தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நிலவுக்கும் நெருப்பென்று பேர்! (7)

நிலவுக்கும் நெருப்பென்று பேர்! (7)

நிலவுக்கும் நெருப்பென்று பேர்! (7)


PUBLISHED ON : மார் 20, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 20, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன் கதைச்சுருக்கம்: புவனேஷின் காதலி முகிலா காணாமல் போன நிலையில், இன்ஸ்பெக்டர் முத்துக்குமரனுக்கு போன் செய்த கான்ஸ்டபிள் சிவராமன், 'டாக்சி' டிரைவர் மகுடபதியை காப்பாற்ற, 'மாஜி' எம்.எல்.ஏ., இதயச்சந்திரன் ஸ்டேஷனுக்கு வந்திருப்பதாக தெரிவித்தார். இந்நிலையில், புவனேஷை திருமணம் செய்ய முகிலா விருப்பப்படவில்லை என, எம்.எல்.ஏ., கூற, அதிர்ச்சியடைந்தான் -

இதயச்சந்திரனை ஒரு நெருப்புப் பார்வையால் நனைத்த, புவனேஷ், அதிர்ந்து போன குரலில், ''இப்ப என்ன சொன்னீங்க?'' என, கேட்டான்.

''என்ன தம்பி... நான் சொன்னது உன்னோட காதுல சரியா விழலையா... பரவாயில்ல, மறுபடியும் சொல்றேன். உன்னை கல்யாணம் பண்ணிக்க அந்தப் பொண்ணு முகிலாவுக்கு இஷ்டமில்லை. அவகிட்டே ஏதோ தப்பு இருக்கு.''

''இதுக்கு முன்ன, முகிலாவை உங்களுக்குத் தெரியுமா?''

''தெரியாது.''

''என்னையாவது தெரியுமா?''

''தெரியாது.''

''பின்னே எப்படி... முகிலாவுக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க இஷ்டமில்லைன்னும், அவகிட்ட ஏதோ தப்பு இருக்குன்னும் உங்களால நா கூசாம பொய் சொல்ல முடியுது?''

இதயச்சந்திரனின் உதட்டில் இப்போது கோணலாய் ஒரு சிரிப்பு நெளிந்தது.

கேலி இழையோடும் குரலில், ''உனக்கும், முகிலாவுக்கும் ஆர்.எஸ்.புரம் விநாயகர் கோவிலில் தானே கல்யாணம் நடக்க இருந்தது?''

''ஆமா.''

''அப்படி கல்யாணம் பண்ணிக்கிற எண்ணம் முகிலாவுக்கு இருந்திருந்தா, அவ விநாயகர் கோவிலுக்கு வராம, பூ மார்க்கெட் கார்னர்ல டாக்சியை நிறுத்தி, ஏன் இறங்கிப் போகணும்?''

''அது, உங்க டிரைவர் சொன்ன பொய்.''

''டிரைவர் மகுடபதியைப் பத்தி எனக்குத் தெரியும். அவன் பொய் சொல்ல மாட்டான்; ரொம்பவும் நல்லவன்.''

''குடிகாரனுக்கு, 'சப்போர்ட்' பண்றீங்களா?''

''அவன் குடிக்கிறவன் தான்; ஆனா, குடிப்பழக்கத்துக்கு அடிமையானவன் கிடையாது. அளவா குடிச்சுட்டு துாங்குவான்; போதையில் இருக்கும்போது, வண்டியை எடுக்க மாட்டான். அவன் பொய் பேசி, நான் பார்த்ததில்லை.''

அதுவரைக்கும் எதுவும் பேசாமல் மவுனமாய் இருந்த தருண், இப்போது நிதானம் இழந்தவனாய் எழுந்து, இதயச்சந்திரனை நெருங்கினான்.

