தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/உலகம் சுற்றும் வாலிபன் (7)

உலகம் சுற்றும் வாலிபன் (7)

உலகம் சுற்றும் வாலிபன் (7)


PUBLISHED ON : மே 18, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 18, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாற்பத்தைந்து நிமிட பயணத்திற்குப் பின், ஒசாகா விமான நிலையத்தை அடைந்தோம். ஒசாகாவில், 'எக்ஸ்போ'வை ஒட்டியிருந்த மினாமி குவார்ட்டர்ஸ் என்ற இடத்தில், தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எக்ஸ்போவுக்கு வருகிற விருந்தினருக்காக, புதிதாக பல கட்டடங்கள் கட்டப்பட்டிருந்தன. தீப்பெட்டிகளை ஒன்றன்மேல் ஒன்று அடுக்கி வைத்தால் எப்படி இருக்குமோ, அதுபோல் இருந்தன. பத்திரிகையாளர்கள் தங்குவதற்காகக் கட்டப்பட்ட கட்டடத்தில், நாங்கள் தங்க ஒரு சில அறைகளை ஏற்பாடு செய்திருந்தனர். ஒவ்வொரு அறைக்குள்ளும் சாப்பிட, சமையல் செய்ய, குளிக்க என, சின்ன சின்னதாக அறைகள் அமைக்கப்பட்டிருந்தன. சாமான்களை நாங்களே தூக்கி வந்து, அறைகளில் வைத்து விட்டு, 'எக்ஸ்போ' பார்க்கப் புறப்பட்டோம்.

ஹென்றி என்பவர், எங்களின் உதவிக்காக நியமிக்கப்பட்டிருந்தார். அவர், படப்பிடிப்புக்கு தேவை யான ஏற்பாடு செய்வதுடன் மொழி பெயர்த்துச் சொல்ல வேண்டும். மொத்தத்தில், அவர் எங்களுக்கு, நடமாடும் அகராதியாக செயல்பட வேண்டும்.

எக்ஸ்போவில் கூட்டம் அதிகமாக இருந்ததால், அனுமதிச் சீட்டு பெற, சிறிது நேரமாயிற்று.

கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்று, முன் வாயில்களுக்குப் பெயர் கொடுத்திருந்தனர்.

எக்ஸ்போவை பார்க்க எங்கிருந்து ஆரம்பிப்பது என்ற எண்ணமே அப்போது எனக்கில்லை.  விரைவில், அனைத்தையும் பார்த்துவிட வேண்டும் என்ற வேகம் தான் எனக்கிருந்தது. படிகள் பல நிறைந்திருந்த ஒரு பெரிய மேடையின் மீது ஏறிச் சென்றோம். அந்த மேடையில் நடந்து சென்ற போது, சுற்றிலும் தெரிந்த காட்சிகளைப் பார்த்து, அப்படியே பிரமித்து விட்டேன். மூக்கு கோணலாக இருந்த ஒரு மனித முகத்தை கொண்ட ஒரு பிரமாண்டமான சிலை, அந்த மேடைக்கு கீழ் மட்டத்திலிருந்து, மிக உயரத்தில் காட்சி தந்தது. தூணுக்கு மேலே அந்த முகம் இருந்தது. அந்தத் தூணுக்கு, இரு கைகளைப் போல், மரத்தின் இரு கிளைகள் என, மேலேயுள்ள கட்டடத்தைத் தாங்குவதற்காக அமைக்கப்பட்டது போல, அது இருந்தது. இரு பக்கமும் இருந்த அந்தப் பெரிய கூடத்தை, முன், பின் பக்கம் என, இரு பகுதிகளாகப் பிரித்திருந்தனர்.

முகம் இருந்த பக்கத்தில், பல வேடிக்கைகள் காண்பிக்கப்பட்டன. மறுபாதியில், பல்வேறு நாட்டினரின் நடனக் காட்சிகள் மற்றும் புகழ் மிக்க பாடகிகளின் கச்சேரி என, கலை நிகழ்ச்சிகள், நடைபெறவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நாங்கள் போன போது, எந்த நிகழ்ச்சியும் நடைபெறவில்லை. மாலை ௭:௦௦ மணிக்கு மேல்தான் நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று, தெரிவிக்கப்பட்டது.

எனவே, முடிந்த வரையில் சீக்கிரம் மற்ற இடங்களைப் பார்க்க விரைந்தோம். எங்கு பார்த்தாலும், அலங்கார மண்டபங்கள் போன்ற கட்டடங்கள். வண்ணக் கலவைகளின் சேர்க்கை ஒளிக்கதிர்கள் நீரின் மேல் விழுந்து ஜொலிப்பது போல் அத்தனை அழகு. எங்களுக்கு எதைப் பார்ப்பது, எதை விடுவது என்று தெரியாமல் நடந்து சென்றோம்.

இதையெல்லாம் படம் எடுக்க எப்படி அனுமதி பெறுவது என்று ஒரு புறம் சிந்தனை ஓடியது. நேரில் கண்களால் பார்த்து மகிழ்வதை எல்லாம் படமாக்க குறைந்தது பதினைந்து நாட்களாவது ஆகும் என்று புரிந்தது. நாங்கள் படப்பிடிப்பு துவங்க இருப்பதோ 8ம் தேதியிலிருந்து தான். 6ம் தேதி மாலையில்தான், எக்ஸ்போவுக்குள் நுழைந்திருக்கிறோம். மறு நாள் ௭ம் தேதி, ஒரு நாள்தான் எங்களுக்கு அவகாசம் இருந்தது.

