தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/சூரசம்ஹாரம்!

சூரசம்ஹாரம்!

சூரசம்ஹாரம்!


PUBLISHED ON : நவ 19, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 19, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று வெற்றி கொண்டு ஆட்கொண்டார், முருகப்பெருமான். இந்நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது.

இந்நிகழ்வு, திருச்செந்துார் தலத்தில் நடந்ததால், கந்தசஷ்டி விழா இங்கு, வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

சூரபத்மன் வதம் தவிர்த்து, கந்த சஷ்டி விழா கொண்டாட, வேறு இரண்டு காரணங்கள் இருப்பதாக, மகாபாரதம் மற்றும் கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

ஒருசமயம், உலக நன்மைக்காக ஒரு புத்திரன் வேண்டுமென, யாகம் நடத்தினர், முனிவர்கள் சிலர். ஐப்பசி மாத அமாவாசையன்று யாகத்தை துவங்கி, ஆறு நாட்கள் நடத்தினர். யாக குண்டத்தில் எழுந்த தீயிலிருந்து, ஒவ்வொரு நாளும் ஒரு வித்து வீதமாக, ஆறு வித்துக்கள் சேகரிக்கப்பட்டன.

அந்த வித்துக்களை ஆறாம் நாளில் ஒன்றாக்கிட, முருகப்பெருமான் அவதரித்தார். இவ்வாறு முருகன் அவதரித்த நாளே கந்தசஷ்டி என, மகாபாரதம் கூறுகிறது.

அசுரர்களை எதிர்க்கும் வல்லமை பெறவும், முருகனது அருள் வேண்டியும், ஐப்பசி மாத வளர்பிறையிலிருந்து ஆறுநாட்கள் கும்பத்தில் அவரை எழுந்தருளச் செய்து, நோன்பு இருந்தனர், தேவர்கள். முருகனும், அவர்களுக்கு அருள் செய்தார்.

இதை நினைவுறுத்தும் விதமாகவே, ஐப்பசி அமாவாசையை அடுத்து, கந்தசஷ்டி கொண்டாடப்படுகிறது என்கிறார், கந்தபுராணத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார்.

திருச்செந்துாரில், ஜெயந்திநாதர், சூரனை சம்ஹாரம் செய்த பின், பிரகாரத்திலுள்ள மகாதேவர் சன்னதிக்கு எழுந்தருளுவார். அப்போது, சுவாமியின் எதிரே ஒரு கண்ணாடி வைக்கப்படும்.

கண்ணாடியில் தெரியும் ஜெயந்திநாதரின் பிம்பத்திற்கு அபிஷேகம் செய்வார், அர்ச்சகர். இதை சாயாபிஷேகம் என்பர். 'சாயா' என்றால், 'நிழல்' என, பொருள். போரில் வெற்றி பெற்ற முருகனை குளிர்விக்கும் விதமாக, இந்த அபிஷேகம் நடக்கும்.

இதை, முருகப் பெருமானே, கண்ணாடியில் கண்டு மகிழ்வதாக ஐதீகம். இந்நிகழ்ச்சிக்கு பின், சன்னதிக்கு திரும்புவார், முருகன். அத்துடன், சூரசம்ஹார வைபவம் நிறைவடையும்.

சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள், முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அசுரனை எதிர்த்து வெற்றி பெற்றதற்காக, தெய்வானையை முருகனுக்கு திருமணம் செய்து தந்ததோடு, தேவ மயிலாகவும் மாறி சேவை செய்தார், இந்திரன். இவர்களது திருமணம் முதல் படை வீடான, திருப்பரங்குன்றத்தில் நடந்தது.

சூரனை ஆட்கொண்ட தலம் என்பதால் திருச்செந்துாரில் கந்தசஷ்டிக்கு மறுநாள், முருகன் - தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று காலையில், தபசு மண்டபம் சென்று, முருகனை மணந்து கொள்ள வேண்டி தவமிருப்பாள், தெய்வானை.

மாலையில், குமரவிடங்கர் (முருகனின் ஒரு உற்சவர் வடிவம்), முருகனின் பிரதிநிதியாக மயில் வாகனத்தில் தபசு மண்டபம் சென்று தெய்வானைக்கு மாலை சூட்டி, நிச்சயதார்த்தம் செய்து கொள்கிறார். நள்ளிரவில் இருவரும் திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருள, அங்கு திருமணம் நடக்கும்.

மறுநாள், முருகனுக்கு மஞ்சள் நீராட்டும் வைபவம் நடக்கும். கந்தசஷ்டி விழாவின் கடைசி நாளில் முருகன், தெய்வானையுடன் வீதியுலா செல்வார். அப்போது, தங்கள் ஊரில் திருமணம் செய்து கொண்ட முருகனை வரவேற்கும் விதமாகவும், போரில் வென்றதன் உக்கிரத்தைக் குறைக்கும் விதமாகவும், அவர் மீது, மஞ்சள் நீர் ஊற்றி மகிழ்வர், பக்தர்கள்.

ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் பொருளை தந்தைக்கே குருவாக இருந்து உபதேசித்தவர், முருகப் பெருமான். அதே மந்திரத்தின் பொருள் தெரியாத பிரம்மாவை, சிறையில் அடைத்தவர்.

சூரனை சம்ஹாரம் செய்து, பின், மகாவிஷ்ணுவின் மகளை மணந்து கொண்டவர். மாமனான மகாவிஷ்ணுவின் பாசத்திற்கு கட்டுப்பட்டவர்.

இவ்வாறு முருகன், மும்மூர்த்திகளோடும் தொடர்புடையவராக இருக்கிறார்.

விழாவின், 7ம் நாளன்று மாலை, இவர் சிவப்பு நிற வஸ்திரத்தில் சிவபெருமானாகவும், 8ம் நாள் அதிகாலை, வெண்ணிற ஆடையில் பிரம்மாவின் அம்சமாகவும், மதிய வேளையில், பச்சை வஸ்திரத்தில் பெருமாள் அம்சத்திலும் காட்சியளிப்பார்.

தொகுப்பு: ஜெ. மாணிக்ஸ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us