sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/முறைப்பெண்!

முறைப்பெண்!

முறைப்பெண்!


PUBLISHED ON : ஏப் 02, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 02, 2017


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காளிமுத்துவை போட்டுத் தள்ளுவது என்று தீர்மானித்தனர், மாயாண்டியும், அய்யாத்துரையும்! ஜாதி கவுரவத்தை காப்பாற்றுவதற்கு, அதைத் தவிர, அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை.

''முதல்ல நீ ஆதிலட்சுமிய தூக்கிட்டுப் போயி, கல்யாணம் செய்துக்கோ பங்காளி; உன் மாமன நாங்க சமாளிச்சுக்கிறோம். அதுக்கப்புறம், நம்ம ஆளுங்கள அனுப்பி, காளிமுத்த தீர்த்து கட்டிடலாம்,'' என்றான் அய்யாத்துரை.

''இல்ல பங்காளி... இந்த ரெண்டு காரியத்தையும் என்கிட்டயே விட்டுடுங்க; நீங்க யாரும் இதுல தலையிட வேணாம். அவன், என்கிட்டயே, என் முறைப் பொண்ண கல்யாணம் செய்து காட்டுறேன்னு கைய ஆட்டி சவால் விடுறான். நாலெழுத்து படிச்சு, அரசாங்க வேலையில உட்கார்ந்து இருக்கிற திமிரு... ஆட்டுன கைய உடைச்சு, அடுப்புல போட்டாத் தான், என் ஆத்திரம் தீரும்,'' என்றான் மாயாண்டி.

கோபத்தில், அவனுக்கு உடம்பு நடுங்கியது.

''அந்த பயலுகளுக்கு துளிர் விட்டுப் போயிருச்சு பாங்காளி... அரசாங்கம் தர்ற சலுகையில நாலெழுத்து படிச்சுடுறானுங்க; அரசாங்கமும் அவனுங்களுக்கு வேலைய தூக்கிக் குடுத்துடுது. பட்டணம் போய், நாகரிகம் பழகிட்டு வந்து, நமக்கு முன், வெள்ளையும் சொள்ளையுமா அலையுறானுங்க...

''அதப்பாத்து, நம்ம பொண்ணுங்களும், லவ்வு கிவ்வுன்னு அவனுங்க பின்னாலயே போயிடுறாளுங்க. இவனுங்களுக்கெல்லாம் நாம யாருன்னும், நம்ம ஜாதியோட வலிமை என்னன்னும் காட்டணும். அப்பத்தான் அடங்குவானுங்க,'' என்று மாயாண்டியை உசுப்பேத்தினான், அய்யாத்துரை.

''ஊருக்குள்ள இந்த காளிமுத்து பய தான், எல்லாத்தையும் உருவேத்தி விட்டுட்டு இருக்கான். அரசியல் அது இதுன்னு அலப்பறை செய்துட்டு திரியுறான். இவன் ஒருத்தனப் போட்டு தள்ளிட்டோமின்னாலே, மத்தவனுங்க பயந்து, பம்மிருவானுங்க.

''முதல்ல நான் ஆதிலட்சுமிய தூக்கிட்டுப் போயி, தாலி கட்டி, அவள கண் காணாத இடத்துல குடித்தனம் வச்சுட்டு, சமயம் பார்த்து, நானே, காளிமுத்து வேலை பாக்குற ஊருல வச்சு, அவனை சாவடிச்சு, காணாப் பொணமா ஆக்கிடுறேன். அப்பத்தான், நானும் போலீசுல மாட்டாம தப்பிக்க முடியும். நீங்க, என் மாமன மட்டும் அவன் மகளக் காணமின்னு போலீசு அது இதுன்னு போயிடாம பாத்துக்குங்க...'' என்று, தன்னுடைய திட்டத்தை விளக்கினான், மாயாண்டி.

மாயாண்டிக்கு, இரண்டு அல்லது மூன்று வயதிருக்கும் போது, அவனுடைய மாமன் குடும்பத்தின் புதிய வரவாக, பிறந்திருந்தாள், ஆதிலட்சுமி. அவள் பிறந்ததுமே, மாயாண்டியின் அம்மாவும், அத்தையும், 'டேய் மாயாண்டி... உனக்கு பொண்டாட்டி பொறந்துருக்காடா...' என்றனர்.