நாங்கள் 6ம் தேதி இரவு 10:00 மணி வரை பார்த்தவை, அந்த எக்ஸ்போவில் நுாறில் ஒரு பகுதி கூட இல்லை. என்ன செய்வது என்று குழம்பிய நிலையில், முடிந்தவரை சுற்றிப் பார்த்தோம்.

இந்தியன் பெவிலியனில் இருந்த அசோகா ரெஸ்டாரன்ட்டில் இட்லி சாம்பார், பஜ்ஜி சாப்பிட்டோம். அதன் நிர்வாகி வரதராஜன் மிகவும் அன்போடும், பொறுப்போடும் கவனித்தார். வெளிநாட்டவர் பலர், பஜ்ஜியையும், இட்லி சாம்பாரையும் மிகவும் ரசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

எக்ஸ்போவிற்குள் குழந்தைகள் மற்றும் வயதானவர்களை அழைத்து வருவோருக்கு தள்ளு வண்டிகளைத் தருவதற்காக ஓர் அமைப்பு இருந்தது. தேவை உள்ளவர்கள் அங்கு சென்று, தள்ளு வண்டிகளைப் பெற்று அவைகளில், தம் குழந்தைகளையோ, முதியோரையோ அமர வைத்து தள்ளிச் சென்றனர். எக்ஸ்போவை சுற்றிப் பார்த்து, வெளியே போகும் போது, வண்டிகளைப் பத்திரமாக ஒப்படைத்து செல்வதையும் பார்த்தேன். தம் சொந்த சொத்தைப் பாதுகாப்பது போல் எச்சரிக்கையோடும், கவனத்தோடும் பாதுகாத்து, திரும்ப ஒப்படைத்த அவர்களின் பண்பைக் கண்டு, வியந்தேன்.

லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட அந்தக் கண்காட்சியில், எந்த இடத்திலும், குப்பை இல்லை. மூலைக்கு மூலை அழகான குப்பைத் தொட்டிகளை வைத்திருந்தனர். குழந்தைகள்கூட தம் கையில் இருக்கும் காகிதங்களையோ, குளிர்பானத்தைச் சாப்பிட்டபின் இருந்த டப்பாக்களையோ, குப்பைத் தொட்டியில் போடுவதைக் கண்டேன். அங்கே அவர்கள் யாரும், கண்ட இடத்தில் எச்சில் துப்புவதையும் பார்க்க முடியவில்லை.

எங்களோடு வந்திருந்த பெண்கள் அணிந்திருந்த சேலையை, வெளிநாட்டு மக்கள் பெரும்பாலோர் மகிழ்ச்சியோடும், வியப்போடும் கவனித்தனர். பலர், அவர்களை தங்கள் அருகில் நிறுத்தி, புகைப்படம் எடுத்து கொண்டனர்.

திரும்பும் இடமெல்லாம், உடனுக்குடன் சூடாகத் தரக்கூடிய உணவுக் கடைகள் ஏராளமாக இருந்தன. ஐஸ்கிரீம் போன்றவைகளை வாங்கிச் சாப்பிட்டால், பசியே தணிந்து விடும். இப்படி எல்லா வசதிகளும் நிறைந்திருந்த அந்த இடத்தில், பணம்தான் நம்மிடம் இருக்க வேண்டுமே தவிர, வேறு எந்தக் குறைக்கும் இடமே இல்லை.

என்னிடமோ, சர்க்காரால் அனுமதிக்கப்பட்ட டாலர்கள் கொஞ்சம் தான் இருந்தன. மீதி பணம், வீரப்பனிடம் இருந்தது. அவர், ஹாங்காங்கில் படமெடுக்க ஏற்பாடு செய்வதற்காக, வழியிலேயே இறங்கிக் கொண்டார். அவர் வரும் வரையில், யாருடைய அவசரத் தேவையை கூட கவனிக்காததைப் போல், நடிக்க வேண்டியிருந்தது. என் மனத்திற்குத் தெரிந்து, வாழ்க்கையிலும் நான் நடித்த முதல் அனுபவம், இது தான். எவ்வளவு சிக்கனமாக இருக்க முயலுமோ, அந்த எல்லைக் கோட்டில் காலை வைத்திருந்த முதல் மனிதனாக நானிருந்தேன்.

எக்ஸ்போவை, பார்க்கும் நேரம் முடிந்தபின், திரும்பினோம். கதையைப் பற்றி இயக்குனர் ப.நீலகண்டனிடமும், வசனகர்த்தா சொர்ணத்திடமும் கூறினேன். மறுநாள் காலையிலேயே, எக்ஸ்போ போக முடிவெடுத்தோம்.

- தொடரும்.

தொகுப்பு: வைரஜாதன்,

நன்றி 'பொம்மை'

விஜயா பப்ளிகேஷன்ஸ்,

சென்னை.

- எம்.ஜி.ஆர்.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us