sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

நிழலின் அருமை வெயிலில்....

/

நிழலின் அருமை வெயிலில்....

நிழலின் அருமை வெயிலில்....

நிழலின் அருமை வெயிலில்....


PUBLISHED ON : மே 12, 2019

Google News

PUBLISHED ON : மே 12, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஞாயிற்றுக்கிழமை -

ஹால் சோபாவில் அமர்ந்து, செய்தித்தாள் படித்தபடி, 'பில்டர்' காபியை குடித்துக் கொண்டிருந்தார், ரங்கநாதன். ஏ.ஜி., ஆபீசில், ஆபீசர்; பணி ஓய்வு பெற, இரண்டு ஆண்டுகள் இருந்தன.

திடீரென்று, தர்மபத்தினி, தர்மாம்பாள் போட்ட கூச்சலில், உடம்பு அதிர்ந்து, கையிலிருந்த காபி லேசாக தளும்பியது.

சமையலறையில், கையில் கரண்டியுடன், வேலைக்காரியோடு யுத்தத்திற்கு நின்று கொண்டிருந்தாள், தர்மாம்பாள்.

அவரின், 10 வயது பேத்தி, சிரித்தபடியே வந்தாள்.

'' ஏண்டி கத்திண்டே இருக்காங்க, பாட்டி?'' என்றார், ரங்கநாதன்.

''வேலைக்காரி, வள்ளி, அரை மணி நேரம் தாமதமா வந்துட்டாளாம்... அதற்குத் தான் கத்துறாங்க,'' என்றாள், பேத்தி.

''அதுக்கு, ஏண்டி நீ சிரிக்கிறாய்?''

''ஒரு, 'ரிஸ்ட் வாட்ச்' வாங்கிக் கொடுத்தால், நேரத்திற்கு வந்து விடுவதாக வள்ளி சொன்னாள். அதான், சிரிப்பு வந்துடுச்சு தாத்தா!''

அவருக்கும் சிரிப்பு வந்தது. தர்மாம்பாள், எப்போதும் காட்டுக் கத்தலாகக் கத்துவதே வழக்கம். கத்தியபின், நன்றாக வாங்கிக் கட்டிக் கொள்வாள்.

ரங்கநாதனுக்கு, இரண்டும் ஆண் பிள்ளைகள். பெரியவன், ராமன், தனியார் ஏர் லைன்சிலும், லட்சுமணன், ரயில்வேயிலும் பணிபுரிகின்றனர். ராமனின் மனைவி, ஏழை வீட்டுப் பெண்; ஆனால், ஐ.டி.,யில் வேலை செய்வதால், சம்பளம் அதிகம். லட்சுமணன் மனைவி, பள்ளி ஆசிரியை; ஆனால், பணக்கார பெண்.

இரண்டு மருமகள்களும் ஒரே வீட்டில் இருந்தாலும், பேசி கொள்வது அதிசயம். 'ஈகோ' தான் காரணம். ஆனால், மாமியாருடன் சண்டை போடும்போதோ அல்லது வள்ளியோடு தர்மாம்பாள், யுத்தத்திற்கு நிற்கும்போதோ, ஒருவரை ஒருவர் பார்த்து, நமட்டு சிரிப்பு சிரித்து கொள்வர்.

தர்மாம்பாள் தேவையில்லாமல் கத்துவதால், சண்டை போடுவதாக தோன்றும். அவள் கத்துவதை, தங்கள் கணவர்களிடம் போட்டு கொடுத்து விடுவர். அடுத்த நிமிடம், இருவரும், அம்மாவை திட்டி விட்டு போவர்.

தர்மாம்பாளுக்கு இதெல்லாம் புரிவதில்லை. எதற்காவது கத்தியபடி, அதிகாரம் செய்து கொண்டிருந்தால் தான், பிள்ளைகளும், மருமகள்களும் தன்னை பார்த்து பயப்படுவர் என்ற தவறான நினைப்பு இருந்தது.

குழந்தைகளுக்கு, கோடை விடுமுறை துவங்கியது.

பெரியவன், குடும்பத்துடன், ஜெர்மன் போக, இலவச டிக்கெட்டும், ஐந்து நட்சத்திர ஓட்டலில் ஒரு வாரம் தங்கும் செலவையும் ஏற்றது, அவன் கம்பெனி. அவர்களோடு தானும் வருவதாக, மல்லுக்கட்டி, வம்புக்கு நின்றாள், தர்மாம்பாள்.

