தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/உபதேச உண்மை!

உபதேச உண்மை!

உபதேச உண்மை!


PUBLISHED ON : டிச 15, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 15, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் உபதேசம்- செய்கிறது, தெய்வம். அதை, அவரவர்கள் நிலைக்கு ஏற்ப பொருள் கொள்கிறோம்.

உதாரணமாக, வாசற்கதவு தாழ்ப்பாள், கிரீச்சென்று சத்தம் போடுகிறதே என, அதில் கொஞ்சம் எண்ணெயை ஊற்றி சத்தம் வராமல் செய்கிறோம்.

'உன்ன யாரு ஆயில் போடச் சொன்னாங்க... யாராவது வந்தா, போனா, தெரியணுங்கறதுக்காகத்தான, கதவ அப்பிடியே சத்தம் போடறா மாதிரி வெச்சிருந்தோம். இப்ப நீ ஆயில போட்டு, சத்தமே வராதபடி பண்ணிட்ட... இனிமே யார் வராங்க, யார் போறாங்கன்னு தெரியாது...' என்று திட்டு கிடைக்கிறது.

தாழ்ப்பாள் ஒன்று தான்; ஆனால், அதைப் பற்றி புரிந்து கொண்ட இருவர் நிலையும் வேறு வேறு.

அதுபோல, தெய்வம் ஓர் உபதேசம் செய்கிறது. அதை அவரவர், தங்கள் மனோபாவப்படி பொருள் கொண்டனர். எப்படி...

தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள் என, மூவரும் பிரம்ம தேவரிடம் போய், தங்களுக்கு உபதேசம் செய்ய வேண்டினர்.

தேவர்களுக்கு, 'த' என்ற எழுத்தை உபதேசித்தார், பிரம்மதேவர்.

உபதேசம் விரிவாக இல்லாவிட்டாலும், தேவர்களுக்கு உண்மை புரிந்தது.

'ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று எப்போதும் சொர்க்க போகத்தில் மிதக்கும் நமக்கு, புலனடக்கம் என்பதே இல்லை. ஆகவே, 'தமம்' - புலனடக்கம் என்பதை நமக்கு உபதேசித்திருக்கிறார்...' என்று புரிந்து கொண்டனர்.

அடுத்து, அசுரர்களை அழைத்த பிரம்மதேவர், அவர்களுக்கும், 'த' என்ற எழுத்தை உபதேசித்தார்.

அசுரர்கள் தங்களை பற்றிய உண்மையை உணர்ந்தவர்களாதலால், 'அசுரர்களான நாம் கொடூரமானவர்கள்; தயை என்பதே இல்லாதவர்கள். அடுத்தவர்களிடம் தயை காட்ட வேண்டும் என்பதற்காகவே, பிரம்மதேவர் இவ்வாறு, 'த' என்பதை நமக்கு உபதேசித்திருக்கிறார். நம்மைப் பற்றி தெரிந்து தான், பிரம்மதேவர் இப்படி செய்து இருக்கிறார்...' என்று புரிந்து கொண்டனர்.

அடுத்து, மனிதர்களுக்கு உபதேசம் செய்த பிரம்மதேவர், அவர்களுக்கும், 'த' என்ற எழுத்தையே உபதேசித்தார். மனிதர்களும் தங்கள் நிலைக்கேற்ப, உண்மையை உணர்ந்து கொண்டனர்.

'மனிதர்களான நாம், மேலும் மேலும் பொருட்களை சேர்ப்பதில் மிகுந்த ஆவல் கொண்டவர்களாக இருக்கிறோம். ஆகவே, நமக்கு, 'தர்மம் செய்யுங்கள்' என, உபதேசம் செய்திருக்கிறார்...' என்றனர்.

பிரம்மதேவர் செய்தது, ஒற்றையெழுத்து உபதேசம் தான். ஆனால், அதை அவரவர்கள், தங்கள் நிலைக்கு ஏற்ப உணர்ந்து கொண்டனர். அதுபோல, தெய்வம் நமக்கு பலவிதங்களிலும் பலர் வாயிலாகவும் உபதேசம் செய்கிறது; உணர்ந்து, செயல்பட வேண்டியது நம் கடமை, பொறுப்பு. உணர்ந்து கொள்வோம்; தீவினைகளை வெல்வோம்.

பி. என். பரசுராமன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us