PUBLISHED ON : ஏப் 07, 2013

'டிவி' தொடர் மற்றும் திரைப்பட நடிகர், 6 அடி 2 அங்குல உயரமுள்ள, கணீரென்ற குரலுக்கு சொந்தக்காரர், திரைப்படங்களில், பல நடிகர்களுக்கு பின்னணி குரல் கொடுப்பவர் என்று, பல முகம் கொண்டவர் வி.காளிதாஸ். தற்போது, ஓட்டல் முதலாளியாக இன்னொரு அவதாரம் எடுத்துள்ளார்.
சென்னை புறநகரில், கிழக்கே முகலிவாக்கம், மேற்கே குன்றத்தூர் மெயின் ரோடு, வடக்கே போரூர், தெற்கே கிருகம்பாக்கம் என, எல்லைகளாக கொண்ட மதனந்தபுரம் மாதா நகர் மெயின் ரோடில், 'சவுத் கேப்' என்ற பெயரில் ஓட்டல் ஒன்றை துவங்கியுள்ளார்.
ஓட்டல் நடத்தும் எண்ணம் எப்படி வந்தது என்பது பற்றி அவரே கூறுகிறார்:
நான் ஆரம்பத்தில், மயிலாப்பூரில் வசித்து வந்தேன். அடுக்கு மாடி கட்டடத்தில் வீடு வேண்டாம், தனி வீடு கட்டி, குடிபோக வேண்டும் என முடிவு செய்தேன். போரூர் மதனந்தபுரம், மாதா நகர் மெயின் ரோடில், எனக்கு பிடித்த மாதிரி, நிலம் கிடைத்தது. அதை வாங்கி, தனி வீடு கட்டி, 2006ல், அங்கு குடி புகுந்தோம். ஏழு வருடத்தில், இந்த பகுதி, அபரிமிதமாக முன்னேறியிருக்கிறது. 'மயிலாப்பூரில் இருந்து விட்டு, இங்கு வந்து தங்குவது எப்படி இருக்கிறது?' என்று கேட்பவர்களுக்கு, நான் சொல்லும் ஒரே வரி பதில், 'இது, பீச் இல்லாத பெசன்ட் நகர் போல் இருக்கிறது...' என்பதுதான்.
பெருநகருக்குரிய பல வசதிகள் இருந்தும், டீசன்ட்டான ஓட்டல்கள் ஏதும் இந்த சுற்றுவட்டாரத்தில் இல்லை என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன். நான் உணர்ந்ததையே, இந்த பகுதியில் வாழும் ஏராளமான மக்களும் உணர்ந்திருக்கின்றனர். அந்த குறையை போக்க, அனைவரும் விரும்பும் வகையில், ஒரு ஓட்டல் ஆரம்பிக்க வேண்டும் என்று விரும்பினேன்.
ஏற்கனவே, 1988ல், அண்ணா அறிவாலயத்திற்கு எதிரே உள்ள, 'டாக்' நிறுவனத்தின் ஸ்டாப் கேன்டீனும், பிறகு, ராயப்பேட்டை இந்தியன் வங்கியில் கேன்டீனும், நடத்திய அனுபவம் எனக்கு உண்டு. இரண்டும் நன்றாகவே இயங்கிக் கொண்டிருந்தன. செய்கிற தொழிலில், நல்ல தரம் இருக்க வேண்டும். சர்வீஸ் நல்லபடியாக கொடுத்து, நல்ல பெயர் எடுக்க வேண்டும். பணம், தானே வரும் என்று நம்புகிறவன் நான். திரைப்படங்களில், பின்னணி குரல் கொடுக்கும் பணியில் ஈடுபட்டபடியே, கேன்டீன் நடத்துவதில் பல சிரமங்கள் ஏற்பட்டன. எனவே, இரண்டு கேன்டீன்களையும் மூடி விட்டேன்.
மதனந்தபுரத்தில் ஓட்டல் ஆரம்பிக்க முடிவு செய்த போது, என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்தேன். சென்னை நகருக்கு தெற்கே இருப்பதாலும், தென்னிந்திய சைவ உணவு வகைகளை வழங்கப் போவதாலும், தெற்கை குறிக்கும் ஆங்கில வார்த்தையான,'சவுத்' என்ற சொல்லையும், 'கேப்' என்ற வார்த்தையையும் சேர்த்து, 'சவுத் கேப்' என்று பெயர் வைக்க முடிவு செய்தேன். கம்ப்யூட்டரில் நானே லோகோ டிசைன் செய்தேன்.