அவருடைய முகத்துக்கு நேராய் தன் இடது கையின் ஆட்காட்டிவிரலை உயர்த்தி, அடிக்குரலில், ''லுக்... நீங்க, 'மாஜி' எம்.எல்.ஏ., அதிலும், வக்கீல் என்ற ஒரேயொரு காரணத்துக்காகத்தான் இதுவரைக்கும் உங்களுக்கு மரியாதை குடுத்து பேசிட்டிருக்கோம்.

''முகிலா காணாம போனதுக்கு டிரைவர் தான் காரணம். அவன் தான் அவளை கடத்திக்கிட்டு போய் ஏதாவது ஒரு இடத்துல அடைச்சு வெச்சிருக்கணும். அவன் உங்க டிரைவர்ங்கிறதுக்காக விட்டுக் கொடுக்காம பேசறீங்களா?''

''அப்படி இல்லை,'' என்று தலையசைத்த இதயச்சந்திரன், முத்துக்குமரனிடம் திரும்பி, ''நீங்க என்ன நினைக்கிறீங்க இன்ஸ்பெக்டர்?'' என்றார்.

''எனக்கும் அதே சந்தேகம் தான், சார். டிரைவரை விசாரிக்கிற விதத்துல விசாரிச்சா, உண்மை வெளியே வரும்.''

''வேண்டாம் இன்ஸ்பெக்டர். அனாவசியமாய் ஒரு நிரபராதியை, 'டார்ச்சர்' பண்ணி விசாரிக்கிறதும், ஒரு வகையில், குற்றம் தான்; அதற்கான சட்டப்பிரிவு எண்ணை சொல்லட்டுமா?''

''டிரைவர் நிரபராதின்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?''

''ஆதாரம் இருக்கு.''

''என்ன ஆதாரம்?''

''முகிலா, பூ மார்க்கெட் கார்னரில் டாக்சியை நிறுத்தி, கீழே இறங்கிப் போனதுக்கான ஆதாரம்.''

இதயச்சந்திரன் சொன்னதைக்கேட்டு புவனேஷ், தருண் மற்றும் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் மூவரும் ஆச்சரிய அலையடிக்கும் பார்வைகளை பரஸ்பரம் பரிமாறிக் கொண்டனர்.

''என்ன ஆதாரம், காட்டுங்க?'' என்றார், முத்துக்குமரன்.

''ஒரு நிமிஷம்,'' என்று சொன்ன இதயச்சந்திரன், தான் கையோடு எடுத்து வந்த, 'லெதர் பேக்'கைத் திறந்து, உள்ளேயிருந்த, 'லேப்டாப்'பை எடுத்து மேஜையின் மீது வைத்தபடியே, இன்ஸ்பெக்டரிடம், ''எப்.ஓ.ஐ.ஏ., பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா?'' என, கேட்டார்.

''பிரீடம் ஆப் இன்பர்மேஷன் ஆக்ட் ரெக்வெஸ்ட் தானே?''

''அதே தான்... நாம விரும்புகிற ஏதாவது ஒரு ஆதாரத்தை அரசிடமிருந்து சட்டரீதியாய் பெறணும்ன்னா, எப்.ஓ.ஐ.ஏ., ஏஜென்சியின் ஆபீசுக்கு ஒரு கடிதம் மூலமா, விண்ணப்பிச்சா போதும். அடுத்த அரை மணி நேரத்துக்குள்ளே அந்த ஆதாரம் நமக்கு கிடைச்சுடும். அப்படி நான், விண்ணப்பித்து கேட்டு வாங்கினது தான், சி.சி.டி.வி., கேமராவோட காட்சிகள்.''

''சி.சி.டி.வி., கேமராவோட காட்சிகளா?''

''ஆமாம். பூ மார்க்கெட் கார்னர் டிராபிக் சிக்னலில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி., கேமரா இன்னிக்கு விடியற்காலை, 5:10 மணிக்கு பதிவு பண்ணியிருந்த காட்சிகளைத் தான், நீங்க மூணு பேரும் இப்ப பார்க்கப் போறீங்க,'' என்ற இதயச்சந்திரன், 'லேப்டாப்'பின், 'கீ போர்டில்' சில வார்த்தைகளை, 'டைப்' செய்தார்.

