PUBLISHED ON : ஜூலை 13, 2014

டோக்கியோ நகரத்திலேயே, மிக உயரமான டோக்கியோ டவர் என்ற கட்டடத்தில் படமாக்க விரும்பியதால், அந்த கட்டடத்தை பார்க்க, கட்டணம் செலுத்தி, லிப்ட்டில் மேல்நோக்கி சென்றோம். அங்கு படப்பிடிப்பை முடித்து கொண்டு, ஒட்டானி ஓட்டலின் வெளிப்புறத்தில் படமெடுத்துக் கொண்டிருந்த போது, ஒரு வெள்ளைக்கார தம்பதியர் என்னைப் பார்த்து, 'அமெரிக்கா வந்தும், படம் எடுக்க வேண்டும்...' என்று கூறி, அவர்களின் வீட்டு முகவரியை கொடுத்து, எங்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டனர்.
டோக்கியோவில், 'கின்ஸா தெரு' என்று, ஒரு இடம் இருக்கிறது. உலகிலேயே அழகு நிறைந்த அந்த இடத்தை, எத்தனை முறை பார்த்தாலும், அலுக்கவே அலுக்காது. திரும்ப திரும்ப பார்க்க வேண்டும் என்ற, ஆவலைத் தூண்டும்.
அந்த இடத்தில் அசோகன், லதாவின் முதுகில், சிறிய கைத்துப்பாக்கியை வைத்துச் செல்லும் காட்சியும், அண்ணனையும், அண்ணியையும் சந்திக்க வரும் தம்பியாகிய நானும், என்னுடன் சந்திரகலாவும், நாகேஷும் இணைந்து அவர்களை தேடுவது போன்ற காட்சிகள், அந்த வீதியின் பல இடங்களில், படமாக்கப்பட்டன.
பின், டோக்கியோ நகரில், 'தோஹோ' ஸ்டுடியோவை பார்க்கச் சென்றோம். அங்கு படம் காட்டும் கொட்டகையில், படம் எடுத்த பின், ரீ-ரிக்கார்டிங் என்று சொல்வார்களே... அந்த ஒலியையும், காட்சிகளைப் படமாக்கும் போது எடுக்கப்பட்டிருக்கும் உரையாடல் போன்ற ஒலியையும், ஒன்றாக இணைப்பதை, 'மிக்சிங்' என்று ஆங்கிலத்தில் சொல்வர்.
அதை பார்த்துவிட்டு, காரில் வந்து கொண்டிருந்த போது, எங்கள் காரை ஓட்டியவர், காரை நிறுத்தி, பின்னால் (ரிவர்ஸ்) எடுத்த போது, வேறு காரிலிருந்து ஒரு பெண் கீழே இறங்கி, 'உராய்ங், உராய்ங்...' என்று, சொல்லிக் கொண்டிருந்தார்.
'என்னய்யா இது அக்கிரமம்... கார் மேலே உராயக்கூடாது; ஒதுங்கிப் போங்கன்னு தான் சொல்வாங்க. இவங்க என்னடான்னா, 'உராய் உராய்'ன்னு உராயச் சொல்லி கட்டாயப் படுத்துறாங்களே...' என்றார் நாகேஷ்.
உடனே சந்தானம், 'உராய்' என்று சொன்னால், ஜப்பானிய மொழியில், 'வா வா' என்று, அர்த்தம் என்றதும், நாகேஷ் எங்கள் குழுவிலிருந்த பிறரிடம், 'உராய் உராய்' என்று சொல்லி, கிண்டல் செய்து கொண்டிருந்தார்.
இப்படி நாகேஷ் அவருடைய இயல்புபடி பழகியதால் தான், எங்களுக்கு பொழுது போனதுடன், மனதிலுள்ள பாரமும் குறைந்தது.
ஹாங்காங் புறப்படுவதற் குரிய எல்லா ஏற்பாடுகளை யும் செய்து முடித்திருந்தார் சித்ரா கிருஷ்ணசாமி. இந்நிலை யில், 'சிறு சேமிப்பு' என்ற இயக்கத்தை நடத்துகிற அதன் தலைவரைக் காண, மணியனோடு சென்றேன்.
வாயிற்படியில் அந்தத் தலைவரின் பிரதிநிதி காத்திருந்தார். அவர் எங்களைக் கண்டதும் ஆங்கிலத்தில், 'நீங்கள்தானே எம்.ஜி.ஆர்.,' என்று, கேட்டார்.
'ஆமாம்...' என்றேன்.
எங்களை அழைத்துச் சென்று, ஒரு தனி அறையில் அமரச் செய்தவர், இரண்டு, மூன்று நிமிடங்கள் கழித்து, தன் தலைவரோடு வந்தார். தலைவர் எங்களை வரவேற்று, ஜப்பானிய எழுத்தில் எழுதி வைத்திருந்த ஆங்கில வாசகங்களைப் படித்தார். ஏறத்தாழ அரைமணி நேரத்திற்கு மேல், அவரோடு பேசிக் கொண்டிருந்த பின், அவரிடமிருந்து விடைபெற்று, எங்களது படப்பிடிப்புக்குத் தேவையான அனுமதிகளைப் பெற உதவி செய்ததற்காக நன்றி கூற, இந்தியத் தூதரைச் சந்திக்க சென்றோம்.
