sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/அந்த நிழற்படம்!

அந்த நிழற்படம்!

அந்த நிழற்படம்!


PUBLISHED ON : ஜூன் 18, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 18, 2017


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பார்த்தசாரதியின் இமையோரத்தில், கண்ணீர் கசிந்தபடி இருந்தது. முந்திய நாள் இரவில், தன் உணர்வின்றி சிறுநீர் கழித்து விட, அதன் துர்நாற்றத்தில் முகத்தை சுருக்கி, 'சே... ஒரே நாத்தம்; என்னிக்கு தான் இந்த எழவிலேர்ந்து, விடுதலை கிடைக்குமோ, அந்த ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்...' என்று, மகன் வாசு புலம்பியதைக் கேட்டதன் விளைவே அந்தக் கண்ணீர்த் துளிகள்!

கொஞ்ச நாளாய், அவருக்கு காது சரியாக கேட்பதில்லை. சில நேரங்களில் கேட்கிறது; பல நேரங்களில் கேட்பதில்லை. ஒரு காது மட்டும், கேட்கும் திறனை இழந்து விட்டது தான் அதற்கு காரணம். ஆனால், அது புரியாமல், 'அதெப்படி... உங்கப்பாவுக்கு சிலது கேக்குது; சிலது கேக்காம போகுது...' என்று கூறி, 'காரியச் செவிடு' என்று, மருமகள் முனங்கியது, அவருக்கு ஞாபகம் வந்தது.

தம் நிலையை, அவர்களுக்கு விளக்கிச் சொல்ல அவருக்கு விருப்பம் தான்; ஆனால், புரிந்து கொள்ள மறுப்பதுடன், அதை நம்பவும் மாட்டார்கள்.

'டேய்... நீயும் ஒருநாள் வயசாவ; அப்ப புரியும்டா உன் அப்பனோட மனக்கஷ்டம்...' என்று, தமக்குள் கூறியவாறு, கண்களை துடைத்துக் கொண்டார். அதேநேரம், பல ஆண்டுகளாக, தன் இரும்பு பெட்டிக்குள், துணிகளுக்கு அடியில் மறைத்து வைத்திருக்கும் அந்தப் புகைப்படத்தை எடுத்து, மகனுக்கு காட்ட தோன்றியது.

அடுத்த நொடியே தாம் இறந்த பின், எப்படியும் தம் பெட்டியை குடைவான். அப்போது, அதை கட்டாயம் பார்ப்பான். அது, அவன் தவறை திருத்தும் என்று தன் எண்ணத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தார். மனைவி உயிரோடு இருந்திருந்தால், அதை எடுத்து மகனிடம் காட்டியிருப்பாள். மகனுக்கு நான்கு வயது முடியும் நேரத்தில், அவள் போய் சேர்ந்து விட்டாள்.

மெதுவாக எழுந்து, பல் விளக்கி, கூடத்துக்கு வந்து உட்கார்ந்தார், பார்த்தசாரதி. காபி டம்ளரையும், டபராவையும் அவருக்கு முன், 'டொக்'கென்று வைத்து சென்றாள், மருமகள். காபியை பருகிய போது, அது, இனிப்பு இல்லாமல், 'சப்'பென்று இருந்தது.

''அம்மா விஜயா... கொஞ்சம் சர்க்கரை கொண்டாறியா; சர்க்கரை போட மறந்துட்டே போலிருக்கு,'' என்றார்.

அவளிடமிருந்து பதில் இல்லை. 'அவளுக்கும் காது செவிடாயிடுச்சா என்ன...' என்று, தமக்குள் எண்ணி சிரித்தபடியே, எழுந்து, அடுக்களை வாசலில் நின்று, ''அம்மா விஜயா... கொஞ்சம் சர்க்கரை வேணும்...'' என்றார்.

சர்க்கரை டப்பாவுடன் வெளிப்பட்ட அவள், அவர் நீட்டிய காபி டம்ளரில் கடுப்புடன் சர்க்கரையைப் போட, ''தாங்க்ஸ்ம்மா,'' என்று சொல்லி, தம் இடத்திற்கு திரும்பினார்.

பத்து நாட்களுக்கு முன்பும், தம்மை மீறிய செயலாய், படுக்கையில் சிறுநீர் கழிந்து விட்டது நினைவுக்கு வர, இனி வரும் நாட்களிலும் இது போல் நிகழ்ந்துவிடுமோ என்று பயந்தபடி காபியை பருகியவர், 'கடவுளே... ஒரு பேரப் புள்ளைய பாத்துட்டு சாகணும்ன்னு ஆசைப்பட்டேன்; அதெல்லாம் வேணாம். என்னைய சீக்கிரம் கொண்டு போயிடு...' என்று, வேண்டினார்.

அப்போது, மொட்டை மாடியில், அவரது படுக்கை விரிப்பை உலர்த்தி, படியிறங்கிய மகனை பார்த்து, ''சாரிப்பா... என்னால உனக்கு சிரமம்,'' என்றார், குற்ற உணர்ச்சியுடன்!