அடுத்த சில விநாடிகளில், 'லேப்டாப்'பில், அந்தக் காட்சிகளை ஒளிபரப்பியது. முத்துக்குமரன், புவனேஷ் மற்றும் தருண் மூவரும், 'லேப்டாப்'பின் திரையையே உன்னிப்பாய் பார்த்துக் கொண்டிருக்க, வீடியோ பதிவுக்கு கீழே விநாடி எண்கள் வேகமாய் மாறிக் கொண்டிருந்தது.

கேமரா காட்சிகள், நேரம், 5:10ஐக் காட்டியபோது, அந்த, 'லிட்டில் ஸ்டார் டாக்சி' வேகமாய் வந்து வலதுபக்கமாய் திரும்ப முயன்று, சட்டென்று வேகத்தைக் குறைத்து கொள்வது தெரிந்தது.

''இன்ஸ்பெக்டர்... டாக்சி நம்பரை நோட் பண்ணிகிட்டு, என்ன நடக்குதுன்னு பாருங்க,'' என்றார், இதயச்சந்திரன்.

மூவரும் பார்வைகளை கூர் தீட்டிக் கொண்டனர். வேகம் குறைந்த டாக்சி, இப்போது மெதுவாய் ரோட்டோரமாய் போய் நின்றது. அடுத்து வந்த சில விநாடிகளில் டாக்சியின் பின்பக்க கதவை திறந்து வெளிப்பட்டாள், முகிலா.

டிரைவர் சீட்டிலிருந்து இறங்கிய, மகுடபதி, டிக்கியைத் திறந்து, சூட்கேஸ் ஒன்றை எடுத்து முகிலாவிடம் கொடுப்பதும், அதை அவள் வாங்கி, தன் பர்சிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுக்கிறாள். பிறகு மகுடபதியிடம் ஏதோ சொல்லிவிட்டு, பூ மார்க்கெட்டை நோக்கி வேகவேகமாய் நடந்து போவது தெரிந்தது.

சோம்பல் முறித்தபடி, டிரைவர் மகுடபதி, மறுபடியும் டாக்சிக்குள் நுழைந்து கொள்கிறான். அடுத்த சில விநாடிகளில் டாக்சி மெதுவாய் ஊர்ந்து, வேகம் பிடித்து மேட்டுப்பாளையம் ரோட்டில் விரைந்து, மறைவதும் தெரிந்தது.

'லேப்டாப்'பில் காட்சிகள் முடிந்து போயிருக்க, முத்துக்குமரனை ஏறிட்டார், இதயச்சந்திரன். கேலியான குரலில், ''பூ மார்க்கெட் கார்னர்ல என்ன நடந்ததுன்னு பார்த்தீங்களா இன்ஸ்பெக்டர்... சி.சி.டி.வி., கேமரா பதிவு பண்ணின காட்சிகள் பொய் சொல்லுமா... மறுபடியும் ஒரு தடவை போட்டுக் காட்டட்டுமா?''

நெற்றியைப் பிடித்து இடிந்து போய், சுவரோரமாய் இருந்த பெஞ்சில் புவனேஷ் சாய, அவன் தோள் மீது கையை வைத்தான், தருண்.

பெருமூச்சை வெளியேற்றி, ''புவனேஷ்... இந்த, சி.சி.டி.வி., பதிவை பார்க்கும்போது, டிரைவர் மேல எந்தத் தப்பும் இல்லாத மாதிரிதான் தெரியுது. முகிலா ஏன் டாக்சியை விட்டு இறங்கினா... சம்திங் ராங்க்,'' என, தருண் சொன்னதைக் கேட்டு விட்டு, சிரித்தார் இதயச்சந்திரன்.