அவர் லயோலா மற்றும் பச்சையப்பன் கல்லூரிகளில் படித்தவர்; தமிழில் பேசினால், புரிந்து கொள்வார். அந்தத் தூதுவரின், கண்ணியமிக்க பழகும் தன்மையைக் கண்டு வியந்தேன். அவரிடம் நன்றி கூறி, அவருடைய உதவியாளராகப் பணியாற்றும் ஜெயராமனோடு, அவருடைய வீட்டிற்கு சென்றோம். 'எங்காவது மோரும், சாதமும் கிடைக்குமா?' என்று, கேட்டேன். 'கிடைக்கிறதா பார்ப்போம். வாருங்கள்...' என்று, எங்களிருவரையும், தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
அவருடைய வீட்டில் குளிர்சாதனப் பெட்டியில் தயாராயிருந்த சாதத்தைப் பரிமாறினார். சாம்பாரையும், ரசத்தையும் ஒரு நொடியில் சூடாக்கினார்; அப்பளத்தையும் பொரித்தார். தமிழகத்தில் அவரது வீட்டில் தயாரான ஊறுகாயை வைத்தார்.
எனக்கோ நல்ல பசி; அதன் சுவையோ அபாரம்; நேரமோ மிகக் குறுகியது. இருப்பினும், அவசர அவசரமாக வயிற்றைப் பரிபூரணமாக நிரப்பினேன். ஜெயராமனின் அன்பு இருக்கிறதே, அது உணவை விட அதிகமாக, என் மனதை நிரப்பி விட்டது.
பிறரால் தரப்படும் அன்பு ஒருவனின், மனதை, உணர்வை நிரப்பி விடுமாயின், அது, அந்த மனிதனுடைய வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத ஒன்றாகி விடும். வயிற்றுக்கு உணவு, மனத்திற்கு உறவு இவை இரண்டையும் கலந்து தந்த அந்த நண்பருக்கு, அவருடைய பெற்றோர், ஜெயராமன் அதாவது, வெற்றி ராமன் என்று, எவ்வளவு பொருத்தமாகப் பெயர் வைத்து இருக்கின்றனர் என்று நினைத்து, வியந்தேன்.
ஜப்பானில் அவரைச் சந்தித்ததற்கு புற அடையாளமாக, ஒரு அழகிய வேலைப் பாடமைந்த கைத்தடி ஒன்றையும் தந்தார். அதை கைத்தடியாகவும் பயன்படுத்தலாம்; காலணியாகவும் அணியலாம்.
ஒரு நல்ல நண்பன், தம் நண்பனுக்குத் தன்னைப் போன்ற நல்ல நண்பர்கள் எத்தனை பேரை அறிமுகப்படுத்துகிறாரோ அதற்கேற்பத் தம் நண்பனை உயர்த்தி, வாழ்விக்கின்றார் என்றே சொல்ல வேண்டும்.
ஒரு சில நண்பர்கள் இருக்கின்றனர்... தம்மைத் தவிர, வேறு யாரையும் தம் நண்பர்களோடு சேர அனுமதிக்க மாட்டார்கள். தமக்கிருக்கும் முக்கியத்துவம் எங்கே குறைந்து விடுமோ, மற்றவர்கள் தம் இடத்தை ஆக்கிரமித்து விடுவார்களோ என்ற சுயநலத்தில் அப்படிச் செய்து விடுவர். தன்னம்பிக்கை இருப்பவர்கள் அவ்வாறு ஒருபோதும் செய்ய மாட்டார்கள்.
மணியனை பொறுத்த மட்டில் உண்மை நண்பன், தன் நண்பனுக்கு என்ன செய்ய வேண்டுமோ, அதை எந்தச் சுயநலமுமின்றிச் செய்து வந்தார்.
விமான நிலையத்திற்கு செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டதால், ஓட்டுனர் ஹியாட்டோ புயல் வேகத்தில், காரை ஓட்டினார். ஆனால், அவர் சென்ற வேகத்தில், விமான நிலையத்திற்கு திரும்ப வேண்டிய இடத்தை விட்டு, ஏழெட்டு மைல் தூரம் கடந்து விட்டார். காரை நிறுத்தி வேதனைப் பட்டவரைப் பார்த்து, 'திரும்பிச் சரியான பாதையில் போகலாமே... இதற்கு ஏன் இவ்வளவு வருத்தம்?' என்று கேட்டேன்.
'இன்னும் நான்கைந்து மைல் தூரம் நேரே சென்று, பின், திரும்பி வர வேண்டும்...' என்று சொன்னார் ஹியாட்டோ. அவர் சொன்ன பின்பு தான் புரிந்தது; நாங்கள் சென்று கொண்டிருப்பது ஒரு வழிப்பாதை என்பது. அதனால் தான் ஹியாட்டோ வருத்தப்பட்டுள்ளார். ஜப்பானியர்கள் சாலை விதிமுறைகளை எப்படி போற்றி மதித்து, நடக்கின்றனர் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
— தொடரும்.
தொகுப்பு: வைரஜாதன்,
நன்றி 'பொம்மை'
விஜயா பப்ளிகேஷன்ஸ்,
சென்னை.
- எம்.ஜி.ஆர்.,