இந்த சவுத் கேப்பிற்கு, பல தனிச் சிறப்புகள் உள்ளன. எங்கள் வியாபாரத்தில், 80 சதவீதத்திற்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள், பார்சலாக வாங்கி செல்பவர்கள் தான். மக்களால் பல தலைமுறைகளால், மறக்கப்பட்ட, மந்தார இலையையே பார்சல் கட்ட உபயோகிக்கிறோம். மந்தார இலைகள் சுத்தமானவை; மருத்துவ குணமும் உண்டு.
காலை 5:00 மணியிலிருந்து, இட்லி, வடை, பூரி, பொங்கல் என்று, பல அயிட்டங்களை தயார் செய்கிறோம். பெரியவர்கள் வாக்கிங் முடித்து, இங்கு வந்து, டிபன், காபி சாப்பிட்டு செல்வர். காலையில் வேலைக்கு செல்பவர்கள், டிபன் பார்சல் வாங்கி செல்கின்றனர். இரவு பணி முடித்து, வீட்டுக்கு திரும்புபவர்களும், வீட்டுக்கு செல்கிற வழியில், டிபன் பார்சல் வாங்கிச் செல்கின்றனர்.
மதியத்திற்கு அளவு சாப்பாட்டை பார்சலாக தருகிறோம். எலுமிச்சை சாதம், தக்காளி சாதம் போன்ற கலந்த சாதமும் உண்டு.
மாலையில் பஜ்ஜி, போண்டா, பொடி தோசை, கல்தோசை, நெய் ரோஸ்ட், சப்பாத்தி, பரோட்டா, அடை அவியல், பெசரெட் போன்ற பல சுவையான டிபன் வகைகளை தயாரிக்கிறோம்.
பாவ் பாஜி, பானிபூரி, சுடச்சுட ஜிலேபி போன்ற வட மாநில உணவுகளையும் தயார் செய்கிறோம். இளம் தாய்மார்கள், தங்கள் குழந்தைகளுடன், மாலை நேரத்தில் இங்கு வந்து, எந்தவித தயக்கமும் இல்லாமல், டிபன், காபி சாப்பிட்டு செல்கின்றனர்.
பிப்., 1, 2013ல், இந்த ஓட்டலை ஆரம்பித்தோம். எந்த வாடிக்கையாளருமே, சாப்பாட்டில் குறை என்று, புகார் செய்தது கிடையாது; மாறாக, வீட்டு சாப்பாடு சாப்பிட்ட திருப்தி கிடைப்பதாக தங்கள் மகிழ்ச்சியை தெரிவிக்கின்றனர். இந்த பகுதியில் வசிப்பவர்கள், தங்கள் வீட்டு விசேஷங்களுக்கு மொத்த ஆர்டர்கள் கொடுக்கின்றனர். இந்த பகுதியில் உள்ள பல தொழில் நிறுவனங்கள், நிரந்தரமாக உணவு வகைகளை சப்ளை செய்ய கேட்கின்றனர். விரைவில் அந்த பணியையும் செய்ய ஏற்பாடு செய்து வருகிறோம்.
வாடிக்கையாளர் முன்பாகவே, உணவு வகைகளை சுகாதாரமாக தயார் செய்வது, எங்களது இன்னொரு ஸ்பெஷாலிட்டி. தங்கள் கண்ணுக்கு எதிரே, தரமான உணவை தயாரித்து வழங்குவதை பார்த்து, பல வாடிக்கையாளர்கள் சந்தோஷப்படுகின்றனர்.
இங்கு பணிபுரிபவர்களில் சிலர், வட மாநிலத்தை சேர்ந்தவர்கள். இரவு 10:00 மணி வரை, 'சவுத் கேப்' இயங்குகிறது. அந்த சமயத்தில் கூட, போன் செய்து, தேவையான உணவு வகைகளை தயாரிக்க வைத்து, வாங்கி செல்கின்றனர், என்கிறார்.
இந்த பகுதியில், வேறு கிளைகள் ஆரம்பிக்கவும் இவர் திட்டமிட்டுள்ளார். 'சவுத் கேப்' விரைவில், அந்த ஏரியாவில் மிக முக்கியமான, அனைவரும் அறிந்த, 'லேண்ட் மார்க்'காக ஆகிவிடும் என்பது உறுதி. தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்: 93821 56776.
