தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கதாநாயகனின் கதை - சிவாஜி கணேசன் (6)

கதாநாயகனின் கதை - சிவாஜி கணேசன் (6)

கதாநாயகனின் கதை - சிவாஜி கணேசன் (6)


PUBLISHED ON : நவ 09, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 09, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பழனியில் மூன்று மாதங்கள் தங்கி இருந்தோம்.

'கிருஷ்ணலீலா' தவிர, 'ராமாயணம், பவளக்கொடி, பதி பக்தி மற்றும் கதரின் வெற்றி' போன்ற நாடகங்களையும் இங்கு நடத்தினோம். இந்த நாடகங்களில் எல்லாம் எனக்கு வேடம் உண்டு.

'பதி பக்தி'யில், கதாநாயகனின் சகோதரியாக நடிப்பேன். 'கதரின் வெற்றி'யில் இரண்டு சிறுவர்கள் வருவர்; அவர்களில் ஒருவனாக வருவேன். 'பவளக்கொடி'யில் சில சமயம் பவளக்கொடியாகவும் நடிப்பேன்.

பழனியில் இருந்தபோது தான், என் தாயாரிடமிருந்து கடிதம் வந்தது. அக்கடிதத்தைப் பார்த்ததும், என் தாயைப் பார்ப்பது போலவே இருந்தது. பாசத்தையும், என் பிரிவின் ஏக்கத்தையும், கடிதத்தின் வாசகங்களில் தேக்கி எழுதி இருந்தார்.

என் நலனைப் பற்றி அக்கறையுடன் விசாரித்து, 'எப்போது ஊருக்கு வருகிறாய்?' என்று கேட்டு எழுதியிருந்தார்.

'ஊருக்கு எப்போது வருவேன் என்று எனக்கே தெரியாது...' என்று பதில் போட்டேன்.

தவிர, ஊருக்குப் போக வேண்டும் என்ற ஆர்வத்தைவிட, நடிப்பிலும், பாடங்களிலும் தான் எனக்கு அதிக அக்கறையும், ஆர்வமும் அப்போது இருந்தது.

அப்படியானால், 'குடும்பப் பாசமே உங்களுக்கு இல்லையா?' என்று கேட்காதீர்கள்.

அதுவும் இருந்தது; அதைவிட தொழிலில் இருந்த கவனமே வென்றது.

எங்களது அடுத்த முகாம் - மதுரை!

மதுரையில் பிரமாண்டமான முறையில், 'கிருஷ்ண லீலா' நாடகத்தை நடத்த ஆரம்பித்தோம். பழைய கோல்டன் கம்பெனியிலிருந்து சீன், செட்டிங் மற்ற எல்லா பொருட்களையும் வாங்கி இருந்தோம்.

நாடகத்தில் ஒவ்வொரு காட்சியும் பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும்படி இருக்கும்.

இந்த நாடகத்தில், வைகுண்டத்தின் கதவுகள் திறக்கும் காட்சியை பார்ப்பதற்காகவே, மக்கள் அடிக்கடி வருவர்; இக்காட்சிக்காக, பிரமாண்டமான கதவுகள் இருக்கும்.

ஒரு நாளைக்கு இரு காட்சிகள் வீதம், மூன்று மாதம், 'கிருஷ்ண லீலா' நாடகம் மதுரையில் நடந்தது.

மதுரையில் கம்பெனி முகாமிட்டிருந்த காலத்தை பொற்காலம் என்றே சொல்லலாம். பாலும், தேனும் கம்பெனியில் ஆறாக ஓடிய காலம் அது. தாராளமாக செலவு செய்தனர். அப்படிச் செலவு செய்யும் அளவுக்கு, வசூலாகி, நிறைய வருமானமும் வந்தது.

இவ்வளவு சிறப்பாக கம்பெனி நடந்து கொண்டிருந்த போது தான், இரண்டு துயரமான சம்பவங்கள் நடைபெற்றன. 'கிருஷ்ண லீலா'வில் ஒரு காட்சி - கம்சன் தன் தங்கை தேவகியின் திருமணத்தை மிகச் சிறப்பாகக் கொண்டாடி விட்டு, தங்கையையும், தன் மைத்துனனையும் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஏற்றிக் கொண்டு வருவான்.

அப்படி வரும்போது, ஆகாயத்திலிருந்து, 'கம்சா... உன் தங்கையின் வயிற்றில் பிறக்கும் எட்டாவது குழந்தையால் உன் உயிருக்கு ஆபத்து வரப் போகிறது...' என்று அசரீரி ஒலிக்கும்.

இக்காட்சியை, தந்திரக் காட்சியாக அமைத் திருந்தனர்.

கம்சன் ரதத்தை ஓட்டி வரும்போது மின்னல் ஒன்று பளிச்சிடும்; உடனே மேடைக்கு மேலே தலை மாதிரி ஓர் உருவம் வரும். அதன் பின், நட்சத்திரம் ஒன்று சுழன்று கொண்டே இருக்கும்; அதிலிருந்து குரல் வரும்.

மக்கள் இக்காட்சி வரும்போது கைதட்டி, தங்கள் ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்துவர்.

அன்று, அந்த நட்சத்திரம் சுற்றவில்லை. எங்கள் கம்பெனியில் சுப்பையா என்பவர்தான் எலக்ட்ரீஷியன்; மின்சாரம் சம்பந்தப்பட்ட எல்லா வேலைகளையும் அவர்தான் செய்வார்.

நட்சத்திரம் சுற்றாமல் இருப்பதைக் கண்ட அவர், உடனே மேடை மீதுள்ள உத்தரத்திற்குத் தாவி, அதைச் சுற்ற முயன்றார். அவ்வளவுதான்! மின்சாரம் பாய்ந்து விட்டது. அங்கேயே தலைகீழாக, வவ்வாலைப் போல தொங்கி விட்டார்.