அன்றைக்கு, மாயாண்டியின் மனதிற்குள் விழுந்த கல்யாண முடிச்சு, அவன் வளர வளர, இறுகிக் கொண்டே போனதே தவிர, தளரவே இல்லை.

ஆதிலட்சுமியும், மாயாண்டியும் சேர்ந்தே தான் வளர்ந்தனர். எப்போதும் அவனுடனே சுற்றித் திரிந்ததால், அவனை, அண்ணன் என்று தான் அழைப்பாள்.

அவளிடம், 'நீ யாரடி கல்யாணம் கட்டிக்குவ...' என்று, யாராவது கேட்டால், கொஞ்சமும் யோசிக்காமல், 'மாயண்ணனை தான் கட்டிக்குவேன்...' என்பாள்.

'அய்ய... அண்ணனை போய் யாராவது கல்யாணம் கட்டிப்பாங்களா...' என்று எல்லாரும் சிரிப்பர். அவள் அழுதபடியே அம்மாவிடம் போய் முறையிட்டால், 'மாயாண்டி, உனக்கு அண்ணன் இல்லடி; மாமாடி மக்குப் பொண்ணே...' என்று, மகளை சமாதானப்படுத்துவாள்.

ஆனால், கடைசி வரைக்கும், மாயாண்டியை, அண்ணன் என்று தான் அழைத்து வந்தாள். பெரியவர்களும், 'குழந்தைகள் தானே, பெரியவர்களானதும் அவர்களே திருத்திக் கொள்வர்...' என்று வாளாவிருந்து விட்டனர்.

ஆனால், ஆதிலட்சுமி வயசுக்கு வந்த பின்பும், அவனை அண்ணன் என்று அழைக்க, 'அடி செருப்பால... ஏழு கழுதை வயசானப்புறமும் மாமன போய், அண்ணன்னு கூப்பிட்டுக்கிட்டு இருக்கவ...' என்று பெரியவர்கள் திருத்தினாலும், அவளின் நாக்கு பழகவே இல்லை.

அப்படி, அன்னியோன்யமாய் வளர்ந்த இரு பிள்ளைகளையும், கல்வி தான் பிரித்தது. மாயாண்டிக்கு படிப்பு ஏறவில்லை; அவன் உள்ளூர் நடுநிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு வரை படித்தான். அதற்கப்புறம், வெளியூருக்குப் போய் படிக்க மறுத்து, கோவில் மாடு மாதிரி, ஊர் சுற்றினான். வாலிப வயசு வரவும், அப்பனுடன் சேர்ந்து, விவசாய வேலைகளை பார்க்கத் துவங்கினான்.

ஆனால், ஆதிலட்சுமி நன்றாகப் படித்ததால், அவள் வெளியூர்களுக்கு போய், பெரிய படிப்பெல்லாம் படித்தாள்.

உள்ளூரில் இருக்கும் போது, காளிமுத்துவை ஏறெடுத்தும் பார்க்காத ஆதிலட்சுமி, கல்லுாரியில் படிக்கப் போனதும், கல்லுாரியில் இரண்டு ஆண்டு சீனியரான காளிமுத்துவுடன் காதலாகி, கசிந்துருகி விட்டாள்.

நல்ல வேளையாக, அவர்களின் காதலை, ஊரில் யாரும் அறிந்திருக்கவில்லை; தெரிந்திருந்தால், அப்போதே அவளின் காதலுக்கு மட்டுமல்ல, கல்விக்கும் தடை விழுந்திருக்கும்.

ஆதிலட்சுமி படித்து முடித்ததும், அவளுக்கும், மாயாண்டிக்கும் கல்யாணத்தை முடித்து விட, மாயாண்டியின் அப்பா, ஆதிலட்சுமியின் அப்பாவிடம் பெண் கேட்டுப் போன போது, 'அவ்வளவு படிச்ச பொண்ண, எப்படியப்பா ஒண்ணுமே படிக்காம தற்குறியா திரிஞ்சுக்கிட்டு இருக்குற உன் பையனுக்கு தர முடியும்...' என்று மறுக்க, இரு குடும்பங்களுக்கும் சண்டை வந்து, அதிலேயே பகையாகிப் போனது.

