
'லவ் சீன்; டூயட்'டா... கண்ணை மூடிக்கோ!
என் தோழி விரும்பி அழைத்தாள் என்று, அவளுடன் திரைப்படத்திற்கு சென்றிருந்தேன். அவள் தன், 16 வயது மகளையும் அழைத்து வந்திருந்தாள். படத்தில், 'லவ் சீன்' வந்த போதெல்லாம், 'தலையை குனிஞ்சுக்கோ...' என்று சொல்லி, மகளின் தலையை தாழ்த்தி பிடித்துக் கொண்டதுடன், டூயட் பாடல் வந்ததும், 'கண்ணை மூடிக்கோ...' என மகளை அதட்டினாள்.
மகளும், அப்பாவி போல் கண்களை மூடிக் கொண்டாள். மகளை அவ்வளவு ஒழுக்கமாக வளர்க்கிறாளாம். இப்படியே படம் முடியும் வரை, என் தோழி செய்த அழும்புகள் தாங்க முடியவில்லை; என்னாலும் ஒழுங்காக படம் பார்க்க முடியவில்லை. அவள் மகளின் நிலையோ பரிதாபம்!
இப்படி அளவுக்கு மீறிய கண்டிப்புகள் தான், பிள்ளைகளை எல்லை மீறிப் போக தூண்டுகிறது என்பது, எத்தனை பெற்றோருக்கு தெரியும்? அவளோடு எதற்கடா படத்திற்கு போனோம் என்றாகி விட்டது!
அவள் மகளுக்கு தெரியாமல், தோழிக்கு சரியான, 'டோஸ்' விட்டு வந்தேன்.
— டி.மேரிராணி தேவராஜன்,
மதுரை.
நிம்மதியில்லையா? தான, தர்மம் செய்யுங்கள்!
என் நண்பர் ஒருவர், மத்திய அரசுப்பணியில், அதிகாரியாக உள்ளார். சமீபத்தில் அவரை சந்தித்த போது, மனம் நொந்து, 'என் துறையில் நான் பார்க்கும் வேலை நேரம் மிக குறைவு; ஆனால், சம்பளம் மிக அதிகம். என் மனசாட்சி என்னை உறுத்துகிறது; இதனால், நிம்மதியில்லாமல் இரவில் தூக்கமின்மையால் அவதிப்படுகிறேன்; இதற்கு ஒரு வழி சொல்லுங்கள்...' என்றார்.
'நீங்கள் வாங்கும் சம்பளத்தில், 10ல் ஒரு பங்கை சேவை மனப்பாங்குடன் இல்லாதவருக்கு கொடுத்து உதவுங்கள். மேலும், நன்கு படிக்கக் கூடிய ஏழை மாணவ - மாணவியருக்கு கல்லூரி கட்டணம் மற்றும் புத்தகங்கள் வாங்கி கொடுத்து உதவுங்கள்...' என்றேன்.
அதன்படியே செய்தவர், சிலநாட்கள் கழித்து என்னை சந்தித்து, 'சார்... இப்போது என் பாரம் குறைந்தது போல் இருக்கிறது; என்னாலும் பிறருக்கு முடிந்த அளவு உதவி செய்ய முடியும் என்ற நினைப்பே, என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்கி வருகிறது. இப்போது நிம்மதியாக தூங்குகிறேன்; சரியான நேரத்தில், நல்ல ஆலோசனை தந்தீர்கள்...' என்றார். வசதியானவர்களே... உங்களுக்கும் தூக்கம் வரவில்லையா, இந்த வழியை நீங்களும் முயற்சித்து பாருங்களேன்!
— ராம.முத்துக்குமரன், கடலூர் துறைமுகம்.
பெற்றோர் தினம் பள்ளி, கல்லூரிகளில் மட்டும் தானா?
என் மகள் பணிபுரியும் நிறுவனத்தில், முதன் முதலாக, பெற்றோர் - நிறுவனர்கள் சந்திப்பு விழா என்று அழைப்பு விடுத்திருந்தனர். நானும், என் மனைவியும், மகளின் அலுவலகத்துக்கு சென்றிருந்தோம். எங்களைப் போல், 70க்கும் மேற்பட்ட ஊழியர்கள், தங்கள் பெற்றோருடன் வந்திருந்தனர். அந்நிறுவனத்தின் உரிமையாளர்களும், ஊழியர்களும் அன்புடன் எங்களை உபசரித்து, உள்ளே அழைத்துச் சென்று குளிர்பானம் மற்றும் ஸ்வீட் தந்தனர்.
