ஏம்பா... என்னாச்சு? எதுக்கு இப்படி ஓடி வர்றீங்க?''
''அய்யா... அய்யா எங்களோட வந்த ஒருத்தனைக் காணல. உள்ளார போயிட்டான் போலிருக்கு... காப்பாத்துங்கய்யா ப்ளீஸ்,” கதறியவன் கண்களில், வண்டி வண்டியாப் பீதி.
'அடடே...' என்றபடி, அவசரமா எழுந்து, வேட்டியை மடித்து, வேக வேகமா ஓடினான் வீரண்ணன். அந்த இளைஞர் கூட்டமும் கூடவே ஓடி வந்தது.
''எந்த எடத்திலப்பா குளிச்சிட்டிருந்தீங்க?'' தெரியாதவன் போல், கேட்டான்.
ஒரு இளைஞன் சுட்டிக் காட்டிய இடத்தைப் பார்த்து, உதட்டைப் பிதுக்கி, ''அய்யய்ய... அங்க நிறைய சுழலு இருக்குதப்பா, அங்க ஏன் போனீங்க?''
''எங்களுக்குத் தெரியாதுங்கய்யா...''
''சரி சரி... ஆளு காணாமப்போயி எவ்வளவு நேரமாச்சு?''
''முக்கால் மணி நேரம் இருக்கும்ங்கய்யா.''
''பச்... அப்ப கஷ்டந்தான். சுழலுல சிக்கி, உள்ளார பாறையில போய் மாட்டியிருந்தா, இந்நேரத்துக்கு உசுரு போயிருக்கும்.''
வீரண்ணன் சொன்னதும், அந்த இளைஞர்கள் கோரசாக அழ, ''சரி சரி இருங்க பார்த்துடலாம்.''
அவர்கள் குறிப்பிட்ட இடத்தில் முங்கி, சில நிமிடங்களுக்குப் பின், மேலே வந்து, ''உள்ளார ஆள் இருப்பதாகத் தெரியலையே...'' என்றான் வீரண்ணன்.
''அடிச்சிட்டு போயிருக்குமோ என்னவோ...'' கூட்டத்தில், ஒருவன், பொத்தாம் பொதுவாச் சொல்ல, “அப்படி அடிச்சிட்டு போயிருந்தா... இன்னேரத்துக்கு, அஞ்சாறு கிலோ மீட்டராவது தாண்டி போயிருக்கும்,” என்றான் வீரண்ணன்.
அழுது கொண்டிருந்த இளைஞர் கூட்டத்தில், சற்று தைரியமான ஒருவன் முன் வந்து, ''அய்யா என்ன ஆனாலும் சரி, எவ்வளவு பணம் ஆனாலும் சரி, எங்களுக்கு, ஒடம்பையாவது எடுத்துக் குடுத்துடுங்க... இப்பதான் அவங்க அம்மாவிற்கு போன் செய்திருக்கேன், அவங்க வந்திட்டிருக்காங்க.''
'ஆஹா... அப்ப பெரிய தொகை கறந்திடலாம். அந்தப் பையனைப் பெத்தவங்க வர்ற வரைக்கும், தேடுற மாதிரி பாவ்லா செய்துட்டு, அவங்க வந்தப்புறம் பாடிய எடுத்து, காசு வாங்கிடணும்...' மனசுக்குள், கணக்குப் போட்டான் வீரண்ணன்.
கோவை சாந்தா மருத்துவமனை --
நகரின் மத்தியில், பளிச்சென்று ஓங்கி உயர்ந்திருந்தது, அந்த மருத்துவமனை கட்டடம். நவீன மருத்துவ முறைகள், மருத்துவக் கருவிகள், மருந்துகள் என்று, எல்லா விதத்திலும் நவீனத்துவம் பெற்றிருந்த, அந்த மருத்துவமனையின் தலைவரும், சீப் டாக்டருமான டாக்டர் சாந்தாமணி, தலைமை நர்ஸ் சுமதியிடம், கிசு கிசு குரலில் பேசிக்கொண்டிருந்தார்.
''சிஸ்டர், அந்த இருபத்தி ஆறாம் நம்பர் பெட், லேடிக்கு வலி வந்திடுச்சா?''
''இல்லை டாக்டர். அவங்களோட டேட் வர்றதுக்கு, இன்னும் ரெண்டு நாளிருக்கு...''
'ம்ம்ம்ம்' என்று யோசித்த டாக்டர் சாந்தாமணி, ''இன்னிக்கு ஈவினிங்கே, அந்தப் பெண்ணுக்கு சிசேரியன், செய்திடுங்க சிஸ்டர்,'' என்றார்.
''டாக்டர்... அவங்க வீட்ல எல்லாருக்குமே தெரியும். அவங்களுக்கு நாம் குடுத்திருக்கிற டேட்டுக்கு இன்னும் ரெண்டு நாள் இருக்குன்னு. இந்த சமயத்துல நாம சிசேரியன் செய்தா, அவங்க ஏதாச்சும் பிரச்னையைக் கிளப்பிடப் போறாங்க,'' நர்ஸ் சுமதி பயந்தாள்.