ஆனால், ஆதிலட்சுமியின் அம்மா, மாயாண்டியிடம், 'என்னைக்கு இருந்தாலும், என் மகள் உனக்கு தான் மருமகனே... அவள, தூக்கிட்டுப் போய் கல்யாணம் செய்துக்கோ; உன் மாமன, நான் சமாளிச்சிக்கிறேன்...' என்று, அவனுக்கு தூபம் போட்டாள்.

இந்நிலையில், ஆதிலட்சுமியின் அப்பா, அவளுக்கு அன்னியத்தில், மாப்பிள்ளை பார்த்து முடிவு செய்து, வீட்டில் பேச்சை துவக்கிய போது, காளிமுத்துவை காதலிக்கிற விஷயத்தை வெடிகுண்டென வீசினாள், ஆதிலட்சுமி. இதென்ன விபரீதம் என எண்ணி, கோபமாகி, அவளை வீட்டை விட்டு வெளியே போக விடாமல் பார்த்துக் கொண்டனர். ஊர் பெரியவர்கள் காளிமுத்துவின் அப்பனையும், ஆத்தாளையும் அழைத்து, சத்தம் போட்டதுடன், அவர்களின் குடும்பத்தை ஊரிலிருந்தே வெளியேற்றி விட்டனர்.

வீட்டிற்கு வந்த மாயாண்டி, ''சோறப் போடும்மா; சாப்பிட்டுட்டு, கொஞ்சம் வெளிய போயிட்டு வரணும்,'' என்று அவசரப்படுத்தினான்.

இரவு உணவை பரிமாறியபடி, ''ஏண்டா இப்படி ஊர்க்காரங்களோட சேர்ந்துக்கிட்டு, வெறி புடிச்சு அலையுற... அய்யாத்துரை எல்லாம் ஒரு ஆளுன்னு அவன் கூட எப்பப்பாரு கூடிக் கூடிப் பேசிக்கிட்டுத் திரியுற,'' என்று, விசனப்பட்டாள் அவனுடைய அம்மா.

''நீ சும்மா கெட; நம்மள அண்டிப் பிழைக்குற ஜாதியில பொறந்துட்டு, நம்ம ஜாதிப் பொண்ணு மேலயே, அதுவும் என் முறைப் பொண்ணு மேலயே கை வைக்கப் பாக்கறான், காளிமுத்து. அவனை, அப்படியே விடுறதுக்கு, நாங்க என்ன பொட்டு வச்சு, புடவை கட்டிக்கிட்டா இருக்கிறோம்...'' கொதிப்படங்காமல் குமுறினான், மாயாண்டி.

''போ... போய் கொல்லு; உன்னை எல்லாம் அன்னைக்கே சாக விட்டுருக்கணும். காளிமுத்துவோட அப்பன் தான், உன்னை அன்னைக்கு எமன்கிட்ட இருந்து காப்பாத்திக் குடுத்தான். அதுக்கு, நீ செய்ற கைமாறு நல்லாருக்குப்பா... மகராசனாப் போயி, அவன் புள்ளய கொல்லு,'' என்றாள், ஒருவித ஆற்றாமையுடன்!

''என்னம்மா சொல்ற...'' என்றவனின் குரலில், கொதிக்கிற பாலில், குளிர் நீர் விழுந்தது போல, கோபமெல்லாம் புஸ்ஸென்று வடிந்து போனது.

அன்று நடந்த சம்பவத்தை விவரிக்க துவங்கினாள் அம்மா...

அப்போது மாயாண்டிக்கு நாலைந்து வயதிருக்கும்; அன்றைக்கு பெரிய மழை பெய்து, கொஞ்சம் ஓய்ந்திருந்தது. எங்கோ விளையாடிவிட்டு, வீடு திரும்பியவன், காளியம்மன் கோவில் அருகே வந்த போது, தேங்கியிருந்த தண்ணீரில் கால் வைக்க, எலக்ட்ரிக் ஷாக் அடித்து, அப்படியே மயங்கி, விழுந்து விட்டான்.