'ஜெர்மன்காரனுக்கு, குடும்பம் என்றால், மனைவியையும், குழந்தைகளையும் மட்டும் தான்...' என்றான், ராமன்.

'பத்து மாதம் சுமந்து பெற்ற, அம்மா, குடும்பத்தின் பட்டியலில் இல்லை. நேற்று வந்த, பெண்டாட்டி, அந்த குடும்பத்தை சேர்ந்தவளா? முட்டாள்...' என்று, ஜெர்மன்காரனை திட்டத் துவங்கினாள்.

தன் அறைக்கு ஓடி விட்டான், ராமன். தலையில் அடித்து வெளியேறி விட்டாள், மருமகள்.

இரண்டாவது பிள்ளை, ரயில்வேயில் வேலை செய்வதால், அவனுக்கு, எல்.டி.சி., உண்டு. அம்மாவை அழைத்து செல்லலாம் என்று சொல்லும்போதே, அவன் மனைவி, 'உங்கள் அம்மா, நம்மோடு வந்தால், என் அம்மாவும் கட்டாயம் வருவார்...' என்றவுடன், 'எல்.டி.சி.,யே வேண்டாம்...' என்று, 'கேன்சல்' செய்து விட்டான், லட்சுமணன்.

இவள் செய்யும் கலாட்டாவில், பிள்ளைகள் ஆளுக்கொரு பக்கம் தனிக்குடித்தனம் போய் விட்டால் என்ன செய்வது என்று, ரங்கநாதனுக்கு பயம்.

ஒருநாள், மாலை, 6:00 மணி.

ரங்கநாதனை தவிர, யாரும் அலுவலகத்திலிருந்து திரும்பவில்லை.

இரண்டு பேத்திகளுடன், கோவிலுக்குப் போயிருந்தாள், தர்மாம்பாள்.

அப்போது, தர்மாம்பாளின் தங்கை வந்தாள். அக்காவிற்கு நேர் எதிர், அவள். எதற்கும் அலட்டிக்கொள்ள மாட்டாள். அவளிடம், தர்மாம்பாள் செய்யும் அட்டகாசங்கள் பற்றி புலம்பினார், ரங்கநாதன்.

''அத்திம்பேர்... நீங்க இருவரும், எங்க வீட்டில், 10 நாள் இருங்களேன்... எங்கள் வீட்டிலிருந்து, உங்க ஆபீஸ் பக்கம் தான். என் கணவரும், உங்களுடன் நன்றாக பழகுவார்,'' என்றாள்.

தங்கையையும், அவள் கணவரையும் மிகவும் பிடிக்கும், ரங்கநாதனுக்கு. இருவருமே பொறுமையின் எல்லைகள்.

''உங்க வீட்டிற்கு வருவதற்கு நான் ரெடி. ஆனால், உங்க அக்கா இங்கிருந்து நகர வேண்டுமே,'' என்றார், ரங்கநாதன்.

''அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். போனில் அவளுடன் பேசுகிறேன். நாளைக்கு அவளை அழைத்து, மதியம் சாப்பிட வந்து விடுங்கள்,'' என்று கூறி சென்றாள்.

தர்மாம்பாளின் தங்கைக்கு, மூன்று ஆண் பிள்ளைகள். மூவருக்கும் திருமணம் ஆகி, ஒவ்வொருவருக்கும் இரண்டு குழந்தைகள். எல்லாரும் ஒன்றாக தான் இருக்கின்றனர்.

மறுநாள் மதியம், தன் மனைவியுடன், அவளது தங்கை வீட்டிற்கு சென்றார், ரங்கநாதன்.

சாம்பார் சாதம், தயிர் சாதம், சப்பாத்தி, உருளைக்கிழங்குக் கறி, ரசம் மற்றும் சிப்ஸ் பாக்கெட், சாப்பாட்டு மேஜையில் இருந்தது.

''நீயே செய்தாயா... இல்லை, உன் மருமகள்களா?'' வழக்கம் போல், குறுக்கு விசாரணையைத் துவக்கினாள், தர்மாம்பாள்.

''எல்லாரும் கலந்து தான் செய்வோம். உப்பு, காரம் மட்டும், ஒருவர் தான் போடுவோம்!'' என்றாள், தங்கை.

''கோடை விடுமுறையில், எல்லாரும் எங்காவது போகின்றனரா?'' என்றாள்.