''பச்... என்ன சிஸ்டர்... இது, ஒரு பிரச்னையா? ஏதாவதொரு பொய்யைச் சொல்ல வேண்டியது தானே... இந்த நிலமையில, நாம என்ன சொன்னாலும் அவங்க நம்பிடுவாங்க. அதனால், பயந்து, 'உடனே சிசேரியன் செய்துடுங்கன்'னு, அவங்க வாயாலேயே சொல்லிடுவாங்க!''
தன் முந்தைய அனுபவங்களின் காரணமாக, சற்றும் தயக்கமின்றிச் சொன்னார் டாக்டர் சாந்தாமணி.
விருப்பமே இல்லாத, நர்ஸ், டாக்டரின் முகத்தையே ஊடுருவி பார்த்தார்.
''த பாருங்க சிஸ்டர்... எனக்குத் தெரியும், ரெண்டு நாளைக்கு பின், அந்தப் பெண்ணுக்கு, நிச்சயம், நார்மல் டெலிவரி ஆயிடும்ங்றது... ஆனா, அதுல நமக்கென்ன லாபம்? நார்மல் டெலிவரிக்கு, நார்மல் ரேட்டுத்தானே, அதே சிசேரியனா இருந்தா, ஒரு பெரிய தொகை கட்டியாகணுமே அவங்க...''
பணத்தாசை பிடித்த பிசாசு, பேசியது.
''ஒரு சின்ன பாலி கிளினிக் வெச்சு நடத்திட்டிருந்த நான், இன்னிக்கு, இவ்வளவு பெரிய மருத்துவமனை கட்டியிருக்கேன்னா, அது, வெறும் நார்மல் டெலிவரியால அல்ல, முழுக்க முழுக்க சிசேரியனால தான், புரிஞ்சுதா? போங்க சிஸ்டர் போயி, இன்னிக்கே சிசேரியன் செய்ய ஏற்பாடு செய்யுங்க.''
அரை மனதுடன், அங்கிருந்து சென்றாள் நர்ஸ் சுமதி.
ஒரு இயற்கை ஜனனத்தை, செயற்கை ஜனனமாக்கி, அதன் மூலம் கிடைக்கும் பணத்திற்காக, வாய் பிளந்திருக்கும், டாக்டர் சாந்தாமணியின், கை பேசி அதிர, எடுத்து பார்த்தார். அவர் மகன் சதிஷின் அழைப்பு. ''சொல்லு சதீஷ்,''என்றார்.
''ஆன்ட்டி... நான் சதீஷ் பிரெண்ட் விக்னேஷ் பேசறேன்,''குரல் நடுங்கியது.
''ம்... சொல்லுப்பா என்ன விஷயம்? ஏன் உன் குரல், ஒரு மாதிரி பதட்டமாயிருக்கு?''
''ஆன்ட்டி நாங்க பிரெண்ட்ஸ்சுக எல்லாரும், இங்க மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு வந்தோம். இங்க இங்க... சதீஷ்...''
''சொல்லுப்பா... சதீஷுக்கு என்ன?''
''வந்து... சதீஷ் இங்க, ஆத்துல குளிக்கறப்ப தண்ணீல மூழ்கிட்டான் ஆன்ட்டி. நீங்க உடனே கிளம்பி வாங்க ஆன்ட்டி. இங்க பாடிய எடுக்க நிறைய பணம் கேட்கறாங்க ஆன்ட்டி,''அழுது கொண்டே சொன்னான் அந்த விக்னேஷ்.
''சதீஷ்...'' கத்தியபடியே, மயக்கமானாள் டாக்டர் சாந்தாமணி.
டாக்டர் சாந்தாமணி, தன் பரிவாரங்களோடு, அந்த ஆற்றங்கரைப் பகுதிக்கு வந்து சேர்ந்த போது, மாலை 6:00 மணிக்கு மேலிருக்கும்.
கண்ணீரும், கம்பலையுமாக காரிலிருந்து இறங்கி வந்த டாக்டர் சாந்தமணியை நோக்கி, ஓடிய சதீஷின் நண்பர் கூட்டம், நடந்ததை விவரித்தது.
'ஓ'வென்று, உச்சஸ்தாயில கதறினாள் டாக்டர் சாந்தாமணி.
''தம்பிகளா பொழுது இருட்டிருச்சு... இதுக்கு மேல உள்ளார போயித் தேடுறது ரொம்ப கஷ்டம். அதனால, நாளைக்குக் காத்தால வந்து பார்க்கலாம்,'' என்று, சற்றுத் தொலைவிலிருந்து கத்தலாகச் சொன்னான் வீரண்ணன்.
