sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

பெருமாளின் புண்ணிய மாதம்!

/

பெருமாளின் புண்ணிய மாதம்!

பெருமாளின் புண்ணிய மாதம்!

பெருமாளின் புண்ணிய மாதம்!


PUBLISHED ON : செப் 18, 2011

Google News

PUBLISHED ON : செப் 18, 2011


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செ., 18 - புரட்டாசி மாதப் பிறப்பு!

மாதங்களைப் பற்றிய தகவல்கள் சுவையானவை. சமஸ்கிருதத்தில், 'பாத்ரபதம்' எனப்படும் மாதம், தமிழில் புரட்டாசி எனப்படுகிறது. ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு ராசிக்குள் சூரியன் பிரவேசிக்கிறது. இதன்படி, ராசி கரத்தின் தென்மேற்கிலுள்ள கன்னி ராசிக்குள் சூரியனின் பிரவேசம் நிகழும் போது, புரட்டாசி மாதம் பிறக்கிறது.

இந்த மாதம், பிதுர்களுக்குரிய விடுதலை மாதமாகக் கருதப்படுகிறது. மறைந்த நம் முன்னோர், பிதுர் லோகத்தில் வசிப்பதாக ஐதீகம். சூரியன், கன்னி ராசிக்குள் புகுந்ததும், எம தர்மன் அவர்களை பூமிக்குச் செல்லும்படி உத்தரவிடுகிறார். அவர்களும் தங்கள் உறவுகளை நாடி, இங்கே வருகின்றனர். புரட்டாசி வளர்பிறை பிரதமையில் இருந்து அமாவாசை வரையான, 15 நாட்கள் அவர்கள் பூமியில் தங்குவர். இதையே, 'மகாளய பட்சம்' என்பர்; 'பட்சம்' என்றால், '15 நாட்கள்' எனப் பொருள்.

இந்த நாட்களில் நாம் தினமும் தர்ப்பணம் செய்து, அவர்களின் தாகத்தைத் தீர்க்க வேண்டும். தகுதியானவர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். இந்த பட்சத்தில் வரும் பரணி, 'மகாபரணி' என்றும், அஷ்டமியை, 'மத்யாஷ்டமி' என்றும், திரயோதசியை 'கஜச்சாயை' என்றும் சொல்வர். இந்த மூன்று நாட்களுமே, பிதுர் வழிபாட்டுக்கு உகந்தவை. இம்மாதத்தில் வரும் மகாளய அமாவாசையில் செய்யப்படும் பிதுர் பூஜை (இவ்வாண்டில் செப்., 27) மற்ற அமாவாசைகளைக் காட்டிலும் அதிக பலன் தரும்.

ஆவணியில் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடிய நாம், புரட்டாசியிலும் விநாயகர் பூஜையைத் தொடர்வது சிறப்பான பலனைத் தரும். ஏனெனில், புரட்டாசி கன்னி மாதமாக இருக்கிறது. தென்மேற்கு திசையை, 'கன்னி மூலை' என்பர். இதனால் தான், கோவில்களில் இந்த திசையில் விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பார். இவரை, 'கன்னி மூலை கணபதி' என்பர். சபரிமலை செல்லும் பக்தர்கள், பம்பையில் உள்ள கன்னி மூலை கணபதி கோவிலைத் தரிசித்த பிறகே மலையேறுகின்றனர். ஏதாவது வேண்டுதல் வைத்து, மாதம் முழுவதும் கணபதிக்கு அருகம்புல் மாலை அணிவித்தால், எண்ணியது ஈடேறும்.

நடராஜருக்கு ஆண்டில் ஆறு நாட்கள் அபிஷேகம் செய்யப்படும். அதில், புரட்டாசி வளர்பிறை சதுர்த்தசியும் ஒருநாள். (இவ்வாண்டில் அக்.,10) அன்று மாலை சிவாலயங்களில் உள்ள நடராஜருக்கு அபிஷேகம் செய்யப்படும்.

இம்மாதத்து சனிக்கிழமைகள் பெருமாள் விரதத்திற்கு <உகந்தவை. இவ்வாண்டு நான்கு சனிக்கிழமைகளிலும் (செப்., 24, அக்., 1, 8, 15) பெருமாள் கோவில்களுக்கு தவறாமல் சென்று வர வேண்டும். ஜாதக ரீதியாக சனி கிரகத்தால் சிரமம் அனுபவிப்போர், பெருமாள் கோவிலில் எள், நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். இதனால், பெருமாளின் அருளால் சிரமங்கள் பல மடங்கு குறையும். திருப்பதி சீனிவாசனுக்கு புகழ்பெற்ற பிரம்மோற்சவ நிகழ்ச்சி இந்த மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

பராசக்திக்குரிய பூஜை மாதமும் இதுவே. நவராத்திரி பூஜை (இவ்வாண்டு செப்., 28 - அக்., 5) இம்மாதத்தில் நடக்கிறது. அம்பாளை, முதல் மூன்று நாட்கள் துர்க்கையா கவும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியாகவும், அதையடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதி யாகவும் வழிபடு கிறோம். தைரியம், செல்வம், கல்வி ஆகிய வற்றை அம்பாளிடம் வேண்டிப் பெற இந்த பூஜை நடத்தப் படுகிறது. தமிழகத்தின் முக்கிய அம்பாள் கோவில்களில் விசேஷ பூஜைகள் நடக்கும். இந்நேரத்தில் வீடுகளிலும், கோவில்களிலும் கொலு வைப்பது சிறப்பம்சம். சரஸ்வதி பூஜைக்கு மறுநாள் விஜயதசமி கொண்டாடு கின்றனர். இந்நாட்களில், சில அம்பாள் கோவில்களில், 'பாரிவேட்டை' எனும் வெற்றித் திருவிழா நடத்தப்படும்.

முருகனுக்கும் இம்மாதத்தில் விழா <உண்டு. திருப்பரங்குன்றத்தில் முருகப் பெருமான் சன்னிதி குடைவரையாக உள்ளதால், அவர் முன்புள்ள வேலுக்கே பாலபிஷேகம் செய்யப்படும். இந்த வேல், புரட்டாசி பவுர்ணமியன்று மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அபிஷேகம் நடக்கும். அங்குள்ள காசி விஸ்வநாதரை, முருகப் பெருமான் வழிபாடு செய்வதாக ஐதீகம்.

புரட்டாசி மாதம், ஆன்மிக மாதம். இம்மாதத்தில், தவறாமல் வழிபாடுகளைச் செய்து, தெய்வங்கள் மற்றும் முன்னோர்களின் நல்லருளும், நல்லாசியும் பெறுவோம்.

***

தி. செல்லப்பா






      Dinamalar
      Follow us