
எஸ்.கல்பனா, பெருந்துறை: பெரும்பாலான ஆங்கில வார்த்தைகள் தமிழர்களின் உச்சரிப்புக்கும், வெளிமாநில மக்கள் உச்சரிப்புக்கும் மாறுபடுகிறது. குறிப்பாக, கேரளாவில், 'காலேஜ்' என்பதை, 'கோலேஜ்' என்றும், 'டாக்டர்' என்பதை, 'டோக்டர்' என்றும், லாரிக்கு, 'லோரி' என்றும் கூறுகின்றனர். கேரள மக்கள் உச்சரிப்பது தான் சரியா.... ஏன்?
ஆங்கிலம் வெளிநாட்டு மொழி; பல மொழி பேசும் மக்களை இணைக்க இம்மொழி உதவுகிறது. இதில், மலையாளி பேசும் ஆங்கிலம் அழகாக இருக்கிறதா, தமிழன் பேசும் ஆங்கிலம் அழகாக இருக்கிறதா என்ற சர்ச்சை வேண்டாம். இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வது புரிந்தால் போதும்.
அமெரிக்கர்களின் உச்சரிப்பை இங்கிலாந்தில் கிண்டல் செய்வர். இந்த கிண்டலை தாங்க முடியாத அமெரிக்கர்கள், 'நாங்கள் பேசுவது இங்கிலீஷ் இல்லை; இது அமெரிக்கன் மொழி!' என, ஒரு போடு போட்ட பின்னர் தான் இப்பிரச்னை முடிந்தது.
வி.நடராஜ மூர்த்தி, கொடைக்கானல்: திராவிட கட்சிகள் எத்தனை துண்டானாலும் வலுவாக உள்ளது. ஆனால், தமிழகத்தில் காங்கிரஸ் மட்டும் வலுப்பெறாமலேயே உள்ளதே... ஏன்?
காங்கிரசின் டில்லி தலைமை தான் இதற்கு காரணம். மக்கள் செல்வாக்குள்ள வலுவான தலைவர் ஆங்காங்கே ஒவ்வொரு மாநிலத்திலும் உருவாகி விட்டால், தம் பதவிக்கு வேட்டு வந்து விடுமோ என்ற அச்சமே இதற்கு காரணம்!
எஸ்.சாகுல் அமீது, திண்டுக்கல்: சாகும் வரை மனிதன் விட்டுச் செல்வது எதை?
கடன்! வாங்கிய கடனை விட்டு செல்கிறான். மறைந்தவர்களை மதிப்புக்கும், மரியாதைக்கும் உரியவர்களாக கருத வேண்டுமென்றால், கடன் இல்லாமல் கண்மூடி இருக்க வேண்டும்!
என்.ரவீந்தர், பொள்ளாச்சி: அனுதாபத்திற்கு உரியவர்களாக யாரை கருதுகிறீர்கள்?
அரசியல்வாதிகளை! பதவியை விட்டு இறங்கிய பின்தான் அவர்களுக்கு எத்தனை விதமான அவமதிப்புகள்... நம் கண் முன்னே பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம்!
எம்.சகுந்தலா, கம்பம்: ஆண்களுக்கு அமைதியான பெண்களைத் தான் பிடிக்கும் என்று என் சகோதரி கூறுகிறாள். ஆனால், நானோ நகைச்சுவை உணர்வோடும், நன்றாக பேசும் பெண்களைத் தான் ஆண்களுக்குப் பிடிக்கும் என்கிறேன். எது சரி?
அந்தப் பெண், ஆணுக்கு தோழியாகவோ, காதலியாகவோ இருக்கும் வரை, உங்கள் எண்ணம் முற்றிலும் சரியே! மூன்று முடிச்சைப் போட்டபின், உங்கள் சகோதரியின் கருத்தைத்தான் எதிர்பார்ப்பர்!
க.ராமலிங்கம், மயிலாப்பூர்: தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளும் மனிதனைப் பற்றி உம்முடைய கருத்து என்ன?
'ஓவர் கான்பிடன்சால்' வரும் குறைபாடு இது. உண்மையாகவே தன்னிடம் இல்லாத தகுதிகளை இருப்பதாக நினைத்துக் கொள்வர். தன்னால் அது முடியும், இது முடியும் என, மற்றவர்களிடம் தம்பட்டம் அடித்துக் கொள்வர். ஆனால், உண்மையில், அவர்களால் ஒன்றுமே முடியாது. இது ஒரு மனக்குறைபாடு; தம்மிடமுள்ள, 'இன்பீரியாரிட்டி காம்ப்ளக்சை' மறைக்க போட்டுக் கொள்ளும்,'ஓவர் கோட்' தான் இது! தகுந்த நேரத்தில் இக்குறைபாட்டை அவர்கள் களையவில்லை எனில், ஊராரின் கேலிச் சிரிப்புக்கு ஆளாக நேரிடும்!
பொ.பார்த்திபன், அனுப்பானடி: பெண்கள், 'ஜொள்' விடுவது மட்டும் ஏன் வெளியில் தெரிவதில்லை?
அது,'ஜொள்' அல்ல என்பதால்! அவர்கள் அடிப்பது, 'சைட்' மட்டும் தான்; அதுவும் கனகச்சித நாசுக்குடன்! 'அலைஞ்சான்'கள் தான் நாட்டில் உண்டே தவிர, அதற்கு பெண்பால் வைத்து அழைக்கும் அளவில் இல்லை நம்மூர் பெண்கள்!
சி.எஸ்.ஆரோக்கியராஜ், நெய்வேலி: சிறுமிகளை விபசாரத்தில் ஈடுபடுத்துவது குறைந்து வருகிறதா?
இல்லை; இந்தியாவைப் பொறுத்தவரை அதிகரித்து வருவதாகவே, 'யுனெஸ்கோ'வின் அறிக்கை ஒன்று கூறுகிறது. 18 வயதுக்குட்பட்ட விலைமாதர்கள் இந்தியாவில், 4.5 லட்சம் பேர் இருக்கின்றனராம். இதே வயதில் அமெரிக்காவில் மூன்று லட்சம் பேர் விபசாரத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றும் கூறுகிறது அந்த அறிக்கை!