தெருவிளக்கு கம்பத்தின் ஒயர் அறுந்து, அங்கு தேங்கியிருந்த நீருக்குள், மின்சாரம் பாய்ந்திருந்ததை யாரும் அறிந்திருக்க வில்லை. விஷயம் அறிந்து, கிராமமே திரண்டு ஓடி வந்தது. ஆனால், பக்கத்தில் போனால், நம் மீதும் கரன்ட் பாய்ந்துவிடும் என்ற பயத்தினால், என்ன செய்வதென்று தெரியாமல், தண்ணீருக்குள் மயங்கிக் கிடக்கும் பிள்ளையை பார்த்து, பதறிக் கொண்டிருந்தனர்.

ஒருவர், ஒயர்மேனுக்கு தகவல் சொல்லி அழைத்து வரும்படி கத்த, மற்றொருவர், ஒயர்மேன் ஊரில் இல்லை; அவர் டவுனுக்கு போயிருக்கிறார் என்று பதில் சொல்ல, இந்த கலவர நிலையில் தான், அங்கு வந்தான் சடையாண்டி.

'என்னாச்சு...' என்று விசாரித்தான்; விபரம் சொல்லப்பட்டதும், உடனே, ஓடிப் போய், காளியம்மன் கோவிலுக்கு அருகில் கிடந்த கம்பையும், இரண்டு நீளமான மரப் பலகைகளையும் எடுத்து வந்து, அவற்றை, நீளவாக்கில் ஒன்றிற்குப் பின் ஒன்றாகப் போட்டு, மாயாண்டி அருகில் சென்றான்.

கையிலிருந்த கட்டையால், தண்ணீருக்குள் அறுந்து கிடந்த ஒயரை, மெதுவாய் இழுத்து தள்ளி, கரன்ட் கம்பத்திற்கு அருகில் கிடந்த சிறு மரப்பலகையில் போட்டவன், மாயாண்டியைத் தூக்கி, பலகையில் கிடத்தினான்.

மயங்கி கிடந்த மாயாண்டியின் நெஞ்சில் கை வைத்து அழுத்தினான். அவன் லேசாய் அசைந்ததும், 'சீக்கிரம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போங்க....' என்றதும், வண்டி கட்டி அவனை தூக்கிப் போய், காப்பாற்றினர்.

''அன்னைக்கு தன் உயிரை பணயம் வச்சு, உன் உயிரைக் காப்பாத்தி குடுத்தான் சடையாண்டி. இன்னைக்கு, நீ அவனோட புள்ளைய கொல்ல, திட்டம் போட்டுக்கிட்டு இருக்குற... நல்லா இருக்குடா, உங்க ஜாதி நியாயம்,'' என்றாள் மாயாண்டியின் அம்மா.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த சம்பவம், துளி அளவு கூட மாயாண்டிக்கு ஞாபகம் இல்லை. அதனால், ''இதப் பத்தி, இதுவரை ஒருநாள் கூட நீ என்கிட்ட சொன்னதே இல்லயே... அந்தப் பயலக் காப்பாத்துறதுக்காக, இப்படி இட்டுக்கட்டி சொல்றியா...'' என்றான் சந்தேகமாய்!

''நான் ஏண்டா இட்டுக்கட்டப் போறேன்; அன்னைக்கே சொல்லியிருக்கணும். ஏனோ, எனக்கு சொல்லத் தோணல. அதான், இப்ப சொல்லிட்டன்ல... பாவம்டா அந்தப்பய... பட்டணத்துல போய் படிச்சு, அரசாங்க உத்தியோகமும் பாக்குறான். ஆதிலட்சுமியும் படிச்சிருக்கா; அவளுக்கு, அவன் தான் பொருத்தமான மாப்பிள்ளையா இருப்பான். அவங்கள உயிரோட உட்டுடு; எங்கயோ போய் பொழச்சுக்கட்டும்,'' என்றாள்.

''நான் காளிமுத்த கொல்லாட்டியும், என் மாமனோ அல்லது ஊர்ப்பயலுகளோ, கண்டிப்பா அவன போட்டு தள்ளிருவாங்கம்மா... அதுக்கப்புறம், அவள் யாரு கூடப் போய் வாழுவா... அதான், அதுக்கு முன்னாலேயே, நான் அவள தூக்கிட்டுப் போய், தாலி கட்டிடப் போறேன்,'' என்று பிடிவாதமாய் சொன்னவன், வெளியேறி போய் விட்டான்.