''ஆமாம்... பெரியவனும், அவன் குடும்பமும், மலேஷியா, சிங்கப்பூர். இரண்டாவது பையன், வடக்கே பயணம். மூன்றாமவன், மூணாறு, வயநாடு போகப் போவதாக, பேசிக் கொண்டனர்.''

''நீ யாரோடு போகப் போகிறாய்?'' அடுத்த கேள்வியைக் கேட்டாள், தர்மாம்பாள்.

''எல்லாரும் ஒன்றாக போக முடியாதில்லையா... அவர்கள் வந்த பின், நானும், அவரும், குலு - மணாலி போகப் போறோம்... நீங்களும் வர்றீங்களா?'' என்றாள்.

''நீங்களும், அவர்களோடு சேர்ந்து போக வேண்டியது தானே... ஏன், தனியா போக வேண்டும்?'' என்றாள்.

''அவர்கள் எப்படி, 'பிரைவசி' வேண்டும் என்று எதிர் பார்க்கின்றனரோ, அப்படியே தான் நாங்களும்... அவர்கள் விஷயத்தில், நாங்கள் தலையிடுவதில்லை. அவர்களும், எங்கள் விஷயத்தில் தலையிடுவதில்லை,'' என்றாள், தங்கை.

அன்று மாலை, 4:00 மணிக்கு, நால்வருக்கும் காபி கலந்து எடுத்து வந்தாள், தங்கை.

''அவர்கள், 'டூர்' போய் வந்தவுடன் கிளம்புகிறீர்களே... அப்போது, பள்ளி திறந்து விடுவரே... பேரக் குழந்தைகளை யார் பார்த்துக் கொள்வர்?'' என்றாள், தர்மாம்பாள்.

''கடல் அலை எப்போது ஓய்வது... ஸ்நானம் எப்போது செய்வது... பெற்றவர்களுக்கு குழந்தைகளைப் பார்த்துக்க தெரியாதா... நம்மை பெற்றவர்களையும், நாம் பெற்றவர்களையும் நாம் தானே கவனித்துக் கொண்டோம்... எந்த கடமையையும் தட்டிக் கழிக்கவில்லையே...

''எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், மரத்தின் வேர் வெளியே தெரியாமல், பூமியில் ஆழமாக உள்ளே போய், மரத்தை, அதன் கிளைகளை, விழுதுகளைத் தாங்கி பிடிப்பது போல், பிடித்து நின்றாயிற்று... இருக்கும் கொஞ்ச காலம் எனக்கு அவர், அவருக்கு நான் என்று வாழ தீர்மானித்து விட்டோம்.

''அப்படி நினைப்பதால், பிள்ளைகளை கவனிப்பதில்லை என்று அர்த்தமல்ல... தேவை ஏற்பட்டால் செய்வோம்; இல்லை என்றால் விலகி நிற்போம்,'' என்று, பெரிய உரையாக கூறினாள், தங்கை.

''இப்படி விட்டேத்தியாக இருந்தால், சிறியவர்கள், பெரியவர்கள் என்ற மதிப்பு இருக்குமா... நம்மை கண்டு பயப்படுவரா,'' என்றாள், தர்மாம்பாள்.

''நீ எந்த காலத்தில் இருக்கிறாய்... உன்னை கண்டு, பிள்ளைகள் பயப்பட... அவர்கள் என்ன சிறு குழந்தைகளா... இல்லை, நீ தான் பேயா, பூதமா... மதிப்பும், மரியாதையும், தன்னால் கிடைக்க வேண்டும்; கேட்டுப் பெற கூடாது. சுற்றுலா நிறுவனத்தில், டிக்கெட், 'புக்' பண்ணி விடலாம், அக்கா. நீங்களும், அத்திம்பேரும் எங்களுடன் வாருங்கள்,'' என்றாள்.

''உடம்பு ஆரோக்கியமாக இருக்கும்போதே, ஊர்களை சுற்றிப் பார்த்து விட வேண்டும் சகல,'' என்றார், தங்கை கணவர்.

''பிள்ளைகளிடமும், மருமகள்களிடமும் அனுமதி வாங்க வேண்டாமா?'' என்றாள், தர்மாம்பாள்.