கம்பீரமான தோற்றம், பாராட்டப்படும் குரல், தெளிவான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத்திறன் இவ்வளவும் இருந்தும், தமிழ் சினிமாவில் இவருக்கு நல்ல வாய்ப்பு ஏன் கிடைக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது.
'இந்த காரெக்டருக்கு, உங்க குரலால் உயிர் கொடுங்க...' என்று பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இவரிடம் கேட்கின்றனர். ஆனால், நடிப்பதற்கு வாய்ப்பு தான் கொடுக்க மாட்டேங்குறாங்க. இதுவும், நல்லதுக்குத் தான்; நமக்கு நல்ல ஓட்டல் கிடைத்துள்ளதே!
***
* திருச்சியில், அக்காலத்தில், தேவர் ஹால் விஸ்வம் என்றால், தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். அனைவராலும் நன்கு அறியப்பட்ட நாடக நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான விஸ்வம் என்பவரின் மகன்தான் வி.காளிதாஸ்.
* சென்னை தொலைக்காட்சியில், செய்தி வாசிப்பாளராக இருந்த ஷோபனா ரவி மற்றும் நடிகை சொர்ணமால்யா ஆகியோர், இவரது உறவினர்கள். ஷோபனா ரவியின் கணவரான ரவி, காளிதாசின் மூத்த சகோதரர்.
* 'மாயா மாரீசன்' என்ற, 'டிவி' தொடரில், மாயாவியாக நடித்தவர். இதில் சிறப்பாக நடித்தற்காக, சிவாஜி கணேசனால் பாராட்டு பெற்றுள்ளார்.
* 'புதுப்புது அர்த்தங்கள்' திரைப்படத்தில், பின்னணி குரல் கொடுக்க, முதன்முதலில் இயக்குனர் பாலசந்தர் இவரை அறிமுகப்படுத்தினார். அப்படத்தின் டைட்டிலிலும், இவரது பெயரை இடம்பெற செய்து கவுரவித்தார்.
* இருபது ஆண்டுகளுக்கு முன், சென்னை தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான, 'மகாபாரதம்!' இந்தி தொடரில், பீஷ்மராக நடித்த முகேஷ் கன்னாவிற்கு தமிழில் பின்னணி குரல் கொடுத்துள்ளார்.
* ஒரு முறை காளிதாஸ், ஒரு ஓட்டலுக்கு சென்று பார்சல் சாப்பாடு வாங்கினார். அங்கிருந்த சூப்பர்வைசர், 'நீங்க விரும்பினால், எங்க ஐயா உங்களை சந்திக்க ஆசைப்படுகிறார்...' என்று கூறி, மாடிக்கு அழைத்து சென்றார். 'நான் உங்களுடைய பெரிய விசிறி. நீங்க சங்கர பாண்டியாக நடிக்கிற, 'ஆனந்தம்' சீரியல் பற்றி, என் மனைவி சொன்னாங்க. அன்னிக்கு பார்க்க ஆரம்பிச்சேன். ரொம்ப பிரமாதமாக நடிக்கறீங்க. இந்தியாவிலே எங்கே இருந்தாலும், உங்க மெகா சீரியல் வரும்போது, ஆபீசிலே, 'டிவி'யை போட்டு, போனில் கூப்பிடுவாங்க. ஒலிச் சித்திரம் மாதிரி முழுவதும் கேட்பேன்...' என கூறியுள்ளார். அன்று இவர் சந்தித்த, வி.ஐ.பி., சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபாலன்.
* ரஜினி நடித்த, 'அண்ணாமலை மற்றும் வீரா' போன்ற படங்களில், வில்லன் நடிகருக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார்.
* காளிதாசின் மனைவி, ஆந்திர மகிளா சபாவில், சமூக சேவை செய்கிறார். ஒரே மகள், பிரபல திரைப்பட இயக்குனர்களிடம் பல படங்களில் உதவி இயக்குனராகவும், அசோசியேட் இயக்குனராகவும் பணிபுரிகிறார்.
* இலங்கைக்கு சென்று, சிங்கள மொழி, 'டிவி' சீரியல் ஒன்றை, தமிழில், 'டப்' செய்து வந்த அனுபவமும் இவருக்கு உண்டு.
***
எஸ். ரஜத்