''அதுல என்ன சந்தேகம் தம்பி... இன்னொரு காட்சிப் பதிவும் இருக்கு. அதையும் பார்த்துடுங்க. அவினாசி ரோடு மேம்பாலத்துல டாக்சி வந்துட்டிருந்தபோது, என்ன நடந்ததுங்கிற உண்மையும் உங்களுக்கு தெரிஞ்சுடும்,'' என்றவர், மறுபடியும், 'லேப்டாப்'பின், 'கீ போர்டில்' சில வார்த்தைகளை, 'டைப்' செய்தார்.

திரை உயிர் பிடித்து, அந்த காட்சிகளை ஒளிபரப்பியது.

விடியற்காலையில், அவினாசி ரோடு மேம்பாலத்தின் ரவுன்டானா அரையிருட்டோடு தெரிந்தது. அடுத்து வந்த சில விநாடிகளில், 'லிட்டில் ஸ்டார் டாக்சி' முகப்பு விளக்கோடு வேகமாய் வருவதும், இடதுபக்கம் திரும்பும்போது, 'டூ - வீலர்' ஒன்று எதிர்பாராத விதமாய் குறுக்கிடுவதும் தெளிவாய் தெரிந்தது.

மிகவும் வேகமாய் வந்த டாக்சி சட்டென்று, 'பிரேக்' அடித்து நிற்கிறது. டிரைவர் மகுடபதி டாக்சியை விட்டு கீழே இறங்கி, பைக் ஓட்டி வந்த நபரை ஏதோ திட்டியபடி அடிப்பது போல் போகிறான். டாக்சியின் கண்ணாடியை கீழே இறக்கி வெளியே எட்டிப்பார்த்து, வேண்டாம் என்பது போல், முகிலா சைகை காட்டுவதும், தெளிவாய் தெரிந்தது.

அடுத்த விநாடி, பைக் பேர்வழி ஒன்றும் பேசாமல் வண்டியை, 'ஸ்டார்ட்' செய்து, சுக்ரவாரப்பேட்டைக்குப் போகும் ரோட்டில் போவது புலப்பட்டது. அடுத்த சில விநாடிகளில் டாக்சி ரவுன்டானாவை சுற்றி, ப்ரூக் பீல்ட்சுக்கு செல்லும் ரோட்டில் திரும்பி, வேகம் எடுத்து, மறைந்தது.

காட்சிகள் முடிந்து, 'லேப்டாப்' நிசப்தம் காக்க, இதயச்சந்திரனின் சிரிப்பு கலந்த குரல் கிண்டலாக வெளிப்பட்டது.

''அந்தப் பொண்ணு முகிலாவோட வளையல் எப்படி உடைஞ்சுதுன்னு நீங்க கேட்ட கேள்விக்கு மகுடபதி சொன்ன பதில் உண்மை தான்னு இப்ப உங்க மூணு பேருக்கும் புரிஞ்சி இருக்கும்ன்னு நினைக்கிறேன்.''

இதயச்சந்திரன் சொன்னதைக் கேட்டு, சில விநாடிகள் மவுனமாயிருந்த இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன், இறுகிய முகத்தோடு புவனேஷையும், தருணையும் ஏறிட்டார்.

''முகிலா காணாம போன விவகாரத்துக்கும், டிரைவர் மகுடபதிக்கும் துளியும் சம்பந்தம் இல்லைன்னு, சரியான ஆதாரங்களோடு வந்து நிரூபிச்சுட்டார், சார். இதுக்கப்புறமும் நாம மகுடபதியை சந்தேகப்படறது சரியில்லை.

''இனிமே இந்த விசாரணையை, நாம வேற கோணத்திலிருந்து தான் ஆரம்பிக்கணும்,'' என்ற முத்துக்குமரன், ''சிவராமன்,'' என்று கூப்பிட்டார்.

''சார்,'' என்றபடி, பக்கவாட்டு அறையிலிருந்து வெளிப்பட்டார், கான்ஸ்டபிள் சிவராமன்.

''இவரிடம், 'ஸ்டேட்மென்ட்'டை எழுதி வாங்கிகிட்டு, டிரைவர் மகுடபதியை அனுப்பிடு. அந்த ரெண்டு, சி.சி.டி.வி., காட்சிகளையும் நம் கம்ப்யூட்டரில், 'காப்பி' பண்ணிக்க.''