''அனுமதி வேண்டாம்; தகவல் சொன்னால் போதும். ஒரு மாதம் வீட்டை விட்டு வெளியே போய் வந்தால், மற்ற மனிதர்களை சந்தித்தால், சுதந்திர காற்றை சுவாசித்தால்... இப்படி கிணற்று தவளையாக இருக்க மாட்டீர்கள். உங்கள் அருமை உங்களுக்கும் புரியும்; மற்றவர்களுக்கும் தெரியும்,'' என்றாள், தங்கை.

தர்மாம்பாளும், அவளது தங்கையும், தங்கள் கணவர்களோடு, குலு - மணாலி, வடக்கே சில இடங்கள் என்று பார்த்து வந்தனர். அப்போது முதல், தர்மாம்பாளின் போக்கு மாறியது. தங்கையின் கீதோபதேசம், நன்றாக வேலை செய்ய ஆரம்பித்தது.

குலு - மணாலி போயிருக்கும் போது, சமையல் பொறுப்பை ஏற்ற மருமகள்களிடமிருந்து மீண்டும், 'சார்ஜ்' ஏற்றுக் கொள்ளவில்லை. வள்ளியோடும் யுத்தமில்லை. மருமகள்களாக ஏதாவது சொன்னால், செய்வாள். மற்றபடி, தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தாள்.

மீண்டும் அடுத்த கோடை விடுமுறைக்கு, கர்நாடக சுற்றுப் பயணம் செய்ய, அக்காவும், தங்கையும் முடிவு செய்தனர்.

அப்போது, தர்மாம்பாளின் இரு மருமகள்களும், எதிரில் வந்து நின்றனர்.

''என்ன விஷயம்... இருவரும் ஒன்றாக வந்திருக்கிறீர்கள்?''

''அத்தை... நீங்கள், 'டூர்' போய் வந்த பின், ரொம்ப மாறிட்டீங்க... முன்பெல்லாம், சமையல் அறையில் முழுப் பொறுப்பா இருந்தீங்க... இப்போ, சமையல் அறை பக்கமே வர்றதில்லை... ஏன்னு தெரிஞ்சுக்கலாமா?'' என்றாள், ஒரு மருமகள்.

அவர்களை உறுத்து பார்த்த, தர்மாம்பாள், ''உங்களுக்கு திருமணமாகி, 12 ஆண்டு ஆகிவிட்டது. இவ்வளவு ஆண்டுகளாக நானே சமைத்து கொண்டிருந்தேன். அப்போது, ஒரு நாள் கூட இருவரும், ஒற்றுமையாக வந்து பேசியதில்லை... குழந்தைகளை கூட ஒன்றாக விளையாட விட்டதில்லை...

''இப்போது, குழந்தைகள் இருவரும் எப்படி சிரித்து, பேசி விளையாடுகின்றனர் பாருங்கள்... இருவரிடமும் வீட்டுப் பொறுப்பு இருப்பதால், ஒற்றுமையாக கலந்து பேசி எல்லா வேலைகளையும் செய்ய வேண்டிய நிர்பந்தமாகிறது,'' என்றாள்.

''ஆனால், எங்கள் சமையல், எங்களுக்கே பிடிக்கவில்லை... உங்க பிள்ளைகளுக்கும், பேரப் பிள்ளைகளுக்கும் பிடிக்கவில்லையே,'' என்றாள், இன்னொரு மருமகள்.

''அதற்கென்ன செய்வது?''

'இன்னும் கொஞ்சம் நாள், எங்களுடன் சமையல் அறையில் இருந்து சொல்லி கொடுங்கள். பின், நாங்கள் இருவரும் முழுப் பொறுப்பு எடுத்துக் கொள்கிறோம். நீங்கள் எல்லா வேலையும் இழுத்துப் போட்டு செய்யும்போது, உங்கள் அருமை தெரியவில்லை...

'நீங்கள் விலகி நின்ற பிறகு தான், உங்கள் மதிப்பு தெரிகிறது... இனிமேல், நாங்கள் மரியாதையுடனும், ஒற்றுமையுடனும் இருப்போம்...' என்றனர், குரல் தழு தழுக்க.

அங்கே வந்த வள்ளியோ, ''ஆமாம்மா... எனக்கும் நல்ல காபி கிடைக்கும்,'' என்றாள்.

மனதிற்குள், தங்கைக்கு நன்றி கூறினாள், தர்மாம்பாள்; அவ்வளவு நேரமும் அங்கேயிருந்த ரங்கநாதனும் தான்.

பானுமதி பார்த்தசாரதி






      Dinamalar
      Follow us