பின், என் மகள் என்னென்ன வேலை செய்கிறார் என்று விளக்கினர். மாலை, 5:30 மணிக்கு கலைநிகழ்ச்சி ஆரம்பமானது. நிகழ்ச்சிகளுக்கு இடையே, 'க்விஸ்' நிகழ்ச்சி நடத்தி, அதில் பெற்றோரை பங்கு பெற வைத்து, பரிசுகள் கொடுத்து மகிழ்வித்தனர்.
அத்துடன் நிகழ்ச்சி முடிந்ததும், உணவு கொடுத்து ஆச்சரியப்படுத்தினர். அவர்களின் இந்த அணுகுமுறையை பெற்றோர் அனைவரும் பாராட்டினர். ஆண்டுக்கு ஒருமுறை இவ்வாறு செய்தால், ஊழியர்கள் மற்றும் நிறுவனர்களிடையே நல்ல உறவு ஏற்படுவதுடன், ஊழியர்கள் மற்றும் பெற்றோர் மகிழ்ச்சியடைவர்.
இதுபோல பல நிறுவனங்களும் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தலாமே!
உற்சாகத்துடன் ஊழியர்களும் வேலை செய்வரே!
— வே.முருகேசன், சென்னை.
பட்டா படுத்தும் பாடு!
இன்று, மக்கள் பட்டா வாங்குவதற்கு படும் பாடும் இருக்கிறதே... அதை வாங்குவதற்குள் நாயாய், பேயாய் அலைய வேண்டியுள்ளது.
இந்த பட்டா எப்படி வந்தது தெரியுமா?
மன்னர் ஆட்சி காலத்தில், விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச, குளம் மற்றும் ஏரிகளில் இருக்கும் மழைநீரை பயன்படுத்தினர் மக்கள். அதற்காக, வாய்க்கால்களை பராமரிக்க, மக்களிடம் தீர்வை (வரி) வசூலிக்கப்பட்டது.
மேலும், நஞ்சை, புஞ்சை நிலங்களில் பயிர் செய்வதற்கேற்ப, வரி வசூல் செய்யப்பட்டது. அதை பராமரிக்க, சிட்டா கொண்டு வரப்பட்டு, எவ்வளவு நிலத்தில் பயிர் செய்யப்பட்டனவோ, அதற்கேற்ப வரி வசூல் செய்யப்பட்டது.
பிற்காலத்தில், கிணறு, ஆழ்துளை கிணறு, இன்ஜின் மற்றும் மின் மோட்டர்கள் பயன்பாட்டுக்கு வந்தது. ஆனால், எவ்வளவு நிலத்தில் பயிர் செய்யப்பட்டனவோ அதற்கு மட்டும் வரி வசூல் செய்வதற்கு பதில், பயிர் செய்யப்படாத நிலத்திற்கும், வரி வசூலித்தது அரசு.
அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்களும், அதே தவறையே செய்வதுடன், அதையே பட்டா என்ற பெயரில், மக்களை படாதபாடு படுத்துகின்றனர்.
இலவச மனை கொடுத்தால், அதற்கு பட்டா வாங்க வேண்டும் என்பது சரி. விலைகொடுத்து வாங்கிய நிலத்தை, அரசு பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு, அதற்கு வரி கட்டப்பட்ட பின், மறுபடியும் பட்டா என்ற பெயரில், ஒரு விலை கொடுக்க வேண்டுமா?
ஒரு பொருள் விலைகொடுத்து வாங்கிய பின், அதன் ரசீது உடையவருக்கு, அந்தப் பொருள் சொந்தம். பின், அதற்கு எதற்கு பட்டா என்ற பெயரில், மற்றொரு விலை?
இரண்டாவது சர்வே முடிந்த நிலையிலும், இன்னும் புறம்போக்கு நில அளவையை, சொல்ல முடியாத நிலையில் தான் அரசு உள்ளது.
மக்களுக்கு உரிய சேவை செய்ய, 'பட்டா மாற்றம்' என்பதை கட்டாயமாக்குவதை தவிர்க்க வேண்டும். இலவச மனை பெறுவோருக்கு மட்டும் பட்டா கொடுத்தால் போதும்!
— வீரா, புதுச்சேரி.