PUBLISHED ON : மார் 16, 2014

மார்ச் - 20, காரைக்கால் அம்மையார் குருபூஜை
ஆதியும், அந்தமும் இல்லாதவன், போக்கிலன், வரவிலன் போன்ற சிறப்பு பெயர்களைப் பெற்றவர் சிவன். அவர் தாய், தந்தை என்ற உறவு இல்லாதவர்; அருவமும், உருவமும், அருவுருவமுமான அவரைப் புரிந்து, அறிந்து, தெளிவது எளிதானதல்ல. அத்தகைய இறைவனே, ஒருவரை, தனக்கு தாயாக ஏற்றுக் கொண்டார் என்றால், அவர் தான், காரைக்கால் அம்மையார்.
காரைக்காலில் தனதத்தர் என்ற வணிகர் வசித்து வந்தார். இவரின் மகள் புனிதவதி. சிவபக்தையான இவளை, பரமதத்தன் எனும் வணிகனுக்கு திருமணம் செய்து வைத்தனர். இல்லறம் நல்லறமாய் சென்று கொண்டிருந்த வேளையில், தன் பக்தைக்கு முக்தியளிக்க எண்ணிய சிவன், மாங்கனி வடிவில் சோதனை தந்தார்.
ஒருமுறை, பரமதத்தனுக்கு வேண்டிய ஒருவர், இரண்டு மாம்பழங்களைக் கொடுத்தார். அதை, அவன், பணியாள் ஒருவனின் மூலம் வீட்டுக்கு கொடுத்து அனுப்பினான். அச்சமயத்தில், சிவனடியார் ஒருவர், பசியுடன் அவனது வீட்டுக்கு வந்தார். சிவனடியாரை கண்டவுடன், வேகமாக உணவு சமைத்த புனிதவதி, காய்கறிக்கு பதிலாக, கணவர் கொடுத்தனுப்பிய இரண்டு பழங்களில் ஒன்றை அரிந்து வைத்தாள்.
சிவனடியார் பசியாறி சென்றபின், பரமதத்தன் வீட்டுக்கு வந்தான். கணவருக்கு பரிமாறிய புனிதவதி, எஞ்சிய ஒரு மாம்பழத்தை அரிந்து வைத்தாள். அதைச் சாப்பிட்டவன், 'இது வெகு ருசியாக இருக்கிறது; இன்னொன்றையும் கொண்டு வா...'என்றான்.
தடுமாறிய புனிதவதி, உண்மையைச் சொல்ல தைரியமில்லாமல், சமையலறைக்குள் சென்றவள், 'எம்பெருமானே... இதென்ன சோதனை?' என்றது தான் தாமதம்... புனிதவதியின் கையில் பழம் ஒன்று இருந்தது. மகிழ்ச்சியுடன் கொண்டு வந்து, கணவனுக்கு கொடுத்தாள். அதைச் சாப்பிட்ட பரமதத்தன் அசந்து போய் விட்டான். 'இப்படி ஒரு பழத்தை, நான் என் வாழ்நாளில் சாப்பிட்டதே இல்லை. முதலில் சாப்பிட்ட பழம் இப்படி ருசியில்லையே, இது எப்படி சாத்தியம்...' என்று கேட்க, புனிதவதி நடந்ததைச் சொல்லி விட்டாள்.
அதைக்கேட்ட பரமதத்தன், 'இறைவனே உனக்கு கனி தந்தான் என்றால், எங்கே என் கண் முன்னால், இன்னொரு கனியை வரவழைத்துக் காட்டு...' என்றான். புனிதவதியும் அவ்வாறே செய்தாள். திகைத்துப் போன பரமதத்தன், 'இவள் சாதாரண பெண்ணில்லை. தெய்வப் பிறவி. இனி, இவளுடன் குடும்ப வாழ்க்கை நடத்துவது தகாது...' என்ற முடிவுக்கு வந்தவன், மனைவியைப் பிரிந்து, வெளிநாட்டுக்கு, வியாபாரத்துக்கு போய் விட்டான். மனம் வருந்திய புனிதவதி, சிவசேவையில் மூழ்கிப் போனாள்.
வெளிநாடு செல்வதாக கூறிய பரமதத்தன், பாண்டிய நாட்டில் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து வாழ்வதாக கேள்விப்பட்ட புனிதவதியின் உறவினர்கள், அவளை அழைத்து, மதுரைக்கு வந்தனர்.
புனிதவதி வந்திருக்கும் தகவல் அறிந்த பரமதத்தன், தன் இளைய மனைவி, மகளுடன் வந்து, புனிதவதியின் காலில் விழுந்து, தங்களை ஆசீர்வதிக்கும்படி வேண்டினான்.
கட்டிய கணவனே காலில் விழுந்தது கண்டு, மனம் கலங்கிய புனிதவதி, 'பெருமானே... இல்லறத்துக்கு தேவை அழகு. என் கணவன் விரும்பாத அழகு, எனக்கு தேவையில்லை. இன்று முதல், நான் உன் அடிமை. எனக்கு பேய் வடிவம் கொடு...' என்றாள். சிவனும், அவ்வாறே தர, அவர், 'காரைக்கால் அம்மையார்' என்ற சிறப்பு பெயர் பெற்றார். சிவன் வாசம் செய்யும் கயிலையில், தன் கால் படக்கூடாது என்று, தன் தலையை தரையில் ஊன்றி நடந்து சென்றதாக புராணம் கூறுகிறது. அவரை, 'என் அன்னையே வருக' என்று வரவேற்றார் சிவன். கடவுளுக்கே தாயான அவர், சிவனின் கட்டளைப்படி, திருவாலங்காடு என்னும் தலத்தில், நடராஜர் அருகில் அமர்ந்து, தாளமிட்டு, பாடும் தகுதி பெற்றார்.
காரைக்கால் அம்மையாரின் குருபூஜை, பங்குனி சுவாதி நட்சத்திரத்தில் நடக்கும். அந் நன்னாளில், பக்தியால், இறைவனை நமக்கும் உறவாக்கிக் கொள்ள முயற்சிப்போம்.
தி.செல்லப்பா
