PUBLISHED ON : டிச 30, 2018

ஆஞ்சநேயர் என்றாலே, அவரது நீண்ட வால் தான் நினைவுக்கு வரும். வால் அறுந்த ஆஞ்சநேயரைப் பார்க்க முடியுமா... அதுவும், கடல் மணலில் செய்த சிற்பத்தை... ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மேற்கு கோபுர வாசலில் இருந்து, 2 கி.மீ., துாரத்தில் உள்ள, அபய ஆஞ்சநேயர் கோவிலுக்கு வந்தால், இவரை தரிசிக்கலாம்.
இலங்கையில் ராவணனை அழித்த ராமர், ராமேஸ்வரம் திரும்பினார். ராவணனைக் கொன்ற பாவம் தீர, சிவலிங்க பூஜை செய்ய விரும்பினார். அனுமனிடம் லிங்கம் எடுத்து வரும்படி, வட திசைக்கு அனுப்பினார்.
காற்றிலும் வேகமாய் பறக்கும் அனுமனும், லிங்கத்தை தேடி, எடுத்து வந்து கொண்டிருந்தார். இதற்குள் பூஜைக்கு நேரமாகவே, சீதா தேவி, கடல் மணலில் ஒரு லிங்கம் அமைத்துக் கொடுத்தாள். அதற்கு பூஜை செய்து விட்டார், ராமர்.
பூஜை முடிந்த பின் வந்த அனுமனுக்கு, கடும் கோபம் வந்து விட்டது. இத்தனை கஷ்டப்பட்டும், தன் முயற்சி பாழாகி விட்டதே என, கண் சிவந்தார். 'நான் எடுத்து வந்த லிங்கத்துக்கே பூஜை செய்ய வேண்டும்...' என, ராமரிடம் வேண்டியதுடன், தன் வாலால், கடல் மணலில் செய்த லிங்கத்தை அடித்தார்; லிங்கம் உடையவில்லை.
கோபம் கொப்பளிக்க, தன் வாலில், கட்டி இழுத்தார். அது, அசையக்கூட இல்லை. ஆனால், அனுமன் வாலின் ஒரு துண்டு, அறுந்து விழுந்தது.
இந்த வரலாற்றின் அடிப்படையில், வாலறுந்த அனுமனுக்கு, ராமேஸ்வரத்தில் சிறிய கோவில் எழுப்பப்பட்டது. மூலஸ்தானத்தில் உள்ள இந்த அனுமனை, 'அபய ஆஞ்சநேயர்' என்பர். இவரது கோபம் தீர்க்க, பீடத்தின் கீழ், ஒரு கோடி ராமரட்சை மந்திர எழுத்துக்கள் வைக்கப்பட்டுள்ளன.
தற்போது, அனுமன், சாந்தமாக, வருவோர் குறை தீர்த்து வருகிறார். இன்னொரு அனுமனும் கருவறையில் இருக்கிறார். கருவறையில் இரட்டை அனுமன் இருப்பதை இங்கு மட்டுமே காணலாம்.
கடல் மணலில் செய்த, வாலறுந்த மற்றொரு அனுமன் சிற்பம், கோவில் முன் உள்ளது. எட்டு பட்டைகள் உடைய விமானம், அனுமன் சன்னிதி மேல் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோவிலின் தல விருட்சம், அத்தி மரம். இந்த மரத்தில் இளநீர் கட்டி பக்தர்கள், தங்கள் வேண்டுதலை செய்கின்றனர்.
அபய ஆஞ்சநேயருக்கு, இளநீர் அபிஷேகம் பிரதானம். இவர், கோபக்கனலில் இருப்பதால், அந்த உக்கிரத்தைத் தணிக்க, இளநீரால் அபிஷேகம் செய்வர்.
அதிக கோபப்பட்டு, அதனால், தங்கள் வாழ்க்கையில் பிரச்னையைச் சந்தித்தோர், இந்த கோவிலுக்கு வந்து அபய ஆஞ்சநேயரை வழிபடலாம். அனுமன் ஜெயந்தி, ஆனி ரேவதி நட்சத்திரம், புரட்டாசி சனிக்கிழமைகளில் மட்டும், கடல் மணல் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்வர். வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜை உண்டு.
இந்த ஆஞ்சநேயர் சிற்பம், தானாகவே உருவானது என்றும் சொல்வர்.
காலை, 6:00 மணி முதல், மதியம், 1:00 மணி வரையும், மாலை, 3:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரையும், இந்த கோவில் திறந்திருக்கும்.
தி.செல்லப்பா