பதில் சொல்லாமல் சென்றான், வாசு.

இரவில், வாசுவும், விஜயாவும் அவரை முதியோர் இல்லத்தில் சேர்ப்பது பற்றி பேசியது, அவர் செவியில் விழுந்தது.

மறுநாள் காலையில், மகனும், மருமகளும் அலுவலகத்துக்கு சென்ற பின், தன் தம்பிக்கு போன் செய்தார், பார்த்தசாரதி.

''மருது... நான் சாரதி பேசுறேன்.''

''நல்லாயிருக்கியா அண்ணே?''

''நல்லா இருக்கேன்; மருது... இனிமே, நீ என்னையப் பாக்கணும்ன்னா, முதியோர் இல்லத்துக்கு தான் வரணும்,'' என்றார்.

''அடப்பாவி... அப்படி முடிவு செய்துட்டானா அந்தக் கழுதை...''

''அவன் மட்டுமில்ல; ரெண்டு பேரும் சேர்ந்து தான்.''

''அசல் வீட்டு பொண்ணை ஏன் குறை சொல்றே... நீ பெத்த மகனுக்கே, உம்மேலே அன்பு இல்ல; ரத்த பந்தத்துக்கே இல்லாத பாசத்த, அசல் வீட்டு பொண்ணுகிட்ட, எப்படி எதிர்பாக்க முடியும்?''

''நீ சொல்றது நெசந்தான்.''

''நீ பேசமா எங்கிட்ட வந்துடுண்ணே!''

''அதெல்லாம் சரி வராது; ரெண்டு நாள் படுக்கையில ராத்திரி மூத்திரம் போயிட்டேன். இனி, அடிக்கடி அப்படி ஆயிருமோங்கிற அருவருப்பால இந்த முடிவுக்கு வந்துருக்காங்க.''

''அடப்பாவி மவனே... அவனோட பீயும், மூத்திரமும் எம்புட்டு அள்ளியிருப்போம். ஆமா, நான் எடுத்த அந்த போட்டோவ, பத்திரமா வெச்சுருக்கியா?''

''ம்... என்னோட டிரங்குப் பெட்டியில, ஒரு கவர்ல போட்டு வெச்சிருக்குறேன். நானே, அதைப் பத்தி நேத்து தான் நெனச்சேன்... இப்ப, நீயும் அதப்பத்தி சொல்றே ஆச்சரியமாயிருக்கு!''

''அதை வாசு பாத்திருக்குறானா?''

''அசிங்கம்ன்னு சொல்லி, கிழிச்சுப் போட்டுருவான்னு காமிக்கல.''

''நீ காமிச்சுருக்கணும்ண்ணே... அப்பத் தான் அவனுக்கு புத்தி வரும். சரி விடு... அது, நான் எடுத்த போட்டோ தானே... எங்கிட்ட இருக்குற காப்பிய எடுத்துக்கிட்டு, தற்செயலா வர்ற மாதிரி வர்றேன். ஆனா, அந்த நேரத்துல, நீ வீட்டுல இருக்காம வெளிய போயிடு. நாம இப்ப போன்ல பேசினதும், அவங்களுக்கு தெரியக் கூடாது. அந்த போட்டோவ, அந்த ரெண்டு கழுதைங்களும் பாக்கட்டும். குறிப்பா, உன் அருமந்த மகன்... அதுக்குப் பிறகும், அவங்க உன்னைய முதியோர் இல்லத்துக்கு அனுப்பினாங்கன்னா, அவங்க மனுஷ பிறவிங்களே இல்ல.''

''சரி மருது... நான் சாயங்காலம், 'வாக்கிங்' போவேன்; அஞ்சரை மணிக்கு கிளம்பினேன்னா, ஆறரை மணிக்கு மேல தான் வீட்டுக்கு வருவேன். வாசுவும், விஜயாவும் ஆறே காலுக்கெல்லாம் வந்துடுவாங்க. அதுக்கேத்த மாதிரி நீ வா,'' என்றார்.

''சரி, அப்ப இன்னிக்கு சாயங்காலமே வர்றேன்,'' என்று கூறி, தொலைபேசியை வைத்தார்.

பார்த்தசாரதி வீடு திரும்பிய போது, கூடத்தில் அமர்ந்து மருதுவும், வாசுவும் பேசிக் கொண்டிருந்தனர்.

''அடடே மருது... என்னது, சொல்லாம கொள்ளாம...''

''சொல்லிட்டு தான் வரணுமாண்ணே...''

''அப்படின்னு இல்ல; எப்பவும் போன்ல சொல்லிட்டு தானே வருவேன்கிறதால கேட்டேன்.''

''என்னமோ திடீர்ன்னு தோணிச்சு; கிளம்பி வந்துட்டேன். என்ன, டில்லியிலேர்ந்தா வர்றேன்; இதோ, 10 கி.மீ., தூரத்துல இருக்கிற இடத்துக்கு வர்றது என்ன சிரமமா?''

