PUBLISHED ON : மே 22, 2011

இந்த ஆண்டிற்கான சிறந்த பத்திரிகை புகைப்பட விருதில் வெற்றி பெற்ற புகைப்படம், பெரும் கருத்து வேறுபாடுகளையும் உருவாக்கியுள்ளது.
தலிபான் பயங்கரவாதியால் முகம் சிதைக்கப்பட்ட பெண்ணின் புகைப்படத்திற்கு, விருது வழங்கியதுதான் இதற்கு காரணம்.
நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாம் நகரில், மே 7ம் தேதி, இந்த ஆண்டிற்கான சிறந்த பத்திரிகை புகைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில், பல நாடுகளில் எடுக்கப்பட்ட சிறந்த படங்கள் இடம் பெற்றன. தென் ஆப்ரிக்க போட்டோகிராபர், ஜோடி பைபர் என்பவர் எடுத்த புகைப்படம் தான், இந்த ஆண்டின் சிறந்த பத்திரிகை புகைப்படம் என்ற பரிசைத் தட்டிச் சென்றது.
ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் பீபீ ஆயிஷா. 18 வயதான, அழகான இளம் பெண். இந்த பெண்ணின் மூக்கு, காதுகளை இவர் கணவர் வெட்டி எறிந்து விட்டார். அவர் தலிபான் பயங்கரவாதி. ஆயிஷாவின் அழகான முகமும், அவர் முகம் சிதைக்கப்பட்ட பின் எடுக்கப்பட்ட படமும் இந்த கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது. காலண்டர்களில் இடம் பெற வேண்டிய அளவுக்கு அழகான, போட்டோஜெனிக் முகம் பெற்றிருந்த ஆயிஷாவின் முகம், சிதைக்கப்பட்ட நிலையில் இருந்த புகைப்படத்தைப் பார்த்தவர்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது.
கடந்த ஆண்டுகளிலும் இதே போல்தான் வலி, கோரம், கொடூரம் போன்றவைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படங்களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டன. எனினும், இந்த ஆண்டு இந்த படத்திற்கு பரிசு வழங்கப்பட்டதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
'அரசியல் காரணங்களுக்காக இது போன்ற பரிசுகள் வழங்கப்படுகின்றன...' என, இதன் எதிர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உயரமான இடத்தில் இருந்து கீழே குதித்து ஒருவர் மரணமடையும் காட்சி, காஷ்மீரில் தன் சகோதரர் மரணமடைந்த பின் சிதையில் கதறி அழும் சகோதரி படம், காளை மாட்டை அடக்கும் போட்டியில், போட்டியாளரின் கன்னத்தில் காளை மாடு குத்தும் காட்சி, கால்பந்து வீரர் முகத்தில், இன்னொரு வீரர் காலால் எட்டி உதைக்கும் காட்சி என, பல படு பயங்கர காட்சிகள் இந்த கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. 'அரசியல்ரீதியாக இந்த புகைப்படம், மிக முக்கியமான புகைப்படம். ஒவ்வொரு நாட்டிலும் என்ன நடக்கிறது என்பதை இந்த படம் காட்டுகிறது...' என, பார்வையாளர் ஒருவர் கூறினார்.
இந்த விமர்சனங்கள் பற்றி இந்த படத்தை எடுத்த ஜோடி பைபர் அலட்டிக் கொள்ளவில்லை.
அவர் கூறியதாவது:
இந்த புகைப்படம் வெளியான உடனேயே, பல வித கருத்துக்கள் வந்தன. பெண்கள் படும் கொடுமைகள் வெளியே தெரிய வேண்டும். இது போல மாற்று கருத்துக்கள் வெளியே வந்தால் தான் உண்மைகள் வெளியே வரும் என்றார்.
இந்த துணிச்சலான போட்டோகிராபர், ஒரு பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
***
-என்.ஏ.ராஜவர்மன்