''எஸ் சார்.''

கான்ஸ்டபிள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, பெஞ்சில் உட்கார்ந்திருந்த, புவனேஷ், மார்பைப் பிடித்தபடி ஒரு பக்கமாய் சாய, அவனை நோக்கி வேகமாய் ஓடினான், தருண்.

''புவனேஷ்.''

பெஞ்சிலிருந்து கீழே விழ முயன்ற புவனேஷைத் தாங்கிப் பிடித்தான்.

முத்துக்குமரனும் வேகமாய் நெருங்கி, ''என்னாச்சு?'' என்றார்.

''தெரியலை சார். புவனேஷ்...'' என்றபடி, அவனது கன்னத்தை தருண் தட்ட, அவன் பேச முடியாமல் திணறினான். முகமும், கழுத்தும் வியர்த்துக் கொட்டியது.

''முகிலா காணாம போன அதிர்ச்சியை அவனால தாங்கிக்க முடியலைன்னு நினைக்கிறேன் சார். 'ஹார்ட் அட்டாக்'கா இருக்கும் போலிருக்கே. சார்... பக்கத்துல ஹாஸ்பிடல் ஏதாவது இருக்கா?''

''சாஸ்திரி மைதானத்துக்கு பக்கத்துல, 'குட் ஹோப்' மருத்துவமனை இருக்கு. உடனே, அங்கே அழைத்து போயிடலாம்.''

ஒட்டுமொத்த போலீஸ் ஸ்டேஷனும் தீப்பிடித்துக் கொண்ட தினுசில் பரபரக்க, வாசலில் நின்றிருந்த காருக்கு கொண்டு போகப் பட்டான், புவனேஷ்.

'குட் ஹோப்' மருத்துவமனை.

ஐ.சி.யூ., வெளியே காத்திருந்த தருணை நெருங்கினார், டாக்டர் நாராயணமூர்த்தி. களைத்துப் போன கண்களோடு அவனை ஏறிட்டவர், ''பேஷன்ட்டோடு வந்தது நீங்க தானே?''

''ஆமா டாக்டர். இப்ப எப்படி இருக்கிறான்?''

''கொஞ்சம், 'சிவியர் அட்டாக்' தான். 'எமர்ஜென்சி இஞ்செக் ஷன்' போட்டுட்டோம். சிகிச்சை அளித்து வருகிறோம். நினைவு வர எப்படியும் நாலைஞ்சு மணி நேரமாயிடும்,'' என்ற டாக்டர் நகர்ந்து விட, பக்கத்தில் இருந்த நாற்காலியில் தளர்வோடு உட்கார்ந்தான், தருண்.

மவுனத்தில் ஐந்து நிமிஷம் கரைந்திருந்தபோது, அவன் சட்டைப் பாக்கெட்டிலிருந்த மொபைல்போன், 'ரிங்டோனை' மெலிதாய் வெளியிட்டது. அழைப்பது யாரென்று பார்த்தான்.

'ஜோஷ்' என்ற பெயர், 'டிஸ்ப்ளே'யில் ஊர்ந்து கொண்டிருந்தது.

பதட்டமான தருண், சுற்றும்முற்றும் பார்த்து, மொபைல்போனை தன் இடது காதுக்குப் பொத்தி, குரலைத் தாழ்த்தினான்.

''சொல்லு ஜோஷ்.''

''உன் நண்பன் புவனேஷுக்கு என்னாச்சு?''

''சிவியர் ஹார்ட் அட்டாக். இப்பத்தான் டாக்டர் சொல்லிட்டுப் போறார்.''

''ஆள் பொழைப்பானா?''

''தெரியலை... அதை விடு ஜோஷ், முகிலா இப்ப எப்படியிருக்கா? அவளுக்கு மயக்கம் தெளிஞ்சிடுச்சா, இல்லையா?''

தொடரும்

ராஜேஷ்குமார்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us