''அது சரி.''

'''நீங்க பேசிட்டு இருங்க; நான் போய் டிபன், காபி எடுத்துட்டு வர்றேன்,'' என்று கூறி, எழுந்து சென்றாள் விஜயா.

''எல்லாரும் சவுக்கியமா... உன் மகனுக்கு ஏதாச்சும் பொண்ணு அமைஞ்சிருக்கா?''

''இன்னும் இல்லேண்ணே. பாத்து தான் செய்யணும்; நல்ல பொண்ணா கிடைக்கணுமில்ல... விஜயா மாதிரி இருந்தா நல்லாயிருக்கும். அது பாட்டுக்கு என்னையும், எம்பொஞ்சாதியையும் முதியோர் இல்லத்துலே கொண்டு போய் விட்டுட்டா...''

''அப்படி விட்டாங்கன்னா போய் இருந்துக்க வேண்டியது தான்; அன்பு இல்லாத இடத்துல இருக்குறதை விட, அது எவ்வளவோ மேல் இல்லயா...''

''அப்படின்ங்கிறே?''

''பின்னே... அது சரி, உன் ஸ்டுடியோ நல்லாப் போய்கிட்டு இருக்குதா?''

''ரொம்ப நல்லா போய்கிட்டு இருக்குது. வாசு சின்னப் புள்ளைய இருக்கிறப்ப, நான் ஒரு போட்டோ எடுத்தேனே ஞாபகம் இருக்கா... வாசுவோட பின் பக்கம், உன் மொகத்துக்கிட்ட இருக்குற மாதிரி அவனை தூக்கிப் பிடிச்சுக்கிட்டு இருப்பே; அப்ப, அவன் உன் மொகத்துக்கு நேரா, வயித்தாலையைப் பீச்சி அடிச்சிருவான். தற்செயலா, அப்ப, அதை நான் படம் பிடிச்சேனே...''

வாயெல்லாம் பல்லானார் பார்த்தசாரதி.

''ஓ அதுவா... மறப்பேனா அந்த போட்டோவ... பத்திரமா வெச்சிருக்குறேன். உங்க அண்ணி தான், அதை, சந்தன அபிஷேகம்ன்னு வாய்க்கு வாய் சொல்லி, சிரிப்பா...''

''நீ அந்த போட்டோவ, வாசுகிட்ட காமிச்சதே இல்லையாண்ணே...''

''இல்ல; வெட்கப்பட்டு, கிழிச்சுப் போட்டுட்டா, என்ன செய்றதுன்னு பத்திரமா வைச்சுருக்கேன்.''

''அதோட காப்பிய நான் எடுத்து வந்துருக்கேண்ணே... வாசுகிட்டயும், விஜயாகிட்டயும் கொஞ்சம் முன்னாடி தான் காமிச்சேன். ஒரு பாரீன் மேகசீன்ல, 'தந்தையும், மகனும்ங்கற' தலைப்புல ஒரு போட்டோ காம்பெடிஷன் வெச்சிருக்குறாங்க. அந்தப் படத்தை, அதுக்கு அனுப்பலாம்ன்னா சம்பந்தப்பட்டவங்களோட, அனுமதி வேணும். அதான், எடுத்துட்டு வந்து வாசுகிட்ட காட்டினேன். மொகத்து மேல அசிங்கத்தை அப்பிக்கிட்டு, நீ கொஞ்சங்கூட அருவருப்பு காட்டாம, சிரிக்கிற பாரு... அதான் சூப்பர்!''

தலைகுனிந்து உட்கார்ந்திருந்த வாசுவை, ஓரக் கண்ணால் கவனித்தார், பார்த்தசாரதி. அவன் முகம் சிவந்திருந்தது.

விஜயா எடுத்து வந்த சிற்றுண்டியை சாப்பிட்டபடியே, ''என்ன வாசு... அந்தப் படத்தை, போட்டிக்கு அனுப்பலாமில்ல...'' என்று கேட்டார், மருது.

''தாராளமா அனுப்புங்க சித்தப்பா... பாரீன் மேகசீன் தானே... அப்படியே வெளிவந்தாலும், யாருக்கு தெரியப் போகுது, அது நான் தான்னு...''

சிறிது நேரத்திற்கு பின், கிளம்பிப் போனார், மருது.

மறுநாள், மருதுக்கு தொலைபேசியில் நன்றி கூறினார், பார்த்தசாரதி.

''என்னண்ணே இதுக்கெல்லாம் போய் நன்றி சொல்லிக்கிட்டு... உன்னை, முதியோர் இல்லத்துக்கு அனுப்புறதில்லன்னு முடிவு செய்துட்டாங்கன்னா, அப்புறம், சொல்லு நன்றி,'' என்று சிரித்த மருதமுத்து, நம்பிக்கையுடன், ஒலிவாங்கியை

கிடத்தினார்.

ஜோதிர்லதா கிரிஜா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us