அதன் பின், இரண்டு நாட்களுக்கு ஊர்ப்பக்கமே தலை காட்டவில்லை, மாயாண்டி. மூன்றாம் நாள் திட்டமிட்டபடி, ஆதிலட்சுமியை தூக்கி போய் விட்டான்.

கிராமத்தில், எங்கு பார்த்தாலும் அதே பேச்சாக இருந்தது.

ஆதிலட்சுமியின் உறவினர்கள், அவளுடைய அப்பனிடம், 'என்னப்பா நீ... அந்த மாயாண்டி பய, உன் பொண்ணைத் தூக்கிட்டுப் போயிட்டான்; நீ, ஒண்ணுமே நடக்காதது மாதிரி இருக்குற. வாய்யா... போலீசுல போய் புகார் குடுத்து, தேடச் சொல்லுவோம்...' என்றனர்.

''விடுங்கப்பா... எப்படியும், ஒருநா, அவ, அந்த காளிமுத்து பயலோட தான் ஓடிப் போவா... வேற ஜாதிப் பயலோட ஓடிப் போயி, குடும்ப மானம் போறதுக்கு, சொந்த ஜாதிக்காரனான மாயாண்டி கட்டிக்கிட்டு போறான்...'' என்று சொல்லி, அவர்களை அனுப்பி விட்டார்.

ஆதிலட்சுமியை பட்டணத்துக்கு கடத்தி போன மாயாண்டி, அவளை ரெஜிஸ்டர் ஆபீசிற்கு அழைத்துச் சென்றான்.

மயக்கம் தெளிந்த ஆதிலட்சுமி, ''என்ன செய்ற நீ... உன்னை ஒரு நாளும், கல்யாணம் செய்துக்க சம்மதிக்க மாட்டேன்,'' என்று மாயாண்டியுடன் சண்டை போட்டாள்.

அப்போது, கல்யாணத்திற்கான எல்லா ஏற்பாடுகளுடன், தன் அலுவலக நண்பர்களுடன், அங்கு வந்து சேர்ந்தான், காளிமுத்து. அவர்கள் இருவருக்கும் திருமணத்தை நடத்தி வைத்தான் மாயாண்டி. இதை சற்றும் எதிர்பாராத ஆதிலட்சுமி, கதறி அழுது விட்டாள்.

மணமக்கள் இருவரும் மாயாண்டியின் காலில் விழுந்து வணங்கிய போது, ''எங்கயாவது, நம்ம ஊர்க்காரங்க கண்ணுல படாம போயி பொழைச்சுக்குங்க; ரெண்டு, மூணு வருஷத்துக்கு தவறி போயிக்கூட, நம்ம ஊர்ப்பக்கம் தலைய காட்டிடாதீங்க. நம்ம ஊர பொறுத்தமட்டில், நான் ஆதிலட்சுமிய தூக்கிட்டுப் போய், தாலிக்கட்டி, கண் காணாம குடித்தனம் வச்சிருக்கேன்; அதையே அவங்க நம்பிக்கிட்டு இருக்கட்டும்,'' என்று சொல்லி வாழ்த்தினான்.

''மாயாண்டி அண்ணா நீ...'' என்று ஏதோ சொல்ல வந்த ஆதிலட்சுமி, நாக்கைக் கடித்து, ''மாமா... நீங்க என்ன செய்யப் போறீங்க?'' என்றாள்.

''பரவாயில்ல தாயி... எப்பவும் போலவே, என்னை, நீ அண்ணன்னே கூப்புடும்மா,'' என்று சொன்ன மாயாண்டி, ''இவ்வளவு பெரிய பட்டணத்துல, பொழைக் கிறதுக்கு, ஒரு சின்ன இடம் எனக்கு கிடைக்காமலா போயிடும்... நானும், ஊர்பக்கம் போகாம, இங்கயே ஏதாச்சும் வேலை செஞ்சு பொழச்சுக்கிடுவேன்,'' என்று சொல்லி, சிரித்தான்.

- மேரி தங்கம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us