சாந்தாமணியுடன் வந்திருந்த இன்னொரு மூத்த டாக்டர், வீரண்ணனை நெருங்கி, ''அப்படிச் சொல்லாதீங்க... எப்படியாவது, இப்பவே எடுத்துக் குடுத்துடுங்க ப்ளீஸ்.''
வீரண்ணன் உதட்டைப் பிதுக்க...
''கொஞ்சம் முயற்சி செய்யுங்க... எவ்வளவு செலவானாலும் சரி.''
சாந்தாமணி தானே இறங்கி வந்து, வீரண்ணனிடம் கெஞ்ச, வீரண்ணன் மனமிரங்கியவன் போல் நடித்து, மீண்டும், நீரினுள் மூழ்கினான்.
சிறிது நேரத்திற்குப் பின், பாவ்லா போதுமென முடிவு செய்த வீரண்ணன், தான் செருகி வைத்திருந்த இடத்திலிருந்த, அந்த உடலை இழுத்துக் கொண்டு, மேலே வந்தான்.
சடலத்தைச் சுற்றியமர்ந்து நீண்ட நேரம் அழுது கொண்டிருந்தவர்களிடம், ''நான் கிளம்பணும்... என்னைச் சீக்கிரம் கவனிச்சு அனுப்புங்க,'' என்றான் வீரண்ணன், பொத்தாம் பொதுவாக. ஐயாயிரம் ரூபாய் கைமாறியதும், ஒரு செயற்கை மரணத்தை, இயற்கை மரணமாக்கிக் காண்பித்து, அதன் மூலம் கிடைத்த பணத்தை, இடுப்பில் செருகிக் கொண்டு, நடையை கட்டினான் வீரண்ணன்.
மகனின் பிணத்தின் மீது விழுந்து, அழுது புரண்ட சாந்தாமணி, திடீரென தன் அழுகையை நிறுத்தி, பக்கத்திலிருந்த அந்த மூத்த டாக்டரிடம்,''சார் கொஞ்சம் மொபைல கொடுங்க,'' என்று, கரகரத்த குரலில் கேட்டார்.
மொபைலை வாங்கி, நர்ஸ் சுமதிக்கு டயல் செய்து, ''சிஸ்டர்... அந்த இருபத்தி ஆறாம் நெம்பர் பெட் லேடிக்கு என்ன செஞ்சீங்க?''
''ஒண்ணுமே செய்யலை டாக்டர். நீங்க வந்ததும் தான், சிசேரியன் செய்யணும். உங்களுக்காகத் தான் காத்துகிட்டு இருக்கோம் டாக்டர்.''
''நோ... அந்தம்மாவுக்கு, சிசேரியன் செய்ய வேண்டாம். ரெண்டு நாள் கழிச்சு, நார்மல் டெலிவரியே ஆகட்டும்.''
''ஓ.கே., டாக்டர்,'' என்ற, நர்ஸ் சுமதியின் குரலில், ஒரு சந்தோஷம் தெரிந்தது.
''ம்... அது மட்டுமல்ல சிஸ்டர்... இனிமேல், நம்ம மருத்துவமனையில சிசேரியனே செய்ய வேண்டாம், செய்யக்கூடாது. இது என் உத்தரவு,''என்று, சொல்லிவிட்டு, சாந்தாமணி இணைப்பைத் துண்டித்து விட...
'என்னாச்சு திடீர்ன்னு, இந்த டாக்டருக்கு...' என யோசித்தபடியே, இருபத்தி ஆறாம் நம்பர் பெட்டிற்குச் சென்ற நர்ஸ் சுமதி, ''ம்மா... டாக்டர் உனக்கு சிசேரியன் செய்ய வேண்டாம்ன்னுட்டார். ரெண்டு நாள் வெயிட் செய்வோம், நார்மல் டெலிவரியே ஆகட்டும்னுட்டார். அதனால, நீங்க பணம் எதுவும் கட்ட வேண்டாம்,” என்று சொல்லி விட்டு நடந்தாள்.
தனக்காக பணம் புரட்ட, தன் தந்தை மிகவும் சிரமப்படுவாரே என்ற, பெரும் கவலையிலிருந்து விடுபட்டு, மனசுக்குள், கடவுளுக்கு நன்றி சொன்னாள் வீரண்ணனின் மூத்த மகள்.
பி.கவுசல்யா
கல்வித் தகுதி: எம்.ஏ.,எம்.பில்., பி.எச்டி.,
பணி: கோவை, சி.எம்.எஸ்., கலை வணிகவியல் கல்லூரியில், தமிழ்த்துறை உதவி பேராசிரியர். கதை, கவிதை மற்றும் வாழ்வியல் கட்டுரைகள் ஏராளமாக எழுதியுள்ளார். ஆன்மிக சொற்பொழிவு, பட்டிமன்றப் பேச்சு மற்றும் வழக்காடு மன்றங்களில் பங்கு பெற்றுள்ளார். டி.வி.ஆர்., நினைவு சிறுகதை போட்டியில், முதல் பரிசு பெறுவது இவரது லட்சியம்.