அப்போது, பிரபல ஹாஸ்ய நடிகர் எம்.ஈ. மாதவன், எங்கள் கம்பெனியில் இருந்தார். அவர் வாத்தியக்காரர்கள் வாசிக்கும் இடத்தில் உட்கார்ந்திருந்தார்.

மின்சாரம் பாய்ந்து சுப்பையா தலை கீழாக தொங்குவதைப் பார்த்த அவர், உடனே ஓடிப் போய், 'மெயின் ஸ்விட்சை' அணைத்து விட்டார்.

சுப்பையாவை கீழே இறக்கி என்னவெல்லாமோ சிகிச்சை செய்து பார்த்தோம்; சுப்பையா பிழைக்கவே இல்லை.

சுப்பையா இறந்த மறுநாள், எங்களில் யாருக்கும் வேலையே ஓடவில்லை.

இந்த ஏக்கம், எங்கள் கம்பெனி நடிகர்களிடையே எந்த அளவுக்கு ஆழமாக இருந்தது என்பதற்கு மற்றொரு சோகமான சம்பவத்தையும் சொல்கிறேன்.

கேரளாவை சேர்ந்த ஒரு பையன் எங்கள் கம்பெனியில் இருந்தான். சிவப்பாக, அழகாக இருப்பான்.

பெண் வேடத்தில் மேடையில் நடனம் ஆடுவான் பாருங்கள்... ஆகா... அழகு அப்படியே சொட்டும்!

ஒரு நாள் நாடகம் முடிந்த பின், நாங்கள் எல்லாரும் தூங்கிக் கொண்டு இருந்தோம்.

இந்தப் பையன் தூக்கத்திலிருந்து எழுந்து, பிரமை பிடித்தவன் போல் தோட்டத்துப் பக்கம் சென்றிருக்கிறான்.

எங்களை கவனித்துக் கொள்ள ஒரு பயில்வான் இருப்பார்; அவர் தோட்டத்துப் பக்கத்தில் படுத்திருப்பார்.

இந்த பையன் வரும் சத்தத்தைக் கேட்டு விழித்துக் கொண்ட பயில்வான், அவனை நிறுத்தி, 'எங்கேடா போறே?' என்று கேட்டார்.

அவன், 'சுப்பையா கூப்பிடுறாரு; நான் போறேன்...' என்று பதில் சொன்னான்.

'சுப்பையாதான் செத்துப் போயிட் டானே... நீ வா, உள்ளே போய் படுக்கலாம்...' என்று சொல்லி, அவனை அழைத்து வந்து, படுக்க வைத்தார் பயில்வான்.

அன்று படுத்தவன், மீண்டும் எழுந்திருக்கவே இல்லை.

சுப்பையாவின் மரணத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சி, அவனை இரண்டு நாட்கள் வரை படுக்கையில் கிடத்தி, மூன்றாம் நாள் சுப்பையாவிடமே சேர்த்து விட்டது.

இதை ஏன் இங்கே சொல்கிறேன் என்றால், ஜாதி, மதம், பணக்காரன், ஏழை என்ற வித்தியாசமில்லாமல் வளர்ந்தது தான் இதற்கு காரணம். இந்த பாரபட்சமற்ற மனநிலையை குருகுல வாசம் எங்களுக்கு கற்றுத் தந்தது.

அதனால் தான் இன்றும் அதே எண்ணத்துடன் என்னால் இருக்க முடிகிறது.

இவ்வளவு சீரும், சிறப்புமாக மதுரையில் நாடகம் நடத்திவிட்டு, மேலூர் வந்து சேர்ந்தோம்.

மேலூரில் காலடி எடுத்து வைத்ததும், மதுரைக்கு நேர் மாறாக, வறுமைதான் எங்களை வரவேற்க காத்திருந்தது.

அந்த ஊரில் கீற்றுக் கொட்டகையைப் போட்டு, எங்கள் சொந்த, ஜெனரேட்டரை வைத்து மின்சாரத்தை உண்டாக்கி, நாடகம் நடத்த ஆரம்பித்தோம்.

ஊரில் மக்களைவிட தேள், நட்டுவாக்காளி, பாம்பு இவைதான் அதிகம். தலையில் வைக்க டோப்பாவை, மாட்டிய இடத்திலிருந்து எடுத்தால், அதில் இரண்டு தேள் இருக்கும். ஆனால், நல்ல வேளை, மேலூரில் நாங்கள் இருந்த வரை இந்த விஷ ஜந்துக்கள், எங்களை ஒன்றும் செய்யவில்லை.

இந்த நிலையில் நாங்கள் கஷ்டப்பட்டு நாடகம் நடத்தியும் வசூல் கிடைக்கவில்லை.

ஒரு நாளைக்கு, ஒரு வேளை சோறு என்ற நிலைமை கூட மாறி, பல நாட்கள், வெறும் மோர் சாதம் மட்டுமே சாப்பிட்டு, இங்கு காலத்தை ஓட்டினோம்.

ஆனால், அப்படி இருந்தும் வறுமையின் கொடுமையோ, பசியின் வேகமோ எங்களுக்கு தோன்றியதில்லை. ஒரே நினைப்புடன், அதாவது நடிப்பது என்ற ஒரே எண்ணத்துடன் சிறுவர்களாகிய நாங்கள் எல்லாரும் பழகி வந்ததுதான் இதற்கு காரணமாக இருக்கும்.

எங்களின் அடுத்த முகாம் பரமக்குடி அங்கு...

தொடரும்.

தொகுப்பு: வைரஜாதன்,

நன்றி 'பொம்மை'

விஜயா பப்ளிகேஷன்ஸ்,

சென்னை.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us